சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இசை வாது வென்ற படலம் நாற்பத்தி நான்காவது படலமாகும்.
வரகுண பாண்டியனின் காலத்திற்கு பின் அவரது மகன் இராசராசபாண்டியன் மதுரையை ஆட்சி செய்தான். அப்போது பாணபத்திரரின் மனைவி இறைவனின் புகழினை இசையோடு பாடி வந்தாள். இராசராசனின் மனைவி இசைபாடுவதில் வல்லவள். அவளின் இசையில் இராசராசபாண்டியன் மயங்கிப் போயிருந்தான். ஒரு சமயம் இராராசபாண்டியனின் மனைவி பாணபத்திரரின் மனைவி இசை பாடுவதைக் கண்டு தன்னைவிட நன்றாகப் பாடுகிறாளே என்று பொறாமை கொண்டாள். எப்படியாவது பாணபத்திரரின் மனைவி இசை பாடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். தன்னுடைய மனக்கருத்தை இராசராசபாண்டியனிடம் தெரிவித்தாள். பாண்டியனும் தன்னுடைய மனைவியின் விருப்பதை நிறைவேற்ற திட்டம் ஒன்றை வகுத்தான். அதன்படி இலங்கையிலிருந்து இசை பாடுபவள் ஒருத்தியை பாண்டிய நாட்டிற்கு வரவழைத்தான். பின் பாணபத்திரரின் மனைவியை அழைத்த இராசராசபாண்டியன் ஈழத்திலிருந்து இசை பாடுபவள் ஒருத்தி வந்துள்ளாள். அவள் தன்னை இசையில் வெல்ல உங்கள் நாட்டில் யாரும் இருக்கின்றனரா? என்று ஆணவமாக பேசுகிறாள். சிவபக்தையான நீ நாளை நடைபெறும் இசைப் போட்டியில் கலந்து கொண்டு அவளை வெல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதனைக் கேட்டதும் பாணபத்திரரின் மனைவி அரசே சொக்கநாதரின் திருவருளால் நான் நாளை நடைபெறும் இசைப் போட்டியில் வெல்வேன் என்று கூறினாள். பின்னர் இராசராசபாண்டியன் ஈழத்து பாடல் பாடுபவளிடம் வந்து நீ நாளை நடைபெறும் இசைப் போட்டியில் பாணபத்திரரின் மனைவியை எதிர்த்து பாடல்கள் பாடு. நீ எவ்வாறு பாடினாலும் நீயே வெற்றி பெற்றதாக நான் அறிவிப்பேன் என்று கூறினான். மறுநாள் காலையில் அரசவையில் இசைப்போட்டி ஆரம்பமானது. ஈழத்து இசை பாடுபவள் மிகுந்த இறுமாப்புடன் ஆரவாரத்துடனும் அரசவைக்கு வந்தாள்.
சொக்கநாதரை வணங்கிவிட்டு பாணபத்திரரின் மனைவி அமைதியாக இசைபோட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தாள். ஈழத்து பாடல் பாடுபவள் அரசன் கொடுத்த தைரியத்தில் பாணபத்திரரின் மனைவியிடம் வம்பிழுத்தாள். பாணபத்திரரின் மனைவி நான் உன்னிடம் இசைவாது செய்ய வந்தனே ஒழிய சண்டையிட வரவில்லை என்று கூறினாள். உடனே இராசராசபாண்டியன் பெண்களே நீங்கள் இருவரும் சண்டையிடுவதை விட்டுவிட்டு பாடல்களைப் பாடுங்கள் என்று கூறி இசைப் போட்டியைத் தொடங்கி வைத்தான். இருவரும் இசைப்பாடல்களை தனித்தனியே பாடினார்கள். இருவரின் பாடல்களையும் கேட்ட அவையோர் பாணபத்திரரின் மனைவியின் பாடல்கள் நன்றாக இருந்ததாகக் கூறினர். ஆனால் இராசராசபாண்டியன் ஈழத்துப் பாடினி வென்றாள் என்று அறிவித்தான். இந்த முடிவிற்கு அறிஞர்களும் சான்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருவேறு கருத்து வந்ததால் அடுத்த நாள் மீண்டும் இசைப் போட்டி நடைபெறும் என்று பாண்டியன் அறிவித்தான். பாண்டியன் தன்னைப் புகழ்ந்து பேசியதால் ஈழப்பாடினி இறுமாப்புடன் தன் இருப்பிடத்திற்குச் சென்றாள்.
