சுலோகம் -9

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #9

இன்னும் எனக்காக உயிராசையை விட்ட பல சூரர்களான வீரர்கள் பலவிதமான அஸ்திர ஆயுதங்களுடன் தயாராக நிற்கின்றார்கள். இவர்கள் அனைவரும் யுத்தத்தில் திறமை பெற்றவர்கள் ஆவார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: சூரர்களான வீரர்கள் என்று துரியோதனன் யாரை குறிப்பிடுகின்றான்?

சல்லியன் பாஹ்லீகர் பகதத்தன் கிரதவர்மா ஜயத்ரதன் இவர்கள் மகாரதர்கள் ஆவார்கள் இவர்கள் தங்கள் உயிர் இருக்கும் வரை தனக்காக போராடுவார்கள் என்று துரியோதனன் துரோணரிடம் குறிப்பிடுகின்றான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: சல்லியன் யார்?

நகுலனுக்கும் சகாதேவனுக்கும் தாயாக இருந்தவள் மாத்ரி. அவளுடைய சகோதரன் சல்லியன் மத்ர தேசத்தை ஆண்டு வந்தான். யுத்தத்தில் தன்னுடைய சகோதரியின் செல்வர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய சேனையை திரட்டிக்கொண்டு பாண்டவர்கள் முகாம் அமைத்து இருந்த உபப்பிளவிய நகரை நோக்கி வந்து கொண்டிருந்தான். சல்லியன் பெரும் படையுடன் வரும் பாதையில் தங்கப் போகும் இடங்கள் அனைத்திலும் அவர்கள் வருவதற்கு முன்பே துரியோதனன் அருமையான கொட்டகைகளை அமைத்து சல்லியனுக்கு வழிநெடுக உபசாரங்களும் உணவும் வழங்கினான். இத்தகைய அரிய பெரிய ஏற்பாடுகள் வசதிகள் எல்லாம் தன்னுடைய சகோதரியின் செல்வன் யுதிஷ்டிரன் செய்து வைத்திருந்தான் என்று சல்லியன் எண்ணினான். பணிவிடை செய்தவர்களிடம் அழைத்து தக்க முறையில் சன்மானம் செய்தாக வேண்டும். உங்களுடைய அரசரிடம் அனுமதி பெற்று வாருங்கள் என்றான். வேலையாட்கள் ஓடிச்சென்று துரியோதனனிடம் எடுத்துரைத்தார்கள். துரியோதனன் சல்லியனை அணுகி என்னுடைய உபசாரத்தை நீங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டதே முன்னிட்டு நான் பெருமகிழ்வு அடைகிறேன் என்றான். இத்தகைய அரிய பெரிய உபசாரங்கள் எல்லாம் எதிர்க்கட்சி மன்னனிடம் இருந்து வந்தது என்று சல்லியன் எதிர்பார்க்கவில்லை. இதற்கு கைமாறாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொல் என்று துரியோதனனிடம் சல்லியன் கேட்டான். துரியோதனனுடைய சூழ்ச்சி முற்றிலும் வெற்றிபெற்றது. அக்கணமே நீங்களும் உங்களுடைய பெரிய சேனையும் இனி வரப்போகும் யுத்தத்தில் தயவு பண்ணி என்னுடன் சேர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் இதுவே தங்களிடம் வேண்டுகின்ற சன்மானம் ஆகும் என்று துரியோதனன் சல்லியனிடம் கூறினான். கொடுத்த வாக்கின் படி சல்லியன் கௌரவர்களுக்காக போரிட சம்மதித்தான்.

சல்லியனும் அவருடைய சேனேயும் போரில் உதவி செய்வார்கள் என்ற எண்ணத்தில் பாண்டவர்கள் இருந்தார்கள். ஆனால் சல்லியன் தனக்கு வழியில் நிகழ்ந்த இக்கட்டையும் தர்ம சங்கடத்தையும் எடுத்து விளக்கினான். பாண்டவர்கள் பெரிதும் திகைத்துப் போயினர். இடி விழுந்தது போல் இருந்தது அவர்களுக்கு இந்த செய்தி. எதிர்பாராத வண்ணம் துரியோதனனுக்கும் சல்லியனுக்கும் நிகழ்ந்த யுத்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய சங்கடத்தில் இருந்தார்கள். இதைக் குறித்து யுதிஷ்டிரன் ஆழ்ந்து எண்ணிப் பார்த்தான். அதன் பிறகு தன்னுடைய மாமாவிடம் தன்னுடைய வேண்டுதலை தெரிவித்தான். எப்பொழுதாவது கர்ணனுக்கு சல்லியன் சாரதியாக அமைய வேண்டிய நெருக்கடி யுத்தத்தில் வந்து அமைந்தால் அப்போது அர்ஜூனனுடைய பராக்கிரமத்தை கர்ணனிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உபகாரம் அவர்கள் அடைந்துள்ள நஷ்டத்துக்கு ஈடு செய்யும். சல்லியனும் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பாஹ்லீகர் யார்?

