பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-5
எந்த மனிதனும் எக்காலத்திலும் ஒரு கணம் கூட செயல் புரியாமல் இருப்பதில்லை. ஏனெனில் இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் தொழில் புரிய வைக்கின்றன.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த உலகில் பிறந்தவர்கள் எழுவது உட்காருவது நடப்பது உண்பது தூங்குவது விழிப்பது நினைப்பது சிந்திப்பது என்று எதேனும் ஒரு செயலை செய்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அனைத்து உயிர்களும் சத்வ ரஜோ தாமஸ குணங்களால் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் இயற்கையாகவே ஏதேனும் செயலை மனிதனை செய்ய தூண்டிக் கொண்டே இருக்கும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
ஆனால் இது அஞ்ஞானிகளுக்கு மட்டுமே பொருந்தும். இறைவனை உணர்ந்த ஞானிகளுக்கு பொருந்தாது. இறைவனை உணர்ந்த ஞானிகள் கர்ம யோகத்தின் வழி செல்லாமல் ஞான யோகத்தின் வழியாக செல்வார்கள். இவர்கள் சத்வ ரஜோ தாமஸ குணங்களால் மனம் பாதிக்கப்படாமல் உறுதியான அசையாத மனதை உடையவர்களாக இருப்பார்கள்.
- சத்வ குணம் – சாத்வீகம்
சத்வ குண இயல்புகள் – நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம். மன அடக்கம். புலன் அடக்கம். துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை). விவேகம். வைராக்கியம். தவம். வாய்மை. கருணை. மகிழ்ச்சி. நம்பிக்கை பாவம் செய்வதில் கூச்சப்படுதல். தானம் பணிவு மற்றும் எளிமை.
சத்வ குண பலன்கள்
சத்வ குணத்திலிருந்து தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது. பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத் தன்மை பெற்று விழிப்பு நிலையில் மேலுலகங்களை அடைகிறான்.
2. ரஜோ குணம் – இராஜசம்
ரஜோ குண இயல்புகள் – ஊக்கம் ஞானம் வீரம் தருமம் தானம் கல்வி ஆசை முயற்சி இறுமாப்பு வேட்கை திமிர் தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது வேற்றுமை எண்ணம் புலனின்பப் பற்று சண்டைகளில் உற்சாகம் தன் புகழில் ஆசை மற்றவர்களை எள்ளி நகையாடுவது பராக்கிரமம் பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.
ரஜோ குண பலன்கள்
ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும் செயல் புரிவதில் ஆர்வமும் இன்பப் பற்றும் இறப்பிற்குப் பின் மனித உடலையும் அடைகிறான்.
3. தமோ குணம் – தாமசம்
தமோ குண இயல்புகள் – காமம் வெகுளி மயக்கம் கலக்கம் கோபம் பேராசை பொய் பேசுதல் பிறரை இம்சை செய்தல் யாசித்தல் வெளிவேசம் சிரமம் கலகம் வருத்தம் மோகம் கவலை தாழ்மை உறக்கம் அச்சம் சோம்பல் காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும் பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.
தமோ குண பலன்கள்
தமோ குணத்திலிருந்து சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும் மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தினால் தூக்க நிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு மரம் செடி கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.