44. இசை வாது வென்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இசை வாது வென்ற படலம் நாற்பத்தி நான்காவது படலமாகும்.

வரகுண பாண்டியனின் காலத்திற்கு பின் அவரது மகன் இராசராசபாண்டியன் மதுரையை ஆட்சி செய்தான். அப்போது பாணபத்திரரின் மனைவி இறைவனின் புகழினை இசையோடு பாடி வந்தாள். இராசராசனின் மனைவி இசைபாடுவதில் வல்லவள். அவளின் இசையில் இராசராசபாண்டியன் மயங்கிப் போயிருந்தான். ஒரு சமயம் இராராசபாண்டியனின் மனைவி பாணபத்திரரின் மனைவி இசை பாடுவதைக் கண்டு தன்னைவிட நன்றாகப் பாடுகிறாளே என்று பொறாமை கொண்டாள். எப்படியாவது பாணபத்திரரின் மனைவி இசை பாடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். தன்னுடைய மனக்கருத்தை இராசராசபாண்டியனிடம் தெரிவித்தாள். பாண்டியனும் தன்னுடைய மனைவியின் விருப்பதை நிறைவேற்ற திட்டம் ஒன்றை வகுத்தான். அதன்படி இலங்கையிலிருந்து இசை பாடுபவள் ஒருத்தியை பாண்டிய நாட்டிற்கு வரவழைத்தான். பின் பாணபத்திரரின் மனைவியை அழைத்த இராசராசபாண்டியன் ஈழத்திலிருந்து இசை பாடுபவள் ஒருத்தி வந்துள்ளாள். அவள் தன்னை இசையில் வெல்ல உங்கள் நாட்டில் யாரும் இருக்கின்றனரா? என்று ஆணவமாக பேசுகிறாள். சிவபக்தையான நீ நாளை நடைபெறும் இசைப் போட்டியில் கலந்து கொண்டு அவளை வெல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதனைக் கேட்டதும் பாணபத்திரரின் மனைவி அரசே சொக்கநாதரின் திருவருளால் நான் நாளை நடைபெறும் இசைப் போட்டியில் வெல்வேன் என்று கூறினாள். பின்னர் இராசராசபாண்டியன் ஈழத்து பாடல் பாடுபவளிடம் வந்து நீ நாளை நடைபெறும் இசைப் போட்டியில் பாணபத்திரரின் மனைவியை எதிர்த்து பாடல்கள் பாடு. நீ எவ்வாறு பாடினாலும் நீயே வெற்றி பெற்றதாக நான் அறிவிப்பேன் என்று கூறினான். மறுநாள் காலையில் அரசவையில் இசைப்போட்டி ஆரம்பமானது. ஈழத்து இசை பாடுபவள் மிகுந்த இறுமாப்புடன் ஆரவாரத்துடனும் அரசவைக்கு வந்தாள்.

சொக்கநாதரை வணங்கிவிட்டு பாணபத்திரரின் மனைவி அமைதியாக இசைபோட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தாள். ஈழத்து பாடல் பாடுபவள் அரசன் கொடுத்த தைரியத்தில் பாணபத்திரரின் மனைவியிடம் வம்பிழுத்தாள். பாணபத்திரரின் மனைவி நான் உன்னிடம் இசைவாது செய்ய வந்தனே ஒழிய சண்டையிட வரவில்லை என்று கூறினாள். உடனே இராசராசபாண்டியன் பெண்களே நீங்கள் இருவரும் சண்டையிடுவதை விட்டுவிட்டு பாடல்களைப் பாடுங்கள் என்று கூறி இசைப் போட்டியைத் தொடங்கி வைத்தான். இருவரும் இசைப்பாடல்களை தனித்தனியே பாடினார்கள். இருவரின் பாடல்களையும் கேட்ட அவையோர் பாணபத்திரரின் மனைவியின் பாடல்கள் நன்றாக இருந்ததாகக் கூறினர். ஆனால் இராசராசபாண்டியன் ஈழத்துப் பாடினி வென்றாள் என்று அறிவித்தான். இந்த முடிவிற்கு அறிஞர்களும் சான்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருவேறு கருத்து வந்ததால் அடுத்த நாள் மீண்டும் இசைப் போட்டி நடைபெறும் என்று பாண்டியன் அறிவித்தான். பாண்டியன் தன்னைப் புகழ்ந்து பேசியதால் ஈழப்பாடினி இறுமாப்புடன் தன் இருப்பிடத்திற்குச் சென்றாள்.

சொக்கநாதரை பாணபத்திரரின் மனைவி சரணடைந்தாள். மதுரையின் மண்ணினை சுந்தர பாண்டியனராக ஆட்சி செய்த பெருமானே இராசராசபாண்டியன் நடுநிலைமை தவறிப் பேசுகிறான். திருவருள் புரிந்து என்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று மனமுருகி வழிபட்டாள். அப்போது ஆகாயத்திலிருந்து பெண்ணே அஞ்ச வேண்டாம் நாளை இசை போட்டியின் முடிவில் அவளை வெற்றி பெற்றதாக அனைவரும் அறிவிப்பார்கள். அப்போது நீ கோவிலில் இப்போட்டியை வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் பாடுகிறோம். அங்கு நீங்கள் தெரிவிக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று கோவிலில் போட்டியை நடத்தும் படி கேட்டுக் கொள். வேறு வழியின்றி அனைவரும் சம்மதிப்பார்கள். அதன்பிறகு உனக்கு வெற்றி கிடைக்கும். நீயே வெல்லும்படி அருளுவோம் என்று திருவாக்கு கேட்டது. மறுநாள் பாண்டியன் அவ்விருவரையும் அவைக்கு அழைத்துப் போட்டியிட்டுப் பாடும்படி கூறினான். அதற்கு முன்பாகவே சான்றோர்கள் அனைவரையும் அழைத்த அரசன் ஈழத்து பெண் வெற்றி பெற்றாள் என்று அனைவரும் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். இருவரும் போட்டியில் பாடினர். ஈழத்துப்பெண் வென்றாள் என்று பாண்டியன் கூறினான். பாண்டியன் சொன்னது போலவே அவையோரும் ஆமோதித்தனர். உடனே பாணபத்திரரின் மனைவி அரசே உங்கள் தீர்ப்பு ஓரம் சார்ந்து இருக்கிறது. உன்னுடைய சொல்லையே அவையோரும் எதிரொலிக்கின்றனர். ஆகையால் நாளை இடம் மாறி ஆடிய நடராஜரின் முன்னர் நாங்கள் பாடுகின்றோம். அங்கு வந்து நீர் என்ன தீர்ப்புக் கூறினாலும் அதற்கு நான் ஒப்புக் கொள்கிறேன் எனச் சூளுரைத்தாள். அதற்கு அரசன் உட்பட அனைவரும் உடன்பட்டனர். மறுநாள் திருகோவிலில் இசைப் போட்டி ஆரம்பமானது.

