24. கால் மாறி ஆடிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கால் மாறி ஆடிய படலம் நூலின் இருபத்தி நான்காதாவது படலமாகும்.

விக்கிரம பாண்டியன் தனது மகனான இராசசேகர பாண்டியனுக்கு ஆட்சி உரிமையை அளித்து சிவப்பேறு பெற்றான். இராசசேகர பாண்டியன் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டு நல்வழியில் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அவன் ஆயகலைகள் 64 இல் பரதக்கலையைத் தவிர்த்து ஏனையவற்றில் தேர்ச்சி பெற்று சிறப்புற விளங்கினான். வெள்ளி அம்பலத்தில் நடனம் புரியும் அம்பலவாணனின் திருநடனத்தினால் இவ்வுயிர்களின் இயக்கம் உள்ளது. அந்த உன்னதமான பரதக்கலையைக் கற்று இறைவனுக்கு இணையாக ஆடவிரும்பவில்லை என்று நடராஜரின் மீது கொண்ட அன்பால் பரதக்கலையை இராசசேகரபாண்டியன் கற்கவில்லை.

இராசசேகர பாண்டியன் காலத்தில் சோழநாட்டை கரிகால் பெருவளத்தான் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆயகலைகள் 64 இலும் சிறந்து விளங்கிய அவன் திருவானைக்காவில் உள்ள ஜம்புகேசரிடம் பேரன்பு கொண்டவன். ஒருசமயம் சோழ நாட்டைச் சார்ந்த புலவன் ஒருவன் இராசசேகர பாண்டியனின் அவைக்கு வந்தான். அப்புலவனை வரவேற்று தனக்கு இணையான ஆசனம் அளித்து அவனை கௌரவித்தான் இராசசேகரபாண்டியன். அப்புலவன் இராசசேகர பாண்டியனிடம் எங்கள் அரசர் ஆயகலைகள் 64 யையும் நன்கு பயின்றவர். தங்களுக்கோ 63 கலைகள் மட்டும் தெரியும். பரதக்கலை உங்களுக்கு வராது. ஆகவே உனக்கு ஒரு  கலை குறைவு.  இதை நான் கூறவில்லை.  உன் மக்களும் சோழமன்னனும் கூறுகின்றனர் எனக் கூறிச் சென்றார். இதனைக் கேட்ட இராசசேகர பாண்டியன் மிகுந்த வருத்தம் கொண்டான். தன் குறையைச் சுட்டிக் காட்டிய புலவனிடம் கோபம் கொள்ளாது அவனுக்கு பரிசுகள் பல கொடுத்து அனுப்பி வைத்தான். பின் தான் பரதக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும் என்று எண்ணி பரதக் கலையை கற்க விரும்பினான்.

இராசசேகர பாண்டியன் பரதக் கலையை கற்றுணர்ந்தவர்களிடம் பரதக் கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினான். இராசசேகரபாண்டியன் பரதக் கலையைக் கற்கும் போது உடல்வலி ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்தான். அப்போது அவன் நடராஜரை நினைத்து வெள்ளி அம்பலத்தில் தினமும் திருக்கூத்தினை நிகழ்த்தும் அம்பலவாணனுக்கும் இதே போல் உடல் வலியும் கால் வலியும் சோர்வும் ஏற்படுமே என்று எண்ணி மிக்க வருத்தம் கொண்டான். இறைவன் கால் மாறி ஆடினால் வலி நீங்குமே என்று கருதினான். அப்பொழுது சிவராத்திரி வந்தது. இராசசேகர பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து சிறப்பு வழிபாடு நடத்தினான். பின் வெள்ளி அம்பலவாணனிடம் இறைவா தாங்கள் தூக்கிய திருவடியை ஊன்றியும் ஊன்றிய திருவடியைத் தூக்கியும் மாறி நடனமாட வேண்டும். அப்பொழுதுதான் என்னுடைய வருத்தம் நீங்கும் என்று  பலவாறு பலமுறை வேண்டினான். நடராஜரின் விக்கிரகத்தில் தன் காலை மாற்றாமல் அப்படியே நின்றார். உடனே தன் உறையிலிருந்து கத்தியை எடுத்து இப்போது நீங்கள் காலை மாற்றி வைக்கா விட்டால் என்ற சிரத்தை அறுத்துக் கொள்வேன் என்று தன் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துக் கொள்ள முனைந்தான்.

இராசசேகர பாண்டியனின் கழுத்தில் தன் கத்தியை வைத்த அடுத்த நொடி நடராஜர் இடது காலை தூக்கியும் வலது காலை ஊன்றியும் நடனமாடி இராசசேகரபாண்டியனின் மும்மலங்களையும் நீக்கி அவனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினார். நடராஜர் கால் மாறி நடனம் ஆடியதைக் கண்டதும் இராசசேகர பாண்டியன் இறைவனை பலவாறு போற்றித் துதித்தான். பின் வெள்ளி அம்பலவாணனிடம் வெள்ளியம்பலத்துள் கூத்தாடும் எம் தந்தையே எக்காலத்துக்கும் இவ்வாறே நின்று தேவரீர் அருள் செய்ய வேண்டும். இதுவே அடியேன் வேண்டும் வரமாகும் என்று மனமுருக பிராத்தித்தான். அன்று முதல் இன்றைக்கும் மதுரையில் இருக்கும் வெள்ளி அம்பலத்தில் நடராஜ பெருமான் கால் மாறிய திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். கால்மாறி ஆடிய நடராஜரின் திருவருளால் ராஜசேகரனுக்கு குலோத்துங்கன் என்ற சத்புத்திரன் பிறந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் தன்மேல் எப்போதும் உறுதியான மனதுடன் மாறாத அன்பு பூண்டவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

23. விருத்த குமார பாலாரன படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விருத்த குமார பாலாரன படலம் நூலின் இருபத்தி மூன்றாதாவது படலமாகும்.

விக்கிரம பாண்டியனின் ஆட்சியில் மதுரையில் விருபாக்கன் சுபவிரதை என்ற அந்தண தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் போற்றி சிவனை வழிபாடு செய்து வந்தார்கள். அவ்விருவருக்கும் குழந்தைப் பேறு நீண்ட நாட்கள் கிடைக்கவில்லை. ஒரு குழந்தை வேண்டி சிவனைக் குறித்துக் கடும் நோன்பு இருந்தார்கள். சொக்கநாதரின் திருவருளால் பெண் குழந்தை அவர்களுக்கு பிறந்தது. அவளுக்கு கௌரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குழந்தை கௌரி சிறுவயதிலேயே சொக்கநாதரிடமும் மீனாட்சி அம்மனிடமும் அன்பு பூண்டு இறைபக்தி மிக்கவளாய் விளங்கினாள். கௌரி தனது ஐந்தாவது வயதில் தனது தந்தையிடம் அப்பா பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் அறவழி எது என்று கேட்டாள். அதற்கு விருபாக்கன் பராசக்தியின் மந்திரம் வீடு பேற்றை அளிக்கும் என்று பராசக்தியின் மந்திரத்தை தனது மகளுக்கு உபதேசித்தார். கௌரியும் இடைவிடாது பராசக்தியின் மந்திரத்தை உச்சரித்து வந்தாள். அவளுக்கு மணப்பருவம் எட்டியது.

கௌரிக்கு விருபாக்கன் திருமணம் செய்ய முடிவு செய்து அவளுக்கு ஏற்ற வரனைத் தேடத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு வைணவ சமயத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவன் பிச்சை கேட்டு வந்தான். அவனைப் பார்த்ததும் விருபாக்கன் இவனே தனது மகளுக்கு ஏற்ற வரன் என்று முடிவு செய்து கௌரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார் விருபாக்கன். வீடுபேற்றினை விருப்பிய கௌரி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப தந்தையின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டாள். இதனைக் கண்ட விருபாக்கனின் மனைவியும் அவனுடைய சுற்றத்தாரும் இவன் யார்? ஊரும் பேரும் தெரியாத இவனுக்கு இப்பெண்ணை திருமணம் செய்து விட்டாரே. விதியின் வழியில் மதி செல்லும் என்பது இதுதானோ என்று எண்ணிக் கலங்கினர். பின் கௌரியை அவளது கணவனுடன் சீர்கொடுத்து அனுப்பி வைத்தனர். வைணவ இளைஞன் தன் மனைவியோடு தன் இல்லத்தை அடைந்தான். சிவநெறியைப் பின்பற்றி வாழும் கௌரியை அவளுடைய மாமனாருக்கும் மாமியாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் அவளை பெரிதும் துன்பப்படுத்தினர். ஒருநாள் கௌரியின் வீட்டார் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக கௌரியை வீட்டிற்கு வெளியே திண்ணையில் தனியாக விட்டுவிட்டு வீட்டினைப் பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

