ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்து தங்களின் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை அடைய வழி காட்டுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். ஒருவன் ஞானியிடம் சுவாமி நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு பரிகாரம் உண்டா? இந்த பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஏதேனும் வழிகள் இருக்கிறதா? என்று வருத்தத்தோடு கேட்டான்.
அடுத்தவன் ஞானியிடம் நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள் சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். என்னை தண்டிக்கும் அளவுக்கு இவை ஒன்றும் பெரிய பாவங்கள் இல்லை. ஆகவே எனக்கு விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட வழி சொல்லுங்கள் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற வருத்தம் கூட இல்லாமல் கேட்டான்.
ஞானி முதல் கேள்வி கேட்டவனிடம் நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கி வா என்றார். இரண்டாவது கேள்வி கேட்டவனிம் நீ போய் ஒரு கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதல் நபர் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான். இப்போது ஞானி இருவரிடமும் தாங்கள் இந்த கற்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்களோ சரியாக அந்த இடத்திலேயே திரும்பப் போட்டு விட்டு வாருங்கள் என்றார். முதல் நபர் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன் இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்? என்று கேட்டான்.
ஞானி சொன்னார். இந்த காரியம் முடியாதல்லவா? அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் கேட்டு வந்திருக்கிறான். கல்லை எடுத்த இடத்திலேயே போட்டு விட்டு வந்தது போல அதற்கான வழியை செய்து விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவான். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. செய்த தவறை உணர்ந்து வருத்தப்பட்டு அந்த தவறுக்கும் மேலான நன்மைகளை செய்தால் மட்டுமே உனக்கு நன்மை நடக்கும். அதுவரை உனக்கு பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை என்பது மிகவும் கடினம் என்றார்.