4. தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் நூலின் நான்காவது படலமாகும்.

பாண்டிய நாட்டை மலயத்துவசன் அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவன் சூரசேனன் என்னும் சோழ அரசரின் மகளான காஞ்சன மாலையை திருணம் செய்தான். ஆனால் இத்தம்பதியருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதனால் மலயத்துவசன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் முடிந்த நிலையில் இந்திரன் இப்பாண்டியன் நூறு யாகங்களை முடிப்பானாகில் நொடிப்பொழுதில் இந்திரப்பதவி அவனுக்கு போய்விடும் என்று எண்ணி மலயத்துவசன் முன் தோன்றினான். பாண்டியனே நீ நற்புத்திரப்பேற்றினை விரும்பினாய். ஆதலால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திரபேற்றினை வழங்கக்கூடிய புத்திர காமேஷ்டி செய் என்று கூறி தன்னுலகத்தை அடைந்தான்.

பாண்டியனும் இந்திரனின் வழிகாட்டுதலின்படி புத்திர காமேஷ்டி யாகத்தை தொடங்கினான். யாகத்தின் பலனாக தலையின் இடதுபுறத்தில் கொண்டையுடன் கையில் கிளி வைத்துக் கொண்டு காலில் சதைங்கை அணிந்து முகம் நிறைய புன்னகையைச் சிந்தியவாறே மூன்று வயதினை ஒத்த சிறுமியாக உலக நாயகியான உமையம்மை மூன்று தனங்களுடன் தோன்றினார். அக்குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்தன. ஆகையால் அங்கயற்கண்ணி என்ற பெயரில் அழைக்கப்பட்டாள். அவள் தன் சின்னஞ்சிறு கால்களால் நடை நடந்து காஞ்சன மாலையின் மடியில் போய் அமர்ந்தாள். தன்னுடைய சின்னச்சிறிய செவ்விதழ்களால் காஞ்சனமாலையை அம்மா என்று மழலை மொழியில் அழைத்தாள். அதனைக் கண்டதும் காஞ்சன மாலை குழந்தை வடிவில் இருந்த உலக அன்னையை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள்.

குழந்தையைக் கண்ட மலயத்துவசன் மனதில் மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் கவலை ஒன்று அவனை வாட்டியது. புத்திர பேற்றினை விரும்பி புத்திர காமேஷ்டி செய்த தனக்கு தான் விரும்பியபடி ஆண் குழந்தை தோன்றாமல் மூன்று தனங்களுடன் கூடிய பெண் குழந்தை தோன்றியதுதான் அவனுடைய கவலை ஆகும். மலயத்துவசன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுளை வழிபட்டான். தன்னுடைய மனக்குறையை இறைவனிடம் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வரசனுக்கு மட்டும் கேட்குமாறு திருவாக்கு ஒன்றினைக் கூறினார். பாண்டியனே கலங்காதே. உன்னுடைய அன்பு புதல்விக்கு தடாதகை எனப் பெயரிட்டு எல்லா கலைகளையும் கற்பித்து அவளுக்கு ராணியாக முடிசூட்டு. அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும் போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து விடும். எனவே மனம் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று சொக்கநாதர் கூறினார். இறைவனின் திருவாக்கினை கேட்ட மலயத்துவசன் கவலை நீங்கி மனத்தெளிவு பெற்றான்.

மீனாட்சி அம்மையின் திருவதாரம் நிகழ்ந்து விட்டது என்று அகத்தியர் மற்ற முனிவர்களுக்கு கூறினார். அம்முனிவர்கள் அகத்தியரிடம் மலையரசனும் பல நாட்கள் வருந்தி தவம் இயற்றியே உலக அன்னையை தம் மகளாக பெற்றிருக்கிறான். தற்போது அன்னை பாண்டியனின் திருமகளாக இப்பூமியில் இறைவனை விட்டுவிட்டு தனியே தோன்றக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அகத்தியர் விச்சுவாவசு என்ற கந்தவர்வனின் மகளான விச்சாவதி உமையம்மையின் மீது மிக்க அன்பு கொண்டு இருந்தாள். ஒரு நாள் தனது தந்தையிடம் உமையம்மையின் அருளைப் பெற வழிபட வேண்டிய தலம் என்ன? என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசுவும் துவாத சந்தம் எனப்படும் மதுரை சிறந்த இடம் என்று கூறினார். விச்சாவதியும் மதுரையை அடைந்து பல விரத முறைகளை மேற்கொண்டு தை மாதத்தில் அங்கையற்கண்ணி இறைவியின் சந்நதியை அடைந்து யாழினை இசைத்து அம்மன் பற்றிய இனிய பாடல்களை பாடினாள். அப்போது அங்கையற்கண்ணி அம்மை மூன்று வயது குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். விச்சாவதியிடம் அங்கையற்கண்ணி உன் விருப்பம் என்ன? என்று கேட்டாள். விச்சாவதியும் தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும். என்று கேட்டாள். அங்கையற்கண்ணி மேலும் இன்னும் வேறு என்ன வேண்டும் என்று கேட்டாள். அதற்கு விச்சாவதி அம்மையே தற்போது காட்சி தருகின்ற திருவுருவத்திலேயே என்னிடம் தோன்ற திருவருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாறள். அதனை கேட்ட அங்கையற்கண்ணி பாண்டியனின் மரபிலேயே மலயத்துவசன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்தியேயே உனது தவப்புதல்வியாய் உன்னிடம் வருவோம் என்று அருளினார். விச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை மதுரையில் தடாதகையாகத் தோன்றினாள். என்று அகத்தியர் சொல்லி முடித்தார்.