கௌரி வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி தனியாக இருந்தாள். அப்போது ஒரு சிவனடியாரையும் காணவில்லையே சிவனடியாரை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள். அப்பொழுது சொக்கநாதர் முதிய சிவனடியாராக கௌரியின் முன் தோன்றினார். பல நாட்கள் உணவின்றி வருந்துபவர் போல் காணப்பட்டார். கௌரியும் அவரிடம் மிக்க அன்பு கொண்டு அவரை வரவேற்றாள். சிவனடியார் தான் பசியோடு வந்திருப்பதாக கௌரியிடம் தெரிவித்தார். அதனைக் கேட்ட கௌரி வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்கள் நான் என்ன செய்வேன்? உங்களுக்கு ஒன்றும் சாப்பிட கொடுக்க முடியாமல் இருக்கிறேன் என்று கூறினாள். அதற்கு சிவனடியார் நீ உன் கையினை கதவின் பூட்டில் வை. கதவு திறந்து கொள்ளும் என்று கூறினார். அதனைக் கேட்ட கௌரி கதவின் பூட்டில் கைவைத்து கதவினைத் திறந்து உள்ளே சென்று சமைக்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் சமையலை முடித்து சிவனடியாரிடம் வந்து ஐயா திருவமுது செய்ய வாருங்கள் என்று கூறினாள். கௌரியின் வேண்டுகோளை ஏற்ற முதிய சினவடியாரும் கௌரி அளித்த உணவினை தேவாமிர்தம் போல் உண்டு மகிழ்ந்தார். பின் முதிய சிவனடியார் இளமையான காளைப் பருவத்தினரைப் போல் மாறி கௌரி முன் காட்சி அளித்தார். அதனைக் கண்ட கௌரி திகைத்து நின்றாள். அப்போது திருமணத்திற்கு சென்ற கௌரியின் வீட்டார் வந்தனர். எது நடந்தாலும் அது இறைவன் செயலே என்று உறுதியுடன் பிரார்த்தனை செய்தாள் கௌரி. உடனே இறைவனார் சிறுகுழந்தையாக மாறி தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அழுது கொண்டு கிடந்தார். குழந்தையின் நெற்றியில் திருநீறு பூசப்பட்டிருந்தது. வீட்டிற்குள் வந்த கௌரியின் மாமியார் இக்குழந்தை யார்? என்று கௌரியிடம் கேட்டாள். அதற்கு கௌரி தோழி தன்குழந்தையை சிறிது நேரம் பார்த்துக் கொள் என்று கூறிச் சென்றான் என இறைவனின் அருளினால் கூறினாள். இதனைக் கேட்ட கௌரியின் மாமனும் மாமியும் கோபம் கொண்டு சிவபெருமானிடம் அன்பு பூண்ட நீங்கள் இருவரும் வீட்டை விட்டுச் செல்லுங்கள் என்று கூறி வீட்டை விட்டு விரட்டி விட்டனர். வீட்டைவிட்டு குழந்தையுடன் வெளியேறிய கௌரி குழந்தையின் திருமுகத்தைப் பார்த்தவாறு சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் மனதில் வைத்து பராசக்தியின் திருமந்திரத்தை உச்சரித்தாள். உடனே குழந்தை மறைந்தது. சிவபெருமான் அவளுக்கு இடப வாகனத்தில் காட்சியளித்தார். அக்காட்சியைக் கண்ட கௌரி சிவானந்த கடலில் ஆழ்ந்தாள். சிவபெருமான் கௌரிக்கு வீடுபேற்றினை வழங்கினார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

கௌரியை அவளது புகுந்த வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு துன்பத்தை கொடுத்த போதிலும் அவள் இறைவன் மீது செலுத்திய பக்தியும் அனைத்தும் நன்மைக்கே என்ற கௌரியின் எண்ணமும் வீடுபேற்றினை அடைய வேண்டும் என்ற அவளின் மன உறுதியும் நம்பிக்கையும் அவளுக்கு வீடுபேற்றை கிடைக்கச் செய்தது. அனைத்தும் இறைவன் செயல் என்ற நம்பிக்கையுடன் கடவுளை சரணடைந்தவர்களை இறைவன் கைவிட மாட்டார். என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

22. யானை எய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் யானை எய்த படலம் நூலின் இருபத்தியிரண்டாவது படலமாகும்.

அபிடேகப்பாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியன் பாண்டிய நாட்டினை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் சைவம் செழித்தோங்கி இருந்தது. அவன் சொக்கநாதரின் சந்நிதிக்கு வடக்கே சித்தரின் திருவுருவத்தை நிறுத்தி நள்தோறும் வழிபட்டு வந்தான். இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கநாதருக்கு அருகே எல்லாம் வல்ல சித்தரை நாம் தரிசிக்கலாம்.

விக்கிரமபாண்டியனிடம் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசன் ஒருவன் நீண்ட நாள் பகைமை கொண்டிருந்தான். அவனுக்குப் பாண்டியன் பேரில் ஏகப்பட்ட பொறாமை. அவனை எப்படி வெல்வது என்பதே அவன் மூளையைக் குழப்பியது. சமண சமயத்தை தழுவிய அவ்வரசன் விக்ரமபாண்டியனை நேரடியாக போரிட்டு வெல்ல இயலாததால் விக்கிரமபாண்டியனை சூழ்ச்சியால் வெல்ல எண்ணினான். அதன்படி சக்கியம் கோவர்த்தனம் கிரௌஞ்சம் திரிகூடம் அஞ்சனம் விந்தியம் ஹேமகூடம் காஞ்சி குஞ்சரம் என்ற எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தன்னை வந்து சந்திக்குமாறு தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னன் தலையை மயில் தோகையால் தொட்டு வாழ்த்தினர். பாண்டிய நாட்டை வெற்றி பெற விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரில் வெல்லமுடியாது. அபிசார வேள்வியை (மரண வேள்வி) செய்து விக்கிரமனை வீழ்த்த வேண்டும். அவனை அழித்தால் உங்களுக்கு பாதி இராஜ்ஜியம் தருகிறேன் எனவும் ஆசை காட்டினான். சோழனின் உடன்படிக்கு ஒத்துக் கொண்ட சமணர்கள் பாலியாற்றங்கரையில் பெரிய யாக குண்டத்தை அமைத்தனர். அதில் எட்டி உள்ளிட்ட தீய மரத்தின் விறகுகளையும் நச்சு உயிரிகளின் உடம்பு மிளகுப்பொடி கலந்த எண்ணெயையும் ஊற்றி அபிசார வேள்வியைத் தொடங்கினர். அவ்வேள்வித் தீயினால் உண்டான நச்சானது அருகில் இருந்த காடுகள் சோலைகள் நந்தவனம் ஆகியவற்றை கருக்கி விட்டன.

சமணர்களின் அபிசார வேள்வித் தீயிலிருந்து ஒரு கொடிய யானை ஒன்று தோன்றியது. சமணர்கள் கொடிய யானையிடம் நீ விரைந்து சென்று விக்கிரம பாண்டியனையும் மதுரையையும் அழித்து விட்டு வா என்று கட்டளையிட்டனர். யானையின் உடலானது பெருத்தும் அதனுடைய கால்கள் மண்ணில் பதிந்தும் உடலானது விண்ணைத் தொட்டும் இருந்தது. அது தன்னுடைய பெரிய காதுகளினால் சூறாவளியை உருவாக்கியும் கண்களில் நெருப்புப் பொறி சிந்தவும் உலகத்தினை உலுக்கும் இடிபோல் பிளிறிக் கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டது. சமணர்களும் சோழனுடைய படைகளும் யானையைப் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் மதுரையின் எல்லையை அடைந்த கொடிய யானை அங்கிருந்த காடுகள் வயல் வெளிகள் உயிரினங்கள் உள்ளிட்ட கண்ணில் பட்டவற்றை எல்லாம் அடித்து நாசமாக்கியது. யானையின் செயலை மதுரை மக்கள் விக்கிர பாண்டியனுக்குத் தெரிவித்தனர். கொடிய யானையின் செயல்களை அறிந்த விக்கிரம பாண்டியன் சொக்கநாதரைத் தவிர்த்து இவ்வுலகத்தில் இருந்து நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். ஆதலால் வாருங்கள் நாம் அனைவரும் சென்று அவரை வழிபாடு செய்வோம் என்று கூறி மதுரை மக்களுடன் சொக்கநாதரை தரிசிக்கச் சென்றான்.

சொக்கநாதரின் சந்நிதியை அடைந்த விக்கிரபாண்டியன் கொடிய யானை மதுரையின் எல்லையில் நின்று கண்ணில் பட்டவற்றை நாசம் செய்தவாறே மதுரையை நோக்கி வருகிறது. இறைவா எங்களை இத்துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என்று மனமுருகி வழிபட்டான். அப்போது வானத்தில் இருந்து பாண்டியனே கவலைப்பட வேண்டாம். யாம் வேடுவர் வேடம் பூண்டு வில் ஏந்திய சேவகனாய் மதுரையை அழிக்க வந்த கொடிய யானையை அழிப்போம். நீ அதற்கு முன்பு மதுரைக்கு கிழக்கே ஓர் அட்டாலை மண்டபத்தை உண்டாக்கு என்ற திருவாக்கு கேட்டது. இறைவனின் திருவாக்கினைக் கேட்ட விக்கிரமபாண்டியன் மனதில் மகிழ்ச்சி கொண்டு மதுரையின் கீழ்திசை நோக்கி ஓடினான். கற்களையும் சாந்தினையும் கொண்டு பதினாறு கால் தூண்களுடன் கூடிய பெரிய அட்டாலை மண்டபத்தை உண்டாக்கினான். அதன் மேல் இரத்தினத்தினால் இழைத்த தங்க பீடத்தை நிறுவினான். பீடத்தின் மேல் சொக்கநாதர் சிவப்பு ஆடையைக் கட்டிக் கொண்டு தலையில் மயில் தோகை அணிந்து அம்புக்கூட்டினை முகிலே கட்டி பச்சை நிற மேனியராய் தோன்றினார். சிறிது நேரத்தில் கொடிய யானையானது அவ்விடத்திற்கு வந்தது. தமது வில்லை எடுத்து நாணினைப் பூட்டி வளைத்தார். பின் வில்லில் நரசிங்கக் கணையை வைத்து நாணினை இழுத்து விட்டார். அக்கணையானது யானையின் மத்தகத்தைக் கிழித்தது. கொடிய யானை நரசிங்க கணையின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. யானை மடிந்ததைக் கண்ட சமணர்கள் மிகுந்த மனவருத்தம் கொண்டனர்.