சொக்கநாதரை பாணபத்திரரின் மனைவி சரணடைந்தாள். மதுரையின் மண்ணினை சுந்தர பாண்டியனராக ஆட்சி செய்த பெருமானே இராசராசபாண்டியன் நடுநிலைமை தவறிப் பேசுகிறான். திருவருள் புரிந்து என்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று மனமுருகி வழிபட்டாள். அப்போது ஆகாயத்திலிருந்து பெண்ணே அஞ்ச வேண்டாம் நாளை இசை போட்டியின் முடிவில் அவளை வெற்றி பெற்றதாக அனைவரும் அறிவிப்பார்கள். அப்போது நீ கோவிலில் இப்போட்டியை வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் பாடுகிறோம். அங்கு நீங்கள் தெரிவிக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று கோவிலில் போட்டியை நடத்தும் படி கேட்டுக் கொள். வேறு வழியின்றி அனைவரும் சம்மதிப்பார்கள். அதன்பிறகு உனக்கு வெற்றி கிடைக்கும். நீயே வெல்லும்படி அருளுவோம் என்று திருவாக்கு கேட்டது. மறுநாள் பாண்டியன் அவ்விருவரையும் அவைக்கு அழைத்துப் போட்டியிட்டுப் பாடும்படி கூறினான். அதற்கு முன்பாகவே சான்றோர்கள் அனைவரையும் அழைத்த அரசன் ஈழத்து பெண் வெற்றி பெற்றாள் என்று அனைவரும் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். இருவரும் போட்டியில் பாடினர். ஈழத்துப்பெண் வென்றாள் என்று பாண்டியன் கூறினான். பாண்டியன் சொன்னது போலவே அவையோரும் ஆமோதித்தனர். உடனே பாணபத்திரரின் மனைவி அரசே உங்கள் தீர்ப்பு ஓரம் சார்ந்து இருக்கிறது. உன்னுடைய சொல்லையே அவையோரும் எதிரொலிக்கின்றனர். ஆகையால் நாளை இடம் மாறி ஆடிய நடராஜரின் முன்னர் நாங்கள் பாடுகின்றோம். அங்கு வந்து நீர் என்ன தீர்ப்புக் கூறினாலும் அதற்கு நான் ஒப்புக் கொள்கிறேன் எனச் சூளுரைத்தாள். அதற்கு அரசன் உட்பட அனைவரும் உடன்பட்டனர். மறுநாள் திருகோவிலில் இசைப் போட்டி ஆரம்பமானது.
சொக்கநாதர் இசைப் புலவராய் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து புலவர்களுடன் புலவராக அமர்ந்து கொண்டார். ஈழப்பாடினி முதலில் பாடினாள். பின்னர் பாணபத்திரரின் மனைவி பாடினாள். பாடி முடித்ததும் தன்னை அறியாமல் மெய் மறந்து ஆஹா என்ன அற்புதம் எனக் கைதட்டினான். அதையே தீர்ப்பாகக் கொண்ட மக்கள் பாணபத்திரரின் மனைவி வெற்றி பெற்றதாக ஆமோதித்துக் கரவொலி செய்தனர். சொக்கநாதரின் திருவருளினால் இராசராசபாண்டியன் நடுநிலைமையில் இருந்து பாணபத்திரரின் மனைவி வென்றதாக அறிவித்தார். அவையோரும் அதனை ஆமோதித்தனர். உடனே அங்கிருந்த இசைப்புலவரான சொக்கநாதர் எழுந்து இது அற்புதம் இது அற்புதம் என்று கூறி மறைந்தார். இராசராசபாண்டியன் தன்னிடம் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் இசைப் புலவராய் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான். பின்னர் ஈழப்பாடினியின் தோளில் பாணபத்திரரின் மனைவியை அமரச் செய்து பாணபத்திரரின் மனைவியின் வெற்றியை உறுதி செய்தான். பாணபத்திரரின் மனைவிக்கும் ஈழப்பாடினிக்கும் பரிசுகள் பல வழங்கினான். அதன்பின் இராசராசபாண்டியன் சுகுண பாண்டியன் என்ற மகனைப் பெற்று இனிது வாழ்ந்திருந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
எவரின் சூழ்ச்சியும் இறைவனை சரணடைந்தவர்கள் முன்னால் எடுபடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.