சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம் நூலின் ஐந்தாவது படலமாகும்.
அங்கயற்கண்ணி என்ற தடாகை பாண்டிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நீதிவழியில் ஆட்சி செய்தார். தடாதகையின் அன்னையான காஞ்சன மாலை தன் மகளின் ஆட்சித் திறனைப் பார்த்து மெய்சிலிர்த்தாள். திருமண வயதை தன் மகள் எட்டியதை உணர்ந்த அத்தாய் தன் மகளிடம் அழகும் அறிவும் உடைய உனக்கு திருமணம் இன்னும் கைகூடவில்லை என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். மலையத்வஜனும் இறந்துவிட்டான். அதனால் தாயான காஞ்சன மாலைக்கு இரட்டிப்புக் கவலையாகி விட்டது. இதையறிந்த தடாதகை அம்மா இங்கேயே இருந்தால் உன் எண்ணம் நிறைவேறாது. நான் திக்விஜயம் என்ற பெயரில் பலநாடுகளும் சுற்றி வருகிறேன். எனக்குப் பிடித்த மணாளனை அறிந்து வருகிறேன் என்று தாயிடம் விடை பெற்று நான்கு குதிரைகள் பூட்டிய மீன்கொடி பறக்கும் தேரில் ஏறிக்கொண்டு நால்வகை சேனையுடன் புறப்பட்டாள். பூவுலகில் பல மன்னர்களை வெற்றி பெற்றாள். அடுத்தப்படியாக எட்டுத் திக்குகளையும் வெற்றி பெறப் புறப்பட்டாள்.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தன் அமைச்சர்களையும் படைகளையும் ஜெபிக்க செய்து அவர்களுக்கு திவ்வியமான பார்வையையும் வானில் செல்லும் சக்தியையும் அளித்தாள் தடாதகை. பின் கிழக்கே அமராவதி சென்று இந்திரனை வென்று அவன் பரிசாக அளித்த காமதேனு கற்பகத்தரு சிந்தாமணி எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு தென்கிழக்கு திசைக்குச் சென்று அக்கினியை வென்று அவன் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகளுடன் தெற்கே வந்து யமனைப் போரில் வென்று அவன் தந்த வெகுமதிகளுடன் தென்மேற்கே நிருதியை ஜெயித்து மேற்கிலே வருணனையும் வடமேற்கில் வாயுவையும் வடக்கே சோமனையும் வென்று அருள்புரிந்து வடகிழக்கில் கைலாயம் நோக்கி வந்தாள்.
திருகையாலயத்தை தடாகை அடைந்த செய்தியை திருநந்திதேவர் இறைவனான சிவபெருமானிடம் தெரிவித்தார். சிவபெருமானும் தம் சிவகணங்களை அனுப்பி தடாதகையுடன் போரிடச் செய்தார். சிவகணங்களுடன் நடந்த போரில் தடாதகை எளிதில் வெற்றி வாகை சூடினார். தடாதகையின் வெற்றியை திருநந்திதேவர் கயிலைநாதனிடம் தெரிவித்தார். இதனைக் கேட்ட சிவபெருமான் நாக வில்லைக் கையில் ஏந்தி இடப வாகனத்தில் போர் களத்துக்கு எழுந்தருளினார். இறைவனை நேரில் கண்டதும் தடாதகையின் தனங்களில் ஒன்று மறைந்தது. உடனே தடாகையின் மாயை அகன்று தன்னுடைய நினைவு வந்தது. இறைவனின் மேல் அன்பு மிகுந்து வெட்கத்தில் தலைகுனிந்தார். இக்காட்சியினை கண்ட அமைச்சர் சுமதிக்கு தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவர் தடாகையிடம் அம்மையே சிவபெருமானான இப்பேரழகனே தங்களின் மணவாளன் என்று கூறினார். அதனைக் கேட்ட மீனாட்சி அம்மையார் பேரன்பு பெருக நின்றார்.
