பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #36
ஜனார்த்தனா திருதராஷ்டிர குமாரர்களை கொன்று நமக்கு என்ன மகிழ்ச்சி ஏற்படப் போகிறது? இந்தப் படுபாவிகளை கொன்றால் நமக்கு பாவம்தான் வந்தடையும்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: கிருஷ்ணரை ஜனார்த்தனா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?
தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவித்ததினால் கிருஷ்ணர் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறார். யுத்தத்தில் கிருஷ்ணர் அர்ஜூனனுடன் இருக்கிறார். தீயவற்றை செய்யும் திருதராஷ்டிர குமாரர்களை கொன்றால் பாவம் ஏற்படும் என்பதை சொல்லும் அர்ஜூனன் யுத்தத்தில் நீ அவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாவமே வந்து சேரும் இதில் நமக்கு என்ன மகிழ்ச்சி ஏற்படப் போகிறது ஆகையால் எனக்கு யுத்தம் செய்வதில் விருப்பம் இல்லை என்பதை மறைமுகமாக கிருஷ்ணரிடம் தெரிவிக்க ஜனார்த்தனா என்ற பெயரை குறிப்பிடுகிறான்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: திருதராஷ்டிரரை தனது தந்தைக்கு சமமானவர் என்றும் பெரியப்பா என்றும் மரியாதையுடன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள அர்ஜூனன் இந்த சுலோகத்தில் திருதராஷ்டிரர் என்று ஏன் பெயர் சொல்லி அழைக்கிறான்?
அரசராக இருக்கும் திருதராஷ்டிரர் துரியோதனனுக்கு தந்தை என்ற நிலையிலிருந்தோ அல்லது நாட்டின் அரசர் என்ற நிலையிலிருந்தோ ஆரம்பத்திலிருந்தே அவனை கண்டித்து அவனை தவறு செய்ய விடாமல் தடுத்திருந்தால் இந்த யுத்தம் வந்திருக்காது. திருதராஷ்டிர குமாரர்களை படுபாவிகள் என்று குறிப்பிடும் அர்ஜூனன் அவர்கள் செய்யும் பாவத்திற்கு முதன்மை காரணமாக திருதராஷ்டிரரை எண்ணுகிறான். ஆகையால் தந்தைக்கு சமமானவரான திருதராஷ்டிரரை பெயர் சொல்லி அழைக்கிறான்.