யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள பகுதி ஒன்றில் (இன்றைய மதுரா) ஒரு சின்னஞ்சிறு இடையன் வசித்து வந்தான். அவனுக்கு விளையாட யாரும் தோழர்கள் இல்லாததால் ஒரு சிறு கல்லையே சிவலிங்கமாக கருதி அதை பூஜித்து விளையாடி வந்தான். சேற்றையே சந்தனமாக கருதி அதற்கு இட்டு அழகு பார்த்தான். மேய்ச்சல் நிலத்தில் கிடைத்த சில மலர்களை கொண்டு அதற்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தான். நைவேத்தியத்திற்கு கனிகள் கிடைக்கவில்லை என்பதால் பல வகை மண் வகைகளையே உருண்டையாக பிடித்து வைத்து அவற்றை கனிகளாக பாவித்து அந்த சிவலிங்கத்திற்கு படைத்து மகிழ்ந்தான். அவன் வழிபாடு அன்போடும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது.
இடையர் குலச் சிறுவனின் இந்த பூஜையை பெரிதும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்ட சிவபெருமான் குபேரனின் தனத்தில் இருந்து பெருமளவு எடுத்து அச்சிறுவனுக்கு கொடுத்து அவன் பூஜித்து வந்த அந்த கல்லை ரத்தின லிங்கமாக மாற்றிவிட்டார். அவனுடைய வீடும் சகல செல்வங்களாலும் நிரம்பி ரத்தின மயமாக காட்சியளித்தது. திடீரென தான் பூஜித்து வந்த சிவலிங்கமானது ரத்தினக் கல்லாகவும் தனது வீடு உள்ளிட்ட அனைத்தும் செல்வத்தால் நிரம்பி வழிவதைக் கண்ட அந்த சிறுவன் வியப்படைந்தான். அப்போது அவன் முன்னர் பிரத்யட்சமானார் சிவபெருமான். தான் ஏக்கத்தோடு பணிந்து பூஜித்து வந்த சிவபெருமான் தன் முன் நிற்பதை கண்ட அந்த பாலகன் அவரை பணிந்து பலவாறு துதித்தான்.
சிவபெருமான் அந்த சிறுவனை நோக்கி குழந்தாய் நீ செய்துள்ள புண்ணியத்தால் இனி உன் பெயர் ஸ்ரீகரன் என்று வழங்கப்படும். மேலும் உன் வம்சத்தில் நந்தகோபன் என்கிற மகன் பிறப்பான். அவரிடம் மகாவிஷ்ணுவே மகனாக வளர்வார். நமது நல்லாசிகள் என்று கூறிவிட்டு மறைந்தார். அதன் பிறகு அந்த சிறுவன் பல காலம் சிவபூஜை செய்தபடி வாழ்ந்துவிட்டு அனைத்து விதமான இன்பங்களையும் துய்த்துவிட்டு இறுதியில் சிவலோகப் ப்ராப்தி அடைந்தான்.
கருத்து: எவ்வளவு பெரிய மற்றும் சிறிய யாகங்கள் பூஜைகள் செய்தாலும் எந்த எண்ணத்தில் செய்கின்றோம் என்பதே முக்கியமானது.