34. விடை இலச்சினை விட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விடை இலச்சினை விட்ட படலம் முப்பத்தி நான்காவது படலமாகும்.

குலபூஷண பாண்டியன் மதுரையை ஆட்சி செய்த போது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு காடு வெட்டிய சோழன் என்னும் அரசன் சோழ நாட்டை ஆட்சி செய்தான். அடர்ந்த காடுகளை சரிசெய்து மக்கள் வசிக்கும் இடமாக மாற்றியதால் அவன் காடு வெட்டிய சோழன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிவபக்கதனாகத் திகழ்ந்தான். ஒரு சமயம் காமாட்சியை தரிசிக்க வந்த முனிவர் ஒருவர் சோழனைக் கண்டு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரரின் பெருமையை விரித்துக் கூறினார். இதனைக் கேட்டதும் அவனுக்கு மதுரையில் மீனாட்சி அம்மனுடன் அருள்புரியும் சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் சோழனின் ஆவல் அதிகரித்துக் கொண்டே சென்றது. சொக்கநாதர் சோழனுக்கு தரிசனம் தர விருப்பம் கொண்டார். ஒரு நாள் சோழனின் கனவில் சித்தரின் வடிவில் தோன்றிய சொக்கநாதர் சோழனே நீ மாறுவேடம் கொண்டு யாருடைய துணையும் இன்றி மதுரை வந்து மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதரைத் வழிபாடுவாயாக‌ என்று திருவாய் மலர்ந்து அருளினார். உடனே காடு வெட்டி சோழன் விழித்தெழுந்தான். பகைநாடான பாண்டிய நாட்டுக்கு எவ்வாறு சென்று சொக்கநாதரை வழிபடுவது என்று எண்ணிக் கொண்டிருந்த தனக்கு மாறுவேடத்தில் வருமாறு சித்தர் கூறியதை கேட்டு பெரும் மகிழ்ச்சி கொண்டான். அன்று இரவே மாறுவேடம் பூண்டு சொக்கநாதரையும், மீனாட்சி அம்மனையும் வழிபாடு மேற்கொள்ள ஆவலுடன் மதுரை நோக்கி புறப்பட்டான் சோழன்.

சோழன் பல்வேறு ஆறுகளையும் மலைகளையும் தாண்டி இறுதியில் மதுரை நகரின் வடக்கு எல்லையான வைகை ஆற்றினை அடைந்தான். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை தரிசிக்க விருப்பம் கொண்டு வந்த எனக்கு இது என்ன சோதனை? பாண்டியன் கண்டால் துணையின்றி வந்த என்னை சிறைபிடிப்பானே. வெள்ளம் வடியும் வரை பொறுமையாக காத்திருந்து செல்லவும் வழியில்லையே எனப் பலவாறு எண்ணி வேதனையுற்றான். அப்போது சொக்கநாதர் சித்தர் வடிவில் வந்து மீனாட்சியைப் பார்க்கப் போகிறேன் வருகிறாயா அப்பா எனக் கேட்டார். கனவில் கண்ட சித்தர் நேரில் வரக்கண்ட சோழன் ஆச்சர்யம் அடைந்தான். சித்தர் வைகையை பார்க்க வைகையில் வெள்ளம் குறைந்தது. சோழன் பெருத்த ஆச்சர்யத்துடன் சித்தரைப் பின் தொடர்ந்து சென்றான். கோவில் அருகில் வரும்போது நடு இரவாகிவிட்டது ஆகையால் ஆலயம் அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. இதனால் மீண்டும் சோழன் வருத்தத்துடன் நின்றான். அப்போது சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கநாதரை தரிசிப்பீர்கள் கவலை வேண்டாம் என்று சொல்லி திறவுகோலை வாங்கி வந்து ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான். பொற்றாமரையில் நீராடி அம்மனையும் சொக்கநாதரையும் கண்குளிர தரிசித்து வழிபட்டு போற்றிப் பாமாலை பாடினான்.  இருட்டிலும் அவன் தெளிவாகப் பார்க்கும் தன்மையை சிவபெருமான் அருளி இருந்தார். விடியும் நேரமாகியும் அவன் புறப்படவில்லை.

சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் சோழ மன்னா நீ இங்கிருப்பதை பாண்டியன் அறிந்தால் உனக்கு துன்பம் உண்டாகும். ஆதலால் நீ இப்போது காஞ்சியை நோக்கி உன்னுடைய பயணத்தை ஆரம்பிப்பது நல்லது என்று கூறினார். பின்னர் சோழனை அழைத்துக் கொண்டு வடக்கு வாசல் வழியாக வந்தார். கோவிலின் வெளியே வந்ததும் கோட்டைக் கதவை அடைத்துத் தாளிட்டு நந்தி முத்திரையை வைத்தார். பின் வைகையின் அக்கரைக்கு கொண்டு சோழனை விட்டுவிட்டு உனக்கு நல்ல துணை கிடைக்கப் பெற்று செல்வாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆலயத்தை மறுநாள் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய முத்திரையான மீன் முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால் அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம் இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும் முழங்கி படை திரட்ட உத்தரவிட்டான். போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன் சோழநாட்டை நோக்கிப் புறப்பட தயாராக இருந்த்தார்கள்.

குலபூஷண பாண்டியன் இரவு தூங்க செல்லும் முன்பாக சொக்கநாதரிடம் முறையிட்டு வேண்டினான். இரவில் குலபூஷண பாண்டியனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் உன்னைப் போலவே காடுவெட்டிச் சோழனும் என்னுடைய பக்தன். அவன் எம்முடைய தரிசனம் வேண்டினான். அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற மாறுவேடத்தில் அவனை வரச்செய்து திருக்கோவிலின் வடக்கு வாயிற்வழியின் மூலமாக உட்செல்லச் செய்து வழிபாடு மேற்கொள்ளச் செய்து காஞ்சிக்கு திருப்பி அனுப்பினோம். இறுதியில் வடக்கு வாயில் கதவிற்கு நந்தி முத்திரையை வைத்து மூடினோம். சோழனின் பக்தியை எடுத்துரைக்கவே இவ்வாறு செய்தோம் சோழன் மீதுள்ள சினத்தை விடு பகையை மற. அவனும் உன் போல் ஒரு சிவ பக்தன் என்று கூறினார். இதனைக் கேட்டதும் குலபூஷண பாண்டியன் விழித்தெழுந்தான். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்று அனைவருக்கும் அறிவித்தான். பின்னர் தனது மகனான இராஜேந்திர பாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அட்டமாசித்தி உபதேசித்த படலம் முப்பத்தி மூன்றாவது படலமாகும்.