சொக்கநாதர் இசைப் புலவராய் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து புலவர்களுடன் புலவராக அமர்ந்து கொண்டார். ஈழப்பாடினி முதலில் பாடினாள். பின்னர் பாணபத்திரரின் மனைவி பாடினாள். பாடி முடித்ததும் தன்னை அறியாமல் மெய் மறந்து ஆஹா என்ன அற்புதம் எனக் கைதட்டினான். அதையே தீர்ப்பாகக் கொண்ட மக்கள் பாணபத்திரரின் மனைவி வெற்றி பெற்றதாக ஆமோதித்துக் கரவொலி செய்தனர். சொக்கநாதரின் திருவருளினால் இராசராசபாண்டியன் நடுநிலைமையில் இருந்து பாணபத்திரரின் மனைவி வென்றதாக அறிவித்தார். அவையோரும் அதனை ஆமோதித்தனர். உடனே அங்கிருந்த இசைப்புலவரான சொக்கநாதர் எழுந்து இது அற்புதம் இது அற்புதம் என்று கூறி மறைந்தார். இராசராசபாண்டியன் தன்னிடம் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் இசைப் புலவராய் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான். பின்னர் ஈழப்பாடினியின் தோளில் பாணபத்திரரின் மனைவியை அமரச் செய்து பாணபத்திரரின் மனைவியின் வெற்றியை உறுதி செய்தான். பாணபத்திரரின் மனைவிக்கும் ஈழப்பாடினிக்கும் பரிசுகள் பல வழங்கினான். அதன்பின் இராசராசபாண்டியன் சுகுண பாண்டியன் என்ற மகனைப் பெற்று இனிது வாழ்ந்திருந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எவரின் சூழ்ச்சியும் இறைவனை சரணடைந்தவர்கள் முன்னால் எடுபடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

43. பலகை இட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பலகை இட்ட படலம் நாற்பத்தி மூன்றாவது படலமாகும்.

பாணபத்திரரின் வறுமையைப் போக்க இறைவனான சொக்கநாதர் சேரமானுக்கு திருமுகத்தில் பாடல் எழுதி கொடுத்து சேரமானிடம் பொருள் பெற்றுத் தந்தார். அதன் பின்னர் பாணபத்திரர் பகலில் வழிபாடு நடத்தியதோடு இரவிலும் திருகோவிலுக்குச் சென்று இசைபாடி வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டார். எந்த நிகழ்வுகள் நடந்தாலும் திருகோவிலுக்கு இரவில் சென்று வழிபடுவதை பாணபத்திரர் நிறுத்தவில்லை. இறைவனார் பாணபத்திரரின் இசை சேவையை உலகுக்கு எடுத்துக் காட்ட விரும்பினார். ஒரு நாள் பாணபத்திரர் இரவு நேர வழிபாட்டிற்கு செல்லும் நேரத்தில் புயல் காற்று வீசியது. இடி மின்னலுடன் கடுமையாக மழை பெய்தது. பாணபத்திரரோ கடும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவு வழிபாட்டிற்கு திருகோவிலுக்குச் சென்றார். மழையில் நனைந்ததால் குளிரால் பாணபத்திரரின் உடல் நடுங்கியது. பாணபத்திரர் மழை இடி மின்னல் புயல் காற்று என எதனையும் பொருட்படுத்தாது யாழினை மீட்டி பாடத் துவங்கினார். அவரது பாடல் எலும்பினையும் உருக்கும் வண்ணம் இருந்தது. கடும் சூழலிலும் விடாது முயற்சி செய்து இசை பாடிய பாணபத்திரரின் இசையினால் கவரப்பட்ட இறைவனார் பாணபத்திரா இதோ இந்த பலகை உனக்கே உரியது. இதன் மேல் நின்று பாடுக என்று வானிலே திருவாக்கு அருளினார். வானத்திலிருந்து பொன்னலாகிய நவமணிகள் பதித்த பலகை ஒன்று பாணபத்திரரின் கையினை அடைந்தது. உடனே பாணபத்திரரும் இறைவனின் ஆணையின்படி பலகையின் மீது நின்று பாடினார். வழிபாட்டினை முடித்துக் கொண்டு அவர் பலகையுடன் வீட்டிற்கு திரும்பினார். பொழுது விடிந்ததும் இறைவனார் பாணபத்திரருக்கு பரிசளித்த பலகை பற்றி அறிந்த வரகுண பாண்டியன் மிக்க மிகழ்ச்சி கொண்டான். அவன் பாணபத்திரருக்கும் திருக்கோவிலுக்கும் பல பொருட்களை பரிசாகக் கொடுத்தான். அந்நாள் முதல் பாணபத்திரர் திருகோவிலுக்குச் சென்று நான்கு காலங்களிலும் பாடி மகிழ்ந்து வாழ்ந்து வந்தார். சிலகாலம் சென்ற பின் வரகுண பாண்டியன் சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தான் இதனை செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்ட பணிகளை எத்தகைய கடும் சூழலிலும் விடா முயற்சியுடன் நேர்த்தியாக செய்பவர்களுக்கு உண்டான பலனை இறைவன் உறுதியாக கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

42. திருமுகம் கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் திருமுகம் கொடுத்த படலம் நாற்பத்தி இரண்டாவது படலமாகும்.

சொக்கநாதர் முன்பு மற்றும் வரகுண பாண்டியனின் அவையிலும் பாடிக் கொண்டிருந்த பாணபத்திரர் சொக்கநாதரின் திருவருளால் தற்பெருமை மிக்க ஏகநாதனை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். பின்பு சொக்கநாதர் முன்பு மட்டுமே யாழிசைத்து பாடி வந்தார். வேறு ஏதும் வேலை செய்யாததால் பாணபத்திரர் வருமானம் இன்றி உணவுக்கே மிகவும் வருந்தினார். சொக்கநாதர் பாணபத்திரரின் மீது இரக்கம் கொண்டு வரகுணபாண்டியனின் கருவூலத்திலிருந்து நாள்தோறும் பொற்காசு மணிகள் பொன்னாலான பொருள்கள் உள்ளிட்ட பொருட்களிலிருந்து ஏதேனும் ஒன்றைக் கவர்ந்து வந்து பாணபத்திரர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருக்கும் போது அவர் முன்பாக வைத்தது விடுவார். பாணபத்திரர் பாடி முடித்து கண் திறந்து பார்க்கும் போது அவர் முன் சில சமயம் பணம் இருக்கும். சில சமயம் பொன் வெள்ளிப் பாத்திரங்கள் ஆபரணங்கள் இருக்கும். பாணபத்திரரும் அதனைப் பெற்று உருக்கி விற்று அதனைக் கொண்டு தன்னுடைய வறுமையைப் போக்கி மற்றவர்களுக்கும் உதவி வந்தார். சொக்கநாதர் பாணபத்திரரின் இறைபக்தியை உலகுக்கு எடுத்துக்காட்ட திருவுள்ளம் கொண்டார். எனவே சொக்கநாதர் பாண்டியனின் கருவூலத்திலிருந்து எடுத்து பாணபத்திரருக்கு பரிசளிப்பதை நிறுத்தி விட்டார். இதனால் பாணபத்திரர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார். ஆனாலும் தினந்தோறும் இறைவனை துதித்து பாடுவதை நிறுத்தவில்லை.

சொக்கநாதர் மதிமலி புரிசை என்னும் தொடக்கத்தை உடைய திருமுகப்பாசுரம் ஒன்றை எழுதிக் பாணபத்திரர் தூங்கும் போது அவரருகில் வைத்துவிட்டு பாணபத்திரா உன்னுடைய வறுமையை நீக்குவதற்காக வரகுணனின் கருவூலத்திலிருந்து பொருட்களைக் கவர்ந்து உமக்குப் பரிசளித்தோம். களவு போனதை பாண்டியன் கண்டறிந்தால் இதனை காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஆதலால் சேரமானுக்கு ஓலை ஒன்றினைத் தருகின்றோம். அவன் நம்மிடம் அன்பு பூண்டவன். நீ அதனை அவனிடம் அளித்து வேண்டும் பொருள் பெற்றுக் கொள் என்று திருவாய் மலர்ந்தருளினார். தூக்கத்தில் இருந்து எழுந்த பாணபத்திரர் தன் கையில் இறைவன் கொடுத்த பாடல் எழுதியிருந்த திருமுகத்தைப் (திருமுகம் என்பது பட்டுத் துணியில் எழுதிய கடிதம் ஆகும்) பார்த்து ஆடிப்பாடி மகிழ்ந்தார். தான் பெற்ற பாசுரத்தை எடுத்துக் கொண்டு இறைவனை வணங்கி மலை நாட்டினை நோக்கிப் பயணித்தார். அங்கே திருவிஞ்சைக்களம் என்ற திருத்தலத்தில் தண்ணீர்ப் பந்தலில் தங்கினார்.

