ராமர் தன்னுடன் வந்த வெண்குடை சமாரம் என்று இளவரசனுக்கு உரிய அனைத்து சுகங்களும் தனக்கு வேண்டாம் யாரும் தன்னை பின் தொடர வேண்டாம் என்று சொல்லிவிட்டு தாய் கௌசலையின் மாளிகையை நோக்கி லட்சுமணனுடன் தனியாக செல்ல ஆரம்பித்தார். லட்சுமணன் கண்கள் சிவக்க கோபத்துடன் ராமரை பின் தொடர்ந்தார்.
கௌசலையின் மாளிகையில் அனைவரும் ராமரின் பட்டாபிஷேகத்தை காணச்செல்வதற்கு மகிழ்ச்சியுடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். ராமர் வந்ததை கண்ட கௌசலை ராமனை கட்டியணைத்து வரவேற்றாள். ராமருக்கு உரிய ஆசனத்தில் அமரச்சொன்னாள். ராமர் தாயே இந்த ஆசனத்தில் என்னால் அமர இயலாது. புல்லை பரப்பி உட்கார வேண்டிய தவஸ்வி தான். தங்களுக்கு வருத்தம் தரக்கூடிய செய்தியை கொண்டு வந்திருக்கின்றேன். தங்களையும் சீதையையும் லட்சுமணனையும் பிரிந்து காட்டிற்கு செல்லப்போகிறேன். தாங்கள் இச்செய்தியை பொருத்துக்கொண்டு என் செயலுக்கு ஆசி கூறி எனக்கு விடை கொடுக்கவேண்டும் என்று நடந்தவற்றை விரிவாக எடுத்துக்கூறி இன்றே நான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
ராமர் சொன்னதை கேட்ட கௌசலை அம்பினால் தாக்கப்பட்ட பெண்மானைப்போல கீழே விழுந்தார். எனக்கு பிள்ளையாக பிறக்காவிட்டால் உனக்கு இந்த தூன்பம் வந்திருக்காது. தசரதர் ஆட்சியில் இருக்கும் போது மூத்த பட்டத்து அரசிக்கான எந்த சுகத்தையும் கண்டதில்லை. உன் சிற்றன்னைகளே அனைத்தையும் அனுபவித்தனர். அவர்களின் பணிப்பெண் போலவே நான் நடத்தப்பட்டேன். என் கணவர் என்னை சற்று தள்ளியே வைத்திருந்தார். நீ என்னுடன் இருந்த காரணத்தால் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது நீயும் என்னை விட்டு பிரிந்தால் என் கதி என்ன ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக மரணித்து விடுவேன். கன்றின் மேல் உள்ள பாசத்தால் கன்றைத்தொடர்ந்து செல்லும் பசுவைப்போல் உன்னை தொடர்ந்து வருகிறேன் என்னையும் அழைத்துச்செல் என்று அழுதபடி சொன்னார்.
கௌசலையின் அழுகையினால் வருந்திய லட்சுமணன் பேச ஆரம்பித்தான். பெரியன்னையே சிற்றன்னையின் சொல்லிற்கான ராமர் காட்டிற்கு செல்வது எனக்கும் சம்மதமில்லை. நாட்டைவிட்டு காட்டிற்கு செல்லும் அளவிற்கு ராமர் குற்றம் ஒன்றும் சொல்லவில்லை. அவரிடம் மறைமுகமாக கூட யாரும் இதுவரை ஒர் குற்றத்தை கண்டதில்லை. வயோதிகரான தந்தையின் குணம் மாறிவிட்டது. கைகேயின் துர்செயலால் அவர் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். அவருடைய காலம் கடந்துவிட்டது. மக்கள் அனைவரும் ராமரை சிம்மாசனத்தில் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள். அண்ணா உடனே அரச பட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு உத்தரவு தாருங்கள். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழித்துவிடுகிறேன் என்று கோபத்துடன் கூறினான் லட்சுமணன்.