இறைவனான சிவபெருமான் கயிலாயத்தில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது உமையம்மை அவர் பக்கத்திலேயே அமர்ந்து இறைவனாருக்கு வெற்றிலைச் சுருளை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இறைவனார் சிவகணங்களுக்கும் பெருந்தவ முனிவர்களுக்கும் போக மூர்த்தியாய் அமர்ந்து சிவ கதையினை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகைப் பெண்கள் அறுவரும் கயிலாய மலைக்கு வந்தனர். இறைவனாரிடம் எம்பெருமானே தாங்கள் எங்களுக்கு அட்டமா சித்தியை உபதேசித்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். கார்த்திகைப் பெண்களின் வேண்டுதலைக் கேட்ட இறைவனார் உமையம்மைச் சுட்டிக் காட்டி உலகத்தின் அன்னையான இவ்வம்மை தன்னுடைய பூரணத் தன்மையால் உலகெங்கும் பராசக்தியாகவும் மகேஸ்வரியாகவும் எங்கும் நிறைந்திருக்கிறாள். அட்டாமா சித்திகள் இவளைப் பணிந்து வழிபட்டு பணிவிடைகள் செய்யுங்கள். நீங்கள் இவ்வம்மையை வழிபட வழிபட அட்டமா சித்திகளை இவள் உங்களுக்கு அருளுவாள் என்று சொல்லி அட்டமா சித்திகள் பெரும் வழியை சொல்லிக் கொண்டிருந்தார். இறைவன் சொல்வதை அவர்கள் கவனக் குறைவாக கேட்டுக் கொண்டிருப்பதை இருப்பதை இறைவன் கண்டு கொண்டார். இந்த கவனக் குறைவால் ஏற்பட்ட வினையால் கார்த்திகைப் பெண்கள் உமையம்மையை வழிபட மறந்தார்கள். இதனைக் கண்ட இறைவனார் நீங்கள் கவனக்குறைவாக இருந்ததாலும் உமையம்மையை அலட்சியப்படுத்தியதாலும் பட்டமங்கை என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடக்கப் பெறுவீர்கள் என்று சாபம் அளித்தார். இதனைக் கேட்டதும் கார்த்திகைப் பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு நீங்கும் என்று இறைவனாரை கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அவர் ஆயிரம் ஆண்டுகள் கழித்து யாம் மதுரையிலிருந்து வந்து உங்களுக்கு சாபம் நீக்கி அட்டமா சித்தியை உபதேசிக்கிறேன் என்று கூறினார்.

கார்த்திகைப் பெண்கள் பட்டமங்கலம் என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடந்தார்கள். இந்த ஆயிரம் வருடத்தில் கற்பாறைகளாக கிடந்த கார்த்திகைப் பெண்கள் உமையம்மையை முறைப்படி தியானித்து வழிபட்டு அட்டமா சித்திகள் அடையும் தகுதி பெற்றார்கள். ஆயிரம் வருடங்கள் கழித்து சொக்கநாதர் ஞானாசிரியராக வடிவம் கொண்டு பட்டமங்கலத்திற்கு வந்தார். இறைவனாரின் கடைக்கண் பார்வை பட்டதும் கற்பாறைகள் கார்த்திகைப் பெண்களாக மாறினார்கள். இறைவனார் அப்பெண்களின் தலைமீது தன்னுடைய கையினை வைத்து அணிமா மகிமா இலகிமா கரிமா பிராப்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் ஆகியஅட்டாமா சித்தியை உபதேசித்தார். பின்னர் திருகையிலாய மலையை அடைந்து சிவப்பேறு பெற்றனர்.

  1. அணிமா என்பது மிகச்சிறிய உயிரினத்திலும் சிறுமையாகச் சென்று தங்குவது அணிமா ஆகும்.
  2. மண் முதல் சிவதத்துவம் வரையிலான முப்பத்தாறு தத்துவங்களிலும் உள்ளும் புறமும் நீங்காமல் நிறைந்திருப்பது மகிமா ஆகும்.
  3. மேருமலையைப் போல கனத்திருக்கும் யோகி இலேசான பரமாணுவைப் போல் கனமற்று இருப்பது இலகிமா ஆகும்.
  4. லேசான பரமாணுவைப் போல் மெலிந்திருக்கும் யோகி மேருமலையின் பாரம் போல் கனப்பது கரிமா ஆகும்.
  5. பாதாளத்தில் இருக்கும் ஒருவன் நினைத்த மாத்திரத்தில் பிரம்மலோகம் சென்று மீண்டும் பாதாளத்தை அடைவது பிராத்தி ஆகும்.
  6. வேறு உடலிற் புகுதலும் விண்ணில் சஞ்சரித்தலும் தான் விரும்பிய இன்பங்கள் அனைத்தையும் தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தல் பிராகமியம் ஆகும்.
  7. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் தம் இச்சைப்படி இயற்றி சூரியன் முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க வீற்றிருப்பது ஈசத்துவம் ஆகும்.
  8. எல்லாவகை உயிர்களையும் இந்திரன் உள்ளிட்ட திக்பாலர்களையும் தன் வசமாகக் கொள்வது வசித்துவம் ஆகும்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எதிலும் கவனக்குறைவாக இருப்பதும் அலட்சியமாக இருப்பதும் கேட்டை விளைவிக்கும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

32. வளையல் விற்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வளையல் விற்ற படலம் முப்பத்தியிரண்டாவது படலமாகும்.

முன்னொரு காலத்தில் தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவியர்கள் தங்களைப் போன்று அழகிலும் கற்பிலும் சிறந்த பெண்கள் வேறு எங்கும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்திருந்தார்கள். இறைவனான சிவபெருமான் அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணினார். எனவே அவர் பிட்சாடனார் வடிவம் கொண்டு அழகில் மன்மதனைப் போல கையில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி தாருகாவனத்திற்குச் சென்றார். தாருகாவனத்து முனிவர்களின் மனைவியர்கள் பிட்சாடனாரின் அழகில் மயங்கி செய்வதறியாது மயக்கத்தில் அவரைத் தொட வேண்டுமென்று அவரின் அருகில் சென்றார்கள். ஆனால் சிவபெருமான் அவர்களின் கைக்கு எட்டாமல் எட்டி எட்டிப் போனார்.  தவசியே நில்லுங்கள் நில்லுங்கள் எனக் கூவியபடி சிலர் பின் தொடர்ந்தார்கள்.  சிலர் பிட்சையாக பால் நெய் தயிர் தேன் சர்க்கரை என்று கொடுக்க சென்றார்கள். பிட்சாடனார் தாருகாவனத்தை விட்டுச் சென்ற பின்னும் பெண்கள் மதி மயக்கத்திலிருந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் தங்கள் மனைவியர்களின் செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்து மயக்கத்திற்கான காரணத்தை தங்களின் தவ வலிமையால் கண்டறிந்தார்கள். பெண்களின் இந்நிலைக்கு காரணம் மதுரை சொக்கநாதர் என்பதை அறிந்த அவர்கள் அப்பெண்களை மதுரையில் அழகு வாய்ந்த வணிக மகளிர்களாய் பிறக்குமாறு சாபம் அளித்தனர். அப்பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு விலகும் என்று முனிவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் யாருடைய ஸ்பரிசத்துக்காக அலைந்தீர்களோ அந்த சொக்கநாதர் வளையல் வியாபாரியாக வந்து உங்களுக்கு வளையல்கள் அணிவித்ததும் நீங்கும் என்று கூறினர். தாருகாவனத்து முனிவர்களின் சாபத்தினால் அவர்களுடைய மனைவியர்கள் மதுரையில் வணிகப் பெண்களாக அவதரித்தனர். அவர்கள் வளர்ந்து பேரழகுடன் மணப் பருவம் எய்தினர்.