சொக்கநாதர் சேர மன்னான பெருமான் நாயனாரின் கனவில் தோன்றி மன்னனே நம் அடியவன் பாணபத்திரன் உன்னைக் கண்டு பாடி பரிசு பெறும் நோக்கில் நம்முடைய திருமுகம் பெற்று மலைநாட்டினை அடைந்துள்ளான். அவனுக்கு வேண்டும் பொருள் கொடுத்தனுப்புக என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனைக் கேட்டு கண்விழித்த சேரமன்னர் தன்னுடைய வீரர்களை நாலாபுறமும் பாணபத்திரரைத் தேடி அழைத்து வருமாறு அனுப்பினார். சிவனடியார்கள் யார் நாட்டிற்குள் புதிதாக வந்திருந்தாலும் எங்கு பார்த்தாலும் உடனடியாக அவர்களை அழைத்து வரக் கட்டளையிட்டான்.  ஒரு தண்ணீர் பந்தலருகில் வறுமைக் கோலத்தில் மெய் மறந்து பாடிக் கொண்டு நின்று கொண்டிருந்த பாணபத்திரனைப் பற்றி சேவகர் அரசரிடம் சொல்ல சேர மன்னன் விரைந்து பாணபத்திரன் இருக்குமிடம் வந்தான். 

சொக்கநாதரை கண்மூடி இசைத்து பாடிக் கொண்டிருந்த பாணபத்திரரிடம் சேர மன்னன் அடியவரே எங்கிருந்து வருகின்றீர்கள்? என கேட்டார். பாணபத்திரர் தன பாட்டை நிறுத்தி கண்விழித்துப் பார்த்தார். நான் மதுரையிலிருந்து வருகின்றேன். சிவபெருமான் கட்டளையின் பேரில் உங்களைக் காண வந்திருக்கின்றேன். இதைப் பாருங்கள் என்று கூறியபடி தன்னிடம் இறைவன் தனக்கு கொடுத்த திருமுகத்தை பாணபத்திரர் சேரமானிடம் கொடுத்தார். சேரமான் அதனை வாங்கிப் படித்தான். கனவில் சொக்கநாதர் காண்பித்த அதே பாடல் இருந்தது. சேரன் ஆனந்த பரவசனானான். திருமுகத்தை கண்களில் ஒற்றி தலைமேல் வைத்துக் கூத்தாடினார். பின்னர் பாணபத்திரரை யானையின் மீது அமரச் செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அரண்மனையில் பலவித உபச்சாரங்கள் செய்து கருவூலத்தைத் திறந்து காட்டி எம் பெருமானுடைய தொண்டனே இப்பொருள்கள் யாவற்றையும் நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்று கூறினார். உடனே பாணபாத்திரர் சேரனை வணங்கி நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் போதும் என்று கூறினான். உடனே சேரமான் பொருளை வாரிவாரி வழங்கினார். பாணபத்திரர் அவற்றை ஏற்க மறுத்து தனக்கு வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார். சேரனை வணங்கி தன்நாட்டினை அடைந்து சொக்கநாதரை வணங்கினார். தான் கொண்டு வந்த பொருட்களை வறியவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் கொடுத்து தன் சுற்றத்தாரோடு இனிது வாழ்திருந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தூய்மையான அன்பும் பக்தியும் கொண்ட பக்தர்களின் மகிமைகளையும் பெருமைகளையும் இறைவன் உலகிற்கு எடுத்துக் காட்டுவார் என்பதையும் இந்த உலக வாழ்க்கைக்கு தேவையானதை அவர்களுக்கு இறைவனே கொடுத்து அருள்வார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

41. விறகு விற்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விறகு விற்ற படலம் நாற்பத்தி ஒன்றாவது படலமாகும்.

வரகுண பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏகநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞன் ஒருவன் வரகுணனின் அரண்மனைக்கு வந்தான். தன் பாட்டிற்கு எதிர்பாட்டுப் பாட பூலோகத்தில் இதுவரை ஒருவர் பிறந்ததுமில்லை இனி பிறக்கப் போகிறதுமில்லை என ஊர் ஊராகச் சொல்லிக் கொண்டு மார்தட்டி செருக்குடன் இருப்பவன். அவன் தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் வெற்றி பெற்று பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் கூறினான். வரகுண பாண்டியனும் ஏகநாதனின் இசையைப் பராட்டி அவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன்னுடைய விருந்தினராக சிலநாட்கள் பாண்டிய நாட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டான். ஏகநாதனும் அவனைச் சார்ந்தவர்களும் தங்குவதற்கு அரச மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்தான். இதனைக் கண்டதும் இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை என்ற ஆவண எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இதனால் வரகுணனிடம் உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாடும் வல்லமை இல்லை அப்படி யாராவது இருந்தால் எம்மோடு போட்டியிட்டு பாடசொல் என்றான். அதற்கு வரகுணன் நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு நாளை தெரிவிக்கிறேன் என்று கூறி அனுப்பினான். பின்னர் அவையோரிடம் கலந்தாலோசித்த வரகுணன் தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏகநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான்.

வரகுண பாண்டியனின் ஆணையைக் கேட்டதும் பாணபத்திரர் சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்றார் என்று கூறினார். ஏகநாதனின் சீடர்கள் மதுரை நகரத் தெருக்களில் யாழினை இசைத்து பாடி எல்லோரையும் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட பாணபத்திரர் ஏகநாதனின் சீடர்களே இவ்வளவு அழகாகப் பாடுகிறார்களே. நான் எப்படிதான் இந்த இசைப் போட்டியில் ஏகநாதனை வெல்லப் போகிறேனோ என்று கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார். இறைவா நீங்கள்தான் இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மனமுருக‌ வேண்டினார். சொக்கநாதரும் பாணபத்திரருக்கு உதவ எண்ணம் கொண்டார். வயதான விறகு விற்பவர் போல் வேடம் கொண்டு இடையில் அழுக்காடையும் தலையில் இருக்கும் பிறைச் சந்திரனை அரிவாளாக மாற்றி இடையில் செருகியும் இருந்தார். பழைய யாழினை இடக் கையில் வைத்துக் கொண்டு தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார். விறகு வலை கேட்பவர்களிடம் அதிக விலை கூறி விறகினை விற்காது பொழுதினைப் போக்கினார். மாலை வேளையில் ஏகநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து சொக்கநாதர் யாழினை மீட்டி பாடினார்.

சொக்கநாதரின் பாட்டினைக் கேட்டதும் ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவர் போல் வந்த சொக்கநாதரிடம் வந்து நீ யார்? என்று கேட்டான். அதற்கு சொக்கநாதர் நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரனின் அடிமை என்றார். பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்த போது வயது முதிர்ந்ததால் இசை கற்க தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார். அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும் பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன் என்று கூறினார். ஏமநாதன் விறகுஉ விற்பவர் போல் வந்த இறைவரிடம் நீ முன்னர் பாடிய பாடலை இன்னொருதரம் இசையோடு பாடுக என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி பாடத் தொடங்கினார். அவருடைய பாட்டில் ஏமநாதன் உட்பட உலக உயிர்கள் அனைத்தும் மெய் மறந்து ஓவியம் போல் இருந்தனர். ஏமநாதன் தன்னை மறந்து இருக்கையில் இறைவனார் மறைந்தருளினார். பின்னர் உணர்வு வந்த ஏமநாதன் இது சாதாரணப் பாட்டே அல்ல. இது தேவகானம். பாணபத்திரனால் தள்ளப்பட்டவன் இவ்வாறு இசையுடன் பாடினால் பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ? என்று கூறி கவலையில் ஆழ்ந்தான். இனி நாம் பாணபத்திரனோடு இசைப் போட்டியில் பாடி வெற்றி பெற முடியாது. ஆகையால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும் என்று எண்ணி தன் கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான்.

