49. திருவால வாயான் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் திருவால வாயான் படலம் நாற்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

சுகுண பாண்டியனின் மரபில் அவனுக்குப் பின் சித்திநாதன் சித்தி பூஷணன் சித்திரத்வஜன் சித்திரவர்மன் சித்திரசேனன் சித்திரவிக்ரமன் ராஜமார்த்தாண்டன் ராஜசூடாமணி ராஜ சார்த்தூலன் ராஜ குஞ்சரன் சத்ருஞ்சரன் பீமரதன் பீமபராக்கிரமன் பிரதாப மார்த்தாண்டன் விக்கிரம கஞ்சுகன் யுத்த கோலகன் அதுலவிக்கிரமன் அதுலகீர்த்தி கீர்த்திவிபூஷணன் முதலானோர் வம்ச வழியாக வெகுகாலம் நீதி நெறி தவறாமல் அரசாண்டனர். இந்த இருபத்தோரு மன்னர்கள் வெகு காலம் நெறிதவறாது அரசு புரிந்ததும் ஒரு மனுவின் காலம் முடிந்துவிட்டது. மனுவின் காலம் முடிந்தபடியால் ஊழிக் காலம் எனப்படும் பிரளயம் உண்டானது. கடல் நீர் பொங்கியதால் உலகில் உள்ளவை அழியத் தொடங்கின. அப்பிரளயத்திலிருந்து மீனாட்சி அம்மன் திருக்கோவில் திருக்கோவிலின் இந்திர விமானம் பொற்றாமரைத் தீர்த்தம் பசுமலை பன்றிமலை நாகமலை இடபமலை யானைமலை ஆகியவை அழியாதிருந்தன. பிரளயக் காலம் முடிந்ததும் இறைவனார் உலகத்தையும் உயிர்களையும் படைத்தார். சூரியனிடமிருந்தும் சந்திரனிடமிருந்தும் மன்னர்கள் தோன்றினர். சேர சோழ பாண்டிய நாடுகள் பிரிந்தன. அப்போது பாண்டிய மரபில் வங்கிசேகரப் பாண்டியன் என்பவன் தோன்றினான். அவன் அறுபத்து நான்கு கலைகளிலும் சிறந்தவனாய் விளங்கினான். அவன் மீனாட்சி அம்மன் திருக்கோவிலைச் சுற்றிலும் சிறிய நகரத்தை உண்டாக்கி ஆட்சி செய்து வந்தான். நாளடைவில் அவனின் நல்லாட்சியின் விளைவால் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆதலால் வங்கிசேகரப் பாண்டியன் நகர எல்லையை விரிவாக்க எண்ணினான். எனவே அவன் திருக்கோவிலை அடைந்து எம் பெருமானே உன் அருளினால் நான் இந்நாட்டை ஆண்டு வருகிறேன். இப்போது என்னுடைய குறை ஒன்றை போக்கி அருள வேண்டும். என்னுடைய குடிமக்கள் வசிக்க ஒரு நகரம் அமைக்க வேண்டும். இந்நகரத்திற்கு ஆதியில் வரையறுக்கப்பட்ட எல்லையை வரையறுத்துக் காட்டி அருளுங்கள் என்று வேண்டினான்.

வங்கிசேகரப் பாண்டியனின் வேண்டுதலை ஏற்ற இறைவனார் சித்தர் வடிவம் கொண்டு மகாமண்டபத்தின் அருகே வந்து நின்றார். தமது திருக்கரத்தில் கங்கணமாகக் கட்டி இருந்த பாம்பினைப் பார்த்து நீ இப்பாண்டியனுக்கு இந்நகரத்தின் எல்லையை வரையறை செய்து காட்டுவாயாக என்று ஆணை இட்டார். உடனே அப்பாம்பு எம்பெருமானே இந்நகரம் எனது பெயரினால் விளக்க அருள்புரிவாயாக என்று வேண்டுகோள் விடுத்தது. இறைவனாரும் அவ்வாறே ஆகுக என்று அருளினார். உடனே பாம்பு விரைந்து சென்று கிழக்கு திசையில் சென்று வாலை நீட்டியது. நகருக்கு வலமாக தரையில் படிந்து உடலை வளைத்து வாலைத் தன் வாயில் பிடித்து பழைய நகரின் எல்லையைக் காட்டியது. பின்னர் கங்கணமாக மாறி இறைவனாரின் திருக்கரத்தில் மீண்டும் அமர்ந்தது. பாண்டியனை ஆசீர்வதித்து சித்தர் மறைந்தார். சர்ப்பம் காட்டிய எல்லைப்படி நகரை அமைத்து ஆலவாய் எனப் பெயரிட்டான் வமிசசேகரன். நான்கு பக்கமும் எல்லை வகுத்ததால் நான்மாடக் கூடல் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. பாம்பு வரையறுத்த எல்லையின் படி வங்கிசேகரப் பாண்டியன் சக்கர வாளகிரி என்னும் மதிலைக் கட்டுவித்தான். அந்நகருக்கு தெற்கு வாயிலுக்கு திருப்பரங்குன்றமும் வடக்கு வாயிலுக்கு இடபமலையும் மேற்கு வாயிலுக்கு திருஏடகமும் கிழக்கு வாயிலுக்கு திருப்பூவணமும் எல்லையாக அமைந்தன. அப்பெரிய மதிலை ஆலவாய் மதில் என்றும் அந்நகரை ஆலவாய் என்றும் அழைக்கத் தொடங்கினர். பாம்பு வரையறுத்த எல்லையில் வங்கிசேகரப் பாண்டியன் நகரினை விரிவு செய்து சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பிரளயத்தில் உலகமே அழிந்தாலும் அழியாத பெருமை பெற்ற மதுரையின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளவும் மதுரை திருஆலவாய் என்ற பெயர் அழைக்கப்படும் காரணத்தையும் வழி தெரியாமல் இறைவனை சரணடைபவர்களை இறைவனார் காப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.