இறைவனின் திருவாக்குப்படி தாடாகை என்ற பெயரை குழந்தைக்கு சுட்டி மனைவியுடன் அரண்மனை திரும்பிய மலயத்துவசன் தனக்கு குழந்தை பிறந்ததை உலகெங்கும் அறிவிக்கச் செய்தான். தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கினை மன்னன் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் சுமதியிடம் மட்டும் சொன்னான்.தடாதகை என்ற சொல்லுக்கு மாறுபட்டவள் என்பது பொருள் ஆகும். தடாதகையும் போர் கலைகள் உள்ளிட்ட எல்லா கலைகளையும் கற்று குமரிப்பருவத்தை எய்தினாள். தடாதகை பிராட்டியார் குமரிப் பருவத்தை அடைந்ததும் மலயத்துவசன் தன் அமைச்சரான சுமதி என்பவரிடம் கலந்தாலோசித்து நல்லதொரு நாளில் தடாதகை பிராட்டியாருக்கு பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டினான். சில நாட்களில் மலயத்துவசன் விண்ணுலகத்தை அடைந்தான்.

தடாதகையும் தான் கற்ற கல்வியின்படி நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார். மீனானது பார்வையாலே தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டி பாதுகாப்பது போல தடாதகையும் தம் குடிமக்களைப் பாதுகாத்து அரசாண்டார். மீன் போன்ற கண்களைக் கொண்டு அரசியாக அரசாண்டதால் மீனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். அம்+ அயல்+கண்ணி = அங்கயற்கண்ணி. அம் என்றால் அழகிய கயல் என்றால் மீன் கண்ணி என்றால் கண்களை உடையவள். அழகிய மீன்போன்ற கண்களை உடையவள். தடாதகை பிராட்டியார் கன்னிப் பருவத்தில் முடிசூடி பாண்டிய நாட்டை ஆண்டமையால் பாண்டியநாடு கன்னிநாடு என்னும் பெயர் பெற்றது. மீனாட்சி அம்மனின் அவதாரம் மதுரையில் நிகழ்ந்த காரணத்தை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவியானவள் தன் அடியவர்களின் விருப்பதிற்கு ஏற்க அவர்களுக்கு குழந்தையாகவும் வருவாள் என்பதையும் தடாதகை பாண்டிய நாட்டின் அரசியாகி மதுரை அரசாட்சி செய்தன் மூலம் ஆணுக்குப் பெண் சமம் என்பதை இப்படலத்தில் உணர்த்தினார்.

3. திருநகரங்கண்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் திருநகரங்கண்ட படலம் நூலின் மூன்றாவது படலமாகும்.

சிவபெருமானின் முதல் திருவிளையாடலால் வெளிப்பட்ட சொக்கநாதர் வீற்றிருந்த கடம்ப வனத்திற்கு கிழக்கே மணவூர் என்ற நகர் ஒன்று இருந்தது. அந்நகரினை தலைநகராகக் கொண்டு குலசேகரன் என்ற பாண்டிய அரசன் ஆட்சி செய்து வந்தான். மணவூரில் சிவபெருமானிடம் பக்தி கொண்ட தனஞ்செயன் என்ற வணிகன் ஒருவன் வசித்து வந்தான். ஒரு சமயம் தனஞ்செயன் வணிகத்திற்காக மணவூருக்கு மேற்கே உள்ள ஊர்களுக்கு சென்றான். அவ்வாறு அவன் வணிக வேலைகளை முடித்துவிட்டு மணவூருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் இருந்த கடம்ப வனத்தில் புகுந்தான். அப்போது சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியது. தனஞ்செயனும் யாரும் இல்லாத காட்டில் தனியாக மாட்டிக் கொண்டோமே கருணையின் வடிவான இறைவனே நீயே எனக்கு துணை என்று எண்ணியவாறே நடக்க தொடங்கினான். நடந்து வந்து கொண்டிருந்த வழியில் எட்டு யானைகளால் தாங்கப்பட்ட விமானத்தின் கீழ் அருள் வடிவில் வீற்றிருந்த சொக்கநாதரைக் கண்டான். சிவபிரானை கண்ட தனஞ்செயன் மிக்க மகிழ்ச்சியுடன் அவரை வணங்கி அன்றைய இரவுப் பொழுதை கழிக்க எண்ணி அங்கேயே தங்கினான். தனஞ்செயன் தங்கிய இரவு திங்கள் கிழமை. ஆகையால் தேவர்கள் இரவில் கடம்ப வனத்திற்கு வந்து சொக்கநாதரை அபிஷேகம் செய்து மலர்கள் சூடி வழிபாடு நடத்தினர். சோமசுந்தரரின் அருளால் தனஞ்செயன் தேவர்களையும் அவர்களின் வழிபாட்டினையும் கண்டு அவர்களுடன் இணைந்து சிவவழிபாட்டினை மேற்கொண்டான். பொழுது விடிந்ததும் தனஞ்செயன் சுயநினைவுக்கு வந்தான். சொக்கநாதரை மீண்டும் வழிபட்டுதன் வீடு நோக்கி புறப்பட்டான். மணவூரை அடைந்த தனஞ்செயன் நேராக அரண்மனைக்கு சென்று குலசேகரப் பாண்டியனிடம் முதல் நாள் இரவில் நடவற்றை விரிவாக எடுத்து உரைத்தான்.