இறைவன் தடாகையிடன் நீ திக்விஜயத்தின்போது என்று புறப்பட்டாயோ அன்று முதல் யாமும் உம்மை தொடர்ந்து வந்தோம். உன்னை திங்கள்கிழமை அன்று நல்ல முகூர்த்தம் கூடிய பொழுதில் திருமணம் செய்ய வருவோம். நீ தற்போது உன் நகரமாகிய மதுரைக்கு செல் என்று திருவாய் மலர்ந்து அருளினார். இறைவனிடம் அன்பினையும் உயிரினையும் வைத்த தடாகை தன் படைகளுடன் மதுரைக்குத் திரும்பினார். மதுரை திரும்பிய தடாகை தன் அன்னையான காஞ்சன மாலையிடம் நடந்தவைகள் அனைத்தையும் கூறினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த காஞ்சன மாலை தடாகையின் திருமணச் செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்கும்படி அமைச்சர்களிடம் கூறினார். தடாகையின் திருமணம் பற்றிய செய்தியானது யானையின் மீது அமர்ந்து மணமுரசு மூலம் பாண்டிய நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு அரசர்களுக்கும் மீனாட்சி திருமணம் பற்றிய ஓலைகள் அனுப்பப்பட்டன.
தடாகையின் திருமணம் பற்றி அறிந்ததும் மக்கள் தங்கள் வீடுகளையும் நகரங்களையும் அலங்கரித்தனர். திருமணத்திற்கான மண்டபம் பொன்னாலும் நவமணிகளாலும் உண்டாக்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை தருவோர் அமர இருக்கைகள் தயார் செய்யப்பட்டன. திருமணத்தை எல்லோரும் பார்த்து மகிழும் வண்ணம் திருமண மண்டபத்தின் நடுவில் மணமேடை அமைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டது. சிவபிரானின் திருமணச் செய்தியை அறிந்த தேவர்கள் அனைவரும் கையிலையில் அர அர என்று துதித்தனர். பின்னர் நந்திதேவரின் அனுமதியுடன் இறைவனை கண்டு வணங்கினர். குபேரன் இறைவனை அழகான மணமகனாக அலங்கரித்தார். குண்டோதரன் குடைபிடிக்க இறைவனார் இடப வாகனத்தில் ஏறி மதுரை நகரின் வெளியே எழுந்தருளினார். இறைவனான சிவபெருமான் மதுரை நகரின் புறத்தே எழுந்தருளி இருப்பதை அறிந்த காஞ்சன மாலை பாண்டிய நாட்டு அமைச்சர்களுடன் சென்று அவரை வரவேற்றாள். காஞ்சன மாலை இறைவனாரிடம் உலக இயக்கத்திற்கு காரணமானவரே தாங்கள் தடாதகையை மணம் செய்து பாண்டிய நாட்டை ஆள வேண்டும் என்று விண்ணப்பித்தாள்.
இறைவனும் அவ்வாறே ஆகுக என்று காஞ்சன மாலைக்கு அருள்பாலித்தார். பின் மதுரை நகரில் அமைந்திருந்த திருமண மேடைக்கு இறைவன் சொக்கநாதாராக எழுந்தருளினார். தடாகையை பெண்கள் அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வந்து மணமகனான சுந்தரேஸ்வரரின் அருகில் அமர்த்தினர். தடாகை உலக அன்னையாக மீனாட்சியாக காட்சி கொடுத்தாள். திருமால் மீனாட்சியை தாரை வார்த்து சொக்கநாதருக்கு கொடுக்க மீனாட்சி சொக்கநாதர் திருமணம் இனிது நிறைவேறியது. பின்னர் இறைவன் காஞ்சன மாலைக்கு கொடுத்த வாக்கின்படி மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இறைவனார் நடுவூர் என்னும் ஊரினை உருவாக்கினார். அதில் இம்மையிலும் நன்மை தருவார் என்னும் சிவாலயத்தை ஏற்படுத்தினார். பின் இம்மையிலும் நன்மை தருவாரை வழிபாடு நடத்தினார். இம்மையிலும் நன்மை தரும் இறைவனனான சிவபெருமான் வழிபட்ட இடம் என்ற பெருமையை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலை சாரும். இக்கோவில் தற்போது மதுரையின் நடுவே அமைந்துள்ளது. பின் சிவபிரானார் பாண்டிய நாட்டின் அரசனாக நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்தார்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
மதுரையை ஆண்ட இறைவன் தமிழுக்கு முதல் சங்கத்தை ஏற்படுத்தி தானே அதற்கு தலைவராகவும் இருந்து தமிழின் பெருமையை அனைவரும் அறியச் செய்தார். உலக மக்கள் இந்த பிறவியிலேயே நன்மை பெற வேண்டும் என்று இம்மையில் நன்மை தருவார் ஆலயத்தை ஏற்படுத்தி அருளியிருக்கிறார்.