பாக்லீகர் சந்தனுவின் இளைய சகோதரர் ஆவார். இவர் பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு பெரும் பாட்டன் ஆவார். இவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர். இவர் திருதராட்டிரனின் ஆலோசகராகவர். மகாபரத யுத்தத்தில் பீமனின் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: பகதத்தன் யார்?

பிராக்ஜோதிசம் என்ற நாட்டின் அரசராக இருந்தவன். மிகவும் வயதானவர் வயது முதிர்வு காரணமாக நெற்றியின் தோல்கள் மடிப்புகளாக கீழே தொங்கிக்கொண்டிருந்தன. அவை தன் கண்களை மறைக்காமல் இருக்க அவற்றைத் தூக்கித் துணியால் கட்டிக்கொண்டு யுத்தத்தில் கலந்து கொண்டான் பகதத்தன். அவனது யானை சுப்ரதீகம் வீரத்தில் அவனுக்கு இணையானது. பாண்டவப் படைகளை ஏறி மிதித்துக் கூழாக்கியது. பகதத்தன் விடுவித்த சக்தி ஆயுதத்தைக் கண்ணன் தன் மார்பில் ஏற்றதாலேயே அர்ஜூனன் உயிர் பிழைத்தான். மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணரின் வழிகாட்டுதலோடு அர்ஜூனன் கையால் இறந்தான்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: கிரதவர்மா யார்?

யாதவ குலத்தைச் சேர்ந்த மன்னன். தனது நாராயணி படையுடன் கௌரவர்களுக்காக போரிட்டவன். போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன். அசுவத்தாமன் பழிக்குப் பழியாக இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன் சிகண்டி மற்றும் திரௌபதியின் ஐந்து மகன்களை படுகொலை செய்த அநீதிக்கு துணை நின்றவன். போரின் முடிவில் நாடு திரும்பி வந்தபோது தனது யாதவ குலத்தைச் சேர்ந்த மற்றொரு மன்னனான சாத்யகியால் கொல்லப்பட்டான்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: ஜயத்ரதன் யார்?

சிந்து ராஜ்யத்தின் அரசன் ஜயத்ரதன். கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவனும் ஆவான். பாண்டவர்கள் மீது கொண்ட விரோதம் கொண்டவன்.
மகாபாரத யுத்தத்தில் பதினான்காம் நாள் இறுதியில் கிருஷ்ணரின் வழிகாட்டுதலோடு அர்ஜூனன் கையால் ஜயத்ரதன் இறந்தான். (கீழ்கண்ட லிங்கில் ஜயத்ரதனின் முழுமையான வரலாறு உள்ளது. இதனை க்ளிக் செய்து ஜயத்ரதன் வரலாற்று முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.)

ஜயத்ரதன்

சுலோகம் -8

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #8

துரோணாச்சாரியாரான தாங்களும் பாட்டனார் பீஷ்மரும் கர்ணனும் யுத்தங்களில் வெற்றி பெறுகின்ற கிருபாச்சாரியாரும் அவர் போலவே அஸ்வத்தாமனும் விகர்ணனும் சோமதத்தனின் மகன் பூரிச்ரவஸூம்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: பாட்டனார் பீஷ்மர் இருக்கும் போது துரோணரை ஏன் துரியோதனன் முதலில் குறிப்பிட்டான்?

பீஷ்மர் அனைத்து ஆசாபாசங்களையும் விட்டவர் கர்மத்தை தீர்ப்பதற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரை உயர்த்தி பெருமைப்படுத்தி பேசினாலும் தாழ்த்தி சிறுமைப்படுத்தி பேசினாலும் இரண்டையும் ஒன்று போலவே ஏற்றுக் கொள்பவர். அவரை பெருமைப்படுத்தி பேசுவதினால் துரியோதனனுக்கு அதிகப்படியான எந்த விதமான பலனும் ஏற்படப் போவதில்லை. துரோணரின் பெயரை முதலில் குறிப்பிடுவதினால் அவர் திருப்தி அடைந்து மேலும் உற்சாகத்தோடு யுத்தம் புரிவார் என்ற எண்ணத்தில் துரியோதனன் முதலில் துரோணரின் பெயரை குறிப்பிட்டான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: துரோணர் என்பவர் யார்?

பரத்வாஜ மகரிஷியின் மகன் துரோணர். சரத்வான் மகரிஷியின் மகளும் கிருபாச்சாரியாரின் சகோதரியுமான கிருபியை மணந்து கொண்டார். இவரது மகன் அஸ்வத்தாமன். இவர் அக்னிவேச்ய மகரிஷியிடமும் பரசுராமரிடமும் அனைத்து வித அஸ்திர சாஸ்திர வித்தைகளையும் அதன் ரகசியங்களையும் பிரயோகப்படுத்தும் முறைகளையும் கற்றார். வேதத்தையும் அதன் அங்கங்களையும் முறையாக கற்றவர். பிரம்மாஸ்திரம் அக்னேய அஸ்திரத்தின் பிரயோகத்தை நன்கு அறிந்தவர். யுத்தக்களத்தில் இவர் தன்னுடைய பரிபூரண சக்தியோடு நின்றால் இவரை யாராலும் வெல்ல முடியாது. மகாபாரத யுத்தத்தில் பீஷ்மருக்கு பிறகு துரோணர் ஐந்து நாட்கள் சேனாதிபதியாக இருந்தார். தன்னுடைய மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற தவறான செய்தியை கேட்டதும் உலக வாழ்க்கையை வெறுத்து தன் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தியானத்தில் அமர்ந்தார். அப்போது திருஷ்டத்யும்னன் தன்னுடைய வாளினால் துரோணரின் தலையை கொய்து தன் பிறப்பின் கடமையை செய்து முடித்தான். அவரது உடலில் இருந்து வந்த ஆத்ம ஒளியானது ஆகாயத்திற்கு சென்றதை அனைவரும் கண்டனர்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீஷ்மர் என்பவர் யார்?