சொக்கநாதரின் நினைவிலேயே பாண்டியன் இரவில் உறங்கினான். பாண்டியனின் கனவில் சோமசுந்தரர் ஒரு சித்தராகத் தோன்றி கடம்பவனத்தை அழித்து அழகிய நகரத்தினை உருவாக்குமாறு ஆணையிட்டார். சித்தரைக் கனவில் கண்ட பாண்டியன் திடுக்கிட்டு விழித்து விடியும்வரை காத்திருந்தான். தனஞ்செயன் கூறியவற்றையும் தான் கனவில் கண்டவற்றையும் அமைச்சர் பெருமக்களோடும் பெரியவர்களோடும் பாண்டியன் கலந்து ஆலோசித்து சொக்கநாதரைத் தேடி புறப்பட்டான். கடம்பவனத்தில் பொற்றாமரைக் குளத்தில் நீராடினான். பின் இந்திர விமானத்தின் கீழ் வீற்றிருந்த சொக்கநாதரை கண்டு மனம் உருக வழிபட்டான். பின் தன்னுடைய ஆட்களைக் கொண்டு காடுகளை வெட்டி பாதை அமைத்து திருந்தம் செய்தான். நகரினை எப்படி உருவாக்குவது என்று பாண்டியன் யோசித்து கொண்டிருந்த வேளையில் இரவில் பாண்டியன் கனவில் தோன்றிய சித்தர் அவர் முன் தோன்றி சிவாகமத்தின் வழியே தோன்றிய முதல்நூல் வழிநூல் சார்பு நூல் ஆகியவற்றின்படி ஆலயமும் மண்டபமும் கோபுரமும் நகரமும் உண்டாக்குக என்று கூறி மறைந்தார். பாண்டியனும் சித்தரின் வழிகாட்டுதலின்படி மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலையும் திருநகரத்தினையும் உருவாக்கினான். தான் உருவாக்கிய நகருக்கு சாந்தி செய்ய பாண்டியன் எண்ணினான். இதனை அறிந்த சொக்கநாதர் தனது திருமுடியில் இருந்து பிறை நிலவிலிருந்து அமுதத்தை நகரின் மீது தெளித்தார். சிவபிரானின் திருமுடியிலிருந்து சிந்திய அமுதமானது அந்நகரினை தூய்மை செய்து இனிமையாக்கியது. இவ்வாறு இறைவனின் கருணையால் அமுதம் சிந்தி மதுரமாகிய (இனிமை) தன்மையைப் பெற்றதால் குலசேகரப்பாண்டியன் உருவாக்கிய திருநகரம் மதுரை என அழைக்கப்படலாயிற்று.

பின்னர் பாண்டியன் மதுரை நகரின் கிழக்கு திசையில் ஐயனாரையம் தென்திசையில் சப்த கன்னியர்களையும் மேற்கில் திருமாலையும் வடக்கில் பத்ரகாளியையும் காவலாக நிறுவினான். பின் நன்னெறிப்படி நாட்டினை ஆண்டான். குலசேகரப் பாண்டியனுக்கு இறைவனின் திருவருளால் மலயத்துவசன் என்னும் மகன் பிறந்தான். மலயத்துவசன் வளர்ந்து பெரியவனானதும் அவனிடம் ஆட்சியை ஒப்படைத்து சிவவழிபாட்டில் நாட்டம் செலுத்தி இறுதியில் இறைவனின் திருவடியை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

சிவபெருமான் திருநகரங்கண்ட படலம் மூலமாக‌ தனஞ்செயன் வணிகனை கோவிலுக்கு வரவழைத்து அவனுக்கு அருளை கொடுத்து அவர் வழியாக கடம்ப வனத்தில் உள்ள சொக்கநாதரைப் பற்றி பாண்டிய மன்னனிடம் தெரியப்படுத்தி பாண்டிய மன்னனிடம் சித்தராக தரிசனம் கொடுத்து கோவில் கட்டவும் அதற்கான ஆகம விதிகளையும் முறையையும் அருளி மதுரை சொக்கநாதர் மீனாட்சி அம்மன் கோவிலை மக்களின் நன்மைக்காக உலகிற்கு அருளினார். இப்படலம் மதுரை நகர் மற்றும் சொக்கநாதர் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்த விதத்தையும் பாண்டியர்களின் தலைநகர் மாற்றம் பற்றியும் கடம்பவனத்திற்கு மதுரை என்ற பெயர் ஏற்பட்டதையும் இப்படலத்தில் அறிந்து கொள்ளலாம்.

2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் நூலின் 2 வது படலமாகும். இப்படலக்கதை இதற்கு முந்தைய படலமான இந்திரன் சாபம் தீர்த்த படலத்துடன் தொடர்பு உடையது.

இந்திரன் விருத்தாசூரனை அழித்து அதனால் உண்டான பிரம்மகத்தி தோசத்தை சோமசுந்தரரின் அருளினால் நீங்கப் பெற்று சோமசுந்தரரின் ஆணைக்கிணங்க இந்திரலோகத்துக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினான். இந்திரனை  தேவர்கள் அவனின் வாகனமான வெள்ளை யானை ஐராவதம் உட்பட அனைவரும் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தேவர்கள் அனைவரும் இந்திரனுக்கு வாழ்த்துக்களையும் பொன்னாலாகிய பரிசுகளையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காசி மாநகரில் துர்வாசர் மாமுனிவர் தன் பெயரால் லிங்கத் திருமேனியை நிறுவி அதனை தினந்தோறும் வழிபட்டு வந்தார். ஒருநாள் துர்வாசர் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் தன் திருமுடியில் இருந்து பொன்னிறமான மணம் வீசும் தாமரை மலரினை துர்வாசகருக்கு கொடுத்தருளினார். துர்வாசரும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் அம்மலரை எடுத்துக் கொண்டு இந்திரனுக்கு பரிசாக தரும் நோக்கில் தேலோகத்திற்கு விரைந்தார். அப்போது இந்திரன் வெள்ளை யானையான ஐராவதத்தின் மீது ஏறி தேவலோகத்தில் பவனி வந்து கொண்டிருந்தான். தேவ மகளிர் மகிழ்ச்சியுடன் பாட்டிசைத்து ஆடிக் கொண்டு அவன் முன்னால் சென்று கொண்டிருந்தனர். வெள்ளை யானையான ஐராவதம் தேவர்களின் தலைவனான இந்திரனை சுமந்து கொண்டு செல்வதை பெருமையாக‌ எண்ணி ஆணவத்துடன் ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தது. துர்வாசர் தேலோகத்தை அடைந்தார். தேவலோகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டதும் துர்வாசர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். இறைவனான சிவபெருமான் தனக்கு கொடுத்த மணம்மிக்க தாமரை மலரினை தன்னுடைய பரிசாக இந்திரனுக்கு துர்வாசர் கொடுத்தார்.

