ஒரு வீட்டு வாசலில் ஒரு மரம் இருந்தது. அதன் கீழ் ஒரு துறவி அமர்ந்திருந்தார். அந்த வீட்டில் ஒரு வேசி இருந்தாள். அவருக்கு வேசியின் மேல் மிகவும் அக்கறை. இவள் இந்தத் தீய தொழிலைச் செய்து இப்படி வீணாகப் போகிறாளே என்று வருத்தப்படுவார். ஒரு ஆசாமி உள்ளே போனதும் ஒரு சிறிய கல்லை எடுத்துப் போடுவார். அப்படிப் போட்டதில் மலைபோல கற்கள் அங்கு குவிந்துவிட்டது. வேசிக்கோ துறவியைப் பார்த்து பொறாமை இவர் எப்போதும் தெய்வத்தை நினைத்து தியானத்திலேயே இருக்கிறாரே நாம் இந்தப் பாவத் தொழிலை செய்து கொண்டு இருக்கிறோமே என்று எப்போதும் நினைத்து வருந்தியபடி இருந்தாள். ஒரு நாள் அவள் இறந்துபோனாள். தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் அவளை அழைத்துப் போவது துறவிக்குத் தெரிந்தது. துறவி ஆச்சரியத்துடன் பார்த்தார்.
சிறிது நாட்களில் துறவி இறந்தார் அவரை யம தூதர்கள் வந்து நரகத்துக்கு அழைத்துப் போனார்கள். துறவிக்கு கோபம் வந்துவிட்டது. என்ன இது அநியாயம் நான் எப்போதும் இறை நினைவாகவே இருந்தேன். எனக்கு நரகம் அதோ கல்குவியல் அளவுக்கு ஆண்களோடு சுகித்த வேசிக்குப் புஷ்பக விமானமா என்று கேள்வி கேட்டார். எமதூதர்கள் கூறினார்கள் முனிவரே அவள் இறைவனைத் தியானம் செய்யமுடியவில்லையே என்று இரவும் பகலும் இறைவனை எண்ணியபடியே தன் தொழிலைச் செய்தாள். நீங்களோ இறைவனை நினைத்து தியானம் செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை பேர் செல்கின்றார்கள் என்று பார்த்து கல்லை போட்டுக்கொண்டிருந்தீர்கள். இந்தக் கல்குவியல் அளவுக்கு அவளேயே நினைத்துப் பாவம் சம்பாதித்துக் கொண்டீர்கள் என்று நரகத்திற்கு அழைத்துப் சென்றார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை
கருத்து: எந்த செயல் செய்தாலும் எண்ணங்களே பிரதானம்.