ஒரு நாள் சொக்கநாதர் வளையல் வியாபாரியாக பட்டு நூலில் வளையல்களைக் கோர்த்துக் கொண்டு வணிக வீதிக்கு எழுந்தருளினார். வளையல் வாங்குங்கள் வளையல் வாங்குங்கள் என்று வளையல் வியாபாரி கூறினார். வளையல் வியாபாரின் குரலால் ஈர்க்கப்பட்ட வணிகப் பெண்கள் வீதிக்கு வந்தனர். வளையல் வியாபாரியின் மேல் ஈர்ப்பு கொண்டு அவரிடம் தங்களுக்கு வளையல்கள் அணிவிக்கும்படி கூறினார்கள். வளையல் வியாபாரியாக வந்த சொக்கநாதர் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் வளையல்களை உடைத்துவிட்டு மீண்டும் வளையல்களை அணிவிக்க வியாபாரியைக் கேட்டுக் கொண்டார்கள். சொக்கநாதரும் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் தாங்கள் அணிந்து கொண்ட வளையல்களுக்கு உரிய விலையைப் பெற்றுச் செல்லுமாறு கூறினர். அதற்கு இறைவனார் நாளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறி திருக்கோவிலுக்குள் சென்று சிவலிங்கத்துள் மறைந்தருளினார். வளையல் வியாபாரியின் பின் சென்ற பெண்கள் நடந்தவற்றைக் கண்டு அதிசயித்தனர். தங்களின் சாபம் நீங்கப் பெற்று மதுரையில் நீண்ட நாட்கள் வசித்து பேறு பெற்றார்கள். இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் விற்கும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

கர்வம் தண்டனையைப் பெற்றுத் தரும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

31. உலவாக்கிழி அருளிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக்கிழி அருளிய படலம் முப்பத்தி ஒன்றாவது படலமாகும்.

குலபூஷண பாண்டியன் சிவபக்தியில் சிறந்தவனாக இருந்தான். தன்நாட்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தான். இதனால் அவனுக்கு தன்னை விடச் சிறந்தவன் யாரும் இல்லை என்ற அகந்தை உருவானது. இதனால் இறைவனார் குலபூஷண பாண்டியனின் அகந்தை அளித்து அவனுக்கு நற்கதி அளிக்க எண்ணினார். குலபூஷண பாண்டியனின் அகந்தை காரணமாக மதுரையில் மழை பொய்த்தது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் சரிவர விளைச்சலைத் தரவில்லை. இதனால் மதுரை மக்களுக்கு உணவு தட்டுப்பாடு வந்தது. மக்களை பசித்துயர் வாட்டியது. இதனைக் கண்ட குலபூஷண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனிடம் நான் தவறாது சிவவழிபாட்டினை மேற்கொண்டு வருகிறேன். மக்களையும் நல்ல முறையில் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறேன். ஆனால் மதுரையில் மழை பொழிவு குறைந்ததால் பயிர்கள் சரிவர விளையவில்லை. மக்கள் பசியால் வருந்துகின்றனர். படைகளை அழைத்து வருகிறேன் என்று சுந்தர சாமந்தன் கஜானாவில் இருந்த பொன்னையும் கோவிலை புதுப்பிக்கவும் மக்களுக்கு சேவை செய்யவும் பயன் படுத்தி விட்டான். அரசின் பணம் அனைத்தும் உனக்காகவும் உன் அடியார்க்காகவும் தானே செலவழிந்திருக்கிறது. ஆகையால் தாங்கள் எங்களுக்கு நல்வழி காட்டுங்கள் என்று மனமுருக வேண்டினான். பின் அரண்மனையை அடைந்து பணிகளைக் கவனித்து இரவில் தூங்கச் சென்றான்.  தூக்கத்திலும் குலபூஷண பாண்டியன் இறைவனை வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவனார் குலபூஷண பாண்டியா இதோ இந்த உலவாக்கிழியைப் (பொற்கிழி) பெற்றுக் கொள். இதிலிருந்து அள்ள அள்ளக் குறையாத பொற்காசுகளை எடுத்து மதுரை மக்களின் துயரினைப் போக்கு என்று அருளினார்.

குலபூஷண பாண்டியன் கண் விழித்துப் பார்த்தான். தன் கையில் உலவாக்கிழி (பொற்கிழி) இருப்பதைக் கண்டான். உலவாக்கிழியை பார்த்ததும் குலபூஷண பாண்டியனின் மனதில் சொக்கநாதர் நம்மீது இத்தனை கருனையுடன் இருக்கிறார். ஆனாலும் மிகவும் மழை இல்லாமல் போனதற்கான காரணம் மற்றும் மக்களுக்கு துயர் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி ஏற்பட்டது. பின்னர் களைப்பில் மீண்டும் தூங்கினான். அப்போது அவன் கனவில் தோன்றி சொக்கநாதர் குலபூஷண பாண்டியா நீ என்னை காலம் தவறாமல் வழிபடுகிறாய். உன் மக்களை நன்கு பாதுகாக்கிறாய். ஆனால் உனக்கு உன்னைவிட சிறந்த பக்தன் உலகில் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அந்த அகந்தையே மதுரையில் மழை இல்லாமல் போனதற்கும் மக்களின் துயருக்கும் காரணம் ஆகும். உன்னுடைய அகந்தையால் உன்னுடைய மக்களும் துன்பமடைந்தனர் என்று கூறினார். குலபூஷண பாண்டியன் கண்விழித்து தன்னுடைய தவறிற்கான காரணத்தை அறிந்ததும் அவனுடைய அகந்தை அழிந்தது. உலவாக்கிழியில் இருந்த பொற்காசுகளை எல்லோருக்கும் வழங்கினான். பின்னர் மதுரையில் மழை பொழிந்து மக்களின் துயர் நீங்கியது. இறுதியில் குலபூஷண பாண்டியன் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அகந்தை எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். அதனால் தானே சிறந்தவன் என்ற அகந்தை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

30. மெய் காட்டிட்ட படலம்

திருவிளையாடல் புராணம் 30. மெய் காட்டிட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மெய் காட்டிட்ட படலம் முப்பாதாவது படலமாகும்.

அனந்தகுண பாண்டியனின் மகனான குலபூஷண பாண்டியனின் ஆட்சியில் சுந்தர சாமந்தன் என்றொரு சேனாதிபதி இருந்தான். அவன் சொக்கநாதரிடமும் அவருடைய தொண்டர்களிடமும் நீங்காத பக்தி கொண்டு இருந்தான். அப்போது சேதிராயன் என்பவன் வேடுவர்களின் தலைவனாக இருந்தான். அவன் பல வெற்றிகளைக் கொண்ட செருக்கால் குலபூஷண பாண்டியனிடம் பகைமை கொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க எண்ணினான். இந்த செய்தியை ஒற்றர்கள் மூலம் குலபூஷண பாண்டியன் அறிந்தான். தனது சேனாதிபதியான சுந்தர சாமந்தனிடம் நீ நமது நிதி அறையினைத் திறந்து வேண்டுமளவு பொருள்களை எடுத்துக் கொண்டு புதிதாக சேனைப் படைகளை திரண்ட வேண்டும் என்று கட்டளையிட்டான். சுந்தர சாமந்தனும் நிதி அறையினைத் திறந்து தனக்கு வேண்டுமளவு பொருட்களை எடுத்துக் கொண்டான். அப்பொருட்களைக் கொண்டு சிவபெருமானுக்கு திருக்கோவிலும் ஆயிரங்கால் மண்டபமும் கட்டினான். சிவனடியார்களுக்கு திருஅமுது செய்வித்து எஞ்சியவற்றை உண்டு ஆறு மாத காலம் வரை வாழ்ந்து வந்தான். இச்சேதியை ஒற்றர் மூலம் குலபூடண பாண்டியன் அறிந்தான். குலபூஷண பாண்டியன் சுந்தர சாமந்தனை உடனடியாக அரண்மனைக்கு வர உத்தரவிட்டான். சுந்தர சாமந்தன் வந்ததும் எவ்வளவு படை திரட்டி  இருக்கிறாய்? எனக் கேட்டான். அதற்கு சுந்தர சாமந்தன் மனதில் சொக்கநாதரைத் தியானித்தபடி போதுமான படை திரட்டி விட்டேன் என்று கூறினான். உடனே குலபூஷண பாண்டியன் நாளை சூரியன் மறையும் முன்பு சேனைப்படை வீரர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்து வரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான்.