தேவர்களின் வாழ்த்து மழையில் நனைந்திருந்த இந்திரன் தன்னிலை மறந்திருந்தான். அதனால் துர்வாசர் அளித்த பரிசினை அலட்சியமாக வெள்ளை யானையின் மீது வைத்தான். ஆணவம் நிறைந்திருந்த வெள்ளை யானை இந்திரன் வைத்த தாமரை மலரினை தனது துதிக்கையால் எடுத்து காலில் போட்டு மிதித்து நசுக்கியது. இந்நிகழ்ச்சிகளைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் ஏற்பட்டது. பின் அவர் இந்திரனை நோக்கி இறைவனான சிவபெருமான் கருணைமிகுந்து மணம் மிகுந்த தாமரை மலரினை எனக்கு கொடுத்தார். சொக்கநாதரின் அருளினால் உனக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீங்கப் பெற்று புதுப் பொலிவுடன் சொர்க்கலோகத்துக்கு நீ திரும்பிய செய்தியை நான் அறிந்தேன். அதனால் இறைவனின் அருட்பிரசாதமான தாமரை மலரினை உனக்கு பரிசாக கொடுப்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் நீ தன்னிலை மறந்து அம்மலரின் பெருமைகளை அறியாது உன் யானையிடம் தந்தாய். ஆகையால் உன் தலை எதிர் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனின் சக்கரப் படையால் சிதறடிக்கப்படும். மேலும் அவர் வெள்ளை யானையை நோக்கி இறைவனின் கருணையால் கிடைத்த தாமரை மலரினை அதன் பெருமை அறியாது உன் கால்களால் நசுக்கினாய். ஆகையால் உன் நான்கு கொம்புகளுடன் வெள்ளை நிறமும் நீங்கி பலமும் போய் கருமை கொண்ட காட்டு யானையாக மாறுவாய் என்று இருவருக்கும் சாபம் கொடுத்தார்.

துர்வாசரின் சாபத்தை கேட்டதும் இந்திரன் தன்னிலைக்கு வந்தான். தன்னுடைய ஆணவச் செயலால் மறுபடியும் சாபம் பெற நேர்ந்ததை எண்ணி வருந்தினான். துர்வாசரிடம் முனிவரே தாங்கள் பரிசாக அளித்த தாமரை மலரின் பெருமைகளை அறியாது அதனை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். எங்களுடைய தவறான செயலினை மன்னியுங்கள். எனக்கும் எனது வெள்ளை யானைக்கும் கொடுத்த சாபத்தினை மாற்றி அருளுங்கள் என்று இந்திரன் வேண்டினான். யானையும் துர்வாசரின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தது. இந்திரன் மற்றும் வெள்ளை யானையின் இச்செயலால் துர்வாசர் மனம் மாறினார். அவர் அவர்களிடம் இறைவனின் அருளினை மதியாது நடந்த உங்களது செயல் குற்றமானது. அதற்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆகையால் சாபத்தினை உங்களுக்கு மாற்றித் தருகிறேன். அதாவது உனக்கு தலையளவு கொடுத்த தண்டனை முடியளவாக மாறட்டும். ஆணவச் செருக்கினை உடைய வெள்ளை யானை அறிவிழந்து காட்டு யானையாகி நூறாண்டு கழிந்த பின் இறைவனின் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறும் என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

முனிவரின் சாபத்தால் வெள்ளை யானை அறிவிழந்து கருமை நிறம் கொண்ட காட்டு யானையாக மாறி தேவலோகத்தைவிட்டு பூலோகத்திற்குச் சென்றது. காட்டு யானையாக மாறிய ஐராவதம் பூலோகத்தில் உள்ள காடுகளில் சுற்றித் திரிந்தது. நூறாவது ஆண்டின் இறுதியில் கடம்ப வனத்தில் புகுந்தது. கடம்ப வனத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தினையும் சொக்கநாதரையும் கண்டது. தான் யார் என்பதினை அறிந்து பொற்றாமரைக் குளத்தில் இறங்கி நீராடியது. உடனே காட்டு யானை வடிவம் நீங்கி மீண்டும் வெள்ளை யானையாக மாறியது. பின் பொற்றாமரை தீர்த்தத்து நீரினைக் கொண்டு சொக்கநாதரை அபிசேகம் செய்து பொற்றாமரையால் சொக்கநாதரை வழிபட்டது. வெள்ளை யானையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சொக்கநாதர் வெள்ளை யானைக்கு காட்சி தந்தார். அவர் வெள்ளை யானையிடம் நீ இங்க வந்த காரணம் என்ன? உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அதனைக் கேட்ட வெள்ளை யானை ஆவணத்தால் தான் சாபம் பெற்றதையும் தற்போது சொக்கநாதரின் அருளால் சாபம் நீங்கப் பெற்றதையும் கூறி ஆணவம் இல்லாமல் பணிந்து வணங்கியது. பின் அது இறைவனாரிடம் தங்களுக்கு கூரையாக அமைந்திருக்கும் இவ்விமானத்தினை தாங்கும் எட்டு யானைகளோடு நானும் ஒன்பதாவது யானையாகி இவ்விமானத்தை தாங்கி தங்களைப் பிரியாது இருக்க வேண்டும். என்று வேண்டியது. அதற்கு சொக்கநாதரும் இந்திரன் என்னிடம் மிகுந்த அன்பு பூண்டவன். ஆதலால் அவனை நீ சுமப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று கூறி பல வரங்களை அருளினார். பின்னர் வெள்ளை யானை சோமசுந்தரருக்கு மேல்திசையில் ஐராவத தீர்த்தத்தையும் ஐராவதேச்சுரர் லிங்கத் திருமேனியையும் ஐராவத விநாயகப் பெருமானையும் உருவாக்கி வழிபட்டு வந்தது.