இறைவனின் திருக்கையால் யானை மடிந்ததைக் கண்ட விக்கிரமபாண்டியன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். யானையின் பின்னால் வந்த சமணர்களையும் சோழனின் படைகளையும் பாண்டியனின் படைகள் அடித்து துரத்தினர். வேடுவ வடிவம் கொண்டு வந்த சொக்கநாதரின் திருவடிகளில் வீழ்ந்த விக்கிரமபாண்டியன் எங்களைக் காத்த இறைவரே தாங்கள் இத்திருக்கோலத்திலேயே இங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்று விண்ணபித்தான். இறைவனாரும் அவனுடைய வேண்டுகோளை ஏற்று அருளினார். மேலும் புத்திரப்பேறு கிடைக்கவும் அருளினார். சொக்கநாதரின் அருளால் விக்கிரமபாண்டியன் இராஜசேகரன் என்னும் புதல்வனைப் பெற்று பாண்டிய நாட்டில் நல்லாட்சி நடத்தினான். மதுரையை அழிக்க வந்த யானையானது சொக்கநாதரின் பாணம் பட்டு தரையில் வீழ்ந்த இடத்தில் மலையாக மாறியது. இதுவே யானை மலை ஆகும். இது பார்ப்பதற்கு யானை படுத்திருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். இது மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும். சொக்கநாநர் யானையின் மீது விடுத்த நரசிங்கக்கணையானது உக்கிர நரசிங்க மூர்த்தியாக மலையின் அடிவாரத்தில் தோன்றினார். இந்த நரசிங்கமூர்த்தியை உரோமச முனிவர் வழிபாடு நடத்தி தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். பிரகலாதனும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்து சித்தி பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

மதுரையில் இருக்கும் நரசிங்க மூர்த்தி கோயிலை உலக நன்மைக்காக கொடுத்ததும் யானை மலை உருவாகிய விதமும் வஞ்சகர்களின் சூழ்ச்சி இறுதியில் இறைவனின் கருணையால் வீழ்த்தப்படும் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

21. கல் யானைக்கு கரும்பு தந்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கல் யானைக்கு கரும்பு தந்த படலம் நூலின் இருபத்திவொன்றாதாவது படலமாகும்.

சிவபெருமானின் அருளைப் பெற்று இவ்வுலக ஆசையைத் துறந்தவர்கள் யாரிடம் ஏதேனும் பொருட்களை விரும்பி அவர்களை நாடி செல்ல மாட்டார்கள் ஆகவே அந்த சித்தர் என்னை நாடிவர எந்த ஒரு காரணமும் இருக்கவில்லை. ஆகையால் நானே அவரைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லி சொக்கநாதரை வழிபட வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றான். அரசனின் வருகையை அறிந்த சித்தர் அவர் செல்லும் வழியாகிய கோவிலின் வடமேற்கு திசையில் சென்று அமர்ந்திருந்தார். அபிடேகபாண்டியன் சொக்கநாதரை வழிபட்டு கோவிலை வலம் வந்த போது பாண்டியனின் மெய்காவலன் முன்னதாகச் சென்று சித்தரிடம் அரசர் வரும் நேரம் ஆகையால் நீங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள் என்று கூறினான். அவர் அசையாமல் அமர்ந்திருந்தார். அங்கு வந்த அபிடேகபாண்டியன் சித்தரிடம் சித்தரே தாங்கள் யார்? தங்களது ஊரும் நாடும் எது? நீங்கள் எதனை எதிர்பார்த்து இங்கு வந்து உங்களின் சித்து வேலைகளை மதுரை மக்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? என்னால் உங்களுக்கு ஆகவேண்டியது ஏதும் உள்ளதா? என்று கேட்டான்.

சித்தர் சிரித்துக் கொண்டே அப்பா எல்லா நாட்டிலும் எல்லா ஊரிலும் நாம் திரிவோம். நான் தற்போது காசியை சொந்த ஊராகக் கொண்டுள்ளேன். எதிலும் பற்று இல்லாமல் பிச்சை எடுத்து வாழும் அடியவர்களே என்னுடைய உறவினர்கள். நாம் எந்நாளும் வித்தைகள் செய்கின்ற சித்தராவோம். தில்லைவனம் உள்ளிட்ட சிவதலங்களை வணங்க வந்தோம். இம்மையில் வளமான வாழ்கையையும் மறுமையில் வீடுபேற்றினை அளிக்கும் மதுரையம்பதியில் தற்போது தங்கியுள்ளேன். உன்நாட்டு மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்களோ அதை தருவது போல் உனக்கும் நீ வேண்டியதைக் கொடுக்கிறேன். அறுபத்திநான்கு கலைகளிலும் நாம் நன்கு தேர்ச்சியுடையோம். விண்ணுலகத்தில் உள்ளவற்றை மண்ணுலகத்திற்கு கொண்டு வரும் ஆற்றலை உடையவன். பாண்டியனே உன்னிடத்தில் நாம் பெறத்தக்கது ஒன்றும் இல்லை என்று கூறி புன்னகைத்தார்.

சித்தரின் வார்த்தைகளைக் கேட்ட அபிடேகபாண்டியன் அதிர்ச்சி அடைந்து இவருடைய செருக்கு பெருமிதம் இறுமாப்பு உள்ளது போல் இருக்கிறது. ஆகவே இவரை கண்டிப்பாக சோதித்து அறிய வேண்டும் என்று எண்ணினான். அப்போது அங்கே ஒரு உழவன் செங்கரும்பினைக் கொண்டு வந்து அரசனை வணங்கினான். அபிடேகபாண்டியன் அக்கரும்பினைப் பெற்றுக் கொண்டு இந்த உலகத்தில் உங்களால் இயலாதது ஒன்றும் இல்லை என்று சொன்னீர்கள். இங்கு நிற்கும் இந்த கல்யானைக்கு இந்த கரும்பினைக் கொடுத்து அதனை சாப்பிடச் செய்தால் வல்லமை பெற்ற சித்தர் நீங்களே என்றும் இங்கு குடிகொண்டிருக்கும் சொக்கநாதரும் நீங்களே என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் நீங்கள் விரும்பிதை அளிப்பேன் என்று கூறினான்.

சித்தர் சிரித்துக் கொண்டே பாண்டியனே எமக்கு உன்னால் வரும் பயன் ஒன்றும் இல்லை. இருப்பினும் நீ கூறியபடி இந்த கல்யானை இப்பொழுதே இக்கருப்பினை கடித்து உண்பதைப் பார் என்று கூறி கல்யானையைப் பார்த்தார். சித்தரின் கண் அசைவினால் கல்யானை உயிர் பெற்று தன்னுடைய கண்களை உருட்டியது. வாயினைத் திறந்து கோவில் அதிரும்படி பிளிறியது. அபிடேகபாண்டியனின் கையிலிருந்த கரும்பினைப் பிடுங்கி கரும்புச்சாறு ஒழுகுமாறு கரும்பினை மென்று தின்றது. பின்னர் சித்தர் கல்யானையை மீண்டும் பார்த்தார். உடனே கல்யானை தன்னுடைய துதிக்கையால் பாண்டியன் அணிந்திருந்த முத்து மாலையை பிடுங்கியது. இதனைக் கண்ட மெய்காவலர்கள் யானை அடிக்க கம்பினை உயர்த்தினர். சித்தர் கோபம் கொண்டு மெய்க் காவலர்களைப் பார்த்தார். அதற்குள் கல்யானை முத்துமாலையை விழுங்கி விட்டது. இதனைக் கண்ட பாண்டியன் மிக்க கோபம் கொண்டான். உடனே மெய்க் காவலர்கள் சித்தரை அடிக்க நெருங்கினர். உடனே சித்தர் புன்னகையுடன் தன் கையை அங்கேயே நில்லுங்கள் என்பது போல் அவர்கள் முன் தன் கையை நீட்டினார். உடனே வீரர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அப்படியே அசைவின்றி நின்றனர். இதனைக் கண்ட பாண்டியனுக்கு கோபம் மாறி பயம் உண்டாகியது. சித்தரின் காலில் விழுந்து வணங்கி அடியேனின் பிழையைப் பொறுத்தருளுங்கள் என்று கூறினான். அதற்கு சித்தர் பாண்டியனே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்டான். அதற்கு அபிடேகபாண்டியன் புத்திரப் பேறு அருளுங்கள் என்று வேண்டினான். சித்தரும் அவ்வாறே ஆகட்டும் என்று அருள்புரிந்து கல்யானையின் மீது தன்னுடைய கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். உடனே யானை தனது துதிக்கையை நீட்டி பாண்டியனின் முத்துமாலையை திருப்பிக் கொடுத்தது.

பாண்டியனும் அதனை வாங்கி அணிந்து கொண்டான். அப்போது சித்தர் மறைந்து அருளினார். யானையும் மீண்டும் கல்யானையாகி அசைவற்று நின்றது. இறைவனின் திருவிளையாடலை எண்ணிய அபிடேகபாண்டியன் மீண்டும் சொக்கநாதரை வணங்கி அரண்மனை திரும்பினான். சித்தரின் திருவருளால் அபிடேகபாண்டியனுக்கு விக்ரமன் என்ற புதல்வன் பிறந்தான். விக்ரமன் வளர்ந்து பெரியவனானதும் அபிடேகபாண்டியன் விக்ரமனுக்கு அரசாட்சியை அளித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனை தவறாக எண்ணி சோதித்தாலும் இறைவன் இறுதியில் தன் பக்கதர்களைக் காப்பான் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

20. எல்லாம் வல்ல சித்தரான படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் எல்லாம் வல்ல சித்தரான படலம் நூலின் இருபதாவது படலமாகும்.