இறைவனார் பாணபத்திரனின் கனவில் தோன்றி பாணபத்திரரே இன்று யாம் ஏகநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம் அஞ்சற்க என்று கூறினார். இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோவிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு அடியேன் பொருட்டு தங்கள் திருமுடியில் விறகினைச் சுமந்தீர்களோ? என்று கூறி வழிபாடு நடத்தினார். காலையில் அரசவை கூடியதும் வரகுணன் ஏமநானை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். ஏமநாதனைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது ஏமநாதன் நேற்றுவரை இங்கிருந்தான். நேற்று மாலை ஒரு வயதான விறகு விற்பவன் தன்னை பாணபத்திரனின் அடிமை என்று கூறி இசைபாடினான். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் நள்ளிரவில் ஓடிவிட்டான் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட அவர்கள் இந்த செய்தியை வரகுணனிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்டதும் பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும் இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப்பொருட்களை வழங்கினான். தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகள் முழுவதையும் அடியாருக்கும் ஆண்டவனுக்காகவுமே செலவிட்டு இன்புற்று வாழ்ந்தார் பாணபத்திரர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தனது திறமைக்கு நிகர் யாரும் இல்லை என்ற செருக்கும் தானே பெரியவன் என்ற ஆணவம் இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதனை கட்டாயம் இறைவனார் அடக்குவார். ஆகையால் நாம் வாழ்க்கையில் ஆணவம் கொள்ளக் கூடாது என்பதையும் இறைவனை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் நாற்பதாவது படலமாகும்.

வரகுணன் சீரும் சிறப்புமாக மதுரை நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து வந்தான். அதேநேரத்தில் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டிருந்தான். ஒருநாள் அவன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். இருள் சூழ்ந்த வேளையில் அவன் கனவட்டம் என்ற குதிரையின் மீது அமர்ந்து நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வழியில் தூங்கிக் கொண்டிருந்த அந்தணர் ஒருவர் குதிரையின் காலடியில் சிக்கி இறந்தார். இதனை அறியாத வரகுணன் அரண்மனை திரும்பினான். காட்டில் இருந்த சிலர் இறந்த அந்தணரின் உடலை எடுத்துக் கொண்டு வரகுணனின் வாயிலில் இட்டு நடந்தவற்றை வரகுணனுக்கு கூறினர். தனது குதிரையின் காலடியில் சிக்கி அந்தணர் இறந்ததை அறிந்த வரகுணன் இறந்த அந்தணனைச் சார்ந்தவர்களை வரவழைத்து பொன் பொருள் உதவி செய்ததோடு அந்தணனுக்கு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்த ஏற்பாடு செய்தான். எனினும் வரகுணனை பிரம்மகத்தி என்னும் பாவம் (கொலைப் பாவம்) பற்றிக் கொண்டது. பிரம்மகத்தி பிடித்த வரகுணன் மிகவும் துன்பத்துக்கு ஆளானான். அதனைப் போக்குவதற்கு நிறைய முயற்சிகள் செய்தான். இறுதியில் பெரியோர்களின் சொல்படி நாள்தோறும் சொக்கநாதரைத் தரிசித்து 1008 முறை வலம் வந்தான். அப்போது ஒருநாள் இறைவனார் அசரீரியாக பாண்டியனே நீ அஞ்சாதே காவிரி நாட்டைச் சார்ந்த சோழன் உன்னுடன் போரிட வருவான். அப்போது நீ அவனை புறங்காட்டி ஓடச்செய்வாய். நீ சோழனைத் தொடர்ந்து சென்று அவனது எல்லையில் உள்ள திருவிடைமருதூரை அடைவாய். அங்கே உன்னுடைய பிரம்மகத்தியை யாம் நீக்குவோம். என்று திருவாய் மலர்ந்தருளினார்.

சொக்கநாதரின் அசிரிரீ வாக்கைக் கேட்ட வரகுணன் மகிழ்ந்து சோழனின் வருகைக்காக காத்திருந்தான். இறைவனாரின் கூற்றுப்படி சோழன் பாண்டியனின் மீது படையெடுத்து வந்தான். வரகுணனும் சோழனை எதிர்த்து போரிட்டு அவனை விரட்டிச் சென்றான். திருவிடைமருதூர் வந்ததும் மகாலிங்கத்தை வழிபடுவதற்காக வரகுணன் கோவிலின் கிழக்கு வாயில் வழியாக திருகோவிலுக்குச் சென்றான். வரகுணனைப் பிடித்திருந்த பிரம்மகத்தி கோவிலின் வெளியே தங்கியது. உள்ளே சென்ற வரகுணன் மகாலிங்கத்தை பலவாறு துதித்து வழிபாடு நடத்தினான். அப்போது இறைவனார் பாண்டியனே நீ மேற்கு வாயிலின் வழியாக வெளியேறு. கிழக்கு வாயிலில் பிரம்மகத்தி உன்னை பிடிப்பதற்காக காத்திருக்கிறது என்று திருவாய் அருளினார். வரகுணனும் இறைவனாரின் ஆணைப்படி மேற்கு வாயிலின் வழியே வெளியேறினான். மதுரைக்கு திரும்பிய வரகுணன் சொக்கநாதரை நாள்தோறும் வழிபட்டு வந்தான்.

சிவராத்திரி நாளன்று வேதங்கள் ஆகமங்கள் உள்ளிட்ட நூல்களில் கூறியபடி உலகம் அனைத்திலும் மேம்பட்ட சிவலோகத்தைக் காணும் ஆசை வரகுணனுக்கு ஏற்பட்டது. தன்னுடைய விருப்பத்தை சொக்கநாதரிடம் தெரிவித்து மனமுருக வழிபாடு மேற்கொண்டான். வரகுணனின் விருப்பத்தை நிறைவேற்ற சொக்கநாதர் திருவுள்ளம் கொண்டார். திருநந்தி தேவரை அழைத்து வரகுணனுக்கு சிவலோகத்தை காட்ட ஆணையிட்டார். திருநந்தி தேவரும் சிவலோகத்தை மதுரைக்கு எழுந்தருளச் செய்து வரகுண பாண்டியனின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி காட்டி அருளினார். இறைவன் இறைவியுடன் இருந்த காட்சியைக் கண்ட வரகுணன் பேரின்பக்கடலில் மூழ்கினான். ஹரி அயனால் அடிமுடி காணப்பெறாத சிவ ஜோதியே கண்டேன் பேறுபெற்றேன் பேறுபெற்றேன் என்று சொல்லி மகிழ்ந்தார். பாண்டியன் வணங்கித் துதி பாடுகையில் கைலாயம் மறைந்து விட்டது. மன்னன் ஆச்சரியமுற்று அருகில் இருப்பவரிடம் தான் கண்ட காட்சிகளைக் கூற அரசே நீரே பாக்கியவான் என அனைவரும் புகழ்ந்தனர். அன்று முதல் மதுரையம்பதி பூலோக சிவலோகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனார் தனது அடியவர்களுக்காக செயற்கரும் செயல்களைச் செய்து காட்டுவார் என்பதையும் பிரம்மகத்தி பாவம் பிடித்தவர்கள் தங்களின் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கான வழிமுறையையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாமனாக வந்து வழக்குரைத்த படலம் முப்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

மதுரையில் தனபதி என்றொரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி பெயர் சுசீலை. இத்தம்பதியினருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. இருவரும் எவ்வவோ அறச் செயல்கள் செய்தும் குழந்தையே பிறக்கவில்லை. அதனால் தனபதி தன் தங்கையின் புதல்வனை தன் பிள்ளைபோல் எண்ணி வளர்த்து அந்தப் பிள்ளையை தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் அவரது சகோதரி அலட்சியமாக அவர்கள் குழந்தை பாக்கியமில்லாத மலடு என்றும் என்னுடைய பிள்ளையால் தான் உங்களுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கிடைக்கப் போகிறது என்று கூறினாள். இதனைக் கேட்டதும் தனபதி அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்று எண்ணி காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள எண்ணினார். ஆகையால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய தங்கை மகனுக்கு உரிமையாக்கிவிட்டு தன் மனைவியோடு தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தனபதி காட்டிற்குச் சென்றதை அறிந்த அவரது பங்காளிகள் அவரது தங்கையை வஞ்சித்து சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டு அவளை அடித்து விரட்டி விட்டனர். இதனால் தனபதியின் தங்கை செய்வதறியாது திகைத்தாள். இறுதியில் சொக்கநாதரைச் சரணடைந்தாள்.