இந்திரன் தனது வெள்ளை யானையின் சாபம் நீங்கப் பெற்றதை அறிந்து அதனை அழைத்து வர தேவர்களை அனுப்பினான். அவர்களிடம் அந்த யானை வருவேன் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டது. பின் சொக்கநாதருக்கு கீழ்திசையில் ஐராவதநல்லூர் என்ற ஊரினை உருவாக்கியும் அவ்வூரில் இந்திரேஸ்வரர் என்ற லிங்கத்தை உண்டாக்கியும் வழிபட்டு வந்தது. இந்திரன் மீண்டும் தேவர்களை அனுப்பி ஐராவதத்தை அழைத்து வரச் சொன்னான். வெள்ளை யானையும் இந்திரனின் வேண்டுகோளை இறைவனை வழிபட்டு விடை பெற்றது. இறைவன் வெள்ளை யானை உண்டாக்கிய ஐராவதேஸ்வரரை வழிபட தீவினைகள் நீங்கப் பெறுவர் என்றும் இந்திரேஸ்வரரை வழிபட இம்மையில் எல்லா வளங்களும் பெற்று மறுமையில் இந்திரப் பதவி பெற்று இறுதியில் வீடுபேற்றினைப் பெறுவர் என்றும் வரம் கொடுத்து ஐராவதம் யானைக்கு விடை கொடுத்தார். ஐராவதம் இந்திரலோகம் சென்று தனது கடமையை ஆற்றத் தொடங்கியது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

ஐராவதேஸ்வரர் மற்றும் இந்திரேஸ்வரர் ஆகிய இரண்டு லிங்கங்களை உலகிற்கு காட்டி அருளினார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் அனைவருக்கும் சொல்லும் கருத்து:

உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தன்னிலை மறந்து ஆணவச் செயல்களில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவர்களுக்கான தண்டனையானது வந்தே தீரும். தான் செய்த தவறை உணர்ந்து ஐராவதேஸ்வரர் மற்றும் இந்திரேஸ்வரரை சரணடைந்தால் இறைவன் அவர்களுக்கு நன்மை புரிந்து அருளுகிறார்.

1. இந்திரன் பழி தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இந்திரன் பழி தீர்த்த படலம் நூலின் முதல் படலமாகும்.

தேவலோகத்தின் அரசனான இந்திரனை காண வந்தார் தேவ குரு பிரகஸ்பதி. இந்திரன் தேவ மகளீர்களுடன் இருந்தபடியால் தேவ குருவை கவனிக்காமலும் அவருக்கு தகுந்த வரவேற்பை கொடுக்காததாலும் சினம் கொண்ட பிரகஸ்பதி அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின் தேவர்கள் மூலம் குரு வந்ததை அறிந்த இந்திரன் அவரைக் காண ஐராவதமாகிய தனது வாகனத்தில் தேவர்களுடன் தேடிச் சென்றான். அவர்களால் தேவகுருவை கண்டு பிடிக்க இயவில்லை. தேவகுரு இல்லாமல் இந்திரனிடம் இருந்த சக்தியும் செல்வமும் குறைய ஆரம்பித்தது. தேவகுரு இல்லாமல் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பரிகாரம் தேடி அவன் தேவர்களோடு பிரம்மலோகத்திற்குச் சென்றான். தேவர்களுக்கு தற்போது நல்வழிகாட்ட குரு இல்லாததை பிரம்மாவிடம் எடுத்துக் கூறி வருந்தி இந்த சிக்கலுக்கு வழிகாட்டி அருளுமாறு வேண்டினான். அப்போது பிரம்மா இந்திரன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி பிரகஸ்பதியை கண்டு பிடிக்கும்வரை அறிவாலும் தொழிலாலும் சிறந்த ஒருவரை உங்களின் தற்காலிக குருவாக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி துவட்டா என்பவனின் மகனும் மூன்று தலைகளை உடையவனும் அசுர குலத்தில் உதித்தவனும் ஆகிய விச்சுவரூபன் என்பவனை தற்காலிக குருவாக்கிக் கொள்ளுமாறு அருளினார். அசுரகுலத்தில் உதித்தவனை குருவாக்கிக் கொள்வதா என்று முதலில் யோசித்த தேவேந்திரன் இறுதியில் பிரம்மாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு விச்சுவரூபனை குருவாக ஏற்றுக் கொண்டான்.

தேவ குரு பிரகஸ்பதியை அலட்சியப் படுத்தியதற்காக வருத்தம் கொண்ட இந்திரன் அதற்கு பரிகாரம் செய்ய எண்ணினான். புதிய குருவான விச்சுவரூபனிடம் தேவர்கள் நன்கு வாழ யாகம் செய்ய வேண்டும் என்று கூறினான். அதற்கு சம்மதித்த விச்சுவரூபனும் வாயினால் தேவர்களின் நலத்திற்காகவும் மனதினால் அசுரர்களின் நலனுக்காகவும் யாகத்தினை நடத்தினான். இதனை தனது ஞானதிருஷ்டியில் அறிந்த கொண்ட தேவேந்திரன் விச்சுவரூபனின் மூன்று தலைகளையும் கொய்தான். அவனின் மூன்று தலைகளும் காடை ஊர்குருவி கிச்சிலி பறவைகளாக மாறின. குருவைக் கொன்ற பாவத்தினால் இந்திரனை பிரம்மகத்தி தோசம் பிடித்தது. இந்திரனின் பிரம்மகத்தி தோசத்தினை தற்காலிகமாக போக்குவதற்காக தேவர்கள் மரங்களிடத்தில் பிசினாகவும் மகளிரிடத்தில் பூப்பாகவும் நீரினிடத்தில் நுரையாகவும் மண்ணிடத்தில் உவராகவும் பிரித்து அளித்தனர். இதனால் தற்காலிகமாக இந்திரனைப் பற்றிய பிரம்மகத்தி தோசம் நீங்கப் பெற்று பொலிவுடன் விளங்கினான்.