வருணன் ஏவிய மேகங்களைத் தடுத்து மதுரையை நான் மாடக்கூடலாக்கிய இறைவனார் அபிடேகப்பாண்டியனுக்கு வீடுபேற்றினை அளிக்க திருஉள்ளம் கொண்டார். இதனால் அவர் சித்தம் வடிவம் தாங்கி மதுரையில் தோன்றினார். அவர் ஜடாமுடி காதுகளில் வெள்ளிக் குண்டலங்கள் ஸ்படிகம் ருத்ராட்சமாலைகள் அணிந்த மார்புடன் உடலெங்கும் திருநீறு கையில் தங்கப்பிரம்பு மழு என்னும் ஆயுதம் புலித்தோலாகிய கோவணம் ஆகியவற்றை அணிந்து இருந்தார். முகத்தில் யாவரையும் மயக்கும் புன்முறுவலும் கொண்டு திருக்கோவிலில் வீற்றிருந்தார். அவர் அவ்வப்போது மதுரையின் கடைவீதிகளிலும் நாற்சந்தி கூடும் இடங்களிலும் வீதியிலும் மாளிகைகளின் வாயிலிலும் திண்ணைகளிலும் தோன்றி பல சித்து வேலைகளை செய்தருளினார். மதுரை மக்கள் அவரின் சித்து வேலைகளைக் காண்பதற்காக அவர் இருக்கும் இடத்தில் கூட்டமாகத் திரண்டனர். அவர் ஓரிடத்தில் சித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதே திடீரென அந்த இடத்தில் இருந்து மறைந்து விடுவார். மக்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கும் போதே வேறு ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது செய்து கொண்டிருப்பார். மக்கள் சித்தர் இருக்கும் இடத்திற்கு ஓடி சித்தரின் சித்து வேலைகளைக் காண முயல்வர். சித்தரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை முதியவராக்குவார். முதியவர்களை இளைஞர்களாக்குவார். ஆண்களைப் பெண்களாக மாற்றுவார். பெண்களை ஆண்களாக்குவார். பிறவியிலேயே பார்வையற்றவர் காது கேளாதோர் பேச முடியாதோர் ஆகியோர்களை பார்க்க கேட்க பேச வைத்து அதிசயம் செய்தார். ஊனமுற்றவர்களை குணமாக்கினார். ஏழைகளை பணக்காராக்கியும் பணக்காரர்களை ஏழையாக்கியும் காட்டினார். கடல் நீரை நன்னீராக்கியும் நன்னீரை உப்பு நீராக்கியும் அதிசயங்கள் செய்து காட்டினார். கசப்பு சுவையினை உடைய எட்டி மரத்தில் இனிப்புச் சுவையுடைய பழங்களை உண்டாக்கினார். திடீரென வைகையில் வெள்ளத்தைப் பெருக்கச் செய்தும் பின் அவ்வெள்ளத்தை வற்றச் செய்தும் காட்டினார். பட்டமரத்தில் இலையையும் பூவையும் உண்டாக்கி பசுமையாக்கினார். இவ்வாறாக சித்தர் பல சித்து வேலைகளைச் செய்து மக்களின் மனதினைக் கொள்ளை அடித்தார்.

சித்தரின் சித்து வேலைகளால் மதுரை மக்கள் தன்னிலை மறந்து தங்களின் வேலைகளையும் மறந்து கூட்டம் கூட்டமாக சித்தரிடமே இருந்தனர். சித்தரின் சித்து விளையாடல்களையும் மதுரை மக்கள் மனம் மயங்கிய நிலையினையும் கேட்ட அபிடேகப்பாண்டியன் தனது அமைச்சர்களை அழைத்தான். அமைச்சர்களிடம் மதுரை மாநகருக்கு வந்து சித்து வேலைகளைச் செய்யும் சித்தரைப் பற்றி கேள்விப்பட்டீர்களா? மதுரை மக்கள் எப்போதும் அவரைச் சுற்றியே நின்று கொண்டிருக்கிறார்களாமே? நீங்கள் விரைந்து சென்று அவரை அரண்மனைக்கு அழைத்து என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான். அமைச்சர்களும் சித்தர் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றனர். சித்தரின் சித்து விளையாட்டுகளில் மெய் மறந்து நின்றனர். சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பியவர்களாய் சித்தரை அணுகி தங்களின் திருவிளையாடல்களை கேட்டறிந்த எங்கள் மன்னர் தங்களை அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார் என்று கூறினர். அதற்கு சித்தர் உங்களின் மன்னவனால் எனக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்றுமில்லை. உங்கள் மன்னவனுக்கு என்னால் ஆகவேண்டியது ஏதாவது இருந்தால் அவரை வந்து என்னைக் பார்க்க சொல்லுங்கள் என்று கூறினார். சித்தரின் பதிலைக் கேட்ட அமைச்சர்கள் வருத்தத்துடன் அரண்மனைக்குத் திரும்பினர். அபிடேகப்பாண்டியனிடம் சித்தர் வரமறுத்து அவர் கூறிய காரணத்தையும் கூறினர். அபிடேகப்பாண்டியனும் முதல்வனாகிய சிவபெருமானின் திருவருளைப் பெற்ற சித்தர்கள் இந்திரன் திருமால் பிரம்மா முதலிய தேவர்களையே மதிக்க மாட்டர்கள். இந்த நாட்டை ஆளும் மன்னரையா மதிப்பர்கள் என்று கூறினான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் தன்னை அடைய தகுதி பெற்று தன்னை சரணடைந்த அடியவர்களுக்கு வீடுபேறினை அளிக்க எண்ணினால் தானே உடல் வடிவம் எடுத்து வருவதையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இறைவனை உணர்ந்தவர்களையும் இறைவனை சரணடைந்தவர்களையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

19. நான்மாடக்கூடல் ஆன படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நான்மாடக்கூடல் ஆன படலம் நூலின் பத்தொன்பதாவது படலமாகும்.

சொக்கநாதரை சோதிக்க எண்ணிய வருணன் மதுரையின் மீது கடலினை ஏவி அழிக்க நினைத்தான். மதுரை மக்களின் வேண்டுதலால் இறைவனார் தன் சடையில் சூடியிருந்த மேகங்களை விடுத்து வருணன் விட்ட கடலை வற்றச் செய்து மதுரையைக் காத்தார். இதனைக் கண்டதும் கடல்களின் அரசனான வருணன் இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்று உணராமல் அதிகம் கோபம் கொண்டான். வருணன் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு மேகங்களை அழைத்து நீங்கள் மதுரையின் மீது அதிகமான இடி மின்னலுடன் கூடிய மழையினை பொழிந்து மதுரையை அழியுங்கள் என்று கட்டளையிட்டான். தங்கள் அரசனின் கட்டளையை ஏற்ற ஏழு மேகங்களும் அதிகளவு கடல் நீரினை உறிஞ்சி கருமை நிறத்துடன் மதுரை நகரினை அடைந்தன. ஊழிக்காலத்தில் ஏற்படும் கரிய இருள் போல் மதுரை நகரினை அவை சூழ்ந்து கொண்டன. பெரும் காற்று இடி மின்னலுடன் மழையைப் பொழிவிக்கத் தொடங்கின. பெரும் மழையைக் கண்டதும் மதுரை மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். அபிடேகப்பாண்டியன் தம் மக்களுடன் சொக்கநாதரின் சந்நதிக்குச் சென்று தம்மையும் தம்மக்களையும் பெரும் மழையிலிருந்து காப்பாற்ற வேண்டினான். மதுரை மக்களின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சொக்கநாதர் தம்முடைய திருமுடியிலிருந்து நான்கு மேகங்களை விடுவித்து நீங்கள் மதுரை மாநகரின் நான்கு எல்லைகளிலும் சென்று மாடங்களாக மாறி ஒன்றுகூடி வருணன் விடுவித்த மேகங்கள் பெய்கின்ற பெரும் மழையிலிருந்து மதுரையை காப்பீர்களாக என்று கட்டளை விடுத்தார்.

இறைவனாரின் கட்டளையின்படி நான்கு மேகங்களும் மதுரையின் நான்கு எல்லைகளையும் சூழ்ந்து மலைபோல் உயர்ந்து ஒன்று கூடி உயர்ந்த கட்டிடங்கள் போல் நின்றன. கோபுரங்களும் குன்றுகளும் அம்மாடங்களைத் தாங்கி நிற்கும் தூண்களாகின. உயர்ந்த மாடங்களான மேகங்கள் வருணன் விடுத்த பெரும் மழையானது மதுரையில் விழாதவாறு கூரையாக நின்று மதுரை மக்களைக் காப்பாற்றின. நான்கு திக்கிலும் மேகங்கள் மலைபோல் உயர்ந்து ஒன்று கூடி மாடங்களாகி மதுரையை காத்தமையால் மதுரையானது நான் மாடக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. தான் ஏவிய மேகங்களின் மழையிலிருந்து மதுரை காப்பாற்றப்பட்டதைக் கண்ட வருணன் உடல் நடுங்கினான். தன் செயலால் வெட்கி தலை குனிந்தான். பின் பொற்றாமரைக் குளத்தின் அருகே வருணன் வந்தான். அவ்வாறு பொற்றாமரைக் குளத்தருகே வரும்போதே வருணனின் வயிற்று வலியானது நீங்கியது. வயிற்று வலி நீங்கியதும் வருணனின் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. பொற்றாமரைக் குளத்தில் இறங்கி நீராடினான். பின் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மையையும் முறைப்படி வழிபாடு நடத்தினான். வருணனின் வழிபாட்டில் மகிழ்ச்சி அடைந்த சொக்கநாதர் வருணனின் முன்தோன்றி வருணனே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். வருணன் சொக்கநாதரிடம் இறைவா யாராலும் நீக்க முடியாத வயிற்று வலியானது இந்த பொற்றாமரைக் குளத்தில் நீராடுவதற்கு முன்னே என்னை விட்டு நீங்கியது. நான் அறிவிலியாக உம்மை சோதிக்க நினைத்தது என்னுடைய தவறுதான். ஆனால் தாங்கள் என்னுடைய குற்றங்களிலிருந்து மதுரை மக்களையும் காத்து என்னிடம் இருந்த பெரிய பிணியாகிய வயிற்று வலியையும் ஆணவத்தையும் நீக்கி விட்டீர்கள். அடியேன் செய்த குற்றங்கள் இரண்டினையும் தாங்கள் பொருத்து அருள வேண்டும். என்று கூறி பலவாறு வழிபட்டு பலவரங்களைப் பெற்று மேற்கு திசையின் அதிபனான வருணன் தன் இருப்பிடத்தை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

மதுரை மாநகருக்கு நான் மாடக்கூடல் என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தையும் ஆணவத்தால் ஒருவன் செய்யும் செயலானது அவனுக்கு இழிவையே தரும் என்பதையும் வலிமையுடன் இருப்பவர்கள் ஆணவத்தினால் எளியோர்களுக்கு துன்பம் விளைவித்தால் இறைவன் வலியவனின் செயல்களைத் தடுத்து எளியோர்களைக் காப்பாற்றுவார் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் நூலின் பதினெட்டாவது படலமாகும்.