சொக்கநாதரே என் தமையன் மனம் வருந்தும்படி பேசிய பலனை இப்போது இப்படி அனுபவிக்கிறேன் என்னை மன்னியுங்கள். எல்லோருக்கும் தாயும் தந்தையுமாய் இருப்பவரே என்னுடைய தமையனார் குழந்தைப்பேறு வேண்டி தவத்திற்குச் செல்லும் போது தத்துப் பிள்ளையான எனது மகனுக்கு அவருடைய செல்வங்கள் அனைத்தையும் விட்டு சென்றார். இதனை அறிந்த எங்களது உறவினர்கள் பொய் வழக்கு பேசி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். ஐயனே நான் யாருமில்லாமல் தனியாக இருக்கிறேன். எனக்கு இவன் ஒருவனே புதல்வன். இவனோ நல்லது கெட்டது அறியாத சிறுவன். எங்களுக்கென்று யாரும் இல்லை. இறைவா எங்களை இந்நிலையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று மனமுருக வழிபட்டாள். பின் சோர்வு மிகுதியால் அங்கேயே கண்ணயர்ந்தாள். அப்போது சொக்கநாதர் அவளுடைய கனவில் தோன்றி பெண்ணே நீ நாளை உன்னுடைய சுற்றத்தாரை உன்னுடைய சொத்துக்களை கேட்டு வழக்காடு மன்றத்திற்கு அழைத்து வா. யாம் இப்பொய் வழக்கினைத் தீர்த்து உம்முடைய பங்கினை உமக்கு அளிப்போம் என்று கூறினார். இறைவனாரின் திருவாக்கினைக் கேட்டதும் திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பது இதுதானோ என்று எண்ணி தன்னுடைய வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றாள். மறுநாள் தன்னுடைய உறவினர்களிடம் சென்று தன்னுடைய சொத்துக்களை திருப்பி அளிக்கும்படி கேட்டாள். அவர்கள் அவளையும் அவளுடைய மகனையும் திட்டி அடித்து விரட்டினர். உடனே அவள் அழுதபடியே வழக்காடு மன்றத்திற்குச் சென்று தன்னுடைய சொத்துக்களை உறவினர்களிடமிருந்து திருப்பித் தரும்படி கேட்டாள். வழக்காடு மன்றத்தினர் தனபதியின் உறவினர்களை அழைத்துவர உத்தரவு இட்டனர். வழக்காடு மன்றத்தில் தனபதியின் தங்கைக்கும் உறவினர்களும் வழக்கு நடைபெற்றது. அப்போது இறைவனார் தனபதியின் உருவில் வழக்காடு மன்றத்திற்கு வந்தார். தனபதியைக் கண்டதும் அவருடைய உறவினர்கள் நடுங்கினர்.

இறைவனான தனபதி தன்னுடைய தங்கையையும் மருமகனையும் கட்டிக் கொண்டார். பின்னர் சபையோர்களிடம் என் தங்கையின் வழக்கை ஆராய்ந்து தர்மத்தின் வழியில் நின்று முடிவினைத் தெரிவியுங்கள் என்றார். பின் வழக்காடு மன்றத்தில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் நன்கு கேட்டறிந்து உறவினர்களின் கூற்று பொய் என்று கூறினர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் வந்திருப்பது தனபதியே அல்ல என்றனர். இதனைக் கேட்டதும் இறைவனான தனபதி அவருடைய சொத்துக்களின் விவரம் உறவினர்களின் விவரம் அவர்களின் குடிப்பெயர் உடன் பிறந்தோர் அவர்களின் குணங்கள் அவர்கள் செய்யும் தொழில்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்து உரைத்தார். இதனைக் கேட்டதும் வழக்காடு மன்றத்தினர் இவர் தனபதியே என்றனர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் எல்லோரும் இனியும் இங்கிருந்தால் அரச தண்டனைக் கிடைக்கும் என்று கருதி ஒருவர் பின்னர் ஒருவராக வெளியேறினர். பின்னர் வழக்காடு மன்றத்தினர் தனபதியின் சொத்துக்கள் முழுவதும் அவருடைய தங்கை மகனுக்கு உரியது என்று கூறி சாசனம் அளித்தனர். தனபதியான இறைவனார் அந்த சாசனத்தை தனபதியின் தங்கையிடம் கொடுத்தார். பின்னர் எல்லோரும் பார்த்திருக்கும் போது அங்கிருந்து மறைந்தருளினார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் மாமனாக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தனர். இதனை சுந்தரேச பாத சேகர பாண்டியனிடம் தெரிவித்தனர். இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தார் சுந்தரேச பாத சேகர பாண்டியன். மதுரையை நல்வழியில் ஆட்சி புரிந்து சிறிது காலத்திற்குப் பிறகு தன் மகனான வரகுண பாண்டியனிடம் நாட்டை ஒப்புவித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தனது தவறை உணர்ந்து அதனை திருத்திக் கொண்டு இறைவனை சரணடைபவர்களை இறைவன் கட்டாயம் காப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக் கோட்டை அருளிய படலம் முப்பத்தி எட்டாவது படலமாகும்.

மதுரையில் அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளன் ஒருவன் இருந்தான். அடியவர்களுக்கு தொண்டு செய்வதே அறமாகக் கொண்டதால் அடியார்க்கு நல்லான் என்று பெயர் பெற்றான். அவனுடைய மனைவி தரும சீலை. இப்பெண்மணியும் அறவழியில் நடந்து கணவன் அறவழியில் செல்வதற்கு உதவினாள். தினமும் அடியவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிட்ட பின்பே இருவரும் உணவருந்துவார்கள். அடியார்க்கு நல்லான் தன்னுடைய வேளாண்மையில் விளைந்த பொருட்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு வரி செலுத்தி மீதி உள்ளதை சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தல் என்னும் சிறப்பான சேவையை செய்து வந்தான். தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அடியார்களுக்கு திருவமுது செய்விக்க பயன்படுத்தினான். இதனால் நாளடைவில் அடியார்க்கு நல்லானிடம் திருவமுது உண்ணும் சிவனடியார்களின் கூட்டம் பெருகியது. இந்நிலையில் இறைவனார் அடியார்க்கு நல்லான் தன்னுடைய செல்வம் குறைந்த போதிலும் சிவனடியார்க்கு செய்யும் திருவமுது செய்வித்தலை குறையாக‌க் கொள்ளமாட்டான் என்ற உயர்ந்த பண்பினை உலகுக்கு உணர்த்த விரும்பினார். நாளடைவில் அடியார்க்கு நல்லானின் விளைநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால் அவனிடம் இருந்த செல்வவளம் குன்றியது. எனினும் அடியார்க்கு நல்லான் பிறரிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தான். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அடியார்க்கு நல்லானுக்கு யாரும் கடன் தரவில்லை. அடியார்க்கு நல்லானும் தரும சீலையும் வறுமையால் சிவனடியார்களுக்கு திருவமுது செய்யவும் இயலாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தனர். இறுதியில் அடியார்க்கு நல்லான் தன்னுடைய மனைவியான தரும சீலையுடன் சொக்கநாதரின் சந்நிதிக்குச் சென்றான். அப்பனே என்னுடைய விளைநிலங்களில் விளைச்சல் இல்லை. எனவே பிறரிடம் கடன்வாங்கி அடியார்களுக்கு திருவமுது செய்வித்தேன். இப்போது எனக்கு கடன் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. தயவு செய்து கடன் தருபவர்கள் யாரவது இருந்தால் அவரை எனக்கு காட்டுங்கள். அவரிடம் கடன் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்விப்பேன். இல்லையேல் எங்களுடைய உயிரினை விட்டுவிடுவோம் என்று மனமுருகி வழிபட்டான்.