குலபூஷண பாண்டியனின் கட்டளையை கேட்ட சுந்தர சாமந்தன் அதற்கு சம்மதம் தெரிவித்தான். பின்னர் திருக்கோவிலை அடைந்து எம்பெருமானே அரசன் அளித்த நிதியினைக் கொண்டு சிவதொண்டு செய்துவிட்டேன். இனி எப்படி பெரும் சேனைகளை நாளை திரட்டிக் காண்பிப்பது? என்று பிரார்த்தனை செய்தான். அதற்கு இறைவனார் நாளைக்குச் சேனை வீரர்களோடு நாமும் வருவோம். நீ பாண்டியனின் அவைக்குச் சென்று என் வரவை எதிர்பார்ப்பாயாக என்று அசிரீரீயாக திருவாக்கு அருளினார். மறுநாள் சொக்கநாதர் தமது சிவகணங்களை வேல் ஏந்திய படை வீரர்களாகவும் தாமும் ஒருகுதிரை வீரனாகவும் உருவம் எடுத்துக் கொண்டார். தன்னுடைய இடப வாகனத்தை குதிரையாக்கி அதன்மேல் ஏறி தன் பரிவாரம் சூழ ஒற்றைச் சேவகராய் மதுரையை நோக்கி எழுந்தருளினார். சேனையின் வரவினைக் கண்ட சுந்தர சாமந்தன் குலபூஷண பாண்டியனின் முன்சென்று வணங்கி சேனைகளின் வரவு பற்றி தெரிவித்தான். குலபூஷண பாண்டியனும் மனம் மகிழ்ந்து அரண்மனை மேலிருந்து சேனைப் படைகளை பார்வையிட்டான். சுந்தர சாமந்தன் அணிவகுத்து நின்ற ஒவ்வொரு பகுதியினரையும் இறைவனாரின் அருளால் சுட்டிக் காட்டி அவர்கள் எந்த நாட்டினைச் சார்ந்தவர்கள் என்று வரிசையாக காட்டினான்.

குலபூஷண பாண்டியன் ஒற்றைச் சேவகராய் நின்ற சொக்கநாதாரைக் காட்டி அவர் யார்? என்று கேட்டான். அதற்கு சுந்தர சாமந்தன் வந்திருப்பது இறையனார் என்பதை அறிந்து அவரையே பார்த்துபடி அசையாமல் நின்றார். அப்போது அரசன் முன் ஒற்றன் ஒருவன் வந்து அரசே சேதிராயன் வேட்டைக்குச் சென்றபோது புலியால் அடித்து கொல்லப்பட்டு இறந்தான் என்று கூறினான். அதனைக் கேட்ட பாண்டியன் சுந்தர சாமந்தனுக்கு நிறைய பரிசுகளை வழங்கினான். நீ படைக்கு ஆள் சேர்த்த நேரம் போருக்கு அவசியமே இல்லாமல் ஆகி விட்டது. அதனால் படை வீரர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து திருப்பி அனுப்பி விடு என்றார். சுந்தர சாமந்தன் படைவீரர்களைப் பார்த்து நீங்கள் செல்லுங்கள் என்று சொன்ன அடுத்த வினாடி படைகள் அனைத்தும் மறைந்தன. குலபூஷண பாண்டியன் திகைத்தான். சுந்தர சாமந்தனனை அழைத்துக் காரணம் கேட்க நடந்ததை ஒளிக்காமல் கூறினான் சுந்தர சாமந்தன். அதற்கு குலபூஷண பாண்டியன் உனக்கு மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதரே வந்து அருளினார் என்றால் எனக்கு அக்கடவுள் நீயே என்று கூறி அவனுக்கு பல சிறப்புகளைச் செய்தான். பின்னர் சிறிதும் மனக்கவலை ஏதும்மின்றி மதுரையை ஆண்டு வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனார் தம்மை நம்பும் அடியவர்களுக்காகவும் சிவத்தொண்டு புரியும் அடியவர்களுக்காகவும் எந்த வேடத்திலும் வந்து எதனையும் செய்து அருள் புரிவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

29. மாயப் பசுவை வைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாயப் பசுவை வைத்த படலம் இருபத்தி ஒன்பதாவது படலமாகும்.

அனந்தகுணப் பாண்டியன் இறைவனான சொக்கநாதரின் அருளினால் சமணர்கள் உண்டாக்கிய நாகத்தினை அழித்து மதுரையைக் காத்தார். இதனை கண்ட சமணர்கள் எப்படியாவது சூழ்ச்சி செய்து மதுரையையும் சிவனடியாராகத் திகழ்ந்த அனந்தகுண பாண்டியனையும் அழிக்க எண்ணினர். பசுவானது சைவர்களுக்கு புனிதமானது. எனவே மாயப்பசுவை உருவாக்கி மதுரையை அழிக்க ஆணையிட்டால் அனந்தகுண பாண்டியன் புனிதத்தன்மையான பசுவினை எதிர்த்து போரிட மாட்டான். ஆகையால் அவனை எளிதில் வெற்றி கொள்ளலாம் என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் ஒன்றுகூடி மீண்டும் வேள்வி செய்யத் தொடங்கினர். வேள்வியின் இறுதியில் மாயப்பசு ஒன்று உருவானது. அவர்கள் மதுரையையும் அனந்தகுண பாண்டியனையும் அழிக்க மாயப் பசுவிற்கு ஆணையிட்டனர். மாயப்பசுவும் அவர்களின் ஆணையை ஏற்று மதுரையை நோக்கி விரைந்தது. வானளவிற்கு வளர்ந்திருந்த அப்பசு கண்ணில் பட்டவற்றை எல்லாம் அழிக்கத் தொடங்கியது. மாயப் பசுவின் செயல்களை மக்கள் அனந்தகுண பாண்டியனுக்குத் தெரிவித்தனர். இதனைக் கேட்டதும் அனந்தகுண பாண்டியன் திருகோவிலுக்குச் சென்று இறைவனான சொக்கநாதரிடம் முறையிட்டான். தன்னையும் தம்மக்களையும் காத்தருளும்படி வேண்டினான்.

சொக்கநாதர் அனந்தகுண பாண்டியனையும் மதுரை மக்களையும் காப்பாற்ற திருவுள்ளம் கொண்டார். அவர் நந்தியெம் பெருமானை அழைத்து நீ சென்று சமணர்கள் ஏவிய மாயப் பசுவினை வென்று வருவாயாக என்று கட்டளையிட்டார். நந்தியெம் பெருமானும் இறைவனின் ஆணைக் கேட்டதும் கண்களில் அனல் தெறிக்க மிகப்பெரிய காளை வடிவாகி மாயப் பசு இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார். காளை வடிவில் இருந்த நந்தியெம் பெருமானுக்கும் மாயப் பசுவிற்கும் நெடுநேரம் சண்டை நடந்தது. இறுதியில் நந்தியெம் பெருமான் அழகிய காளையாக வடிவெடுத்தார். அழகிய காளையைக் கண்ட மாயப் பசு அதனுடைய அழகில் மயங்கியது. மாயப் பசு மோகத்தினால் சண்டையை மறந்தது. சண்டையில் களைப் படைந்திருந்த மாயப் பசு மோகம் அதிகரித்தால் தன்னிலை மறந்து மயங்கி விழுந்து மடிந்தது. மாயப்பசு வீழ்ந்த இடம் மலையாக மாறியது. அம்மலையானது இன்றும் மதுரையில் பசு மலை என்று அழைக்கப்படுகிறது. மாயப் பசு மடிந்ததைக் கண்ட அனந்தகுண பாண்டியனும் மதுரை மக்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மாயப் பசுவினை வென்றதும் நந்தியெம் பெருமான் தன்னுடைய பூத உடலினை இடப மலையாக நிறுத்திவிட்டு சூட்சும உடலோடு திருக்கயிலாயத்தை அடைந்தார். இடப மலை என்பது இன்றைக்கு மதுரையில் அழகர்கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை அமைந்திருக்கும் இடம் ஆகும்.