சொக்கநாதரின் கருணையினால் ஆட்சியில் அமர்ந்த அபிடேகப்பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அப்போது சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி அன்று மதுரையில் சொக்கநாதருக்கு இன்பத்தையும் வீடு பேற்றினையும் வழங்கும் வழிபாட்டினை முறைப்படி நடத்தத் தொடங்கினான். இதனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சொக்கநாதரை வழிபாடு நடத்த வரும் தேவர்களின் தலைவனான இந்திரன் அபிடேகப்பாண்டியனின் வழிபாடு முடியும்வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்திரன் பெரும் சோகத்தில் முகம் வாடி தன் இருப்பிடத்திற்குத் திரும்பினான். இந்திரனின் இருப்பிடத்திற்கு வந்த வருணன் இந்திரனின் வாடிய முகத்தைக் கண்டான். பின் அவன் இந்திரனிடம் தேவர்களின் தலைவனே உன்னுடைய முகம் வாடியிருப்பதற்கான காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு இந்திரன் மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதரை நான் ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி அன்று வழிபாடு நடந்துவேன். இந்த வருடம் அபிடேகப்பாண்டியனின் வழிபாட்டால் நான் வழிபாடு நடத்த சற்று காலம் தாழ்ந்தது. சாதாரண மனிதனால் என்னுடைய வழிபாடு காலம் தாழ்ந்து நிகழ்ந்தது. அதனாலேயே என்னுடைய மனம் துன்பம் அடைந்துள்ளது என்று கூறினான்.

சொக்கநாதருக்கு யார் முதலில் வழிபாடு நடத்தினால் என்ன? முதன் முதலாக வழிபாடு செய்வதற்கு அந்த சொக்கநாதர் என்ன அவ்வளவு சக்தி வாய்ந்தவரா? என்று கேள்வி கேட்டான். அதற்கு இந்திரன் என்னுடைய பழியையும் வெள்ளை யானையின் சாபத்தையும் இறைவனான சொக்கநாதர் நீக்கினார். மேலும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சொக்கநாதரை வழிபாடு நடத்தினால் ஆண்டு தோறும் வழிபட்ட பலன் கிடைக்கும். தங்களின் துன்பங்கள் நீங்கப் பெறுவர். இச்செய்தி உனக்கு தெரியாதா? என்ற கேட்டான். அதற்கு கடல்களின் அரசனான வருணன் தேவலோகத்தில் இருக்கும் மருத்துவர்களாலும் தீர்க்க முடியாத எனக்கு ஏற்பட்டிருக்கும் தீராத வயிற்று வலியை சொக்கநாதர் தீர்த்து வைப்பாரா? என்று கேட்டான். மக்களின் பிறவியாகிய பெருங்கடலை தீர்த்து வைக்கும் சொக்கநாதர் உன்னுடைய வயிற்று வலியை கட்டாயம் தீர்த்து வைப்பார். நீ இறைவனின் திருவிளையாடலை இப்பொழுதே சோதிப்பாயாக என்று கூறினான். வருணன் சென்று வெள்ளியம்பலத்துள் ஆடும் பெருமானின் திருவிளையாடலைக் கண்டு வயிற்று வலியை நீக்கிக் கொள்ளக் கருதி ஒலிக்கின்ற கடலை விரைந்து அழைத்தான். பின் நீ மதுரையை அழிப்பாயாக என்று வருணன் கட்டளை இட்டான். வருணனின் ஆணையை ஏற்ற கடலானது பொங்கி மேலே எழுந்து மதுரை அழிக்க வந்தது. கடல் பொங்கி வருதை அறிந்த மதுரை மக்கள் மற்றும் அபிடேகப்பாண்டியன் சொக்கநாதரை சரண் அடைந்தனர். சொக்கநாதரிடம் அபிடேகப்பாண்டியன் பொங்கி மதுரையை அழிக்க வரும் கடலிடமிருந்து எங்களை விரைந்து காப்பாற்றுங்கள் இறைவா என்று பிரார்த்தனை செய்து அழுதான்.

சொக்கநாதர் அபிடேகப்பாண்டியன் மற்றும் மதுரை மக்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய சடையில் சூடியிருந்த மேகங்களிடம் பொங்கி வரும் கடலினைக் குடித்து அதனை வற்றும்படி செய்யுங்கள் என்று கூறினார். இறைவனின் ஆணையின்படி நான்கு மேகங்களும் உயர்ந்து எழுந்து பொங்கிய கடலின் நீரினைக் குடித்தன. மதுரை நகரானது கடலின் துன்பத்திலிருந்து தப்பியது. அபிடேகப்பாண்டியனும் மதுரை மக்களும் தங்களைக் காத்த சொக்கநாதரை பலவாறுப் போற்றி வழிபாடுகள் நடத்தினர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

சித்திரை மாதம் வரும் பௌர்ணமியில் இறைவனை வழிபடுவதால் ஏற்படும் பயனையும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தால் பிறவியாகிய பெருங்கடலை கடக்கலாம் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

17. மாணிக்கம் விற்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாணிக்கம் விற்ற படலம் நூலின் பதினேழாவது படலமாகும்.

உக்கிரபாண்டியனின் மகனான வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக மதுரையை ஆண்டு வந்தான். அவனுக்கு பட்டத்து ராணியைத் தவிர மனைவியர் பலர் இருந்தனர். வீரபாண்டியனுக்கு பட்டத்து ராணியைத் தவிர ஏனைய மனைவியர் மூலம் குழந்தைகள் பலர் பிறந்தனர். பட்டத்து ராணிக்கு மட்டும் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. எனவே வீரபாண்டியனும் அவனுடைய பட்டத்து ராணியும் குழந்தைப்பேறு வேண்டி அஷ்டமி விரதம் சதுர்த்தி விரதம் சோமவார விரதம் முதலிய விரத முறைகளைப் பின்பற்றி வழிபாடு நடத்தினர். வழிபாட்டின் பலனாக சற்புத்திரன் ஒருவரைப் பெற்றனர். தன் பட்டத்துராணியின் மகனான செல்வப்பாண்டியனுக்கு முறைப்படி கல்வி கலைகள் ஆகியவற்றை வீரபாண்டியன் கற்பித்தான். ஒரு நாள் வீரபாண்டியன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது புலியால் கொல்லப்பட்டான். மன்னன் மறைந்த சேதியை அறிந்த மன்னனின் மற்ற மனைவியர் பிள்ளைகள் கருவூலத்தை அடைந்து நவமணிகள் பதித்த திருமுடியையும் செல்வத்தையும் திருடிச் சென்று விட்டனர். மன்னன் மறைந்த சேதியை அறிந்த அமைச்சர்கள் வீரபாண்டியனுக்கு உரிய முறையில் செல்வபாண்டியனை வைத்து ஈமச்சடங்குகளை முடித்தனர். பின்னர் செல்வபாண்டியனுக்கு முடிசூட எண்ணினர். கருவூலத்தை திறந்து திருமுடியை தேடினர். நவமணிகள் பதித்த திருமுடியும் பிற செல்வங்களும் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ந்தனர். வேறு மணிமுடி ஒன்று செய்யலாம் என்றாலோ உயர்ந்த பெரிய மணிகள் இல்லை. முடி இல்லையாயின் அரசும் இல்லை. அரசு இல்லையாயின் மக்கள் துன்பம் அடைவர். இப்போது நாம் என்ன செய்வது? என்று திகைத்தனர். பின்னர் அரசகுமாரனை அழைத்துக் கொண்டு இறைவனை வணங்க எண்ணிச் சொக்கலிங்கப் பெருமான் திருமுன்னர் சென்று கொண்டிருந்தனர்.