அடியார்க்கு நல்லானின் வழிபாட்டினைத் தொடர்ந்து வானில் இறைவனார் வேளாளனே பயப்பட வேண்டாம். உன் வீட்டில் நெல் உள்ள ஒரு உலவாக்கோட்டை (உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். 1 மரக்கால் என்பது 4 படி ஆகும். ) ஒன்றைச் வைத்துள்ளோம். அதிலிருந்து நெல்லை எப்பொழுது எவ்வளவு எடுத்தாலும் அள்ள அள்ளக் குறையாது. அதனைக் கொண்டு அடியவர்களுக்கு திருவமுது செய்விக்கும் தொண்டினையும் பிற தருமங்களையும் செய்து வருவாயாக. இறுதியில் யாம் வீடுபேற்றினை அளிக்கின்றோம் என்று திருவாக்கு அருளினார். அதனைக் கேட்ட அடியார்க்கு நல்லான் மகிழ்ந்து இறைவனாரை பலவாறு துதித்து வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய மனைவியுடன் தன்வீடு திருப்பினான். அங்கு இறைவனாரின் அருட்கொடையினால் அரிசிக் கோட்டையைக் கண்டான். நாள்தோறும் தன் மனைவியுடன் அதனை முறைப்படி வழிபட்டு அதிலிருந்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்துவித்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். இறுதியில் இறையருளால் வீடுபேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தானத்தில் சிறந்தது அன்னதானம். அதனை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சிவனுக்கே செய்யும் தொண்டாக எண்ணி செய்தால் இறைவன் அவர்களின் செயலுக்கு துணை நிற்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

37. சோழனை மடுவில் வீட்டிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சோழனை மடுவில் வீட்டிய படலம் முப்பத்தி ஏழாவது படலமாகும்.

இராசேந்திர பாண்டியனின் வழித்தோன்றலான சுந்தரரேச பாத சேகரபாண்டின் என்பவன் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவனாக இருந்தான். அவன் தன் படைபலத்தைக் குறைத்துக் கொண்டு அதற்கு செலவிடும் அத்தொகையைக் கொண்டு சிவாலயங்களைப் புதுப்பித்து சிவதொண்டு செய்து வந்தான். அப்போது சோழ நாட்டை பரிக்கோர் சேவகன் என்ற சோழ அரசன் ஆட்சி செய்து வந்தான். இவன் யுத்தத்தில் ஆயிரம் குதிரைகளை இவன் ஒருவனே சமாளிக்கும் வலிமை பெற்றவனாக இருந்தான். ஆகையால் ஆயிரம் குதிரைகளுக்கு ஒருவன் என்பதால் பரிக்கோர் சேவகன் என்று பெயர் பெற்றான். பாண்டியன் படைபலத்தைக் குறைத்ததை ஒற்றர்களின் மூலம் அறிந்த ஆயிரம் பரிக்கோர் சேவகன் இதுவே பாண்டிய நாட்டினைக் கைப்பற்ற சரியான தருணம் என்று எண்ணி பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவதை அறிந்த சுந்தரரேச பாத சேகரபாண்டியன் திருக்கோவிலை அடைந்தான். இறைவா பாண்டிய படையின் பலத்தினைக் குறைத்ததை அறிந்த சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். சோழனிடமிருந்து பாண்டிய மக்களைக் காப்பாற்று என்று உருகி வழிபட்டான். பாண்டியனின் முறையீட்டினைக் கேட்டதும் இறைவனார் சுந்தரரேச பாத சேகர பாண்டியா நீ கலங்காதே உன் படையைத் திரட்டி சோழனை எதிர்கொள். யாமும் சோழனுடன் போரிட்டு வெற்றியை உனதாக்குவோம் திருவாக்கு அருளினார்.

இறைவனின் திருவாக்கினைக் கேட்டதும் சுந்தரரேச பாத சேகரபாண்டியன் தெளிந்த மனத்துடன் தனது படைகளைத் திரட்டி சோழனை எதிர்க்க போர்க்களம் சென்றான். சொக்கநாதரின் திருவருளால் சிறிய பாண்டியர் படை சோழர் கண்களுக்கு கடல் போல் விரிந்து காணப்பட்டது. இத்தனை பெரிய படை இவர்களுக்கு ஏது என சோழர் படை குழம்பியது. பிரம்மாண்டமான சோழர் படை சிறியதாக பாண்டியப் படைக்குக் காட்சியளித்தது. இத்தனால் பாண்டியப் படைகள் மன தைரியம் பெற்று மன வலிமையுடன் போரிட்டனர்.  இதனால் சோழனது படையின் பெரும்பாகம் அழிந்து விட்டது.  இதனால் சோழன் சினம் கொண்டு போரின் முன்னணிக்கு வந்தான். ஆயிரம் புரவி வீரர்களை ஒரே சமயத்தில் வெல்லக்கூடிய சோழன் முழுவேகத்துடன் முன்னணிக்கு வரவும் பாண்டியன் மனம் கலங்கி நின்றான். அப்போது சொக்கநாதர் தழல் போன்ற சிவந்த கண்களுடன் கரு நிறத்தவராய் விசித்திரமான சட்டை தலைப்பாகை அணிந்து யானைக் கொம்பிலிருந்து செய்த காதணி கழுத்திலே முத்து மாலை தோள்வளை கைக்காப்பு தலைப்பாகையில் மயில் தோகையுடன் வேதமாகிய குதிரை மீதேறிக் கொண்டு வேடனின் உருவத்தில் கையில் வேலோடு விரைந்து வந்து ஆயிரம் பரிக்கோர் சேவகனின் முன்னால் சென்று நின்றார். இதனைக் கண்ட சோழன் சினந்து நான் ஆயிரம் குதிரைகளுக்கு ஒரே வீரனாக நான் இங்கு போரிட வந்தேன் என்று கூறினான். அதனைக் கேட்டதும் சொக்கநாதர் எண்ணில்லாத குதிரைகளுக்கு ஒரே வீரனாக நான் இங்கு போரிட வந்தேன் என்று கூறி சோழனுடன் போரிட்டார். வேடுவனின் தாக்குதலை சமாளிக்க இயலாத சோழன் குதிரையில் ஏறி போர்களத்தை விட்டு ஓடினான். நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருருந்த பாண்டியன் வேடனாக வந்திருப்பது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்.