இராமர் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் போது இடப மலையில் தங்கியிருந்தார். இதனை அறிந்த அகத்தியர் இராமரிடம் சென்று சொக்கநாதரின் பெருமைகளையும் இந்திரன் சாபத்தை அவர் போக்கி அருளியதையும் எடுத்துக் கூறினார். இராமர் சொக்கநாதரை வழிபட மதுரைக்கு வந்து பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி சொக்கநாதரை பலவாறு துதித்து வழிபட்டார். சொக்கநாதர் இராமா நீ இலங்கை சென்று வைதேகியை மீட்டு வெற்றியுடன் திரும்பி வந்து உன் நாட்டிற்குச் சென்று சிறப்புடன் ஆட்சி செய்வாயாக. அச்சம் கொள்ள வேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளினார். இராமர் இலங்கை சென்று இராவணனை வென்று மைதிலியுடன் வெற்றியுடன் இராமேஸ்வரத்தை அடைந்து சிவலிங்க வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் போது மதுரை வந்து சீதையுடன் சொக்கநாதரை வழிபட்டு தன்நாட்டிற்குச் சென்றார். அனந்தகுண பாண்டியன் தன்மகனான குலபூடணிடம் தன்னுடைய ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இறுதியில் சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தீவினைகள் எப்படி வந்தாலும் இறைவனை சரணடைந்தால் இறைவன் அதனை அழிப்பார் என்பதையும் மோகத்தில் (மோகம் என்றால் மாயையினால் நிகழும் மயக்க உணர்ச்சியில் மயங்கி தன்னிலை இழத்தல் ஆகும்) மயங்கினால் அழிவு நிச்சயம் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

28. நாகம் எய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நாகம் எய்த படலம் இருபத்தி எட்டாவது படலமாகும்.

அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் மேல் மாறாத அன்பு கொண்டு மதுரையில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். மதுரை மக்களும் அனந்தகுண பாண்டினை பின்பற்றி சொக்கநாதக் கடவுளிடம் பேரன்பு கொண்டவர்களாக விளங்கினர்.

அவன் தீவிர சிவபக்தனாக இருந்தான் எப்போதும் ருத்ராட்சம் திருநீரும் அணிந்து பஞ்சாட்சரம் ஜெபித்துக் கொண்டே இருந்தான். அவனுடைய ஆட்சியில் சைவநெறி செழித்து விங்கியது. அதைக் கண்ட சமணர்கள் சமணமதம் நசித்துவிடுமோ என்றஞ்சி பாண்டியனை ஒழித்து விட விக்கிரம பாண்டியன் காலத்தில் செய்தது போல் ஆபிசார வேள்வி (மரண வேள்வி) செய்ய தீர்மானித்தார்கள். சூழ்ச்சியால் அனந்தகுண பாண்டினையும் மதுரையையும் அழிக்க அவர்கள் ஒன்றுகூடி அபிசார வேள்வி (மரண வேள்வி) ஒன்றினைத் தொடங்கினார்கள். அவ்வேள்வியின் இறுதியில் அவுணன் ஒருவன் தோன்றினான். அவ்வவுணன் சமணர்களிடம் எனக்கு தாங்கள் இடும் கட்டளை யாது? என்று வினவினான். சமணர்கள் அவனிடம் நீ பெரிய நாகத்தின் வடிவில் சென்று அனந்தகுண பாண்டியனையும் அவனுடைய மதுரை மக்களையும் விழுக்கிவிடு என்று கட்டளையிட்டனர். அவுணனும் பெரிய பாம்பின் வடிவில் அனல் தெறிக்கும் கண்களுடன் மதுரை அழிக்க மதுரையை நோக்கிப் புறப்பட்டான்.

மதுரை நகரின் எல்லைக்கு வந்த நாகம் அங்கியிருந்தவர்களை விழுங்கத் தொடங்கியது. நாகத்தின் விஷ மூச்சுக் காற்றால் அங்கு இருந்த மரங்கள் பயிர்கள் எல்லாம் கருகின. நாகத்தின் செயல்களை கவனித்த ஒற்றர்கள் அனந்தகுண பாண்டியனுக்கு நாகத்தின் வடிவத்தையும் செயலையும் தெரிவித்தனர். நாகம் பற்றி அறிந்த அனந்தகுண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனை துதித்து தன்னையும் மதுரை மக்களையும் நாகத்திடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டினான். இறைவனாரும் பாம்பினை அழிக்க அனந்தகுண பாண்டியனுக்கு அருள்புரிவதாக திருவாய் மலர்ந்தருளினார். இறைவனின் ஆணையினை ஏற்று அனந்தகுண பாண்டியன் மதுரை நகரின் மேல்திசையில் நின்றிருந்த நாகத்தினிடம் சென்றான். இறைவனை தியானித்து நாகத்தினை நோக்கி அம்பு ஒன்றினை எய்தான். அனந்தகுண பாண்டியனின் அம்பு இறைவனின் திருவருளால் நாகத்தினை உடலினைக் கிழித்தது. நாகமானது நஞ்சினை உமிழ்ந்துவிட்டு மடிந்தது. நாகம் உமிழ்ந்த நஞ்சின் விசமானது மதுரை மக்களை மயக்க நிலைக்கு தள்ளியது. மக்களின் நிலையை அறிந்த அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து இறைவா மதுரையை அழிக்க வந்த கடலினை வற்றச் செய்தீர்கள். கருக்கொண்ட மேகங்களின் பெருமழையிலிருந்து நான்கு மாடங்களை உருவாக்கி மதுரையைக் காத்தீர்கள். மதுரையை அழிக்க வந்த யானையினை அழித்தீர்கள். தற்போது நாகத்தின் நஞ்சினால் மயக்கமடைந்திருக்கும் மதுரை மக்களைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினான். அனந்தகுண பாண்டியனின் கூக்குரலைக் கேட்ட இறைவனார் தன்னுடைய சடையில் அணிந்திருந்த சந்திரனின் அமுதத்தினை சித்தர் வடிவில் தோன்றி மதுரையின் மீது தெளித்தார். இறைவனார் சிந்திய அமுதமானது நாகத்தின் நஞ்சினை முறித்தது. மதுரை மக்கள் தூக்கத்திலிருந்து விழிப்பவர்கள் போல் எழுந்தனர். நாகம் வீழ்ந்த இடம் தற்போது நாகமலை என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தீயவர்களின் சூழ்ச்சியினால் வரும் துன்பத்தினை பிரார்த்தனையாலும் இறை நம்பிக்கையினாலும் இறைவனின் திருவருளால் வீழ்த்தலாம் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

27. அங்கம் வெட்டின படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அங்கம் வெட்டின படலம் இருபத்தி ஏழாவது படலமாகும்.

குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அப்போது மதுரையில் வெளியூரினைச் சேர்ந்த வயதான வாளாசிரியன் ஒருவன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் மாணிக்க மாலை. இருவரும் இறைவனான சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டிருந்தனர். வாளாசிரியன் மதுரை நகரின் வெளிப்புறத்தில் வாட்பயிற்சி கூடம் ஒன்றினை அமைத்து வாட்பயிற்சியினைக் கற்பித்து வந்தான். அவர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த நேரம் போக மீதிநேரம் சொக்கநாதரின் ஆலயம் சென்று இறை வழிபாட்டிலேயே காலம் கழித்து வந்தார். அவனிடம் சித்தன் என்பவன் வாட்பயிற்சி பெற்றான். நாளடைவில் அவன் வாட்பயிற்சியில் குருவினை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினான். திறமைசாலியாக விளங்கிய சித்தன் கெட்ட எண்ணங்கள் மற்றும் துர்நடத்தைகள் கொண்டவனாக விளங்கினான். சிறிது காலம் கழித்து தனது குருவுக்கு போட்டியாக வாட்பயிற்சி கூடம் ஒன்றைத் தொடங்கினான். வாட்பயிற்சி கற்பிக்க அதிக ஊதியம் பெற்றான். தனது குருவினை மதுரையை விட்டு விரட்ட தீர்மானித்த சித்தன் தனது குருவிடம் பயின்று வரும் மாணவர்களை தன்னிடம் பயிற்சி பெற கட்டாயப்படுத்தினான். ஆனால் அவனது குருவோ சித்தனின் இத்தகைய செயல்களால் அவனிடம் வெறுப்பு கொள்ளவில்லை.

குருவால் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என்ற மமதை தலைக்கு ஏறிய சித்தன் தனது குருவின் மனைவியை அடைய விரும்பினான். ஒருநாள் குரு வீட்டில் இல்லாத போது அவரது வீட்டிற்குச் சென்று மாணிக்க மாலையிடம் தன்னுடைய விருப்பத்திற்கு உடன்படும்படி அவதூறாகப் பேசினான். பின் மாணிக்க மாலையின் கையைப் பிடித்து இழுத்தான். அவனிடம் இருந்து தப்பித்த மாணிக்க மாலை உள்ளே சென்று கதவை தாளிட்டாள். சிறிது நேரம் காத்திருந்த சித்தன் மற்றொரு நாள் மாணிக்க மாலையை கவனித்துக் கொள்வதாகக் கூறி சென்று விட்டான். மாணிக்க மாலை தனது நிலை குறித்து மிகவும் வருந்தினாள். மாணிக்க மாலை நடந்த விசயங்களை தன் கணவனிடம் கூறினால் சித்தனுக்கும் கணவனுக்கும் சண்டை ஏற்படக் கூடும். சண்டையில் வயதான தனது கணவனை சித்தன் தோற்கடித்தால் பின் தன்னுடைய நிலை? என்று பலவாறு மனதிற்குள் எண்ணினாள். இறுதியில் திக்கற்றவளாய் சொக்கநாதரை சரண் அடைந்தாள். இறைவா என்னையும் என் கணவனையும் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று என்று கதறினாள். மாணிக்க மாலையின் அழுகுரலைக் கேட்டு இறைவனார் அவளுக்கு உதவ அருளுள்ளம் கொண்டார். மறுநாள் இறைவனார் வாளாசிரியரின் உருவத்தில் சித்தனின் வாட்பயிற்சி கூடத்திற்கு சென்றார். சித்தனிடம் சித்தா இளைஞனான நீயும் வயதான நானும் நாளை வாட்போர் புரிந்து நம்மில் வல்லவர் யார் என்பதைக் காண்போம். ஆதலால் நீ நகருக்கு வெளியே வந்து என்னுடன் வாட்போர் புரி என்று கூறினார். இதனை எதிர்பார்த்து காத்திருந்த சித்தன் அதற்கு சம்மதித்தான். நாளை நடைபெறும் போரில் எளிதாக வெற்றி பெற்று வாளாசிரியனை ஊரைவிட்டு துரத்திவிட்டு மாணிக்க மாலையை அடைந்து விடவேண்டும் என்று மனதிற்குள் எண்ணினான். மறுநாள் மதுரைநகரின் வெளியிடத்தில் சித்தனுக்கும் வாளாசிரியன் உருவில் வந்த இறைவனாருக்கும் வாட்போர் தொடங்கியது. இருவரும் நீண்ட நேரம் போர் புரிந்தனர்.

வாளாசிரியர் வடிவில் இருந்த இறைவன் அங்கிருந்தோர் அனைவருக்கும் கேட்கும்படி உன் குருவின் மனைவியை விரும்பிய உள்ளத்தையும் தகாத வார்த்தை பேசிய நாவினையும் தொட்ட கைகளையும் கெட்ட எண்ணத்தோடு பார்த்த கண்களையும் காத்துக்கொள் என்று கூறினார். பின்னர் சித்தனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அவ்விடத்திலிருந்து மறைந்தார். தங்களுடைய ஆசிரியரைக் காணாது வாளாசிரியரின் மாணவர்கள் திகைத்தனர். தங்களுடைய ஆசிரியரைத் தேடி அவருடைய இல்லத்திற்கு சென்றனர். வாளாசிரியரின் இல்லத்தில் இருந்த அவருடைய மனைவியிடம் வாளாசிரியர் எங்கே என்று கேட்டனர். மாணிக்க மாலை வாளாசிரியர் இறைவனை வழிபட திருக்கோவிலுக்கு சென்றதாகத் தெரிவித்தார். அப்போது வாளாசிரியர் தனது இல்லத்திற்கு வந்தார். அவரிடம் மாவணவர்கள் சித்தனைக் கொன்ற பின் தாங்கள் எங்கே சென்றீர்கள்? என்ற கேட்டனர். வாளாசிரியரும் சித்தனைத் தான் கொல்லவில்லை என்று தெரிவித்தார். அப்போது மாணிக்க மாலை வாளாசிரியரிடம் சித்தன் தன்னிடம் நடந்த முறையற்ற நடத்தைகளைக் கூறினார். வாளாசியரின் மாணவர்களும் போர்களத்தில் வாளாசிரியர் மாணிக்க மாலை கூறியவாறு கூறி அவனைக் கொன்றதாகத் தெரிவித்தனர். அப்போது வாளாசிரியர் மாணிக்க மாலையின் துயரினைப் போக்க சொக்கநாதர் தனது உருவம் தாங்கி வந்து சித்தனைக் கொன்றாத உணர்ந்து பக்தி வெள்ளத்தில் உருகினார். இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட குலோத்துங்க பாண்டியன் இறைவனின் திருவருளைப் பெற்ற அத்தம்பதியினரை வணங்கி யானையின் மீது ஏற்றி ஊர்வலம் வரச் செய்து பொன்னும் பொருளும் வழங்கினான். பின் தன் மகனான அனந்தகுண பாண்டியனுக்கு அரசு உரிமை அளித்து சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனுக்கு செய்யும் துரோகத்தை கூட இறைவன் மன்னிப்பார். ஆனால் குருத்துரோகத்தை இறைவன் மன்னிக்க மாட்டார் என்பதையும் குருநிந்தனை செய்யக் கூடாது என்பதையும் குரு நிந்தை செய்வோரையும் தன்பக்தர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் கொடியவர்களை இறைவன் அழித்து விடுவார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

26. மாபாதகம் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாபாதகம் தீர்த்த படலம் இருபத்தி ஆறாவது படலமாகும்.