சந்தனுவுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர். இவரது இயற்பெயர் தேவவிரதர். தன் தந்தைக்கு சத்யவதியை திருமணம் செய்து கொடுப்பதற்காக அரச பதவியை தியாகம் செய்து பிரம்மச்சரிய விரதம் எடுத்துக் கொண்டார். இதனால் பீஷ்மர் என்று பெயர் பெற்றதோடு தன் தந்தையிடம் இருந்து இச்சாம்ருத்யு என்ற நினைக்கும் போது மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றார். அஸ்திர சாஸ்திரங்கள் அனைத்தையும் முழுவதும் அறிந்து அதில் தேர்ச்சியும் பெற்றவர். வீரம் தியாகம் சகிப்புத்தன்மை பொறுமை புலனடக்கம் தெளிவு வைராக்கியம் தாய் தந்தையிடம் பக்தி ஆகிய ஆகிய பல நல்ல பண்புகளைக் கொண்டவர். ஞானம் விஞ்ஞானத்தை நன்கு அறிந்து வைத்திருந்தார். கிருஷ்ணரின் ரூபத்தையும் தத்துவத்தையும் நன்கு அறிந்தவர். மகாபாரத யுத்தத்தில் இவருக்கு இணையாக ஒரு வீரரும் இல்லை. யுத்தத்திற்கு வரும் முன்பாக துரியோதனனிடம் பாண்டவர்கள் ஐவரையும் கொல்ல மாட்டேன். ஆனால் அவர்களின் படைகளில் ஒவ்வொரு நாளும் பதினாயிரம் வீரர்களை கொல்வேன் என்று பிரமாணம் செய்திருந்தார். கௌரவ படைகளுக்கு 10 நாட்கள் சேனாதிபதியாக இருந்து கோரமான யுத்தத்தை செய்தார். பாண்டவர்களின் வெற்றியை தடுக்கும் ஒரே ஒரு மாபெரும் சக்தியாக பீஷ்மர் இருந்தார். சிகண்டி பீஷ்மருடன் போர் புரிய அவர் முன்பு வந்து நிற்க சிகண்டி சிவனிடம் பெற்ற வரத்தின் விளைவாக பீஷ்மரால் ஆயுதம் எடுத்து போர் புரிய இயலாமல் போனது. அப்போது பீஷ்மரின் வில்லை அர்ஜுனன் உடைத்து தாக்க ஆரம்பித்தான். எதிரில் சிகண்டி ஆயுதம் தாங்கி நின்று கொண்டிருந்ததால் ஆயுதமின்றி பீஷ்மர் ஒடுங்கிப் போனார். அர்ஜூனனின் அம்பினால் வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் இருந்து அனைவருக்கும் ஞானோபதேசம் செய்தார். அவரால் அனைவருக்கும் சொல்லப்பட்டதே விஷ்ணு சஹஸ்ரநாமம். அவரது விருப்பப்படியே உத்தராயண காலம் வந்த பிறகு தன் உடலை விட்டார்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: கர்ணன் என்பவன் யார்?

குந்திதேவி துருவாச மகரிஷி அளித்த மந்திரத்தை சூரிய பகவானை நினைத்து விளையாட்டாக பிரயோகிக்க சூரிய பகவானின் அருளால் உடலோடு ஒட்டிய கவசத்துடனும் காதுகளில் குண்டலத்துடனும் பிறந்தவன் கர்ணன். அவனை குந்தி ஆற்றில் ஒரு பெட்டியில் வைத்து விட்டுவிட பெட்டி அதிரதன் என்ற ஒரு தேரோட்டியின் கையில் கிடைத்தது. குழந்தைக்கு கர்ணன் என்று பெயர் சூட்டி வளர்த்தார்கள். துரோணாச்சாரியாரிடமும் பரசுராமரிடமும் வில் அஸ்திர சாஸ்திர வித்தைகளை கற்றவன். துரியோதனின் நெருங்கிய நண்பனாக இருந்தவன். துரியோதனனின் ஆட்சிக்கு உட்பட்ட அங்க தேசத்திற்கு அரசனாக இருந்தவன். துரியோதனனின் நட்பிற்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் துரியோதனுக்கே என்ற கொள்கையில் வாழ்ந்தவன். தன்னுடைய பிறவி ரகசியத்தை குந்திதேவி கர்ணனிடம் சொன்ன பிறகும் துரியோதனனை விட்டு பிரிந்து பாண்டவர்களுடன் சேர மறுத்து தான் கொண்ட கொள்கையுடன் வாழ்ந்தவன். யார் எதைக் கேட்டாலும் தன்னிடம் இருப்பதை தானமாக கொடுத்து விடும் தர்ம குணம் நிறைந்தவன். இந்திரன் உடலோடு ஒட்டிய கவசத்தையும் குண்டலத்தையும் தானமாக கேட்டதும் அக்கணமே யோசிக்காமல் தானமாக கொடுத்தவன். மகாபாரத யுத்தத்தில் பீஷ்மர் துரோணருக்கு பிறகு இரண்டு நாட்கள் சேனாதிபதியாக இருந்தான். மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணரின் வழிகாட்டுதலோடு அர்ஜூனன் கையால் இறந்தான்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: கிருபாச்சாரியார் என்பவர் யார்?

