சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக் கோட்டை அருளிய படலம் முப்பத்தி எட்டாவது படலமாகும்.
மதுரையில் அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளன் ஒருவன் இருந்தான். அடியவர்களுக்கு தொண்டு செய்வதே அறமாகக் கொண்டதால் அடியார்க்கு நல்லான் என்று பெயர் பெற்றான். அவனுடைய மனைவி தரும சீலை. இப்பெண்மணியும் அறவழியில் நடந்து கணவன் அறவழியில் செல்வதற்கு உதவினாள். தினமும் அடியவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிட்ட பின்பே இருவரும் உணவருந்துவார்கள். அடியார்க்கு நல்லான் தன்னுடைய வேளாண்மையில் விளைந்த பொருட்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு வரி செலுத்தி மீதி உள்ளதை சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தல் என்னும் சிறப்பான சேவையை செய்து வந்தான். தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அடியார்களுக்கு திருவமுது செய்விக்க பயன்படுத்தினான். இதனால் நாளடைவில் அடியார்க்கு நல்லானிடம் திருவமுது உண்ணும் சிவனடியார்களின் கூட்டம் பெருகியது. இந்நிலையில் இறைவனார் அடியார்க்கு நல்லான் தன்னுடைய செல்வம் குறைந்த போதிலும் சிவனடியார்க்கு செய்யும் திருவமுது செய்வித்தலை குறையாகக் கொள்ளமாட்டான் என்ற உயர்ந்த பண்பினை உலகுக்கு உணர்த்த விரும்பினார். நாளடைவில் அடியார்க்கு நல்லானின் விளைநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால் அவனிடம் இருந்த செல்வவளம் குன்றியது. எனினும் அடியார்க்கு நல்லான் பிறரிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தான். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அடியார்க்கு நல்லானுக்கு யாரும் கடன் தரவில்லை. அடியார்க்கு நல்லானும் தரும சீலையும் வறுமையால் சிவனடியார்களுக்கு திருவமுது செய்யவும் இயலாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தனர். இறுதியில் அடியார்க்கு நல்லான் தன்னுடைய மனைவியான தரும சீலையுடன் சொக்கநாதரின் சந்நிதிக்குச் சென்றான். அப்பனே என்னுடைய விளைநிலங்களில் விளைச்சல் இல்லை. எனவே பிறரிடம் கடன்வாங்கி அடியார்களுக்கு திருவமுது செய்வித்தேன். இப்போது எனக்கு கடன் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. தயவு செய்து கடன் தருபவர்கள் யாரவது இருந்தால் அவரை எனக்கு காட்டுங்கள். அவரிடம் கடன் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்விப்பேன். இல்லையேல் எங்களுடைய உயிரினை விட்டுவிடுவோம் என்று மனமுருகி வழிபட்டான்.
அடியார்க்கு நல்லானின் வழிபாட்டினைத் தொடர்ந்து வானில் இறைவனார் வேளாளனே பயப்பட வேண்டாம். உன் வீட்டில் நெல் உள்ள ஒரு உலவாக்கோட்டை (உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். 1 மரக்கால் என்பது 4 படி ஆகும். ) ஒன்றைச் வைத்துள்ளோம். அதிலிருந்து நெல்லை எப்பொழுது எவ்வளவு எடுத்தாலும் அள்ள அள்ளக் குறையாது. அதனைக் கொண்டு அடியவர்களுக்கு திருவமுது செய்விக்கும் தொண்டினையும் பிற தருமங்களையும் செய்து வருவாயாக. இறுதியில் யாம் வீடுபேற்றினை அளிக்கின்றோம் என்று திருவாக்கு அருளினார். அதனைக் கேட்ட அடியார்க்கு நல்லான் மகிழ்ந்து இறைவனாரை பலவாறு துதித்து வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய மனைவியுடன் தன்வீடு திருப்பினான். அங்கு இறைவனாரின் அருட்கொடையினால் அரிசிக் கோட்டையைக் கண்டான். நாள்தோறும் தன் மனைவியுடன் அதனை முறைப்படி வழிபட்டு அதிலிருந்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்துவித்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். இறுதியில் இறையருளால் வீடுபேறு பெற்றான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தானத்தில் சிறந்தது அன்னதானம். அதனை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சிவனுக்கே செய்யும் தொண்டாக எண்ணி செய்தால் இறைவன் அவர்களின் செயலுக்கு துணை நிற்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.