முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் மதவெறியால் இந்துக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு ஆன்மிக சக்தியளிக்க ஸ்ரீ ராமதாசரும் ஸ்ரீ பக்த துக்காரமும் மராட்டிய மண்ணில் அவதரித்தனர். அதே காலத்தில் தன் வீரவாளின் மூலம் தன் திடீர் தாக்குதலின் மூலம் முகலாயர்களின் தூக்கத்தைக் கெடுத்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி.
ஸ்ரீ ராமதாசரையும் பக்த துக்காராமையும் தன் ஆன்மிக குருவாக பெற்றார் சிவாஜி. ஒரு சமயம் வனத்திலிருந்த ஸ்ரீ ராமதாசரின் ஆசிரமத்திற்கு தன் வீரர்கள் துணையின்றி தனியாகவே வந்தார் சிவாஜி. அப்போது ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார் ராமதாசர் சிவாஜியை உள்ளே அழைத்து அப்பூஜையில் பங்கேற்கச் செய்தார். அப்பூஜையில் பங்கேற்ற சிவாஜி ஆழ்ந்த தியான நிலைக்கு சென்றார்.
அப்போது வெளியில் வந்த ராமதாசர் முகலாய வீரர்கள் சிவாஜி தனியாக இந்த ஆசிரமத்திற்கு வந்ததை அறிந்து அவரை கொல்வதற்கு இந்த ஆசிரமத்தை சுற்றிவளைத்து மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்ததைக் கண்டார். உடனே தன் சீடன் சிவாஜிக்கு எவ்வித ஆபத்து நேரக்கூடாதென தன் தெய்வமான அனுமனை வணங்கினார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. எங்கிருந்தோ திடீரென்று வந்த காட்டுக்குரங்குகள் கூட்டம் ஆசிரமத்தை நோக்கி முன்னேறிய முகலாய வீரர்களை கடித்து குதறத் தொடங்கின. குரங்குகளின் இந்த முரட்டுத்தனமான தாக்குதலைத் தாங்க முடியாமல் முகலாய வீரர்கள் அங்கிருந்து தலைத் தெறிக்க ஓடினர். சற்று நேரம் கழித்து தியானம் கலைந்த நடந்ததெல்லாம் கேள்விப்பட்ட சிவாஜி ராமதாசருக்கு நன்றி கூறினார். அப்போது ராமதாசர் தான் சிவாஜியின் உயிரை காப்பாற்றவில்லை என்றும் தான் வழிபடும் ஸ்ரீ அனுமனே சிவாஜியை காப்பாற்றியதாக கூறினார். ஸ்ரீ அனுமன் தனக்கு அருள்புரிந்ததை எண்ணி மெய்சிலிர்த்தார் வீர சிவாஜி.