கௌதம வம்சத்தில் சரத்வான் என்ற மகரிஷியின் மகன் கிருபாச்சாரியார். இவரது சகோதரியின் பெயர் கிருபி. இவர்கள் இருவரையும் சந்தனு மன்னன் வளரத்தார். வில்வித்தையில் அனுபவம் உள்ளவர். வேதசாஸ்திரங்கள் அறிந்தவர். எதிரிகளை வெற்றி கொள்வதில் நிபுணராக இருந்தார். குரு வம்சத்திற்கு துரோணர் குருவாக வருவதற்கு முன்பாக பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் யாதவர்களுக்கும் குருவாக இருந்து வில்வித்தைகளை கற்றுக் கொடுத்தார். மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு இவர் பாண்டவர்களின் வாரிசான பரீட்சித்திற்கு வில் வித்தைகளை கற்றுக் கொடுத்தார்.

இந்த சுலோகத்தில் 6 வது கேள்வி: அஸ்வத்தாமன் என்பவன் யார்?

துரோணரின் மகன் அஸ்வத்தாமன். திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் புத்திர பாக்கியம் இல்லாத துரோணர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் அவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க சிரஞ்சீவியாக அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் கேட்கிறார். அவரின் வேண்டுகோளின்படி மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும் வரை சாகா வரம் உள்ள குழந்தை பிறக்கும் என்று சிவன் வரம் கொடுத்தார். அதன் பிறகு துரோணருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் நெற்றியில் பிருங்கி என்று அழைக்கப்படும் மணி இருந்தது. இந்த மணி இருக்கும் வரை தேவர் கந்தர்வர் மனிதர் அரக்கர் ரிஷிகள் யட்சர்கள் மிருகங்கள் என எந்த உயிரினமோ அல்லது எந்த விதமான திவ்ய அஸ்திரமோ அவனை கொல்ல முடியாது. பிறக்கும் போதே குதிரையைப் போல் கனைக்கும் திறன் பெற்றதால் அஸ்வத்தாமன் என்று பெயர் சூட்டப்படுகிறான். அவனது தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் வேதங்களையும் கிருபாச்சாரியாரிடம் போரின் வியூக நுணுக்கங்களையும் பரசுராமரிடம் மொத்த ஆயுத அறிவையும் கற்றுக் கொண்டவன். கிருஷ்ணரிடம் இருந்து நாராயண அஸ்திர மந்திரத்தை பெற்றவன். தன் தந்தை துரோணாச்சாரியாரிடம் இருந்து பிரம்மாஸ்திர மந்திரத்தை பெற்றவன். காளிதேவியிடம் இருந்து மூவுலகையும் அழிக்கும் பாசுபதாஸ்திர மந்திரத்தை பெற்றவன். துவாபர யுகத்தில் பிரம்மாஸ்த்திரம் நாராயண அஸ்திரம் பாசுபதாஸ்திரம் என்ற இந்த மூன்றையும் கற்ற ஒரே வீரன் அஸ்வத்தாமன் மட்டுமே. மற்ற அஸ்திரங்களை விட இந்த மூன்று அஸ்திரங்களும் பல மடங்கு சக்தி வாய்ந்தது. தன்னை விட பலம் அதிகம் கொண்ட எதிரியின் மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். தர்மத்தின் பக்கம் நிற்பவர்களால் மட்டுமே இந்த அஸ்திரங்களின் கட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.

யுத்தத்தின் இறுதியில் அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமானால் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் அறிவு இல்லை. பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அதனால் அஸ்வத்தாமன் பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு மட்டும் காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். நெற்றியில் இருந்த பிருங்கி மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடனாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். (அஸ்வத்தாமன் வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

துரோணரின் மகன் அஸ்வத்தாமன்

இந்த சுலோகத்தில் 7 வது கேள்வி: விகர்ணன் என்பவன் யார்?

