சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் நூலின் பதினொன்றாவது படலமாகும்.
இறைவனான சுந்தரபாண்டியனார் காஞ்சன மாலை மற்றும் மலயத்துவசனுக்கு வீடுபேற்றினை அளித்தார். இறைவியான தடாதகை பாண்டியவ வம்சத்தை தழைக்கச் செய்ய மகவு ஒன்றினை பெற விரும்பினார். இதனை அறிந்த சுந்தர பாண்டியனார் தமிழ் கடவுளான முருகப் பெருமானை தடாகையின் வயிற்றில் தோன்றச் செய்தார். அம்மையாரும் கர்ப்பவதியானார். தடாகையின் கர்ப்பம் குறித்து அறிந்த மதுரை மக்கள் தங்களின் எதிர்கால மன்னனின் வரவை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தடாகை கர்ப்பவதியானதைக் கொண்டாட மதுரை நகரமே திருவிழா பூண்டது. கர்ப்பவதியான தடாகைக்கு குங்குமப்பூ கலந்த பால் பழங்கள் உள்ளிட்ட அவர் விரும்பிய பொருட்களை எல்லாம் உண்ணக் கொடுத்தனர். ஆன்மீகக் கதைகள் பாடல்கள் போதனைகள் தத்துவங்கள் உள்ளிட்ட இறைசிந்தனை மிக்கவற்றை தடாகையைக் கேட்கச் செய்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு விழாவும் தடாகைக்கு நடத்தப்பட்டது.
கர்ப்பவதியான தடாகைக்கு திங்கட்கிழமையும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாள் ஒன்றில் ஆண்மகவினைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்ததும் சுந்தரப்பாண்டியர் பொன்னும் மணியும் ஆடை ஆபரணங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் அள்ளி வழங்கினார். தடாகையின் குழந்தையைப் பார்க்க திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து வாழ்த்துக்களை வணங்கினர். மதுரை மாநகர மக்கள் தங்களின் இளவரசரின் வரவினை எண்ணி மகிழ்ந்தனர். வீடுகள் தெருக்கள் உள்ளிட்டவைகளை அலங்கரித்து விழாக்கள் கொண்டாடினர். பின்னர் அக்குழந்தைக்கு உக்கிரவர்மன் எனப் பெயரிட்டனர். நான்காம் மாதத்தில் குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். ஆறாம் மாதத்தில் குழந்தைக்கு அன்னம் ஊட்டினர். பதின்மூன்றாம் மாதத்தில் மயிர்வினை முடித்தனர். தேவகுருவாகிய வியாழ பகவான் வேதம் முதலிய கலைகளையும் வில் பயிற்சியையும் வாள் பயிற்சியையும் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் முதலியவற்றை உக்கிரவர்மனுக்கு கற்பித்தார். பாசுபதப் படைப்பயிற்சி இறைவனான சுந்தர பாண்டியரே உக்கிரவர்மனுக்கு கற்றுக் கொடுத்தார். பல விதமான படைப் பயிற்சியையும் வீர விளையாட்டுகளையும் கற்றுத் தேர்ந்த உக்கிரவர்மன் காளைப்பருவத்தை அடைந்தார்.
அவர் காளைப்பருவத்தில் முப்பத்திரெண்டு இலட்சணங்களும் பொருந்தி சிறந்த நற்குணம் உடையவராக திகழ்ந்தார். மகனுடைய போர் திறனும் சாதுர்யத்தையும் கண்ட சுந்தரபாண்டியனார் இவன் பூமண்டலம் முழுவதும் அரசாள வல்லவன் என்று எண்ணினார். உக்கிரவர்மனுக்கு திருமுடி சூட்டுவதா? மணம் முடிப்பதா? என தடாதகை பிராட்டியாரும் சுந்தரபாண்டியனாரும் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து திருமணம் செய்வது என்று முடிவு செய்து திருமணத்திற்கு பெண் பார்க்கத் தொடங்கினர்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் நல்லவைகளை பார்க்க வேண்டும் நல்லவைகளை கேட்க வேண்டும் அப்போது நல்ல குழந்தைகளைப் பெறலாம் என்பதே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.