ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் ஒரு குயவன் பானை செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள் சட்டிகள் குடங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த குயவனுக்கு அருகில் ஒரு ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தது. அது ஒரு நொடிகூட ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. துறவி அந்த குயவன் இருந்த இடத்திற்குச் சென்று தரையில் அமர்ந்தார். அவரைக் கண்டதும் அவருக்கு வணக்கம் தெரிவித்த குயவன் சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிப் பருகிய துறவி இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா? என்று கேட்டார். இல்லை சுவாமி இது ஒரு காட்டாடு. வழி தவறி வந்தது. நான் பிடித்து கட்டிப் போட்டேன் என்றான் குயவன். எதற்காக? என்று துறவி கேட்டார். அதற்கு குயவன் பண்டிகை வரப்போகிறது. அந்த நாளில் இறைவனுக்கு பலி கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன் என்றான். துறவி வியப்பு மேலிட பலியா? என்றார். ஆமாம் சுவாமி தெய்வத்துக்கு திருவிழா வரும்போது பலி கொடுப்பது இறைவன் விரும்புவார். இதனால் இறைவன் மகிழ்ந்து வரம் கொடுப்பார் என்றான். குயவன் இப்படிச் சொன்னதும் துறவி தன் கையில் வைத்திருந்த தண்ணீர் மண் சட்டியை ஓங்கி தரையில் போட்டார். அது துண்டு துண்டாகச் சிதறியது. பின்னர் சிதறிய பாகங்களை எடுத்து குயவனிடம் கொடுத்தார். குயவன் கோபத்தில் என்ன சுவாமி இது என்றான். உனக்குப் பிடிக்குமே என்றுதான் இப்படி உடைத்துக் கொடுக்கிறேன் என்றார் துறவி. உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? இல்லை கேலி செய்கிறீர்களா? நான் செய்த பானையில் என் உழைப்பு இருக்கிறது. அதை உடைக்க நான் எப்படி சம்மதிப்பேன். இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்குச் சென்னது? என்றான்.
துறவி மென்மையாக சிரித்தபடியே ஆண்டவன் படைத்த ஒரு உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு மட்டும் யார் சொன்னது? அதை ஏற்று மகிழ்ந்து இறைவன் வரம் தருவான் என்று எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதை விரும்புவாள்? எந்த தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? இறைவன் படைத்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நீ அவன் படைத்த பொருளையே அவனுக்கு படைப்பாயா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார். அவரது வார்த்தைகளைக் கேட்ட குயவன் தெளிவு பெற்றவனாக ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு துறவிக்கு தனது வணக்கத்தை செலுத்தினான்.