திருதராஷ்டிரனின் நூறு மகன்களில் ஒருவன் விகர்ணன். துரியோதனனின் சகோதரன். மகாரதனாக இருப்பவன் மகாபலசாலி தர்மாத்மா. திரௌபதியை கௌரவர்கள் தங்களின் அரசவையில் கொடுமைப்படுத்திய போது நான் தோற்று விட்டேனா இல்லையா என்று திரௌபதி கேள்வி எழுப்பிய போது அனைவரும் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்கள். விதுரருடன் விகர்ணன் மட்டுமே எழுந்து பேசினான். திரௌபதியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பது பெரிய அநியாயம் என்று தன் பேச்சினால் நியாயத்தையும் தர்மத்தையும் அனைவருக்கும் புரியும்படி தெளிவாக எடுத்துக் கூறினான். விகர்ணன் மிகவும் நல்லவன் என்று கிருஷ்ணரால் சொல்லப்பட்டவன். மகாபரத யுத்தத்தில் பீமனின் கையால் விகர்ணன் இறந்தான்.

இந்த சுலோகத்தில் 8 வது கேள்வி: பூரிச்ரவஸ் என்பவர் யார்?

சந்தனு மன்னனின் மூத்த சகோரதர் பாஹ்லீகரின் மகன் சோமதத்தனின் மகன் பூரிச்ரவஸ். மிகுந்த தர்மசீலன் யுத்தக் கலையில் தேர்ச்சி பெற்றவன். மகாரதனாக இருப்பவன். அதிகமான தட்சணைகள் கொடுத்துப் பல யாகங்கள் செய்திருக்கிறார். மகாபாரத யுத்தத்தில் சாத்யகியின் கையால் இறந்தார்.

சுலோகம் -7

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #7

அந்தணர்களில் சிறந்தவரே நமது அணியிலும் பிரதான யுத்த வீரர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். என்னுடைய படையின் தலைவர்களான அவர்களைப்பற்றி உங்களது கவனத்திற்காக சொல்கிறேன்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்தத்தில் இருக்கும் அனைவரையும் துரோணருக்கு தெரியும் இருந்தும் துரியோதனன் ஏன் அவர்களின் பெயரை துரோணரிடம் சொல்கிறான்?

துரோணரிடம் பாண்டவர்களின் பெயரை குறிப்பட்ட போது இதனைக் கேட்ட தமது படை வீரர்கள் எதிரணியில் இத்தனை பெரிய வீரர்கள் இருக்கின்றார்களே என்று திகைத்து விடக்கூடாது எதிரணி வீரர்களை விட பலசாலிகள் நமது அணியில் இருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவும் யுத்தத்தில் ஈடுபடும் வீரர்களின் பெயரை அனைவருக்கும் முன்பாக துரியோதனன் பெருமைப்படுத்தி சொல்வதினால் அவர்கள் திருப்தி அடைந்து மேலும் உற்சாகத்தோடு யுத்தம் புரிவார்கள் என்ற காரணத்திற்காகவும் துரியோதனன் துரோணரிடம் அவர்களின் பெயரை குறிப்பிட்டு சொன்னான்.

சுலோகம் -6

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #6

பராக்கிரமம் மிகுந்த யுதாமந்யு பலசாலியான உத்தமௌஜா சுபத்திரையின் மகன் அபிமன்யு திரௌபதியின் ஐந்து மகன்கள் இவர்கள் அனைவரும் மகாரதர்களாக இருக்கிறார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுதாமந்யு உத்தமௌஜா என்ற இருவரும் யார்?

பாஞ்சால தேசத்து ராஜ குமாரர்கள் இருவரும் சகோதரர்கள். பலம் மிகுந்தவர்கள். மிகுந்த பலசாலிகள் ஆனதால் இவர்கள் விக்ராந்த வீர்யவான் என்று பெயர் பெற்றவர்கள். யுத்தத்தின் இறுதியில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இவர்கள் இருவரையும் அசுவத்தாமன் கொன்று விட்டான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அபிமன்யு என்பவன் யார்?

அர்ஜூனனுக்கும் கிருஷ்ணரின் தங்கையான சுபத்திரைக்கும் பிறந்தவன். மத்யச நாட்டு அரசன் விராடனுடைய மகள் உத்தரையை அபிமன்யு மணந்தான். தன் தந்தை அர்ஜூனனிடமும் தாய் மாமன் பிரத்யும்னனிடமும் வில்வித்தை கற்ற நிகரற்ற வீரன். மகாபாரத யுத்தத்தில் எவரும் நுழைய முடியாத சக்கர வியூகத்தில் நுழைந்து எண்ணற்றவர்களை கொன்று குவித்தான். அப்போது துரோணர் கிருபாசாரியார் கர்ணன் அசுவத்தாமன் பிருஹத்பலன் கிருதவர்மா என்ற ஆகிய ஆறு மகாரதர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். இறுதியில் துச்சாதனனின் மகன் தனது கதாயுதத்தால் அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடிக்க அபிமன்யு மரணமடைந்தான்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: திரௌபதியின் ஐந்து மகன்கள் யார்?

பிரதிவிந்தயன் சுதசோமன் சுருதகர்மா சதானீகன் சுருதசேனன். யுத்தத்தின் இறுதியில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இவர்கள் ஐவரையும் அசுவத்தாமன் கொன்று விட்டான்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: மகாரதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

சாஸ்திரங்களிலும் அஸ்திர வில்வித்தையிலும் கைதேர்ந்த நிபுணர்கள் மகாரதர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் தனிஒருவராகவே நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர்கள். பதினாயிரம் வில்லாளி வீரர்களை யுத்தத்தில் வழிநடத்திச் செல்வார்கள்.