வேடனின் வடிவத்தில் வந்த சொக்கநாதரும் சோழனும் சண்டையிட்டது மிகப் பயங்கரமாய் இருந்தது. விரைவில் சோழன் புறமுதுகு காட்டி ஓடினான். வேடனுக்கு பயந்து சோழன் ஓடுவதைக் கண்ட அவனது படைகளும் பின்வாங்கின. அப்போது வேடனான சொக்கநாதர் அங்கிருந்து மறைந்தார். பாண்டியனும் அவன் படைகளும் உற்சாகத்துடன் சோழப் படைகளை விரட்டத் தொடங்கினார்கள். சோழனை விரட்டி பாண்டியன் அவனைத் தொடர்ந்து சென்றான். சிறிது நேரம் கழித்து சோழன் திரும்பிப் பார்த்தான். தன்னை துரத்திய வேடனைக் காணாது பாண்டியன் துரத்துவதை கண்டான். பயம் தெளிந்த சோழன் பாண்டியனை துரத்தத் தொடங்கினான். போர்க் களத்தை நோக்கி பாண்டியன் ஓடினான். அப்போது பாண்டியன் எதிரில் மடு (குளம்) ஒன்று இருப்பதைக் கவனியாது அதனுள் வீழ்ந்தான். பாண்டியனைத் துரத்திய சோழனும் மடுவினுள் வீழ்ந்தான். சோழன் விழுந்த இடத்தில் சுழல் இருந்ததால் சோழன் மடிந்தான். பாண்டியன் இறைவனின் கருணையால் உயிருடன் மடுவில் இருந்து மீண்டான். பின்னர் சோழப் படையை வெற்றிக் கொண்ட பாண்டியன் அவற்றின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு சிவாலயத் திருப்பணிகள் செய்து இறைவனின் அருளுக்கு பாத்திரமானான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைபணியில் ஈடுபடுபவர்களை பாதுகாத்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி இறைவன் காப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

36. இரசவாதம் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இரசவாதம் செய்த படலம் முப்பத்தி ஆறாவது படலமாகும்.

மதுரைக்கு அருகில் திருப்பூவனம் என்னும் ஊர் ஒன்று இருந்தது. (தற்போது அது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது). அவ்வூரில் இருந்த பூவனநாதர் என்னும் திருக்கோவில் இருந்தது. இக்கோவிலில் கணிகையர் எனப்படும் ஆடல் குலப் பெண்கள் ஆடல் பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்பினர். அப்பெண்களில் ஒருத்தி பொன்னனையாள். அவள் ஆடல் மற்றும் பாடல்களில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள். அவள் தினமும் பூவனநாதர் கோவிலுக்குச் சென்று மற்ற ஆடல் மகளிருடன் இணைந்து ஆடல் மற்றும் பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்புவாள். பின்னர் தன் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து எஞ்சிய உணவினை உண்பாள். இதனையே அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்கு தன் நாட்டியத்திற்கு அதிபதியான இறைவனாரை பொன்னால் வடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பொன்னால் இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டுமானால் அதற்கு நிறையப் பணம் வேண்டும். ஆடல் பாடல் மூலம் சம்பாதித்த பணம் முழுவதும் அடியார்களுக்கு தொண்டு செய்வதிலேயே கழிந்தது. இறைவனின் திருமேனியை செய்ய பொருள் போதாமையால் அவள் ஆவல் நிறைவேறவில்லை. இரவும் பகலும் இதே ஏக்கம் கொண்டு அவள் மெலிந்தாள். பொன்னாலான இறைவனின் திருமேனியை செய்வதற்கு அருள்புரியுமாறு எப்போதும் இறைவனாரிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் பொன்னனையாள். மதுரை சொக்கநாதர் பொன்னனையாளின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார்.

சொக்கநாதர் சிவனடியாரின் வடிவம் ஏற்று சித்தராக பொன்னனையாள் இல்லத்திற்கு எழுந்தருளினார். பொன்னையாளின் இல்லத்தில் சிவனடியார்கள் எல்லோருக்கும் திருவமுதினைப் படைத்தாள். சித்தரான சிவனடியார் அமுதுண்ண இல்லத்திற்கு உட்செல்லாமல் புறக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது பொன்னனையாளின் பணிப்பெண் சித்தரை திருவமுது உண்ண வருமாறு அழைத்தாள். சித்தரோ இவ்வில்லத்திற்கு உரிமையான பொன்னனையாளை அழைத்து வருமாறு கூறினார். சித்தர் கூறியதை பணிப்பெண் பொன்னனையாளிடம் தெரிவித்தாள். அதனை ஏற்று பொன்னனையாளும் சித்தர் இருப்பிடத்திற்கு வந்தாள். சித்தரிடம் ஐயா தாங்கள் விரும்பிய வண்ணம் தங்களுக்கு பணிவிடை செய்கிறேன். தாங்கள் தயவுகூர்ந்து திருவமுது உண்ண வாருங்கள் என்று கோரிக்கை வைத்தாள். சித்தரும் பொன்னனையாளிடம் பெண்ணே உன்னுடைய முகம் வாடியும் உடல் மெலிந்தும் இருப்பதற்கான காரணம் என்ன? என்று கேட்டார். பொன்னனையாளும் பொன்னாலான இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து அதனாலேயே தான் முகம்வாடி உடல் மெலிந்து இருப்பதாகக் கூறினாள். இதனைக் கேட்டதும் சித்தர் சரி உன்னுடைய வீட்டில் உள்ள வெள்ளி இரும்பு செம்பு வெண்கல ஈயப் பொருட்களை கொண்டு வா நான் அதனை எல்லாம் பொன்னாக மாற்றித் தருகிறேன். அதனைக் கொண்டு நீ உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்.

பொன்னனையாள் ஆச்சர்யம் கலந்த குழப்பத்துடன் அவளின் வீட்டில் இருந்த உலோகப் பொருட்களை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள். சித்தர் ஒவ்வொன்றிற்கும் விபூதியிட்டு நெருப்பில் வைத்தார். இந்த பாத்திரங்களை நாளை காலையில் அவைகளை எடுத்துப்பார். எல்லாம்  தங்கமாக இருக்கும். உன் விருப்பப்படி இறைவனின் பிரதிமை செய்து கொள் என்று கூறினார். அவரை உணவருந்திப் போகும்படியும் தாங்கள் இங்கு தங்கியிருந்து பொன்னாலான இறைவனின் திருமேனியைக் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். அதற்கு சித்தர் நான் மதுரையில் வசிப்பவன். என்னை சித்தன் என்பார்கள். முதலில் நீ உன்னுடைய பணிகளை முதலில் முடி. நீ விரும்பும் போது இங்கு வருவேன் என்று கூறி மறைந்தருளினார். பொன்னனையாளும் அவ்வுலோகப் பொருட்களை மறுநாள் காலையில் பார்க்க அப்பொருட்கள் பொன்னாக மின்னின. இதனைக் கண்டதும் பொன்னனையாள் இச்செயலை சாதாரணமானவர்கள் செய்ய இயலாது. சிவனடியாராக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தாள். பின்னர் பொன்னாலாகிய இறைவனின் திருமேனியை உண்டாக்கினாள். அத்திருமேனியின் அழகில் சொக்கிய பொன்னனையாள் திருமேனியைக் கிள்ளி அழகிய பிரானோ என்று கொஞ்சி முத்தமிட்டாள். பொன்னனையாள் கிள்ளியதால் ஏற்பட்ட நகக்கீறலும் அழகிய பிரான் என்ற பெயரும் இறைவனுக்கு நிலைத்து விட்டன.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தான் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் தனக்கு பொன்னால் செய்யப்பட்ட இறைவன் வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தூய்மையான பக்தியில் அன்புடன் இறைவனை அனுகினால் தன் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை இறைவனார் உறுதியாக நிறைவேற்றுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் முப்பத்தி ஐந்தாவது படலமாகும்.

