சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விருத்த குமார பாலாரன படலம் நூலின் இருபத்தி மூன்றாதாவது படலமாகும்.
விக்கிரம பாண்டியனின் ஆட்சியில் மதுரையில் விருபாக்கன் சுபவிரதை என்ற அந்தண தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் போற்றி சிவனை வழிபாடு செய்து வந்தார்கள். அவ்விருவருக்கும் குழந்தைப் பேறு நீண்ட நாட்கள் கிடைக்கவில்லை. ஒரு குழந்தை வேண்டி சிவனைக் குறித்துக் கடும் நோன்பு இருந்தார்கள். சொக்கநாதரின் திருவருளால் பெண் குழந்தை அவர்களுக்கு பிறந்தது. அவளுக்கு கௌரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குழந்தை கௌரி சிறுவயதிலேயே சொக்கநாதரிடமும் மீனாட்சி அம்மனிடமும் அன்பு பூண்டு இறைபக்தி மிக்கவளாய் விளங்கினாள். கௌரி தனது ஐந்தாவது வயதில் தனது தந்தையிடம் அப்பா பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் அறவழி எது என்று கேட்டாள். அதற்கு விருபாக்கன் பராசக்தியின் மந்திரம் வீடு பேற்றை அளிக்கும் என்று பராசக்தியின் மந்திரத்தை தனது மகளுக்கு உபதேசித்தார். கௌரியும் இடைவிடாது பராசக்தியின் மந்திரத்தை உச்சரித்து வந்தாள். அவளுக்கு மணப்பருவம் எட்டியது.
கௌரிக்கு விருபாக்கன் திருமணம் செய்ய முடிவு செய்து அவளுக்கு ஏற்ற வரனைத் தேடத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு வைணவ சமயத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவன் பிச்சை கேட்டு வந்தான். அவனைப் பார்த்ததும் விருபாக்கன் இவனே தனது மகளுக்கு ஏற்ற வரன் என்று முடிவு செய்து கௌரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார் விருபாக்கன். வீடுபேற்றினை விருப்பிய கௌரி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப தந்தையின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டாள். இதனைக் கண்ட விருபாக்கனின் மனைவியும் அவனுடைய சுற்றத்தாரும் இவன் யார்? ஊரும் பேரும் தெரியாத இவனுக்கு இப்பெண்ணை திருமணம் செய்து விட்டாரே. விதியின் வழியில் மதி செல்லும் என்பது இதுதானோ என்று எண்ணிக் கலங்கினர். பின் கௌரியை அவளது கணவனுடன் சீர்கொடுத்து அனுப்பி வைத்தனர். வைணவ இளைஞன் தன் மனைவியோடு தன் இல்லத்தை அடைந்தான். சிவநெறியைப் பின்பற்றி வாழும் கௌரியை அவளுடைய மாமனாருக்கும் மாமியாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் அவளை பெரிதும் துன்பப்படுத்தினர். ஒருநாள் கௌரியின் வீட்டார் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக கௌரியை வீட்டிற்கு வெளியே திண்ணையில் தனியாக விட்டுவிட்டு வீட்டினைப் பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
கௌரி வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி தனியாக இருந்தாள். அப்போது ஒரு சிவனடியாரையும் காணவில்லையே சிவனடியாரை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள். அப்பொழுது சொக்கநாதர் முதிய சிவனடியாராக கௌரியின் முன் தோன்றினார். பல நாட்கள் உணவின்றி வருந்துபவர் போல் காணப்பட்டார். கௌரியும் அவரிடம் மிக்க அன்பு கொண்டு அவரை வரவேற்றாள். சிவனடியார் தான் பசியோடு வந்திருப்பதாக கௌரியிடம் தெரிவித்தார். அதனைக் கேட்ட கௌரி வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்கள் நான் என்ன செய்வேன்? உங்களுக்கு ஒன்றும் சாப்பிட கொடுக்க முடியாமல் இருக்கிறேன் என்று கூறினாள். அதற்கு சிவனடியார் நீ உன் கையினை கதவின் பூட்டில் வை. கதவு திறந்து கொள்ளும் என்று கூறினார். அதனைக் கேட்ட கௌரி கதவின் பூட்டில் கைவைத்து கதவினைத் திறந்து உள்ளே சென்று சமைக்கத் தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் சமையலை முடித்து சிவனடியாரிடம் வந்து ஐயா திருவமுது செய்ய வாருங்கள் என்று கூறினாள். கௌரியின் வேண்டுகோளை ஏற்ற முதிய சினவடியாரும் கௌரி அளித்த உணவினை தேவாமிர்தம் போல் உண்டு மகிழ்ந்தார். பின் முதிய சிவனடியார் இளமையான காளைப் பருவத்தினரைப் போல் மாறி கௌரி முன் காட்சி அளித்தார். அதனைக் கண்ட கௌரி திகைத்து நின்றாள். அப்போது திருமணத்திற்கு சென்ற கௌரியின் வீட்டார் வந்தனர். எது நடந்தாலும் அது இறைவன் செயலே என்று உறுதியுடன் பிரார்த்தனை செய்தாள் கௌரி. உடனே இறைவனார் சிறுகுழந்தையாக மாறி தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அழுது கொண்டு கிடந்தார். குழந்தையின் நெற்றியில் திருநீறு பூசப்பட்டிருந்தது. வீட்டிற்குள் வந்த கௌரியின் மாமியார் இக்குழந்தை யார்? என்று கௌரியிடம் கேட்டாள். அதற்கு கௌரி தோழி தன்குழந்தையை சிறிது நேரம் பார்த்துக் கொள் என்று கூறிச் சென்றான் என இறைவனின் அருளினால் கூறினாள். இதனைக் கேட்ட கௌரியின் மாமனும் மாமியும் கோபம் கொண்டு சிவபெருமானிடம் அன்பு பூண்ட நீங்கள் இருவரும் வீட்டை விட்டுச் செல்லுங்கள் என்று கூறி வீட்டை விட்டு விரட்டி விட்டனர். வீட்டைவிட்டு குழந்தையுடன் வெளியேறிய கௌரி குழந்தையின் திருமுகத்தைப் பார்த்தவாறு சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் மனதில் வைத்து பராசக்தியின் திருமந்திரத்தை உச்சரித்தாள். உடனே குழந்தை மறைந்தது. சிவபெருமான் அவளுக்கு இடப வாகனத்தில் காட்சியளித்தார். அக்காட்சியைக் கண்ட கௌரி சிவானந்த கடலில் ஆழ்ந்தாள். சிவபெருமான் கௌரிக்கு வீடுபேற்றினை வழங்கினார்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
கௌரியை அவளது புகுந்த வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு துன்பத்தை கொடுத்த போதிலும் அவள் இறைவன் மீது செலுத்திய பக்தியும் அனைத்தும் நன்மைக்கே என்ற கௌரியின் எண்ணமும் வீடுபேற்றினை அடைய வேண்டும் என்ற அவளின் மன உறுதியும் நம்பிக்கையும் அவளுக்கு வீடுபேற்றை கிடைக்கச் செய்தது. அனைத்தும் இறைவன் செயல் என்ற நம்பிக்கையுடன் கடவுளை சரணடைந்தவர்களை இறைவன் கைவிட மாட்டார். என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.