குறிப்பு: சுலோகம் 5 மற்றும் 6 இல் துரியோதனனால் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் மகாரதர்கள் ஆவார்கள். பாண்டவ படைகளில் இவர்களைத் தவிர இன்னும் பல மகாரதர்கள் இருந்தார்கள். 6 வது சுலோகத்தின் இறுதியில் ஸர்வே என்ற வார்த்தையை துரியோதனன் சொல்வதாக வருகிறது. இந்த ஸர்வே என்ற சமஸ்கிருத சொல்லினால் பெயர் குறிப்பிடப்படாத பல மகாரதர்களையும் சேர்த்து துரியோதனன் துரோணரிடம் சொல்வதாக கருத வேண்டும்.

சுலோகம் -5

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #5

திருஷ்டகேது சேகிதானன் வீரியமுடைய காசிராஜன் புருஜித் குந்திபோஜன் சிறந்த மனிதனாகிய சைப்யனும்

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: திருஷ்டகேது என்பவன் யார்?

சிசுபாலனின் மகன். சேதி நாட்டு அரசன். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: சேகிதானன் என்பவன் யார்?

விருஷ்ணி வம்சத்தை சேர்ந்தவர். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். பாண்டவர்களின் ஏழு அக்ரோணிப் படைகளுக்குரிய ஏழு தளபதிகளில் இவரும் ஒருவர். இவர் மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: காசிராஜன் என்பவன் யார்?

காசி நாட்டு அரசன். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். மகாபாரதத்தில் சேனாபிந்து என்றும் க்ரோதஹந்தா என்றும் அபிபூ என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: புருஜித் குந்திபோஜன் என்ற இருவரும் யார்?

இவர்கள் இருவரும் குந்தியின் சகோதரர்கள். பாண்டவர்களுக்கு தாய் மாமன் ஆவார்கள். இருவரும் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்கள்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: சைப்யனும் என்பவன் யார்?

இவரது பெண் தேவிகாவை யுதிஷ்டிரர் திருமணம் செய்திருக்கிறார். யுதிஷ்டிரனின் மாமனார் ஆவார். மனிதர்களில் சிறந்தவர். மிகப்பெரிய யுத்த வீரர் அதனால் இவர் நரபுங்கவர் என்று அழைக்கப்படுவார்.

சுலோகம் -4

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #4

இங்கு (பாண்டவ படையில்) சூரர்களும் மிகப்பெரிய வில்வித்தை வீரர்களான பீமன் அர்ஜூனனுக்கு இணையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். யுயுதானன் விராடன் மகாரதனாகிய துருபதன்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுயுதானன் என்பவன் யார்?

சினி என்பவருடைய மகன் யுயுதானன். யாதவ குலத்து அரசன். கிருஷ்ணரைச் சார்ந்தவன். அர்ஜூனனின் சீடன். சாத்யகிக்கு யுயுதானன் என்ற பெயரும் உண்டு. பலம் மிகுந்தவன். இவன் மகாபாரத யுத்தத்தில் இறக்கவில்லை. ரிஷியின் சாபத்தினால் யாதவர்களுக்குள் ஏற்பட்ட யுத்தத்தில் அடிபட்டு இறந்தான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: விராடன் என்பவன் யார்?

மத்சிய நாட்டு அரசன் விராடன். பாண்டவர்கள் தங்களின் 1 வருட அஞ்ஞாத வாசத்தை இவரது நாட்டில் மறைந்து வாழ்ந்தார்கள். இவருடைய பெண் உத்தரையை அர்ஜூனனுடைய மகன் அபிமன்யு மணந்தான். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: துருபதன் என்பவன் யார்?

புருஷத் என்பவரின் மகன் துருபதன். பாஞ்சால தேசத்து அரசர். துரோணரைக் கொல்ல வேண்டும் என்று யாஜர் உபயாஜர் என்ற இரண்டு ரிஷிகளை வைத்து யாகம் செய்தார். யாகத்தில் தோன்றியவர்கள் பாண்டவர்களின் சேனாதிபதியான திருஷ்டத்யும்னனும் பாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்த திரௌபதியும் ஆவார்கள். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.

சுலோகம் -3

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #3

குரு துரோணரே பாண்டவர்களின் படைகளைப் பாருங்கள். துருபதனின் மகனும் உங்களது புத்திசாலி மாணவனுமாகிய திருஷ்டத்யும்னன் பாண்டுவின் மகன்களான பாண்டவர்களின் மிகப்பெரிய படைக்கு தலைமையேற்று அணிவகுத்து நிற்கின்றான் பாருங்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: திருஷ்டத்யும்னனை ஏன் துருபதனின் மகன் என்றும் புத்திசாலி மாணவன் என்றும் துரியோதனன் கூறுகின்றான்.