துவட்டா தன் மகன் விச்சுவரூபனின் முடிவினை அறிந்து இந்திரனை அழிக்க முடிவு செய்து வேள்வி ஒன்றினைத் தொடங்கினான். அவ்வேள்வியிலிருந்து பயங்கரமான உருவத்துடன் அசுரன் ஒருவன் தோன்றினான். அவ்வசுரனுக்கு விருத்தாசுரன் எனப் பெயரிட்ட துவட்டா விருத்தாசுரனுக்கு இந்திரனை அழிக்க ஆணை இட்டான். தேவேந்திரனுக்கும் விருத்தாசுரனுக்கும் பயங்கரப் போர் ஏற்பட்டது. இறுதியில் தேவேந்திரன் விருத்தாசுரனின் மீது தனது வஜ்ராயுதத்தை ஏவினான். விருத்தாசுரன் வஜ்ராயுத்தை வீழ்த்திவிட்டு தன்னிடம் இருந்த இரும்பு உலக்கையால் இந்திரனை அடித்து அவனை மூர்ச்சை அடையச் செய்தான். மூர்ச்சை தெளிந்த இந்திரன் இவ்வசுரனுடன் நேருக்கு நேர் போர் புரிய என்னிடம் வலிமை இல்லை எனக் கருதி மீண்டும் பிரம்மாவை சரணடைந்தான். இப்பிரச்சினையிலிருந்து தப்பிக்க திருமால் ஒருவரே உனக்கு வழிகாட்டுவார். ஆகையால் அவரை சரணடைந்து விருத்தாசுரனை அழிக்க உபாயம் கேள் என்று பிரம்மா கூறினார்.

திருமாலிடம் சென்ற தேவர்கள் தங்கள் பிரச்சினையை சொல்லி அதற்கு தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அதற்கு திருமால் பாற்கடலைக் கடைந்தபோது உங்களின் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்க ததீசி முனிவரிடம் தந்தீர்கள். பின்பு அந்த ஆயுதங்களை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளத படியால் அவர் அந்த ஆயுதங்களை பாதுகாக்க திரவமாக்கி குடித்து தனது முதுகுத்தண்டில் சேகரித்து வைத்துள்ளார். அவரிடம் சென்று அவரின் முதுகெலும்பைப் பெற்று புதிய வலிமைமிக்க வஜ்ராயுத்தை உருவாக்கி அந்த ஆயுதத்தைக் கொண்டு அசுரனை வெல்லலாம் என்று கூறினார். திருமால் கூறியதை ஏற்றுக் கொண்ட தேவர்கள் ததீசி முனிவரை சந்தித்து நடவற்றை எல்லாம் கூறினர். கருணையுள்ளம் கொண்ட ததீசி முனிவரும் இறைவனான சிவபிரானின் விருப்பப்படியே நான் என்னுடைய முதுகெலும்பினைத் தருகிறேன். தாங்கள் அதனைக் கொண்டு அசுரனை வெல்லுங்கள் என்று சொல்லி ததீசி முனிவர் யோகத்தில் அமர்ந்து தனது உடலை விட்டு சிவலோகம் சென்றார். பின் ததீசி முனிவரின் முதுகெலும்பைப் பெற்ற இந்திரன் தேவதச்சன் மூலம் புதிய வலிமைமிக்க வஜ்ராயுதத்தை உருவாக்கினான்.

இறைவனின் அருளால் புதிய வஜ்ராயுதத்தைப் பெற்ற இந்திரன் மீண்டும் விருத்தாசுரனுடன் போரிட்டான். இந்திரனுடன் சண்டையிட முடியாத விருத்தாசுரன் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான். அசுரனைக் காணாது திகைத்த இந்திரன் பிரம்மாவிடம் சென்று நடந்ததைக் கூறி அசுரனைக் கண்டறிய வழி கேட்டான். பிரம்மாவும் அகத்தியரின் உதவியுடன் கடலினை வற்றச் செய்து அசுரனை அழிக்கலாம் என்று வழி கூறினார். இந்திரனும் அகத்தியரைச் சென்றடைந்து நடந்தவைகளைக் கூறி உதவிடுமாறு கேட்டான். அகத்தியரும் கடல் நீரை உளுந்தளவாக்கி குடித்து விட்டார். கடல் நீர் வற்றியதால் வெளியேறிய விருத்தாசுரனை இந்திரன் தன்னுடைய புதிய வஜ்ராயுதத்தால் அழித்தான். இதனால் இந்திரனை மீண்டும் பிரம்மகத்தி தோசம் பிடித்துக் கொண்டது. பிரம்மகத்தியால் மனம் பேதலித்த இந்திரன் குளத்தில் மலர்ந்திருந்த தாமரைத் தண்டினுள் போய் ஒளிந்து கொண்டான்.

தேவேந்திரனை காணாது தேவர்கள் பூலோகத்தில் அசுவமேதயாகம் செய்து சிறப்புற்றிருந்த நகுஷன் என்பவனை தேவேந்திரனாகத் தேர்வு செய்து இந்திரப் பதவியை அளித்தனர். இந்திரப்பதவி தந்த மமதையால் நகுஷன் இந்திராணியான சசிதேவியை தனக்கு சொந்தமாக்க விரும்பினான். நகுஷன் தனது விருப்பத்தை தேவர்களிடம் தெரிவித்து இந்திராணியை அழைத்து வரும்படி சொன்னான். இதனை அறிந்த இந்திராணி தங்களது குருவான பிரகஸ்பதியை மனதில் நினைத்து தன் துயர் போக்கும்படி வேண்டினாள். பிரகஸ்பதி நகுஷனை நேரடியாக வெல்ல முடியாது. அதனால் சப்த ரிசிகள் எழுவரும் சுமந்து வரும் பல்லாக்கில் வந்தால் நகுஷனை ஏற்றுக் கொள்வேன் என வேண்டுகோள் விடு என்று சதிதேவிக்கு ஆலோசனை கூறினார். சசிதேவியும் பிரகஸ்பதி சொல்லியவாறே சொல்லி அனுப்பினாள். நகுஷனும் இந்திராணியை அடையும் மோகத்தினால் சப்தரிஷிகள் பெருமை அறியாமல் அவர்கள் தன்னை சுமந்து செல்லும்படி கட்டளையிட்டான். நகுசனின் பல்லாக்கு தேவலோகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டு இருந்த இந்திராணியை பார்த்தவுடன் அவள் மேல் ஏற்பட்ட ஆசை மிகுதியால் விரைவில் இந்திராணியை அடையும் நோக்கில் பல்லக்கை வேகமாக சுமந்து செல்லுங்கள் என்று முனிவர்களை விரைவுப்படுத்தினான்.

