சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வளையல் விற்ற படலம் முப்பத்தியிரண்டாவது படலமாகும்.
முன்னொரு காலத்தில் தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவியர்கள் தங்களைப் போன்று அழகிலும் கற்பிலும் சிறந்த பெண்கள் வேறு எங்கும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்திருந்தார்கள். இறைவனான சிவபெருமான் அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணினார். எனவே அவர் பிட்சாடனார் வடிவம் கொண்டு அழகில் மன்மதனைப் போல கையில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி தாருகாவனத்திற்குச் சென்றார். தாருகாவனத்து முனிவர்களின் மனைவியர்கள் பிட்சாடனாரின் அழகில் மயங்கி செய்வதறியாது மயக்கத்தில் அவரைத் தொட வேண்டுமென்று அவரின் அருகில் சென்றார்கள். ஆனால் சிவபெருமான் அவர்களின் கைக்கு எட்டாமல் எட்டி எட்டிப் போனார். தவசியே நில்லுங்கள் நில்லுங்கள் எனக் கூவியபடி சிலர் பின் தொடர்ந்தார்கள். சிலர் பிட்சையாக பால் நெய் தயிர் தேன் சர்க்கரை என்று கொடுக்க சென்றார்கள். பிட்சாடனார் தாருகாவனத்தை விட்டுச் சென்ற பின்னும் பெண்கள் மதி மயக்கத்திலிருந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் தங்கள் மனைவியர்களின் செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்து மயக்கத்திற்கான காரணத்தை தங்களின் தவ வலிமையால் கண்டறிந்தார்கள். பெண்களின் இந்நிலைக்கு காரணம் மதுரை சொக்கநாதர் என்பதை அறிந்த அவர்கள் அப்பெண்களை மதுரையில் அழகு வாய்ந்த வணிக மகளிர்களாய் பிறக்குமாறு சாபம் அளித்தனர். அப்பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு விலகும் என்று முனிவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் யாருடைய ஸ்பரிசத்துக்காக அலைந்தீர்களோ அந்த சொக்கநாதர் வளையல் வியாபாரியாக வந்து உங்களுக்கு வளையல்கள் அணிவித்ததும் நீங்கும் என்று கூறினர். தாருகாவனத்து முனிவர்களின் சாபத்தினால் அவர்களுடைய மனைவியர்கள் மதுரையில் வணிகப் பெண்களாக அவதரித்தனர். அவர்கள் வளர்ந்து பேரழகுடன் மணப் பருவம் எய்தினர்.
ஒரு நாள் சொக்கநாதர் வளையல் வியாபாரியாக பட்டு நூலில் வளையல்களைக் கோர்த்துக் கொண்டு வணிக வீதிக்கு எழுந்தருளினார். வளையல் வாங்குங்கள் வளையல் வாங்குங்கள் என்று வளையல் வியாபாரி கூறினார். வளையல் வியாபாரின் குரலால் ஈர்க்கப்பட்ட வணிகப் பெண்கள் வீதிக்கு வந்தனர். வளையல் வியாபாரியின் மேல் ஈர்ப்பு கொண்டு அவரிடம் தங்களுக்கு வளையல்கள் அணிவிக்கும்படி கூறினார்கள். வளையல் வியாபாரியாக வந்த சொக்கநாதர் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் வளையல்களை உடைத்துவிட்டு மீண்டும் வளையல்களை அணிவிக்க வியாபாரியைக் கேட்டுக் கொண்டார்கள். சொக்கநாதரும் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் தாங்கள் அணிந்து கொண்ட வளையல்களுக்கு உரிய விலையைப் பெற்றுச் செல்லுமாறு கூறினர். அதற்கு இறைவனார் நாளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறி திருக்கோவிலுக்குள் சென்று சிவலிங்கத்துள் மறைந்தருளினார். வளையல் வியாபாரியின் பின் சென்ற பெண்கள் நடந்தவற்றைக் கண்டு அதிசயித்தனர். தங்களின் சாபம் நீங்கப் பெற்று மதுரையில் நீண்ட நாட்கள் வசித்து பேறு பெற்றார்கள். இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் விற்கும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
கர்வம் தண்டனையைப் பெற்றுத் தரும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.