சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஏழுகடல் அழைத்த படலம் நூலின் ஒன்பதாவது படலமாகும்.
இறைவன் சுந்தரபாண்டியனாராக மதுரையின் அரசுப் பொறுப்பை ஏற்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் காலத்தில் கௌதம முனிவர் மதுரைக்கு வந்து சுந்தரபாண்டியனாரைச் சந்தித்தார். பின் அவர் இறைவியான தடாகையின் தாயான காஞ்சன மாலை தங்கி இருந்த அரண்மனைக்கு வருகை தந்தார். காஞ்சன மாலையும் கௌதம முனிவரை வரவேற்று உபசரித்து அவரை தகுந்த ஆசனத்தில் அமர்த்தினாள். காஞ்சன மாலை கௌதம முனிவரிடம் தவத்தில் சிறந்தவரே என் மகளான தடாதகைக்கு சிறந்த முறையில் திருமணம் முடிந்து ஆட்சி பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆதலால் பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடையக் கூடிய வழியினை எனக்கு கூறுங்கள் என்று கேட்டாள். அதற்கு கௌதம முனிவரும் காஞ்சன மாலையே நீ செய்த தவத்தின் காரணமாக இறைவியை மகளாகவும் இறைவனையே மருமகனாகவும் பெற்று உள்ளாய். உனக்கு வழிகாட்டும் தகுதி எனக்கு இல்லை. இருப்பினும் வீடுபேற்றினை அடையக் கூடிய வழியை நீ கேட்டதால் உனக்கு நான் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். அறங்கள் மூன்று வகைப்படும். அவை மன அறம். நா அறம். உடல் அறம். இவை மானதம் வாசிகம் காயகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று அறங்கள் செய்வதின் வழியாக வீடுபேற்றினை அடையலாம்.
முதல் வழி: தர்மசிந்தனை. தருமமும் தானமும் செய்தல். பிற உயிர்களின் மீது இரக்கம் கொள்ளுதல். பொறுமை காத்தல். உண்மை பேசுதல். ஐம்பொறிகளையும் அடக்கி ஆளல். நேர்மை. இறைவனை தியானம் செய்தல். தூய்மை பக்தி ஆகியவைகளான மானதம் என்று சொல்லக் கூடிய மன அறம் ஆகும்.
2 வது வழி: மந்திரங்கள் உச்சரிப்பது. இறைவனின் துதிப் பாடல்களைப் பாடுதல். வேத நூல்களைப் படித்தல். மந்திரங்கள் சொல்லி யாகங்கள் செய்தல். திருக்கோவிலை வலம் வருதல். சுவைக்கு அடிமையாகாமல் இருப்பது. எவரையும் தூஷிக்காமல் இருத்தல் ஆகியவைகளான வாசிகம் என்னும் நா அறம் ஆகும்.
3 வது வழி: ஆலயங்களுக்கு சென்று வணங்குதல். ஆலயத் திருப்பணி செய்தல். தல யாத்திரை செல்லுதல். தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவைகள் காயகம் என்னும் உடல் அறம் ஆகும்.
இதில் உடனே பயனளிக்கக் கூடியது தீர்த்தமாடல் ஆகும். புலனடக்கமும் யாகமும் செய்த பலன் தீர்த்தமாடுதலில் கிடைக்கிறது. வினைகளின் காரணமாக பிறவி என்று ஒன்று இருந்தால் அடுத்தப் பிறவி பெருஞ் செல்வந்தனாக்கும். முற்பிறவிகளில் செய்த பாபங்கள் தொலையும். அத்தனை தீர்த்தங்களிலும் நீராடுவ தென்பது நடக்கக் கூடிய காரியமா? அதனால் எல்லா நதிகளும் கலக்கும் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று கௌதம முனிவர் கூறிச் சென்றார்.
கௌதம முனிவரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட காஞ்சன மாலை கடலில் நீராட விருப்பம் கொண்டாள். ஆதலால் தன்னுடைய விருப்பத்தை தன் மகளான தடாகையிடம் கூறினாள். தடாகை சுந்தரபாண்டியனாரிடம் சென்று கௌதம முனிவரின் வழிகாட்டுதலின்படி பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடைய என் தாயான காஞ்சன மாலை கடலில் சென்று நீராட விரும்புகிறாள். ஆனால் மதுரையிலோ கடல் இல்லை. இதற்கு தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். தடாகையின் கோரிக்கையை கேட்ட சுந்தரபாண்டியனார் தடாகை நீ கவலை கொள்ள வேண்டாம். உன் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற ஏழு கடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்கிறேன் என்று கூறி ஏழு கடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்தார். ஏழு கடல்களும் இறைவனின் ஆணைப்படி ஆர்ப்பாரித்து மதுரையின் எழுந்தருளின. ஏழு கடல்களும் மக்களின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் கடலின் பேரிரைச்சலினை மட்டும் மக்கள் கேட்டனர். கண்ணுக்குத் தெரியாத கடல்களின் பேரிரைச்சல் கேட்ட மதுரை நகர மக்கள் நடுக்கி சுந்தரபாண்டியனாரிடம் சென்று அச்செய்தியைத் தெரிவித்தனர். சுந்தரபாண்டியனார் ஏழு கடல்களையும் மதுரையில் மீனாட்சி கோவின் கீழ்புறத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் செல்ல ஆணையிட்டார். ஏழுகடல்களும் கிணற்றினுள் எழுந்தருளின. பின்னர் மக்கள் கடலின் பேரிரைச்சலைக் கேட்கவில்லை.
மதுரையில் ஏழுகடல்களும் எழுந்தருளியதன் விளைவாக மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்திற்கு எதிரே உள்ள புதுமண்டபத்திற்கு எதிரே உள்ளது விட்டவாசல் தெரு. விட்டவாசல் தெரு வழியில் இடது பக்கம் ஏழு கடல் பொய்கையைப் பார்க்கலாம். இந்த தெருவானது எழுகடல் தெரு என்று இன்றும் அழைக்கப் படுகிறது.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
அனைவரும் வீடு பேறு அடைவதற்கு ஏழு கடல்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிணற்றில் அளித்து அருளினார். மேலும் கடலில் நீராடுவது உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதோடு வீடுபேற்றினையும் அளிக்கும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.