முனிவர்களும் நாங்கள் வழக்கமான வேகத்தில்தான் பல்லாக்கை சுமந்து செல்கிறோம் என்றனர். சப்தரிசிகளில் குள்ளமான முனிவர் தான் பல்லக்கு மெதுவாக செல்லக் காரணம் என்று கருதிய நகுசன் குள்ளமாக இருந்த முனிவரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்று சமஸ்கிருத மொழியில் வேகமாக வேகமாக என்ற பொருளில் தன் கையில் இருந்த குச்சியால் முனிவரை நகுசன் அடித்தான். இந்திராணியின் மீது கொண்ட மையல் காரணமாக தன்னை அடித்த நகுசனை சர்ப்ப என்றால் நாகம் என்ற பொருளில் பூவுலகத்தில் மலைப் பாம்பாக விழக்கடவாய் என சாபமிட்டார். நகுசனும் பூமியில் மலைப் பாம்பாக விழுந்தான். இவ்வாறு இந்திராணிக்கு ஏற்பட்ட துயரம் நீங்கியது. தேவேந்திரனை தங்களுக்கு மீட்டுத்தரும்படி பிரகஸ்பதியிடம் இந்திராணியும் தேவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

பிரகஸ்பதி அவர்கள் மீது இரக்கம் கொண்டு தாமரைத் தண்டினுள் ஒளிந்திருந்த தேவேந்திரனை அழைத்தார். குருவின் குரல் கேட்டு தேவேந்திரன் சித்தம் தெளிந்து தாமரைத் தண்டிலிருந்து வெளிப்பட்டான். ஆனாலும் அவனை பிடித்திருந்த பிரம்மகத்தி தோசம் நீங்கவில்லை. பிரகஸ்பதி இந்திரனிடம் பூலோகத்தில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் பிரம்மகத்தி தோசம் நீங்கும் என்று வழி கூறினார். பிரகஸ்பதியுடன் பூலோகத்தை அடைந்த இந்திரன் ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று வழிபாடு நடத்தினான். அவ்வாறு ஒவ்வொரு ஆலயமாக சிவாலய தரிசனம் செய்து கொண்டு செல்லும் போது கடம்பவனத்தை கடந்த சமயத்தில் அவனை பிடித்திருந்த பிரம்மகத்தி தோசம் நீங்கி புதுப்பொலிவு பெற்றான். கடம்பவனத்தில் இருக்கும் இறைவனின் கருணையால்தான் இந்திரனுக்கு பிரம்மகத்தி தோசம் நீங்கியது. ஆகையால் இங்கிருக்கும் இறைவனைக் கண்டறியுங்கள் என்று பிரகஸ்பதி இந்திரனிடம் கூறினார். இந்திரனும் தேவர்களும் தேடி இறுதியில் கடம்பவனத்தில் லிங்கத் திருமேனியையும் தீர்த்தத்தையும் கண்டறிந்தனர்.

பிரகஸ்பதியின் அறிவுரையின்படி இந்திரனும் தேவர்களும் கடம்பவனத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டான். இறைவனின் திருவருளால் அத்தீர்த்தத்தில் பொற்றாமரைகள் மலர்ந்தன. இந்திரனும் அம்மலர்களைக் கொண்டு சிவபிரானை வழிபட்டான். பின்னர் அவ்விடத்தை சீராக்கி எட்டு யானைகள் 32 சிங்கங்கள் 64 சிவகணங்கள் கொண்ட அழகிய விமானத்துடன் அவ்விட இறைவனுக்கு அமைத்து கோவில் கட்டினான் இந்திரன். அவனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் இந்திரனே உன்னுடைய பிரம்மகத்தி தோசம் முற்றிலும் நீங்கிவிட்டது. இங்கு நீ வேண்டுவது யாது? என்று கேட்டார். இறைவனே நான் என்றைக்கும் இங்கிருந்து தங்களை வழிபடும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் இந்திரன். அதற்கு சிவபெருமான் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியில் இங்கு வந்து வழிபடு. அன்றைய தினம் இவ்வாலய வழிபாடு உனக்கு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனை உனக்கு கொடுக்கும். இவ்வாலயத்தில் சொக்கநாதர் சோமசுந்தரர் என்ற திருநாமங்கள் கொண்டு எம்மை வழிபடுவோர் உன்னைப் போலவே தங்களின் துன்பங்கள் நீங்கப் பெறுவர். நீ பல்லாண்டு இந்திரப்பதவியை வகித்து இறுதியில் எம்திருவடி சேர் என்று அருளினார். இன்றைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவருக்கு இந்திரன் அமைத்த விமானம் இந்திர விமானம் என்றும் கடம்பவனத் தீர்த்தம் பொற்றாமரைக்குளம் என்றும் இறைவனார் சொக்கநாதர் சோமசுந்தரர் என்றும் அழைக்கப் படுகின்றனர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் அனைவருக்கும் சொல்லும் கருத்து:

  1. சுக போகங்களில் மூழ்கியும் ஆசைகளினால் தான் செய்ய வேண்டிய கடமையை மறந்தால் அதிகம் துன்பப்பட நேரிடும்.
  2. எந்த சூழ் நிலையிலும் வழிகாட்டிய‌ குருவை மறக்க கூடாது. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முறையாக கொடுக்க வேண்டும்.
  3. மிகவும் உயர்ந்த நிலையில் எவ்வளவு பெரிய பதவி கிடைத்தாலும் தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும். தானே பெரியவன் என்றும் மற்றவர்கள் தன்னைவிட தாழ்ந்தவர் என்ற அகங்காரம் கொண்டாலும் பெண்களை இழிவுபடுத்தினால் அழிவு உறுதி.
  4. திக்கற்ற நிலையில் இறைவனே துணையாகும்.

