சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாபாதகம் தீர்த்த படலம் இருபத்தி ஆறாவது படலமாகும்.
குலோத்துங்க பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த காலத்தில் அவந்தி நகரில் வேதியர் ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒழுக்கசீலராகவும் முறையான வாழ்வினை உடையவராகவும் இருந்தார். அவர்களுக்கு மகன் ஒருவன் பிறந்தான். அவன் துர்குணம் மற்றும் கெட்ட நடத்தைகள் உடையவனாக இருந்தான். தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்த செல்வத்தைக் கவர்ந்து சென்று விலை மகளிரிடம் கொடுத்து சிற்றின்பம் அனுபவித்து வந்தான். ஒரு கட்டத்தில் மகனுடைய கெட்ட நடத்தையால் அவர்களிடம் இருந்த செல்வ வளம் குன்றவே அவர்கள் குடிசைக்கு வந்தனர். விலை மகளிருக்கு கொடுக்க செல்வம் இன்றி அவன் சிற்றின்பத்திற்காக தனது தாயிடம் பணம் கொடுக்குமாறு நிர்பந்தித்தான். இதனை அறிந்த அவனுடைய தந்தை தன்னுடைய ஊழ்வினை மகன் வடிவில் வந்திருப்பதாக மிகவும் வருந்தினார். தாயை நிர்பந்தித்ததால் தந்தை அவனை கடுமையாக கண்டித்தார். இதனை விரும்பாத அவன் சிற்றின்ப மோகத்தில் தந்தை என்றும் பாராமல் அவரைக் கொன்றான். பின் அரச தண்டனைக்கு பயந்து வேறு ஊருக்கு சென்று விடலாம் என்று எண்ணி நடு இரவில் தந்தையின் உடலை எரித்துவிட்டு தனது தாயுடன் தன்னால் இயன்ற பொருளையும் எடுத்துக் கொண்ட கற்கள் நிறைந்த காட்டின் வழியே சென்றான். அப்போது அங்கிருந்த கொள்ளையர்கள் மகனிடமிருந்த பொருளையும் கொள்ளையடித்து விட்டு தடுத்த தாயையும் கொன்று விட்டு சென்றனர். வேதியனாகிய தந்தையைக் கொன்றதால் மகனுக்கு பிரம்மஹத்தி பாவம் பிடித்து அவன் உடல் மெலிந்து நோய் வாய்ப்பட்டதோடு மனதளவிலும் பெரிதும் பாதிப்படைந்து அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தான். தாயும் இல்லை தந்தையும் இல்லை உற்றார் உறவும் இல்லை. அனாதையாய் ஆண்டியாய் உடுத்திய உடையுடன் பிச்சை எடுத்தான். ஊழ் வினையின் போக்கை அப்போதுதான் உணர்ந்தான். தான் செய்த பாவங்களை எண்ணிக் கண்ணீர் விட்டான். கோவில் கோவிலாக சுற்றியதன் பலனாக இறுதியில் சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரையம்பதியை அடைந்தான். அங்கு அவன் திருகோவிலின் அருகே செய்வது அறியாது திகைத்து நின்று கொண்டிருந்தான்.
இறைவனான சொக்கநாதர் வேடுவனானகவும் மீனாட்சியம்மை வேடுவச்சியாகவும் வடிவம் கொண்டு கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது இறைவனார் அம்மையிடம் இளைஞனான மாபாதகனையும் அவன் செய்த தவறுகள் குறித்து கூறினார். பின்னர் இறைவனார் அம்மையிடம் கள்ளுண்ணலும் சிற்றின்பமும் அறிவைக் கெடுக்கும். இவற்றில் கள்ளானது உண்டால் மட்டுமே அறிவைக் கெடுக்கும். சிற்றின்பத்தை எண்ணுதலும் பார்த்தலும் கேட்டலும் ஆகியவை தலையில் கொடிய விஷம் போல் பரவி அறிவினைக் கெடுத்து விடும். முறையற்ற சிற்றின்பம் கொலைக்கு காரணமாகி விடும். இறுதியில் அழிவினையும் கொடுக்கும் என்று கூறினார். பின்னர் நோய்வாய்பட்ட இளைஞனிடம் சென்ற இறைவனான வேடுவன் இளைஞனே உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது? என்று கேட்டார். வேடுவன் கேட்டதும் அவ்விளைஞன் தன் செய்த தவறுகளை எல்லாம் சொல்லி அவற்றிற்காக அழுதான். இளைஞனிடம் கருணை கொண்ட இறைவனான வேடுவன் சரி நீ படும் துன்பத்திற்கு தீர்வு கூறுகிறேன் கேள். சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து பசுக்களுக்கு அருகம்புல்லும் நீரும் கொடு. தினம் இறைவனது அபிஷேக நீரில் குளித்து விட்டு பொற்றாமரைக் குளம் மற்றும் திருகோவிலை சுற்றி அங்கப்பிரதட்சிணம் செய். நீ கையால் பிச்சை எடுத்து தினமும் ஒருபொழுது மட்டும் உண்ண வேண்டும். பிரதிபலன் கருதாமல் சிவனடியார்களுக்கு தொண்டு செய். இவ்வாறு செய்து வந்தால் உன்னுடைய பழி மற்றும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று அருளினார்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த உமையம்மையாகிய வேடுவச்சி இறைவனாரிடம் ஐயனே உலகில் நல்லோர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர். அவர்களுக்கு தாங்கள் அருள்புரியாது மாபாதகத்தை செய்த இப்பாவிக்கு அருள்புரிவது ஏனோ? என்று கேட்டார். அதற்கு இறைவனார் நல்லவர்கள் இப்பூமியில் நன்றாக வாழ வேண்டும் எனில் கெட்டவர்கள் திருந்த வேண்டும். மாபாதகம் புரிந்த இவ்விளைஞன் இன்றைக்கு அதற்குரிய தண்டனையும் அனுபவித்து அதனைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அவனையும் காப்பாற்றி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவனுக்கு அருள்புரிந்தேன் என்று விளக்கம் கூறினார். அதற்கு உமையம்மை தங்களுடைய திருவிளையாடலைப் புரிந்து கொள்பவர் யார்? ஆட்டுபவரும் ஆட்டுவிப்பவரும் தாங்களே என்று கூறினார். பின்னர் இருவரும் மறைந்தருளினர். இளைஞனும் இறைவனான வேடுவர் சொன்னபடி நடந்து வந்தான். சிலநாட்களில் அவனுடைய பாவங்கள் நீங்கியதால் நோய் நீங்கப் பெற்றான். பின் அந்த இளைஞன் ஒழுக்கமானவனாக மாறி சிவசிந்தனையுடன் வாழ்ந்து இறுதியில் நல்கதியை அடைந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
முறையற்ற சிற்றின்பம் அறிவை கெடுத்து பஞ்சமகா பாவத்தை செய்ய வைக்கும் என்பதையும் இறுதியில் அவனிடம் உள்ள அனைத்தையும் அழித்து விடும் என்பதேயும் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்த பின்னர் அவர்களும் இறைவனடி சேர வாய்ப்பளிக்கும் இறைவனின் கருணை உள்ளத்தையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.