மதுரையில் மீனாட்சி சிவனுக்கு வலப்புறமாகவும் திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சிவனுக்கு இடப்புறமாகவும் நின்று அருள் பாலிக்கிறார்கள். ஏன்?
சிவன் கோயில்களில் மூன்று விதமாக அம்மன் சன்னிதியை அமைக்கலாம் என்று ஆகம சாத்திரங்கள் கூறுகின்றன.
ஒன்று: சிவன் சன்னதி எந்த திசை நோக்கி அமைந்துள்ளதோ அந்தத் திசை நோக்கி அம்மனையும் பிரதிஷ்டை செய்வது. அதாவது சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கி காட்சி தருவர். இதை சமான வீஷணம் என்பர். மதுரையிலும் திருவண்ணாமலையிலும் இந்த அமைப்பு உள்ளது. அதில் இரண்டு வேறுபாடுகள் உள்ளது. சுவாமிக்கு வலப்புறம் அம்பாள் சன்னதி இருப்பதற்கு கல்யாணக் கோலம் என்று பெயர். சுவாமிக்கு இடப்புறம் அம்பாள் சன்னதி இருப்பற்கு அர்த்தநாரீஸ்வர கோலம் என்று பெயர்.
இரண்டாவது: சிவன் சன்னிதி கிழக்கு அல்லது மேற்கு முகமாக இருந்தாலும் அம்பாள் சன்னிதி தெற்கு முகமாகவே அமைந்திருக்கும். இதற்கு அனுக்கிரஹ வீஷணம் என்று பெயர். சுவாமியை தரிசிக்கும் முறையில் அம்பாள் பிரதிஷ்டை அமைந்திருக்கும். சுவாமியின் அனுக்கிரகத்தைப் பெற்று அம்பாள் நமக்கு அருள்வதாகப் பொருள். இந்த நிலை அனேகம் கோயில்களில் உள்ளது.
மூன்றாவது: சுவாமி சன்னிதி மேற்கு நோக்கி இருந்தால் அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். நேர் எதிராகப் பார்த்துக் கொள்ளும் அமைப்பு. இதற்கு அபிமுக வீஷணம் என்பர். இந்த அமைப்பு கொண்ட கோயில் அரிதாகவே இருக்கும். திருக்கடவூர் காளஹஸ்தி போன்ற தலங்களில் இந்த அமைப்பு உள்ளது.
இவ்வாறு சிவன் கோயில்களில் மூன்று திசைகளில் அம்பாள் அருள்பாலித்தாலும் அவளது அருளில் எந்த வேறுபாடும் கிடையாது. மூன்றுமே ஒன்றுதான்.