பதில்: அரசியல் சூழ்ச்சியில் மிகவும் சாமர்த்தியசாலி துரியோதனன். திருஷ்டத்யும்னன் துரோணரிடம் மாணவனாக சேர்ந்து வித்தைகளை கற்றுக் கொண்டு அவருக்கு எதிராகவே யுத்தம் செய்ய வந்திருக்கிறான் அவனது புத்திசாலித்தனத்தை பாருங்கள். உங்களை திணறடிப்பது போல் அழகான அணிவகுப்பை செய்திருக்கிறான் பாருங்கள் என்று தனது அரசியல் சூழ்ச்சியில் மிகவும் சாமர்த்தியமான வார்த்தைகளினால் துரோணருக்கு கோபத்தை உண்டு செய்கிறான் துரியோதனன். துரோணரை கொல்வதற்காக யாகம் செய்து திருஷ்டத்யும்னனை மகனாகப் பெற்றான் துருபதன். அவனை பாண்டவர்கள் தங்கள் படைக்கு தலைமை சேனாதிபதியாக்கினார்கள். துருபதனின் மேல் ஆரம்பத்தில் துரோணருக்கு இருந்த கோபம் திருஷ்டத்யும்னனின் மேலும் வர வேண்டும் என்பதற்காகவும் நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் துரியோதனன் அவ்வாறு கூறினான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: பாண்டவ படைகளின் எண்ணிக்கை ஏழு அக்ரோணி படைகள். கௌரவ படைகளின் எண்ணிக்கை பதினோரு அக்ரோணி படைகள். கௌரவர்களின் படைகளை விட பாண்டவர்களின் படைகளுடைய எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது துரியோதனன் ஏன் பாண்டவர்களின் படையை மிகப்பெரிய படைகள் என்று கூறினான்.

பதில்: பாண்டவர்களின் படைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வஜ்ர வியூக அமைப்பில் இருந்ததால் பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக தெரியும். அடுத்து பாண்டவர்களின் படைகளை மிகவும் சக்தி வாய்ந்த படைகளாக துரியோதனன் எண்ணினான். அதனால் பாண்டவர்களின் படைகளை வெற்றி பெறுவதற்கான வழிகளை துரோணர் ஆராய்ந்து சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாண்டவர்களின் படையை மிகப்பெரிய படைகள் என்று கூறினான்.

சுலோகம் -2

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #2

சஞ்ஜயன் திருதராஷ்டிரனிடம் பதில் கூறுகிறார். பாண்டவர்களின் அணிவகுத்து நின்ற படைகளை பார்த்ததும் துரியோதன ராஜா தனது குருவாகிய துரோணாச்சாரியாரிடம் சென்று பேச ஆரம்பிக்கின்றான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: நாட்டின் அரசனாக திருதராஷ்டிரர் இருக்கும் போது சஞ்ஜயன் ஏன் துரியோதனனை ராஜா என்று அழைக்கிறார்.

பதில்: நாட்டின் அரசனாக திருதராஷ்டிரர் இருந்தாலும் அவரின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாட்டிற்கு துரியோதனனும் ராஜாவாகவே உள்ளான். தன்னுடைய மகன் ராஜா என்ற அடைமொழியுடன் மரியாதையாக குறிப்பிட்டு அழைக்கப்படுவதை எண்ணி திருதராஷ்டிரர் மகிழ்ச்சி அடைவார் என்று சஞ்ஜயன் அவ்வாறு அழைக்கிறார்.

இந்த சுலோகத்தின் 2 வது கேள்வி: பாண்டவர்களின் படைகளை கண்ட துரியோதனன் ஏன் துரோணரிடம் சென்றான்.

பதில்: பாண்டவர்களின் படைகள் கௌரவர்களின் படைகளை விட சிறிது குறைவாக இருந்தாலும் அவர்களின் அணிவகுப்பு விசித்திரமான முறையில் இருந்தது. இதனைப் பார்த்த துரியோதனன் வியப்படைந்தான். தனூர்வேதத்தில் சிறந்த அறிவு படைத்த துரோணரிடம் இதனைப் பற்றி கூறினால் அவர் படைத்தளபதியான பீஷ்மரிடம் இதனைப் பற்றி சொல்லி கௌரவர்களின் படைகளை இன்னும் சிறப்பாக அணிவகுக்க செய்வார் என்ற எண்ணத்தில் துரோணரிடம் துரியோதனன் சென்றான்.

இந்த சுலோகத்தின் 3 வது கேள்வி: ராஜாவான துரியோதனன் துரோணரை தான் இருக்குமிடம் வரவழைத்து செய்தியை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் இருக்குமிடத்திற்கு ஏன் துரியோதனன் சென்றான்.

பதில்: கௌரவப்படைகளுக்கு பிரதான படைத்தலைவராக பீஷ்மர் இருந்தாலும் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் ஒரு உப தலைவர் இருப்பார். துரோணரும் ஒரு படைப்பிரிவுக்கு தலைவராகவே இருக்கிறார். படைகள் அணிவகுத்து நின்ற பிறகு அந்தந்த படைகளின் தலைவருக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இருந்து அவரை அழைத்தாலும் அகற்றினாலும் அந்த படையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு துரோணரின் உதவி அவசியம் தேவை என்பது துரியோதனனுக்கு தெரியும் அவரின் அன்பைப் பெறுவதற்கும் பிறர் முன்பாக அவரை பெருமைப் படுத்துவதற்காகவும் அவர் இருக்குமிடம் துரியோதனன் சென்றான்.

