கேள்வி: ஒருவனுக்கு உண்மையான ஆன்மிக தேடல் இருந்தால் அதற்கான குரு நாதர் அவனைத் தேடி ஒரு நாள் வருவார் என்று சொல்வதெல்லாம் உண்மையா? ஆன்மிக தேடல் கொண்ட ஒருவனை வேறு ஒரு இடத்தில் இருக்கும் ஞான குருவால் உணர முடியுமா?
புத்தர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு
புத்தர் ஒரு கிராமத்திற்கு உபதேசம் கொடுக்க ஒருநாள் மாலை நேரத்தில் வந்திருந்தார். கிராமத்து மக்கள் அனைவரும் கூடி விட்டனர். புத்தர் அந்த சின்ன கிராமத்திற்கு வருவார் என்று அந்த கிராமத்து மக்கள் எவருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் அங்கு கூடியிருந்தார்கள். இருப்பினும் புத்தர் யாருக்காகவோ காத்திருந்தார். அங்கிருந்த செல்வந்தர் ஒருவர் புத்தரின் அருகில் வந்து ஐயா நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள்? இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் இங்கு வந்து விட்டார்கள். இனி வருவதற்கு எவருமில்லை. உங்களது உபதேசத்தை ஆரம்பிக்கலாமே என்றார். புத்தர் புன்னகைத்தார். பிறகு அனைவருக்கும் கேட்கும்படி சொன்னார். இந்த இடத்திற்கு உபதேசம் செய்ய யாருக்காக வந்தேனோ அவர் இன்னும் வரவில்லை. நான் அவருக்காக காத்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும். எனக்கான கடமை இது. நீங்கள் அனைவரும் எனது உபதேசத்தை கேட்பீர்கள். ஆனால் அதில் உள்ள உண்மையை தேடுவீர்களா என்றால் அது கேள்விக் குறிதான். ஒரு ஜீவன் ஞானத்தேடலில் இந்த ஊரில் இருக்கிறது. அதன் உயிர் அலை இன்னும் இங்கு வரவில்லை ஆகவே காத்திருக்கிறேன் என்றார். அவர் சொன்னதை கேட்டதும் அங்கிருந்தோர் சங்கடப்பட்டனர். ஏனெனில் அந்த கிராமத்தில் உள்ள பணக்காரர்கள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பக்திமான்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தாகள். பிறகு யாருக்காக புத்தர் காத்திருக்கிறார்? என்று வருபவரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அவசர அவசரமாக ஒரு ஏழை குடும்பத்துப் பெண் வந்து அந்த கூட்டத்திற்குள் அமர்ந்து கொண்டாள். அவளது எஜமான் அந்த செல்வந்தர் கூட்டத்தின் முன் வரிசையில் தான் அமர்ந்திருந்தார். புத்தரை பார்க்க போக வேண்டும் என்று அவள் அவரிடம் அனுமதி கேட்டதும் நான் சொன்ன வேலையை முடித்து விட்டு பிறகு எங்கு வேண்டுமானாலும் போ என்று அலட்சியமாக சொல்லி விட்டார். வேலையை முடித்து விட்டு இப்போதுதான் வந்திருக்கிறாள். அந்தப் பெண்ணை பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு புத்தர் தனது உபதேசத்தை ஆரம்பித்தார். உடனே அந்த செல்வந்தர் புத்தரிடம் இவளுக்காகவா இத்தனை நேரம் காத்துக் கொண்டு இருந்தீர்கள்? இவள் எனது வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி என்றார் அலட்சியமாக. அதற்கு புத்தர் தனது புன்னகை மாறாமல் பதிலளித்தார். இவள் படிக்காதவள் ஒரு ஏழை கூலித் தொழிலாளி என்பதை யாம் அறிவோம். நான் பக்கத்து கிராமத்தில் இருக்கும்போது யாரோ என்னை அழைப்பதை போல உணர்ந்தேன். இனம் புரியாத ஒரு ஆன்மிகத் தேடல் அந்த அழைப்பில் மறைந்திருப்பதையும் உணர்ந்து கொண்டேன். இந்த கிராமத்தில் இவள் மட்டுமே எனது உபதேசத்தை கேட்டு கடைபிடித்து அதை உணர்ந்து கொள்ளும் தன்மையில் இருக்கிறாள். இவளுக்காகத்தான் நான் இந்த கிராமத்திற்கே வந்தேன். இந்த பெண்ணினுடைய ஞானத்தேடல் என்னை இங்கே வரவழைத்து விட்டது என்றார் புத்தர். பிறகு தனது உபதேசத்தை அந்த பெண்ணை பார்த்தபடியே ஆரம்பித்தார். அந்த பெண்ணும் கும்பிட்ட கரத்துடன் கண்கள் கசிய புத்தரை பார்த்தபடியே அவர் சொல்வதை கேட்டு அதன் ஆழ்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டாள்.
ஆன்மிக ஞானத்தேடலுக்கு ஆண் பெண் அல்லது உயர்வு தாழ்வு அல்லது வயது என்ற எந்த விதமான வேறுபாடுகளும் இல்லை. ஞானத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் திறந்த அமைதியான மன நிலையே வேண்டும். அவரே சிறந்த சீடர். ஞான குருநாதர் என்பவர் எப்போதுமே ஆன்மிக தேடல் உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தேடி அவர்களுக்குத் தேவையானதை கொடுத்துக் கொண்டே இருப்பார் அவரே ஞான குரு.