குலபூஷண பாண்டியனுக்கு இரண்டு புத்திரர்கள். தந்தைக்குப் பின் மூத்தவன் இராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தது இளைவன் ராஜசிங்கனுக்குப் பொறாமையாயிருந்தது. மதுரையில் இறைவனின் அருளால் மீனாட்சி அம்மன் உடனறை சொக்கநாதரை வழிபட்டு காஞ்சி திரும்பினான் காடுவெட்டி சோழன். காடு வெட்டின சோழனுக்கு மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் மறக்கவே முடியவில்லை. சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் மீண்டும் வழிபட சோழன் விருப்பம் கொண்டான். மீண்டும் இறைவனை தரிசிக்க ஒரே வழி பாண்டியனுடன் நட்பு கொள்ள விருப்பம் கொண்டான். அரசனாக இருந்த இராசேந்திர பாண்டியனுக்கு தங்கம் வைரம் வெள்ளிப் பொருட்களுடன் ஏராளமானவற்றை பரிசாகக் கொடுத்து அனுப்பினான். ஏற்கனவே காடுவெட்டி மதுரை சொக்கநாதரை வழிபட்ட விதம் சோழன் சொக்கநாதரிடம் கொண்டிருந்த பேரரன்பு ஆகியவற்றை தன் தந்தை சொல்லக்கேட்டு இராசேந்திர பாண்டியன் அறிந்திருந்தான். ஆகையால் அவன் காடிவெட்டியின் பரிசினை ஏற்றுக் கொண்டு அவனுக்கு முத்துமாலை உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை பதிலுக்கு கொடுத்து அனுப்பினான். இதனால் பாண்டிய மற்றும் சோழ நாடுகளுக்கு இடையில் நட்புறவு ஏற்பட்டது. இதனை மேலும் வலுவாக்கி சொக்கநாதரை உரிமையுடன் வழிபட சோழன் விரும்பினான். சோழனின் மகளை இராசேந்திர பாண்டியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதே அதற்கான வழி என்பதை சோழன் தீர்மானித்தான். தன்னுடைய விருப்பத்தை பாண்டியனுக்குத் தெரிவித்தான்.

இராசேந்திர பாண்டியனும் சோழனின் மகளை திருமணம் செய்ய சம்மதித்தான். இராசேந்திர பாண்டியனுக்கு அரசசிங்கன் என்றொரு தம்பி இருந்தான். ராஜசிங்கனுக்கு அரச சிங்கன் இராச சிம்மன் என்ற பெயர்களும் உண்டு. அரசசிங்கன் மிகவும் தீய எண்ணம் கொண்டவனாக இருந்தான். சோழ இளவரசியை இராசேந்திர பாண்டியன் மணப்பதை அவன் விரும்பவில்லை. எவ்வாறேனும் சூழ்ச்சி செய்து சோழ இளவரசியை தான் மணந்து சோழ பாண்டிய நாடுகளை தனதாக்கிக் கொள்ள விருப்பம் கொண்டான். ஆகையால் இராசேந்திர பாண்டியனுக்குத் தெரியாமல் பாண்டியப் படையுடன் அரசசிங்கன் காஞ்சியை நோக்கிப் புறப்பட்டான். தன்னுடைய வருகையை காடுவெட்டிக்கு தெரிவித்தான். மணமகனின் வீட்டிலிருந்து வரும் விருந்தினரை வரவேற்க காடுவெட்டி தடபுடலான ஏற்பாடுகளைச் செய்தான். இதில் மகிழ்ந்த அரசசிங்கன் காடுவெட்டியிடம் என்னுடைய அண்ணன் உங்களின் மகளை மணந்தாலும் உங்களிடம் இணக்கமாக நடந்து கொள்ள மாட்டார். நான் அவ்வாறு இல்லை. உங்களுடைய மகளை எனக்கு மணம் முடித்துக் கொடுத்தால் நான் உங்களின் விருப்பப்படி நடந்து கொள்வேன் என்று நயவஞ்சகமாகப் பேசினான். காடுவெட்டியும் சோழன் வலிந்து பெண்ணைக் கொடுத்தான் என்பதைவிட பாண்டியன் விரும்பி சோழ இளவரசியை மணம் முடித்தான் என்ற சொல்லே நமக்கு புகழாகும் என்று எண்ணினான். மேலும் இளையவன் மூத்தவனை விட பலசாலி அழகன் என்பதாலும் அவன் அழைத்து வந்த பாண்டியப் படையின் பலத்தைக் கண்டு அஞ்சியும் சோழன் இதற்கு ஒப்புக் கொண்டான். திருமணம் சிறப்பாக நடந்தது. இராஜேந்திரன் இது தெரிந்தும் மௌனமாகவே இருந்தான். பின்னர் இராசேந்திர பாண்டியனுக்கு ஓலை ஒன்றினை அனுப்பினான். அதில் எனது மகளை அரசசிங்கனுக்கு மணம் முடித்து விட்டேன். ஆகையால் நீ பாண்டிய நாட்டை அரசசிங்கனிடம் ஒப்படைத்து விடு. இல்லையேல் சோழபடை உன் நாட்டின்மீது போர் தொடுக்கும். பின் போரில் வெற்றி பெற்று அரசசிங்கனை பாண்டிய நாட்டின் அரசனாக்கி விடுவேன் என்று எழுதி இருந்தான்.

மதுரைக்கு மிக அருகில் சோழப்படையும் தன் தம்பி அழைத்துச் சென்ற தமது பாண்டியப் படையில் உள்ளவர்களும் யுத்தத்திற்காக காத்திருந்தார்கள். ஓலையை படித்த பின் இராசேந்திர பாண்டியன் திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரிடம் எம்பெருமானே நள்ளிரவில் தனியனாய் உன்னை வழிபட்ட உன் பக்தனாகிய காடுவெட்டிய சோழனும் தனது தம்பியும் இப்போது எனக்கு விரோதமாக படையெடுத்து வந்துள்ளார்கள். அன்று அவனுக்கு துணையாக இருந்த தாங்கள் இன்று அவனுடைய செயலுக்கும் துணை புரிவீர்களா? என்று மனம் வருந்திக் கேட்டான். அப்போது பாண்டியனே நீ கலங்க வேண்டாம். உன்னுடைய சிறிய படையுடன் நாளை சோழனை எதிர்கொள்வாய். வெற்றியை உமதாக்குவோம் என்று தெய்வாக்கு வானில் கேட்டது. இறைவனாரின் தெய்வாக்கினைக் கேட்டதும் இராசேந்திரன் அரண்மனை திரும்பி மறுநாள் சோழனுடனான போருக்கு ஆயத்தமானான். இறை நம்பிக்கையில் சோழனின் பெரும் படையை எதிர்த்தான் இராசேந்திர பாண்டியன். போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இறைவனார் கடும் வெப்பத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தினார். சோழ பாண்டிய படைவீரர்கள் தாகத்தினால் களைப் படைந்தனர். நிழலைத் தேடத் தொடங்கினர் இருபடை வீரர்களும். அப்போது பாண்டியனின் படைக்கு இடையில் இறைவனார் சிவனடியார் வேடம் தாங்கி தண்ணீர்ப் பந்தல் வைத்தார். பாண்டியனின் படை வீரர்களுக்கு தண்ணீரை வழங்கினார். இறைவனார் அளித்த நீரினை உண்ட பாண்டியப் படைவீரர்கள் களைப்பு நீங்கி புத்துணர்வுடன் சோழப் படையை எதிர்த்து போரிட்டு எளிதில் வென்றனர். காடுவெட்டிய சோழனும் ராஜசிங்கனும் கைது செய்யப்பட்டனர். இராசேந்திர பாண்டியன் அவர்களை மன்னித்து விடுதலை செய்து காடுவெட்டிய சோழனை மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பினான். ராஜசிங்கனை மன்னித்து தன் நாட்டின் முக்கிய பதவியை அளித்த இராசேந்திர பாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தன்னுடைய பக்தனாக இருந்தாலும் தர்ம வழியில் செல்லாமல் இருந்தால் இறைவன் அவர்களைக் காப்பாற்ற மாட்டார். என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.