குலோத்துங்க பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த காலத்தில் அவந்தி நகரில் வேதியர் ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒழுக்கசீலராகவும் முறையான வாழ்வினை உடையவராகவும் இருந்தார். அவர்களுக்கு மகன் ஒருவன் பிறந்தான். அவன் துர்குணம் மற்றும் கெட்ட நடத்தைகள் உடையவனாக இருந்தான். தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்த செல்வத்தைக் கவர்ந்து சென்று விலை மகளிரிடம் கொடுத்து சிற்றின்பம் அனுபவித்து வந்தான். ஒரு கட்டத்தில் மகனுடைய கெட்ட நடத்தையால் அவர்களிடம் இருந்த செல்வ வளம் குன்றவே அவர்கள் குடிசைக்கு வந்தனர். விலை மகளிருக்கு கொடுக்க செல்வம் இன்றி அவன் சிற்றின்பத்திற்காக தனது தாயிடம் பணம் கொடுக்குமாறு நிர்பந்தித்தான். இதனை அறிந்த அவனுடைய தந்தை தன்னுடைய ஊழ்வினை மகன் வடிவில் வந்திருப்பதாக மிகவும் வருந்தினார். தாயை நிர்பந்தித்ததால் தந்தை அவனை கடுமையாக கண்டித்தார். இதனை விரும்பாத அவன் சிற்றின்ப மோகத்தில் தந்தை என்றும் பாராமல் அவரைக் கொன்றான். பின் அரச தண்டனைக்கு பயந்து வேறு ஊருக்கு சென்று விடலாம் என்று எண்ணி நடு இரவில்  தந்தையின் உடலை  எரித்துவிட்டு தனது தாயுடன் தன்னால் இயன்ற பொருளையும் எடுத்துக் கொண்ட கற்கள் நிறைந்த காட்டின் வழியே சென்றான். அப்போது அங்கிருந்த கொள்ளையர்கள் மகனிடமிருந்த பொருளையும் கொள்ளையடித்து விட்டு தடுத்த தாயையும் கொன்று விட்டு சென்றனர். வேதியனாகிய தந்தையைக் கொன்றதால் மகனுக்கு பிரம்மஹத்தி பாவம் பிடித்து அவன் உடல் மெலிந்து நோய் வாய்ப்பட்டதோடு மனதளவிலும் பெரிதும் பாதிப்படைந்து அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தான். தாயும் இல்லை தந்தையும் இல்லை உற்றார் உறவும் இல்லை. அனாதையாய் ஆண்டியாய் உடுத்திய உடையுடன் பிச்சை எடுத்தான். ஊழ் வினையின் போக்கை அப்போதுதான் உணர்ந்தான்.  தான் செய்த பாவங்களை எண்ணிக் கண்ணீர் விட்டான். கோவில் கோவிலாக சுற்றியதன் பலனாக இறுதியில் சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரையம்பதியை அடைந்தான். அங்கு அவன் திருகோவிலின் அருகே செய்வது அறியாது திகைத்து நின்று கொண்டிருந்தான்.

இறைவனான சொக்கநாதர் வேடுவனானகவும் மீனாட்சியம்மை வேடுவச்சியாகவும் வடிவம் கொண்டு கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது இறைவனார் அம்மையிடம் இளைஞனான மாபாதகனையும் அவன் செய்த தவறுகள் குறித்து கூறினார். பின்னர் இறைவனார் அம்மையிடம் கள்ளுண்ணலும் சிற்றின்பமும் அறிவைக் கெடுக்கும். இவற்றில் கள்ளானது உண்டால் மட்டுமே அறிவைக் கெடுக்கும். சிற்றின்பத்தை எண்ணுதலும் பார்த்தலும் கேட்டலும் ஆகியவை தலையில் கொடிய விஷம் போல் பரவி அறிவினைக் கெடுத்து விடும். முறையற்ற சிற்றின்பம் கொலைக்கு காரணமாகி விடும். இறுதியில் அழிவினையும் கொடுக்கும் என்று கூறினார். பின்னர் நோய்வாய்பட்ட இளைஞனிடம் சென்ற இறைவனான வேடுவன் இளைஞனே உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது? என்று கேட்டார். வேடுவன் கேட்டதும் அவ்விளைஞன் தன் செய்த தவறுகளை எல்லாம் சொல்லி அவற்றிற்காக அழுதான். இளைஞனிடம் கருணை கொண்ட இறைவனான வேடுவன் சரி நீ படும் துன்பத்திற்கு தீர்வு கூறுகிறேன் கேள். சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து பசுக்களுக்கு அருகம்புல்லும் நீரும் கொடு. தினம் இறைவனது அபிஷேக நீரில் குளித்து விட்டு பொற்றாமரைக் குளம் மற்றும் திருகோவிலை சுற்றி அங்கப்பிரதட்சிணம் செய். நீ கையால் பிச்சை எடுத்து தினமும் ஒருபொழுது மட்டும் உண்ண வேண்டும். பிரதிபலன் கருதாமல் சிவனடியார்களுக்கு தொண்டு செய். இவ்வாறு செய்து வந்தால் உன்னுடைய பழி மற்றும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று அருளினார்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த உமையம்மையாகிய வேடுவச்சி இறைவனாரிடம் ஐயனே உலகில் நல்லோர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர். அவர்களுக்கு தாங்கள் அருள்புரியாது மாபாதகத்தை செய்த இப்பாவிக்கு அருள்புரிவது ஏனோ? என்று கேட்டார். அதற்கு இறைவனார் நல்லவர்கள் இப்பூமியில் நன்றாக வாழ வேண்டும் எனில் கெட்டவர்கள் திருந்த வேண்டும். மாபாதகம் புரிந்த இவ்விளைஞன் இன்றைக்கு அதற்குரிய தண்டனையும் அனுபவித்து அதனைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அவனையும் காப்பாற்றி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவனுக்கு அருள்புரிந்தேன் என்று விளக்கம் கூறினார். அதற்கு உமையம்மை தங்களுடைய திருவிளையாடலைப் புரிந்து கொள்பவர் யார்? ஆட்டுபவரும் ஆட்டுவிப்பவரும் தாங்களே என்று கூறினார். பின்னர் இருவரும் மறைந்தருளினர். இளைஞனும் இறைவனான வேடுவர் சொன்னபடி நடந்து வந்தான். சிலநாட்களில் அவனுடைய பாவங்கள் நீங்கியதால் நோய் நீங்கப் பெற்றான். பின் அந்த இளைஞன் ஒழுக்கமானவனாக மாறி சிவசிந்தனையுடன் வாழ்ந்து இறுதியில் நல்கதியை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

முறையற்ற சிற்றின்பம் அறிவை கெடுத்து பஞ்சமகா பாவத்தை செய்ய வைக்கும் என்பதையும் இறுதியில் அவனிடம் உள்ள அனைத்தையும் அழித்து விடும் என்பதேயும் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்த பின்னர் அவர்களும் இறைவனடி சேர வாய்ப்பளிக்கும் இறைவனின் கருணை உள்ளத்தையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

25. பழி அஞ்சின படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பழி அஞ்சின படலம் நூலின் இருபத்தி ஐந்தாவது படலமாகும்.

