சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக்கிழி அருளிய படலம் முப்பத்தி ஒன்றாவது படலமாகும்.
குலபூஷண பாண்டியன் சிவபக்தியில் சிறந்தவனாக இருந்தான். தன்நாட்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தான். இதனால் அவனுக்கு தன்னை விடச் சிறந்தவன் யாரும் இல்லை என்ற அகந்தை உருவானது. இதனால் இறைவனார் குலபூஷண பாண்டியனின் அகந்தை அளித்து அவனுக்கு நற்கதி அளிக்க எண்ணினார். குலபூஷண பாண்டியனின் அகந்தை காரணமாக மதுரையில் மழை பொய்த்தது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் சரிவர விளைச்சலைத் தரவில்லை. இதனால் மதுரை மக்களுக்கு உணவு தட்டுப்பாடு வந்தது. மக்களை பசித்துயர் வாட்டியது. இதனைக் கண்ட குலபூஷண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனிடம் நான் தவறாது சிவவழிபாட்டினை மேற்கொண்டு வருகிறேன். மக்களையும் நல்ல முறையில் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறேன். ஆனால் மதுரையில் மழை பொழிவு குறைந்ததால் பயிர்கள் சரிவர விளையவில்லை. மக்கள் பசியால் வருந்துகின்றனர். படைகளை அழைத்து வருகிறேன் என்று சுந்தர சாமந்தன் கஜானாவில் இருந்த பொன்னையும் கோவிலை புதுப்பிக்கவும் மக்களுக்கு சேவை செய்யவும் பயன் படுத்தி விட்டான். அரசின் பணம் அனைத்தும் உனக்காகவும் உன் அடியார்க்காகவும் தானே செலவழிந்திருக்கிறது. ஆகையால் தாங்கள் எங்களுக்கு நல்வழி காட்டுங்கள் என்று மனமுருக வேண்டினான். பின் அரண்மனையை அடைந்து பணிகளைக் கவனித்து இரவில் தூங்கச் சென்றான். தூக்கத்திலும் குலபூஷண பாண்டியன் இறைவனை வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவனார் குலபூஷண பாண்டியா இதோ இந்த உலவாக்கிழியைப் (பொற்கிழி) பெற்றுக் கொள். இதிலிருந்து அள்ள அள்ளக் குறையாத பொற்காசுகளை எடுத்து மதுரை மக்களின் துயரினைப் போக்கு என்று அருளினார்.
குலபூஷண பாண்டியன் கண் விழித்துப் பார்த்தான். தன் கையில் உலவாக்கிழி (பொற்கிழி) இருப்பதைக் கண்டான். உலவாக்கிழியை பார்த்ததும் குலபூஷண பாண்டியனின் மனதில் சொக்கநாதர் நம்மீது இத்தனை கருனையுடன் இருக்கிறார். ஆனாலும் மிகவும் மழை இல்லாமல் போனதற்கான காரணம் மற்றும் மக்களுக்கு துயர் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி ஏற்பட்டது. பின்னர் களைப்பில் மீண்டும் தூங்கினான். அப்போது அவன் கனவில் தோன்றி சொக்கநாதர் குலபூஷண பாண்டியா நீ என்னை காலம் தவறாமல் வழிபடுகிறாய். உன் மக்களை நன்கு பாதுகாக்கிறாய். ஆனால் உனக்கு உன்னைவிட சிறந்த பக்தன் உலகில் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அந்த அகந்தையே மதுரையில் மழை இல்லாமல் போனதற்கும் மக்களின் துயருக்கும் காரணம் ஆகும். உன்னுடைய அகந்தையால் உன்னுடைய மக்களும் துன்பமடைந்தனர் என்று கூறினார். குலபூஷண பாண்டியன் கண்விழித்து தன்னுடைய தவறிற்கான காரணத்தை அறிந்ததும் அவனுடைய அகந்தை அழிந்தது. உலவாக்கிழியில் இருந்த பொற்காசுகளை எல்லோருக்கும் வழங்கினான். பின்னர் மதுரையில் மழை பொழிந்து மக்களின் துயர் நீங்கியது. இறுதியில் குலபூஷண பாண்டியன் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
அகந்தை எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். அதனால் தானே சிறந்தவன் என்ற அகந்தை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.