ராமர் தூரத்தில் இருந்த ஜடாயுவை பார்த்ததும் அதோ ராட்சசன் சீதையை தின்று விட்டு நம்மை ஏமாற்ற படுத்திருக்கிறான் என்று ராமர் வில் அம்பை எடுத்தார். அப்போது ஜடாயு ராமனே நீ என்னை கொல்ல வேண்டாம் நானே சிறிது நேரத்தில் இறந்து விடுவேன். நீ தேடிக் கொண்டிருக்கும் சீதையை பலவந்தமாக ராவணன் தன்னுடைய மாய ரதத்தில் தூக்கிச் சென்றான். அப்போது ராவணனுடன் சண்டையிட்டு அவனை தடுத்து சீதையை மீட்க முயற்சித்தேன். அவனது தேரோட்டியை கொன்றேன். அவனது தேரையும் உடைத்தேன். அதன் பாகங்களும் இறந்த தேரோட்டியும் அருகில் இருப்பதை பார். சண்டையிட்டு கொண்டிருந்த நான் சிறிது களைப்பாக இருக்கும் போது என் சிறகை ராவணன் வெட்டி விட்டான். எதிர்க்க யாரும் இல்லாமல் சீதையை ஆகாய மார்க்கமாக கொண்டு சென்று விட்டான். சிறகு உடைந்த என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உன்னிடம் செய்தியை சொல்வதற்காக உயிரை பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லி முடித்தான் ஜடாயு.
ராமரின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறு போல் சுரந்தது. வில்லை வீசி எறிந்தார். ஜடாயுவை கையில் தூக்கி கட்டி அணைத்தார். ராமர் லட்சுமணன் இருவருக்கும் துக்கம் எல்லை கடந்து போயிற்று. ராமர் பேச ஆரம்பித்தார். என்னை போன்ற துர்பாக்கியசாலி யாருமில்லை. தாய் சகோதரன் உறவினர்களை பிரிந்து காட்டிற்கு வந்தேன். இப்போது மனைவியை பிரிந்து துக்கத்தில் இருக்கிறேன். இப்போது தந்தை போல் இருந்த ஜடாயுவையும் இழந்து விட்டேன். தங்களை இழப்பது சீதையை இழந்த துக்கத்தை விட பெரிய துக்கமாக இருக்கிறது. நான் நெருப்பில் விழுந்தாலும் என் துர்பாக்கியமெல்லாம் சேர்ந்து நெருப்பையும் அணைத்து விடும். கடலில் விழ்ந்தால் என் துர்பாக்கியமெல்லாம் சேர்ந்து கடல் நீரும் வற்றிப் போகும். நான் பெரும் பாவி. லட்சுமணா உன்னையும் இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன் என்று சொல்லி ஜடாயுவை கட்டி அணைத்து நீங்கள் சீதையை கண்டீர்களா? அவள் எப்படி இருந்தாள். அந்த ராட்சசன் அவளை மிகவும் கொடுமை படுத்தினானா? சீதை மிகவும் துடித்தாளா என்று கேட்டார். ஜடாயு மரணத்தின் இறுதியில் பேச சக்தியின்றி பேச ஆரம்பித்தான். பயப்படாதை ராமா சீதைக்கு ஒரு பாதிப்பும் வராது. நீ மீண்டும் சீதையை அடைந்து பெரு மகிழ்ச்சியை அடைவாய் என்று சொல்லி உயிர் நீத்தான் ஜடாயு. ராமர் லட்சுமணனிடம் உலர்ந்த கட்டைகளை கொண்டு வா நமது தந்தைக்கு நம்மால் செய்ய முடியாமல் போன கிரியைகளை ஜடாயுவுக்கு செய்வோம் என்றார். இருவரும் ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை செய்து முடித்தனர். எதிர்பாராத சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்ததினால் ராம லட்சுமணர்கள் இருவரும் இயற்கையான தைரியத்தை இழந்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு ராவணனை சென்றடைந்து சீதையை எவ்வாறு மீட்கலாம் என்று பேசிக்கொண்டே காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார்கள்.
ராமருக்கு முன்பாக கபந்தன் என்ற ராட்சசன் கோர உருவத்துடன் வந்தான். அவனுக்கு தலையும் இல்லை கால்களும் இல்லை. மார்பில் ஒரு கண்ணும் பெரிய வயிறும் அதில் வாயும் மிக நீண்ட இரு கைகளுடன் அகோர உருவத்துடன் ராட்சசன் இருந்தான். இரண்டு கைகளையும் நீட்டி கையில் கிடைக்கும் காட்டு விலங்குகளை தின்று உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான் அந்த ராட்சசன். ராமர் லட்சுமணன் இருவரையும் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டான் ராட்சசன். ராமர் லட்சுமணனிடம் நீ ஒரு கையை துண்டு துண்டாக வெட்டிவிடு. நான் ஒரு கையை வெட்டி விடுகிறேன் என்று வெட்ட ஆரம்பித்தார். இருவரும் ராட்சசனின் இரண்டு கைகளையும் வெட்டி விட்டனர். கைகள் வெட்டப்பட்ட ராட்சசன் ஒன்றும் செய்ய முடியாமல் பேச ஆரம்பித்தான்.