நடராஜரின் கால் மாறிய நடனத்திற்கு காரணமான இராசசேகரப் பாண்டியனுக்குப் பின் அவனது மகன் குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். அப்போது மதுரையை அடுத்த திருப்பத்தூரில் வேதியன் ஒருவன் தனது மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையில் இருக்கும் தனது மாமன் வீட்டிற்கு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தான். அவ்வாறு வரும்போது வேதியனின் மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. எனவே வேதியன் தனது மனைவி மற்றும் குழந்தையை ஒரு ஆலமரத்தின் நிழலில் விட்டுவிட்டு தான் மட்டும் தண்ணீர் தேடிச் சென்றான். இலைகள் நிறைந்த ஆலமரத்தில் முன்னொரு நாளில் யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு சிக்கிக் கொண்டு இருந்தது. ஆலமர இலைகளில் அம்பு சிக்கி இருந்ததை அப்பெண் கவனிக்கவில்லை. வேதியனின் மனைவி தனது குழந்தையை அருகில் விட்டுவிட்டு ஆலமரத்தின் நிழலில் அயர்வுடன் படுத்தாள். காற்றினால் அசைந்து அக்கூரிய அம்பு கீழே படுத்திருந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் ஊடுருவியது. ஊழ்வினையால் வேதியனின் மனைவி மாண்டாள். அப்பொழுது ஆலமரத்தின் மற்றொரு புறத்தில் வேடன் ஒருவன் இளைபாறிக் கொண்டிருந்தான். அவ்வேடன் மரணமடைந்திருந்த வேதியனின் மனைவியைக் கவனிக்கவில்லை. தண்ணீர் தேடிச் சென்ற வேதியன் தண்ணீருடன் ஆலமரத்தடிக்கு திரும்பினான். அங்கே அவனுடைய மனைவி அம்பால் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்ததையும் அவனுடைய குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருந்ததையும் கண்டான்.

வேதியன் மரத்தைச் சுற்றிப் பார்த்தபோது இளைப்பாறிய வேடனைக் கண்டான். அவ்வேடன்தான் தன்னுடைய மனைவியைக் கொன்றதாகக் கருதி அவனை அரசனிடம் முறையிட அழைத்தான். அவ்வேடனோ தனக்கும் வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். ஆனால் வேதியனோ வேடனின் அம்பால்தான் தன்மனைவி இறந்தாகக் கருதி அவனை வலுக்கட்டாயமாக அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அரண்மனையை அடைந்த வேதியன் குலோத்துங்கப் பாண்டியனிடம் நடந்தவைகளைக் கூறி தன்னுடைய மனைவியின் இறப்பிற்கு இவ்வேடனே காரணம் என்று கூறினான். குலோத்துங்கப் பாண்டியனும் வேடனிடம் விசாரித்தான். வேடனோ தனக்கும் வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். அரசனோ வேடனை சந்தேகப்பட்டு சிறையில் அடைத்து அவனை சித்திரவதை செய்த போதும் வேடன் வேதியனின் மனைவியைக் கொல்லவில்லை என்பதையே கூறினான். இதனை அறிந்த மன்னன் தன் நாட்டில் நடைபெற்ற ஒரு மரணத்திற்கு நீதி கொடுக்க முடியாமல் போய் விடுமோ என்று மிகவும் வேதனையடைந்து சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகத்தை தீர்த்தருள வேண்டினான். அப்போது இறைவன் பாண்டியா கவலை வேண்டாம். மதுரை நகரில் உள்ள வைசிய வீதியில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. நீ அங்கு வேதியனோடு வருவாயாக. அங்கே வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகம் தீரும் என்று திருவாக்கு அருளினார்.

இறைவனின் திருவாக்கின்படி குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் வைசிய வீதியில் நடைபெற இருந்த திருமண மண்டபத்தினை அடைந்தனர். திருமண வீட்டின் திண்ணையில்  அமர்ந்திருந்த பலருக்கு நடுவில் நிலக்கரி போல் கறுத்து பனைமரம் போல் உயர்ந்திருந்த இருவர் அரசனின் கவனத்தைக் கவர்ந்தனர். அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்தான் அரசன். அவர்கள் மெதுவாக உரையாடியதை குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் கவனத்துடன் கேட்டார்கள். இறைவனின் திருவருளால் அவர்கள் எமதூதர்கள் என்று இருவரும் புரிந்து கொண்டார்கள். எமதூதர்களில் ஒருவன் இங்கே மணமகனாக அமர்ந்திருப்பவனின் உயிரினை எடுத்து வர நமது தலைவர் கட்டளையிட்டுள்ளார். எவ்வாறு இவனுடைய உயிரினை எடுப்பது? என்று கேட்டான். அதற்கு மற்றவன் ஆலமரத்தில் சிக்கியிருந்த கூரிய அம்பினை காற்றால் அசைத்து கீழே படுத்திருந்த வேதியன் மனைவியின் வயிற்றினை கிழிக்கச் செய்து அவளுடைய உயிரினை எடுத்தோம் அல்லவா? அதுபோல திருமணம் முடிந்ததும் கோ தானம் செய்வதற்காக திருமண மண்டபத்திற்கு வெளியில் நிற்கும் கன்று ஈன்ற பசு நிற்கிறது. அதனை இவ்விழாவின் ஆரவாரத்தால் கோபம் மூட்டி மணமகனை முட்டச் செய்து அவனுடைய உயிரினைப் பறிப்போம் என்று கூறினான். எமதூதர்களின் பேச்சினைக் கேட்ட குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வேதியன் அரசனிடம் இங்கு கூறியபடியே மணமகன் இறந்தால் என் மனைவியும் அவ்வாறு இறந்ததாக ஏற்றுக் கொள்வேன். ஆகையால் இங்கு நடக்கும் நிகழ்ச்சியைக் காண்போம் என்றான்.

குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் அங்கே நடப்பதை அறிய இருந்தனர். திருமண விழாவிற்காக எல்லோரும் கூடினர். அங்கே பலவித இசைக்கருவிகள் முழங்கின. இதனால் அவ்விடத்தில் பேரிரைச்சல் ஏற்பட்டது. பேரிரைச்சலால் கன்று ஈன்ற பசு கோபம் கொண்டு திருமணம் நடக்கும் இடத்திற்குள் புகுந்தது. மக்கள் எல்லோரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். பசுவானது மணமகனை கோபத்தில் முட்டியது. மணமகன் அவ்விடத்திலேயே இறந்தான். இதனைக் கண்ட வேதியன் பெரிதும் வருத்தம் கொண்டான். அரசன் அரண்மனையில் எல்லோருக்கும் நடந்தவைகளை விளக்கிக் சொல்லி வேடனை விடுதலை செய்து தன்னுடைய பிழையைப் பொறுத்துக் கொள்வாயாக என்று கூறி அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான். வேதியனுக்கு பொன்னும் பொருளும் அளித்து மறுமணம் செய்து கொள்ளச் சொன்னான். குலோத்துங்கப் பாண்டியன் திருக்கோவிலை அடைந்து எம்பெருமானே எனக்காக தாங்கள் பழி அஞ்சிய நாதராய் இருந்தீர் என்று கூறி பலவாறு போற்றி வழிபட்டான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தன் நாட்டில் நடந்த ஒரு மரணத்திற்கு நீதி கொடுக்க முடியாமல் கொடும்பழிக்கு ஆளாவோம் என்று அஞ்சிய குலோத்துங்க பாண்டியனுடைய தெளியாத மனத்தினைத் இறைவன் தெளிய வைத்தார். தர்ம வழியில் செல்லும் போது ஏதேனும் துன்பம் வந்தால் தன்னை நம்பியவர்களை இறைவன் கைவிட மாட்டார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.