இறைவன் அப்போது அவர்கள் முன்னர் ஒரு நவரத்தின வணிகராக வேடம் பூண்டு தோன்றினார். அவர் அமைச்சர்களிடம் நீங்கள் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறீர்கள் ஏன் என்று கேட்டார் என்று கேட்டார். அமைச்சர்கள் நடந்த விவரங்களை அவரிடம் விளக்கிக் கூறினர். அதனைக் கேட்ட இறைவனார் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என்னிடம் நவரத்தினங்கள் பல உள்ளன. அவற்றைக் காட்டுகிறேன். பாருங்கள் அவை பலகோடி பொன் விலையுள்ளன. என்று கூறி கீழ்த்திசையினை நோக்கி அமர்ந்து ஒரு பெரிய கம்பளத்தை விரித்தார். அக்கம்பளத்தின் எட்டுத்திசைகளிலும் முறையே முத்து முதலிய எட்டு மணிகளை எடுத்து வைத்து இம்மணிகள் வலன் என்னும் அசுர அரசனின் உடற்கூறுகள் என்று கூறினார். உடனே அமைச்சர்கள் வலன் என்பவன் யார்? அவனுடைய உடலிலிருந்து எவ்வாறு நவமணிகள் தோன்றின? என்று கேட்டனர். இறைவனான வணிகர் அமைச்சர்களிடம் வலன் என்பவன் ஓர் அசுர அரசன். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினான். அவனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் என்னை நோக்கி தவம் இயற்றியதன் காரணம் என்ன? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அதற்கு வலன் நான் போரில் யாராலும் வெட்டப்பட்டு இறக்காத வரத்தை அருள வேண்டும். ஊழ்வினையின் காரணமாக எனக்கு இறப்பு நேர்ந்தால் எனது அங்கங்கள் விலை மதிக்க முடியாத பொருளாகி அனைவரும் விரும்பும் வண்ணம் ஆக வேண்டும் வேண்டினான். இறைவனாரும் வலனுக்கு அவன் வேண்டிய வரத்தினை அருளினார்.

இறைவனிடம் வரத்தினை பெற்ற மகிழ்ச்சியால் தேவேந்திரனோடு வலன் போரிட்டு இந்திரலோகத்தைக் கைப்பற்றினான். வலனின் வரத்தினை அறிந்த தேவேந்திரன் வலனை போரினால் வெல்ல இயலாது. ஆகையால் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும் என்று எண்ணி மனதிற்குள் ஒரு திட்டத்தினை வகுத்தான். அதன்படி தேவேந்திரன் வலனை அணுகி வெற்றியுடையவனே உன்னுடைய தோளின் வலிமையும் வெற்றிப் பெருக்கும் எல்லா திசைகளிலும் பரவி விட்டது. அந்த புகழ்ச்சியின் காரணமாக நான் ஒரு வரத்தினை உனக்கு அளிக்க விரும்புகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். அதற்கு வலன் சிவபெருமான் அருளிய வரங்கள் எனக்கு இருக்கும் போது அதற்கு மேலாக நான் பெறக் கூடிய வரங்கள் என்று ஒன்றும் இல்லை. என்னிடம் உனக்கு எதாவது வேண்டுமா கேள் நான் தருகிறேன் என்று எதிர் கேள்வி கேட்டான். வலனின் வார்த்தைக் கேட்டதும் தேவேந்திரன் மகிழ்ந்து மேருமலையை வில்லாக வளைத்துக் கொடிய அசுரர்களின் திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமானுடைய வெள்ளி மலையை அடைந்து அங்கு ஒரு வேள்வியினை நான் செய்வேன். நீ அப்போது தேவர்களுக்கு அவியூட்ட வேள்விப் பசுவாகி வரவேண்டும் என்று கூறினான். அதனைக் கேட்ட வலன் ததீசி முனிவன் தன்னுடைய முதுகுத் தண்டினை வஜ்ஜிரப்படைக்குக் கொடுத்து உடலால் புகழ் பெற்றார். நானோ பிறரை வெல்லும் வெற்றியாலும் பிறரால் அழியாத உடல் முழுவதும் நவமணிகள் ஆகுமாறும் ஆகிய இரண்டால் புகழ் பெறப் போகிறேன். ஆகையால் நீ வேண்டியபடி வேள்விப் பசுவாகி உங்களுக்கு அவியுணவு ஊட்ட வருவேன் என்று வாக்களித்தான்.

இந்திரனிடம் கொடுத்த வாக்கின்படி வலன் தன் மகனுக்கு பட்டத்தைச் சூடிவிட்டு தேவர்களுக்கு அவியுணவு ஊட்ட வேள்விப் பசுவாகி அமைதியாக தேவேந்திரன் வேள்வி செய்யும் இடத்திற்கு வந்து நின்றான். தேவர்கள் அமைதியின் உருவாகி வந்த பசுவாகிய வலன் மூச்சடக்கி வேள்வியில் அவியுணவானான். அவனது உடலில் இருந்து சென்ற ஒளி ஆகாயத்தில் சென்று மறைந்து சத்தியலோகம் சென்றது. அவனது உடலின் இரத்தம் மாணிக்கம் ஆனது. பற்கள் முத்து தலைமயிர் வைடுரியம் எலும்பு வைரம் பித்தம் மரகதம் நிணம் கோமேதகம் தசை பவளம் கண்கள் நீலம் கோழை புருடராகம் என நவமணிகள் தோன்றின என்று வணிகராக வந்த இறைவன் கூறினார். வியாபாரியாக வந்த இறைவனிடம் இந்த நவமணிகளைப் பற்றி மேலும் விரிவாக கூறுங்கள் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். அதற்கு இறைவன் சூரியனுக்கு மாணிக்கம் சந்திரனுக்கு முத்து செவ்வாய்க்குப் பவளம் புதனுக்கு மரகதம் வியாழனுக்கு புஷ்பராகம் சுக்கிரனுக்கு வைரம் சனிக்கு நீலம் ராகுவுக்கு கோமேதகம் கேதுவுக்கு வைடூரியம் கோவிலில் நவக்கிரகங்கள் குடி கொண்டிருப்பது போல் வைத்து பூஜை செய்து பார்க்க வேண்டும். மேலும் மணிகளைப் பற்றி சொல்கிறேன் கேளுங்கள் என்று நவ மணிகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

  1. வைரம் எதையும் அறுக்கக் கூடியது. ஆனால் வைரத்தை யாரும் பிளக்க முடியாது. மாசில்லாத வைரத்தை அணிபவர்களுக்கு ஆரோக்கியம் வெற்றி மங்களம் இவை கிட்டும். ததீசி முனிவர் மற்றுப் வலாசுரன் இவர்களுடைய எலும்புகள் விழுந்த இடமெல்லாம் வைரம் விளைகின்றது. வாகைப்பூ வாழை மூங்கில் இலை போன்று இருப்பது விஷ்ணுவின் வைரம். தூய வெண்மையாய் ஆறுபட்டையோடு கூடியது இந்திரவைரம். நில நீரோட்டம் வண்டுநிற வைரங்கள் யமவைரம் கனமில்லாமல் இருப்பது வாயு வைரம். கர்ணிக்காரப்பூப் போன்றது வருணவைரம். தண்ணீர் இருப்பது போன்ற தோற்றமுள்ளது சந்திரவைரம். வண்ணத்துப்பூச்சி போல் பலநிறம் காட்டுவது சூரிய வைரம். அனல் நிறமுடையது அக்கினி வைரம். திருமாங்கல்யத்தில் வைரம் பதிக்கக்கூடாது.  பலநிறம் காட்டும் வைரம் அரசரருக்குரியது. 
  2. முத்துக்களது நீரில் உண்டானவை தரையில் உண்டானவை என இருவகைப்படும். மாடப்புறாவின் முட்டை போல் வெளுத்த சங்கிலிருந்து உண்டான முத்து மேன்மை பெற்றது. மீன் தலையில் இருந்து உண்டான முத்து பாடலிப்பூ போல இருக்கும். மேகமுத்து இளம் சூரிய ஒளி போலிருக்கும். பன்றிப்பல் முத்து லேசான சிவப்பாயிருக்கும். நெல்முத்து நாமக் கரும்பு முத்து யானை முத்து மூன்றும் லேசான மஞ்சள் நிறமாயிருக்கும். சிப்பி முத்து நிலாவைப் போன்ற நிறம். பாம்பு முத்து நீல ஒளிவீசும். விஷ்ணு முத்து நீலநிறம். இந்திர முத்து மஞ்சள் நிறம். யமமுத்து மேகநிறம். வாயு முத்து இரத்த சிவப்பு நிறம். வருணமுத்து வெண்மை நிறம். அக்கினி முத்து செந்நிறம். உருண்டையான கனமும் வழுவழுப்பும் ஒளியும் கூடிய முத்தை அணிவதால் கெடுதல்கள் நீங்கும் செல்வமும் ஆயுளும் பெருகும். 
  3. மாணிக்கத்தில் சாதரங்கம் குருவிந்தம் சௌகந்திகம் கவாங்கம் அல்லது நீலகந்தி என நான்கு வகையுண்டு. சாதரங்கம் செந்தாமரை செங்கழனிப்பூ மின்மினிப் பூச்சி நெருப்பு தீபச்சுடர் குயில்கண்கள் மாதுளை முத்து கதிரவன் மாதுளம்பூ பட்டுப்பூச்சி என்ற பத்து சாயல்களைக் கொண்டிருக்கும். குருவிந்தம் செம்பருத்திப்பூ, கிம்சு மலர் உலோத்திர புஷ்பம் பந்தூகப்பூ குன்றிமணி சிந்தூரம் முயல் ரத்தம் என்ற எட்டு சாயைகள் உடையவை. செம்பஞ்சுக் குழம்பு குயில்கண் இலவுப்பூ ஐந்திலைப்பூ பழுக்கக்காய்ச்சிய உலோகம் இவை சௌகந்திகத்தின் சாயல்களைக் கொண்டிருக்கும். குசும்பப்பூ கோவைப்பழம் மருதோன்றிப்பூ மனோரஞ்சிதம் போன்றிருப்பது நீலகந்தி. புண்ணியம் செய்தவர்களுக்கே குற்றமற்ற மாணிக்கத்தை அணியும் பாக்கியம் கிடைக்கும்.  
  4. பச்சைக்கற்கள் அறுகம்புல் நிறமுடையது. இவற்றில் ஐந்து வகை உள்ளது. காடம் பேசலம் தினை இலையின் நுனி போலிருக்கும். பித்தகம் கிளி இறகு போலிருக்கும். முத்தம் துளசிப்பச்சை போலிருக்கும். பிருதுகம் தாமரை இலைப் பச்சை போலிருக்கும். உல்லசிதம் பச்சைப் பயிர் போலிருக்கும். 
  5. மரகதம் எலுமிச்சை இலைப் பச்சையாய் இருப்பது தோஷலே சாந்து. அரளி இலைப் பச்சை துஷ்டம். செந்தாமரை இலைநிறம் தோஷமூர்ச்சிதம். பனிதோய்ந்த தாமரை இலைநிறம் தோஷலேசம். மந்ததோஷம் மயில்தோகை நிறத்தில் இருக்கும்.
  6. மகாநீலம் இதைப் பாலில் போட்டால் முன்னிலும் அதிகமாகப் பிரகாசிக்கும். வானவில்லைப் போல் பல நிறம் காட்டுவது இந்திர நீலம். 
  7. கோமேதகம் தேன் சொட்டு கோமயம் உறைந்த நெய் இவை போன்று தெளிவாகும்.  
  8. புஷ்பராகம் இதற்கு பதுமராகம் என்று ஒரு பெயரும் உண்டு. மேற்பாகம் உருண்டு மனதை ஈர்க்கக்கூடிய புஷ்பராகம் உயர்ந்தது. இந்திரனும் புஷ்பராக நகைகள் நிறைய அணிவான். 
  9. வைடூரியம் மூங்கில் இலை பூனைக்கண் மயில் கழுத்து நிறத்தில் இருக்கும். வழுவழுப்பான பிரகாசிக்கும் மூளியில்லாத வைடூரியங்கள் சிறந்தது.
  10. பவளமானது கோவைப்பழம் செம்பருத்தி கிளிமூக்கு நிறங்களில் இருக்கும்.
  11. சூரிய காந்தக் கல்லானது சூரியனது கதிர்கள் பட்டதும் நெருப்பைப் போல் ஜ்வலிக்கும்.
  12. சந்திர காந்தக் கல்லானது சந்திரனது ஒளிப்பட்டதும் பலமடங்கு ஒளிவீசும்.

