சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் ஐம்பத்தி நான்காவது படலமாகும்.
இறைவனார் என்று தெரிந்தும் பாடல் பொருள் குற்றம் உடையது எனக் கூறிய நக்கீரரை இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார். பின்னர் எல்லோருடைய வேண்டுதலின்படி நக்கீரர் மீது அருளுள்ளம் கொண்டு பொற்றாமரைக் குளத்திலிருந்து எழுந்தருளச் செய்தார். நக்கீரர் இறைவனின் மீது பேரன்பு கொண்டு தினமும் உள்ளம் உருக வழிபட்டு வந்தார். இறைவனாரும் நக்கீரருக்கு இலக்கணம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஆகையால்தான் அவன் இருமுறை தனது பாட்டில் குற்றம் கண்டு பிடித்தான். சொல்லழகு பொருளழகு மிக்க பாக்களைப் பிரிக்கும் இலக்கண அறிவுவை நக்கீரருக்கு கொடுக்க வேண்டும். ஆகையால் புலமைமிக்க ஒருவரைக் கொண்டு இலக்கணம் போதிக்க வேண்டும். யாரைக் கொண்டு இலக்கணம் போதிக்கலாம்? என்று சிந்திக்கலானார். இதனைக் கண்ட மீனாட்சி அம்மன் ஐயனே தங்களுடைய சிந்தனைக்கு விடைகூற எண்ணுகிறேன். முன்னொரு காலம் உலகில் உள்ள எல்லோரும் தேவர்களும் திருமால் பிரம்மா உள்ளிட்ட அனைவரும் தங்களை வழிபட கயிலாயத்திற்கு வருகை தந்தனர். இதனால் பூமியின் வடகிழக்குப் பகுதி தாழ்ந்தது. தென்மேற்குப் பகுதி உயர்ந்தது. அப்போது அகத்திய முனிவருக்கு தாங்கள் தமிழையும் இலக்கணத்தையும் முறையாக கற்றுத் தந்து தென்மேற்கு பகுதிக்குச் செல்லச் செய்து புவியை சமன் செய்தீர்கள். தற்போது அகத்திய முனிவர் தனது மனைவியான உலோபமுத்திரையுடன் பொதிகை மலையில் உள்ளார். அகத்தியரைக் கொண்டு நக்கீரருக்கு தமிழ் இலக்கணத்தை கற்பிக்கச் செய்யலாம் என்று கூறினார்.
இறைவனாரும் உள்ளம் மகிழ்ந்து தம் உள்ளத்தில் அகத்தியரை நினைத்தருளினார். இறைவனின் உள்ளக் குறிப்பை அறிந்ததும் அகத்தியர் தன் மனைவியுடன் மதுரைக்கு விரைந்து இறைவனாரை வழிபாடு செய்தார். அகத்தியரைக் கண்ட இறைவனார் அருந்தவச் செல்வனே நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் கற்பிப்பாய் என்று பணிந்தருளினார். அகத்தியர் இறைவனை வணங்கினார். அங்கு வந்து தம்மை வணங்கிய நக்கீரனுக்குத் தமிழ் இலக்கணம் முழுவதையும் பிழையின்றிக் கற்பித்தார். நக்கீரனும் ஐயம் இன்றிக் கற்றார். அகத்தியரின் திறமை கண்டு மகிழ்ந்த இறைவர் அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார். தமிழ் இலக்கணத்தைக் குற்றமற்றுக் கற்ற நக்கீரர் இப்போது தன் குற்றங்களை உணர்ந்து மனம் நொந்தார். தன் பாடல் எவ்வளவு இலக்கண பிழை இருந்திருக்கிறது. இறைவனது பாக்கள் எவ்வளவு உயர்ந்தது என்று இலக்கணம் கற்ற பிறகே நக்கீரருக்குப் புரிந்தது. முன்னர் தம்மால் பாடப்பட்ட நூல்களில் உள்ள குறைகளை எல்லாம் நீக்கிக் கொண்டார். இறைவனின் பெருங்கருணையை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்து நான் அறியாமையால் தங்கள் பாடலுக்குச் சொல்லிய குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன் என்று வேண்டினார். பின்னர் நக்கீரர் அகத்தியரிடம் கற்ற இலக்கணத்தை மற்றைய புலவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து சொக்கநாதரின் திருவடிகளில் முதிர்ந்த பக்தியோடு இருந்தார். இப்படி வழிவழியாக வந்ததே தமிழ் இலக்கணம். மீனாட்சி அம்மன் சொக்கநாதரிடம் அகத்தியருக்கு இலக்கணம் போதித்த தாங்கள் ஏன் நக்கீரருக்குப் போதிக்கவில்லை? அகத்தியரை ஆசிரியராக்கிய காரணம் என்ன? எனக்கேட்டாள். சொக்கநாதர் புன்சிரிப்புடன் அகத்தியன் நிறை குடம். தமிழை கற்றுக் கொள்ள தகுதி உள்ள பொறாமையற்ற கீழ்படிதலுள்ள சொல்வதை அப்படியே கேட்கும் மாணவர்களுக்கே என் நேரடிப் பாடங்கள் கிடைக்கும் என்றார்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
எந்த அறிவாக இருந்தாலும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஆசிரியரிடம் எதிர்த்து பேசாமல் அவர் சொல் கேட்க வேண்டும் என்பதையும் நமக்குத் தெரிந்த கல்வியை அறிவை தெரியாதவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.