திருவிளையாடல் புராணம் முன்னுரை

சிவபெருமான் தன்மீது பக்தி கொண்ட அடியவர்கள் மற்றும் சிற்றுயிர்கள் மீது திருவிளையாடல்கள் நிகழ்த்தி தனது அன்பையும் கருணையும் அவர்களுக்கு அருளும் வரலாறே திருவிளையாடல் புராணம் ஆகும்.

திருவிளையாடல் புராண‌மானது தமிழ் கடவுளான முருகப்பெருமானால் அகத்தியருக்கு அருளப்பட்டு பின் அகத்தியரின் மூலம் மற்ற முனிவர்கள் அறிந்து கொண்டனர். நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி கூறினார். அதை சனத்குமாரர் வியாசருக்கு கூறினார். அதனை வியாசர் கந்த புராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியம் நூலில் வியாசர் இயற்றினார். பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை தமிழில் பாடியுள்ளார். திருவிளையாடல் புராணமானது திருஆலவாய் மான்மியம் மதுரைப் புராணம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் வடமொழி நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மூன்று புராண நூல்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றப்படுகின்றன. சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் இறைவனாரின் வலது கண்ணாகவும் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும் போற்றி சிறப்பிக்கப் படுகின்றன.

மொத்தம் நான்கு திருவிளையாடல் புராணங்கள் உள்ளது.

  1. திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் இதனை பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றினார்.
  2. கடம்பவன புராணம் இதனை தொண்டை நாட்டு இலம்பூர் வீத நாத பண்டிதர் இயற்றினார்.
  3. சுந்தரபாண்டியம் இதனை தொண்டை நாட்டு வாயர்பதி அனதரியப்பன் இயற்றினார்.
  4. திருவிளையாடல் புராணம் இதனை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இதில் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையால் புராணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது

பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் தோன்றியவர். இவருடைய தந்தையார் மீனாட்சி சுந்தரதேசிகர் ஆவார். பரஞ்சோதி முனிவர் தமிழ் மொழி வட மொழி திருமுறைகள் சித்தாந்த சாஸ்திரங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுணர்ந்தவர். தம் தந்தையிடம் சிவதீட்சை பெற்றவர். சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டு பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு மதுரையில் மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து மதுரையில் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மன் அவருடைய கனவில் தோன்றி இறைவனின் திருவிளையாடல்களை தமிழில் பாட கட்டளையிட்டார். மீனாட்சி அம்மனின் ஆணைக்கு இணங்க ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் நூலை அப்படியே மொழி பெயர்க்காமல் தமிழுக்கே உரிய தான செய்யுள் நடையில் சத்தியாய் எனத்தொடங்கும் திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இதில் 3363 செய்யுள்கள் உள்ளன. இந்நூல் மதுரையின் தலபுராணமாகவும் போற்றப்படுகிறது

  1. காப்பு
  2. வாழ்த்து
  3. நூற்பயன்
  4. கடவுள் வாழ்த்து
  5. பாயிரம்
  6. அவையடக்கம்
  7. திருநாட்டுச்சிறப்பு
  8. திருநகரச்சிறப்பு
  9. திருக்கையிலாயச்சிறப்பு
  10. புராணவரலாறு
  11. தலச் சிறப்பு
  12. தீர்த்தச் சிறப்பு
  13. மூர்த்திச் சிறப்பு
  14. பதிகம் ஆகிய இவை 343 பாடல்களால் பாடப்பட்டுள்ளன. 344 வது செய்யுள் முதல் சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பம் ஆகிறது.

திருவிளையாடல் புராணமானது மதுரைக்காண்டம் கூடற்காண்டம் திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும் கூடற்காண்டத்தில் 30 படலங்களும் திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன.

திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள்

  1. இந்திரன் பழி தீர்த்த படலம்
  2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
  3. திருநகரங்கண்ட படலம்
  4. தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்
  5. தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம்
  6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
  8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்
  9. ஏழுகடல் அழைத்த படலம்
  10. மலையத்துவசன் அழைத்த படலம்
  11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்
  12. உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம்
  13. கடல் சுவற வேல் விட்ட படலம்
  14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்
  15. மேருவை செண்டால் அடித்த படலம்
  16. வேதத்திற்கு பொருள் அருளிச்செய்த படலம்
  17. மாணிக்கம் விற்ற படலம்
  18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
  19. நான்மாடக்கூடல் ஆன படலம்
  20. எல்லாம்வல்ல சித்தரான படலம்
  21. கல் யானைக்கு கரும்பு தந்த படலம்
  22. யானை எய்த படலம்
  23. விருத்த குமார பாலாரன படலம்
  24. கால் மாறி ஆடிய படலம்
  25. பழி அஞ்சின படலம்
  26. மாபாதகம் தீர்த்த படலம்
  27. அங்கம் வெட்டின படலம்
  28. நாகம் எய்த படலம்
  29. மாயப் பசுவை வைத்த படலம்
  30. மெய் காட்டிட்ட படலம்
  31. உலவாக்கிழி அருளிய படலம்
  32. வளையல் விற்ற படலம்
  33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்
  34. விடை இலச்சினை விட்ட படலம்
  35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்
  36. இரசவாதம் செய்த படலம்
  37. சோழனை மடுவில் வீட்டிய படலம்
  38. உலவாக் கோட்டை அருளிய படலம்
  39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
  40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்
  41. விறகு விற்ற படலம்
  42. திருமுகம் கொடுத்த படலம்
  43. பலகை இட்ட படலம்
  44. இசை வாது வென்ற படலம்
  45. பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம்
  46. பன்றிக்குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம்
  47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
  48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்
  49. திருவால வாயான் படலம்
  50. சுந்தரப் பேரன் செய்த படலம்
  51. சங்கப்பலகை கொடுத்த படலம்
  52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்
  53. கீரனைக் கரையேற்றிய படலம்
  54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்
  55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்
  56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
  57. வலை வீசின படலம்
  58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்
  59. நரி பரியாக்கிய படலம்
  60. பரி நரியாக்கிய படலம்
  61. மண் சுமந்த படலம்
  62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
  63. சமணரைக் கழுவேற்றிய படலம்
  64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.