கலியுகத்தில் சூரிய காந்தக் கல் மற்றும் சந்திர காந்தக் கல் இவ்விரண்டு கற்களும் கிடைப்பது மிகவும் அரிது என்று சொல்லி முடித்த இறைவன் வடக்கு திசையினை நோக்கி இருந்த மணிகளைக் கையில் எடுத்து இந்த அரசிளம் குமரனுக்கு நிறைந்த செல்வமும் நீண்ட வாழ்நாளும் அமையட்டும். இந்த மணிகளைக் கொண்டு மணிமகுடம் செய்து சூட்டி இக்குமாரனுக்கு அபிஷேகப்பாண்டியன் என்று பெயரிட்டு அழையுங்கள் என்று வாழ்த்தி நவமணிகளை வழங்கினார். அரசிளம்குமாரனும் சொக்கலிங்கப் பெருமானை வணங்கி அம்மணிகளைக் கையில் பெற்றுக் கொண்டான். இறைவனாரும் நவமணிகளை அளித்தவுடன் அவ்விடத்தைவிட்டு மறைந்தார். இங்கு வணிகராக வந்தது சொக்கநாதரே என்று அமைச்சர்கள் உணர்ந்தனர். அரசகுமாரன் சொக்கநாதரை வழிபட்டு அரண்மனையை அடைந்தான். இறைவனார் அளித்த நவமணிகளை கொண்டு மணிமகுடம் செய்து நல்ல நாளில் அரசிளம்குமரனுக்கு முடிசூட்டி அபிஷேகப்பாண்டியன் எனப் பெயரிட்டனர். முன்னர் பொருட்களைக் கவர்ந்து சென்ற வீரபாண்டியனின் மற்றைய பிள்ளைகள் பிடிபட்டனர். அபிஷேகப்பாண்டியன் அவர்களை மன்னித்து அவர்கள் வாழ்வதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான். பின் அபிஷேகப்பாண்டியன் நல்வழியில் நீதிதவறாது மதுரையை ஆட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

நவரத்தினங்களின் வகைகள் அவை உருவான விதம் அவற்றின் நிறங்கள் பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ளும்படியும் இறைவனிடம் வரம் பெற்றவர்களாக இருந்தாலும் வலனின் அகங்காரம் போல் இருந்தால் அது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

16. வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலம் நூலின் பதினாறாவது படலமாகும்.

ஒரு சமயம் ஊழிக் காலம் உண்டானது. அதனால் பதினான்கு உலகங்களும் அடங்கின. மறைகள் ஒடுங்கின. பின்னர் சிவந்த கதிர்களை உடைய சூரியனின் முன்னால் மலரும் தாமரை மலர் போல சிவபெருமானின் முன் மீண்டும் அனைத்தும் தோன்றின. அப்போது இறைவனின் திருவாக்கில் இருந்து ஓம் என்னும் பிரணவம் தோன்றியது. அப்பிரணவத்திலிருந்து வேதங்கள் தோன்றின. நைமிசாரணியத்தில் இருந்த கண்ணுவர் கருக்கர் உள்ளிட்ட முனிவர்கள் வேதங்களை பயின்றனர். ஆனாலும் அவ்வேதங்களின் உட்பொருளை உணராது மனம் கலங்கி முகம் வாடி இருந்தனர். அப்போது அங்கே ஆணவ மலத்தை வென்ற அரபத்தர் என்ற முனிவர் வந்தார். முகம் வாடியிருந்த முனிவர்களை நோக்கிய அரபத்தர் நீங்கள் பாசம் நீக்கப்பட்டு விருப்பு வெறுப்பற்ற தன்மையை உடையவராய் இருந்தும் மனம் வேறுபட்டு முகம் வாடியிருக்க காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஐயனே மும்மலங்களையும் இயல்பாகவே நீக்கக் கூடிய இறைவன் அருளிய வேதத்தின் பொருளை அறிய இயலாமல் அஞ்ஞான மனத்தினை உடையவர்களாய் இருக்கின்றோம். ஆகையால் நாங்கள் தெளிவடைய ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அரபத்தர் வேதத்தினை அருளிய சிவபெருமானால் மட்டுமே அதற்குரிய விளக்கத்தினைத் தெரிவிக்க இயலும். ஆகையால் நீங்கள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வேதத்தின் பொருளினை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் தவம் இயற்றுவதற்கு சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரை சிறந்த இடம் என்று முனிவர்களுக்கு வழிகாட்டினார்.

அரபத்தரின் வழிகாட்டுதலின்படி கண்ணுவர் உள்ளிட்டோர் வேதத்தின் பொருளினை அறியும் பொருட்டு மதுரை சென்று அடைந்தனர். பொற்றாமரைக் குளத்தில் நீராடி முறைப்படி சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டார்கள். பின்னர் கல்லா மரத்தின் (கல் ஆகி விட்ட ஆலமரம்) கீழ் குருவாகிய தென்முகக் கடவுளை வணங்கி தங்களுக்கு குருவாகி வேதத்தின் பொருளினை எடுத்துரைக்குமாறு வேண்டினர். இவ்வாறு அவர்கள் ஒரு வருடக் காலம் முறைப்படி வழிபட்டனர். ஒருநாள் இறைவன் பதினாறு வயது நிரம்பிய சர்வ லட்சணங்கள் பொருந்திய வேதிய இளைஞனாக முனிவர்களின் முன்னர் தோன்றினார்.

முனிவர்களிடம் குற்றமற்ற தவத்தினை உடையவர்களே உங்கள் விருப்பம் என்ன? என்று இறைவனார் கேட்டார். அதற்கு அம்முனிவர்கள் ஒப்பற்ற சிறப்பினை உடைய வேதங்களின் பொருளினை அருள வேண்டும் என்று விண்ணபித்துக் கேட்டுக் கொண்டனர். அதற்கு இறைவனார் பதில் சொல்ல ஆரம்பித்தார். லிங்கத்தின் முன் சென்று வேதங்களின் பொருளினை அறிதலே இம்மையின் போக பேற்றிற்கும் பாச பந்தத்தை அறுக்கும் வீடுபேற்றிற்கும் கருவி ஆகும். இச்சிவலிங்கமும் வேதமும் ஒன்றே. இந்த சிவலிங்கபூஜை செய்வதால் வேதங்களில் கூறப்பட்ட கருமங்கள் எல்லாம் செய்த பலன் கிடைக்கும். வேதாந்த அறிவால் பெறப்படும் பயனை இந்த சொக்கலிங்கத்தை வணங்கி வழிபடுதலால் அடையலாம். ஆதியாகி அந்தமாகி என்றும் குன்றாத ஒளிவடிவாய் இருப்பவர் இச்சொக்கலிங்கம். ஜோதிர்மயமான இந்த லிங்கத்திற்கு முதலும் முடிவும் கிடையாது. அதற்கு பிரம்மம் என்று பெயர்.  படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலுக்காக பிரம்மம் மூன்றாகப் பிரிந்து பிரம்மன் விஷ்ணு ருத்திரன் எனப் பெயர் பெற்றது.