சுலோகம் -1

  1. அர்ஜூன விஷாத யோகம் முன்னுரை

மகாபாரதம் குருசேத்திர யுத்தம் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்றது. யுத்தம் ஆரம்பிக்கும் முன் அஸ்தினாபுரத்தின் அரசனான பார்வையற்ற திருதராஷ்டிரன் தன் அரண்மனையில் இருந்தபடியே யுத்தக் களத்தில் நடைபெறுவதை தெரிந்து கொள்வதற்காக சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமித்தார். வேதவியாசரால் ஞானதிருஷ்டியை பெற்ற சஞ்ஜயன் யுத்தக் களத்தில் நடந்தவைகளையும் கிருஷ்ணருக்கும் அர்ஜூனனுக்கும் நடைபெற்ற உரையாடலையும் தன் ஞானதிருஷ்டி வழியாக பார்த்து திருதராஷ்டிரருக்கு தெரிவித்தார். முதல் அத்தியாயத்தில் திருதராஷ்டிரன் சஞ்ஜயனிடம் கேள்வி கேட்பதும் அதற்கு சஞ்ஜயன் பதில் கொடுப்பதும் அர்ஜூனன் தன் உறவினர்களும் நண்பர்களும் எதிரிகளாக வந்ததை எண்ணி கவலையில் முழ்கி யுத்தம் செய்ய மாட்டேன் என்று கிருஷ்ணரிடம் சொல்லி தன் காண்டிப வில்லை கீழே வைத்து விட்டு யுத்த களத்தில் அமர்ந்து விடுவதும் இந்த தலைப்பில் உள்ளது. அர்ஜூன விஷாத யோகம் முதல் அத்தியாயத்தில் மொத்தம் 47 சுலோகங்கள் உள்ளது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #1

சஞ்ஜயனிடம் திருதராஷ்டிரன் கேள்வி கேட்கிறார். தர்மம் நிறைந்த குருசேத்திர யுத்தகளத்திற்கு யுத்தம் செய்ய வந்த கௌரவர்களான எனது மகன்களும் பாண்டவர்களான எனது தம்பி மகன்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்த களத்தை திருதராஷ்டிரன் தர்மம் நிறைந்த குருசேத்திர யுத்தகளம் என்று ஏன் சொல்கிறார்.

பதில்: மகாபாரதம் வனபருவம் 83 வது அத்தியாத்திலும் சல்லியபருவம் 53 வது அத்தியாயத்திலும் குரு சேத்திர யுத்தகளத்தின் பெருமை சொல்லப்படுகிறது. சதபதப்ராஹ்மணம் என்னும் பழமையான நூலில் இதற்கான குறிப்பு உள்ளது. இந்த இடத்திற்கு சமந்த பஞ்சகம் என்ற பெயரும் உண்டு. இங்கு பிரம்மா இந்திரன் அக்னி முதலிய தேவர்கள் தவம் செய்திருக்கிறார்கள். குருமகாராஜன் என்பவர் கடுமையான உயர்ந்த தவத்தை செய்திருக்கிறார். இங்கே இறப்பவர்கள் உத்தம கதியைப் பெறுவார்கள். இதனால் இந்த இடத்தை திருதராஷ்டிரன் தர்மமும் புண்ணியமும் நிறைந்த குரு சேத்திர யுத்தகளம் என்று சொல்கிறார்.

வனபருவம் 83 வது அத்தியாத்தில் சொல்லப்படும் பெருமை: குருசேத்திரத்தில் வசிக்கும் யாவரும் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள் என்றே பழமையான நூல்களில் சொல்லப்படுகிறது. அங்கே இருக்கும் புனிதம் நிறைந்த பிரம்மசேத்திரத்திற்கு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் சாரணர்களும் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் யட்சர்களும் நாகர்களும் அடிக்கடி வருவார்கள். குருசேத்திரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஒருவன் தர்ம சிந்தனையுடன் மனதால் நினைத்தாலும் அவனது பாவங்கள் அனைத்தும் அழிந்து கடைசியாக அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். பக்தியுடைய மனதுடன் குருசேத்திரத்திற்குச் செல்பவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். நான் குருசேத்திரத்தில் வாழ்வேன் என்று தொடர்ச்சியாகச் சொல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். காற்றால் அடித்துக் கொண்டு வரப்பட்ட குருசேத்திரத்தின் தூசி கூட ஒரு மனிதனை அடுத்த பிறவியில் அருள் வாழ்க்கை வாழ வைக்கும்.

சல்லியபருவம் 53 வது அத்தியாத்தில் சொல்லப்படும் பெருமை: குருசேத்திரத்தில் பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் பாடிய ஒரு பாடலில் குருசேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீயசெயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும் என்று பாடியுள்ளான். தேவர்களில் முதன்மையானவர்களும் பிராமணர்களில் முதன்மையானவர்களும் நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையான பலரும் விலை மதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து தங்கள் உடல்களை விட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.