இறைவனின் திருவாக்கிலிருந்து உருவாகிய ஓம் என்னும் பிரணவத்திலிருந்து விரும்பிய பொருளை அடைவதற்குரிய காயத்ரி தோன்றியது. இந்த காயத்ரியானது சொக்கலிங்கரின் திருவருளால் நான்கு வேதங்களைத் தந்தன. பின்னர் இறையருளால் நான்கு வேதங்களும் அளவற்றனவாய் விரிந்தன. சொக்கநாதரின் நடுமுகத்தில் இருந்து சிவாகம நூல் தோன்றியது. தற்புருட முகத்திலிருந்து இருபத்தொரு சாகைகளோடு இருக்கு வேதம் தோன்றியது. அகோர முகத்திலிருந்து நூறு சாகைகளோடு யசுர் வேதம் தோன்றியது. வாமதேவ முகத்தில் ஆயிரம் சாகைகளோடு சாமவேதம் தோன்றியது. சத்தியோசாத முகத்தில் நாட்டப்பட்ட ஒன்பது சாகைகளோடு அதர்வண வேதம் தோன்றியது.

வேதங்களைக் கருமகாண்டம் ஞானகாண்டம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஞானகாண்டமானது உண்மை அறிவு பகவானின் அருள் வடிவத்தை விவரிக்கின்றன.  கருமகாண்டமானது பூஜை வகைகள் ஆசிரம விதிகளை விவரிக்கின்றன. அக்கினி ஹோத்திரம் முதல் அசுவமேதம் வரை எல்லா யாகங்கள் நித்திய நைமித்திக காமிய கர்மாக்கள் எல்லாம் ஈசுவரனையே சேரும். நீங்கள் கருமகாண்டத்தில் கூறியபடி இச்சிவலிங்கத்தை வழிபட்டு ஞானகாண்டத்தின் வழிகாட்டுதலின்படி இறைவனின் உண்மை வடித்தை உணர்ந்து தெளியுங்கள். வைதிகத்துள் சுத்த சன்மார்க்கமாகிய வைதிகம் சைவம். அதனை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். யாம் கூறிய இப்பொருள்கள் அனைத்தும் உங்களின் மயக்கத்தினை தீர்ப்பதாக அமையும் என்று கூறி முனிவர்களின் இதயத்தை தமது திருக்கரத்தால் தடவிக் கொடுத்து சிவலிங்கத்துள் சென்று மறைந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

ஊழிக்காலத்திற்கு பிறகு உலகம் தோன்றிய விதத்தையும் காயத்திரி மந்திரம் தோன்றிய விதத்தையும் வேதங்கள் தோன்றிய விதத்தையும் வேதமும் சிவலிங்கமும் ஒன்றே என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவும் மேலும் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ள முடியாமல் இருந்த முனிவர்கள் பிரார்த்தனை செய்ததும் அவர்களின் கவலைப் போக்கியது போல் பிரார்த்தனை செய்தால் வேண்டியதை இறைவன் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

15. மேருவை செண்டால் அடித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மேருவை செண்டால் அடித்த படலம் நூலின் பதினைந்தாவது படலமாகும்.

உக்கிரபாண்டியன் அகத்தியர் கூறிய முறைப்படி சோமவார விரதமுறையைப் பின்பற்றி மதுரையை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். சோமவார விரதத்தின் பயனாக உக்கிரபாண்டியனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு வீரபாண்டியன் என்று பெயரிட்டனர். சோமவார விரதத்தின் பயனாக வீரபாண்டியன் இயற்கையிலேயே அழகும் அறிவும் நிரம்பியவனாக இருந்தான். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அவன் விளங்கினான். அப்போது ஒரு சமயம் மதுரையில் மழை வளம் குன்றி பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அரசுக்கு வரி செலுத்த முடியாமல் திணறினர். தம்மக்களின் குறைகளைப் போக்க எண்ணிய உக்கிரபாண்டியன் நேரே திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரையும் மீனாட்சி அம்மையும் வணங்கி மக்களின் துயர் போக்க வழியினை வேண்டி வழிபாடு நடத்தினான். அன்றைய இரவில் உக்கிரபாண்டியனின் கனவில் சொக்கநாதர் சித்தர் வடிவில் தோன்றி இமயத்தை தாண்டி இருக்கும் மேருமலையின் அரசன் ஏராளமான பொன் மற்றும் பொருள்களை தன்னகத்தே கொண்டுள்ளான். தற்போது செல்வச் செழிப்பினால் மேரு மலையானது செருக்கு கொண்டுள்ளது. நீ அந்த மலையை சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டினால் அடித்து அதன் செருக்கை அழித்து அதனிடமிருந்து பொருளைப் பெற்று உன் நாட்டு மக்களின் துயரத்தைப் போக்கு. உனக்கு தேவையான பொருளினைப் பெற்றவுடன் அதன் மீது பாண்டிய நாட்டின் சின்னத்தைப் பொறித்துவிடு. அதே நேரத்தில் மேருமலையை அடைவதற்கு நீ நீண்ட கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிஅருளினார்.

இறைவனின் திருவாக்கினைக் கேட்ட உக்கிரபாண்டியன் அதிகாலையில் விரைந்து எழுந்து நித்திய கடன்களை முடித்து பெரும் படையைத் திரட்டி மேருமலையை நோக்கி பயணம் ஆவதற்கு தயார் ஆனான். காலையில் சொக்கநாதரையும் மீனாட்சி அன்னையையும் வழிபட்டு தன்னுடைய படைகளுடன்  மேருமலையை நோக்கிய பயணத்தைத் தொடங்கினான். அவன் காசியை அடைந்து விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வணங்கி தனது பயணத்தைத் தொடர்ந்தான். பின் இமயத்தைக் கடந்து பொன்போல் ஒளி வீசும் மேருமலையை அடைந்தான். உக்கிரபாண்டியன் மேருமலையை நோக்கி மலைகளுக்கு எல்லாம் அரசனே எம் தந்தையாகிய சிவபெருமானின் கையில் உள்ள வில்லே நிலவுலகின் ஆதாரமே வானத்தில் உள்ள தேவர்கள் எல்லோரும் வசிக்கும் கோவிலே நீ விரைந்து வருவாயாக என்று கூவி அழைத்தான். உக்கிரபாண்டியன் அழைத்தும் வராததால் கோபம் கொண்டு சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டு எனப்படும் பொன் பந்தினால் மேருவின் சிகரத்தில் ஓங்கி அடித்தான். செண்டினால் அடிபட்ட மேருமலை வலியால் துடித்தது. அம்மலையை சுற்றியுள்ள அனைத்தும் நடு நடுங்கின. பின் மேருமலையானது நான்கு தலைகளும் எட்டு தோள்களும் வெண்ணிற குடையையும் தாங்கியவாறு உக்கிரபாண்டியனின் முன்னால் வந்து நின்றது.

உக்கிரபாண்டியனும் கோபம் தணிந்து நீ காலம் தாழ்த்தி வந்ததற்கு காரணம் யாது? என்று கேட்டான். அதற்கு அம்மலை எனக்கு அசையும் உருவம் அசையா உருவம்  இரண்டும் உண்டு.  அசையும் வடிவத்தில் நான் தினந் தோறும் சென்று சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சி அம்மனையும் ஆகாய மார்க்கமாக சென்று வழிபட்டு வந்தேன். ஆனால் ஒரு பெண்ணின்பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக நான் பறக்கும் சக்தியை இழந்ததோடு அறிவு மயக்கத்தில் சோமசுந்தரரையும் வழிபட மறந்திருந்தேன். செல்வம் என்னிடம் அத்திகமாக இருக்கிறது என்ற ஆணவத்தில் காலம் தாழ்த்தி வந்தேன். அதன் காரணமாக தங்களிடம் இறைவன் கொடுத்த பந்தினால் அடியும் பட்டேன். என்னை மன்னித்தருளுங்கள். தாங்கள் இங்கே வந்த காரணம் யாது? என்று கேட்டது. உடனே பாண்டியனும் நான் என் மக்களின் துயரினைப் போக்க பொருளினை விரும்பி இவ்விடத்திற்கு வந்தேன் என்றான். அதற்கு மேருமலை உக்கிரபாண்டியரே என் உடலாகவே உள்ள இந்த மலையில் மாசுள்ள இடம் மாசற்ற இடம் என இரண்டு பகுதி உள்ளது. மாசற்ற இடத்தில் சூரிய ஒளிபோல் மிகத் தூயதான ஒரு பாகம் உண்டு. நீங்கள் விரும்பிய பொன்னானது அந்த தூய்மையான பாகத்தில் பாறையால் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறி பொருள்கள் இருக்கும் அறையை தன் கையினால் சுட்டிக் காட்டியது மேருமலை. உக்கிரபாண்டியன் அப்பொன்னறையின் அருகே சென்றான். மூடிய பாறையை நீக்கி வேண்டிய அளவு பொன்னை எடுத்துக் கொண்டு ஏற்கனவே இருந்தபடி மூடி வைத்தான். பின்னர் தான் எடுத்துக் கொண்ட பொருளின் மீது பாண்டிய நாட்டின் சின்னத்தைப் பொறித்து தன் படைகளோடு புறப்பட்டு மதுரையை அடைந்தான்.

மதுரையை அடைந்த உக்கிரபாண்டியன் சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சியையும் வணங்கினான். பின் அரண்மனையை அடைந்து தான்கொண்டு வந்த பொன் பொருட்களைக் கொண்டு தன்னுடைய குடிமக்களின் பசித் துன்பத்தை நீக்கினான். சிவபெருமானின் திருவருளால் மீண்டும் பாண்டிய நாட்டில் மழை பெய்து வளங்கள் பெருகின. நீதிதவறாமல் அரசாண்ட உக்கிரபாண்டியன் தன்மகனான வீரபாண்டியனுக்கு அரசுரிமையை அளித்தான். பின் சொக்கநாதரின் திருவடியில் இரண்டறக் கலந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

செல்வ செருக்கும் முறையற்ற பெண்ணாசையும் ஒருவனை தன்னுடைய நிலையில் இருந்து கீழ் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.