ஒரு முனிவர் ஒருவர் வெகுநாட்களாக இமயமலை அடிவாரத்தில் சாதுக்களுடன் தவமிருந்து பல சக்திகளைப் பெற்றார். தான் பெற்ற சக்தியை இறைவனின் அருளை மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து மக்களுக்கு இறைவனின் மீது நம்பிக்கையும் சரணாகதியும் வர வைக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தை தேர்வு செய்து கிராம மக்களிடம் தான் இங்கு ஆசிரமம் அமைத்து தங்கப் போவதாகவும் இங்கு சிறிய ஆலயம் ஒன்று கட்டி இங்குள்ள பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தை கற்பிக்கப் போவதாகவும் கூறினார். அவருக்கு அந்த கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து அவர்களும் அவருக்கு உதவியாக அவர் தங்குவதற்கு தென்னை ஓலைகள் பனை ஓலைகள் போன்றவற்றை கொடுத்து இடத்தையும் சீர் செய்து கொடுத்தனர். அங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். கிராம மக்களும் பூஜைக்கு தேவையான பால் பழம் இளநீர் போன்றவற்றை கொண்டு வந்து கொடுத்தனர். பூஜைகள் செய்து விட்டு மக்களுக்கு புராண கதைகளை கூறி தர்மத்தை போதித்தார்.
ஒரு நாள் அந்த வழியாக ஒரு ஆடு ஒன்று மேய்ந்து வந்தது. அது பாறை தடுக்கி கீழே விழுந்து அதன் கால் முறிந்து ரத்தம் கொட்டியது. உடனே முனிவர் அந்த ஆட்டுக் குட்டியை பிடித்து தன் ஆசிரமத்திற்கு பின்னால் இருந்த ஒரு பச்சிலையை கொண்டு வந்து அதன் காலில் துணியால் கட்டி இறைவா உனது செயல் இந்த ஆடு குணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். உடனே அந்த ஆடு எழுந்து ஓட ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவன் கிராமத்தில் சென்று முனிவர் செய்த அதிசயத்தை கூறினான். உடனே அந்த கிராமத்து மக்கள் முனிவரை வந்து சந்தித்து அங்கு நோய் வாய்ப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை செய்யும்படி கூறினார்கள். அதற்கு முனிவர் நான் வைத்தியன் அல்ல ஏதோ ஒரு பச்சிலையை எடுத்து அந்த ஆட்டு குட்டிக்கு கட்டினேன். இறைவன் குணப்படுத்தினார். அது எழுந்து ஓடியது. எனது செயல் ஒன்றும் இல்லை என்றார். ஆனால் கிராம மக்கள் இல்லை முனிவரே நீங்கள் உங்கள் கையால் எதை கொடுத்தாலும் எங்களுக்கு சுகமாகும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சொல்லி நோயாளிகளை அழைத்து வந்தார்கள். முனிவரும் செய்வதறியாது இறைவா இதுவும் உன் செயல் என்று கூறி நினைத்து காட்டிலிருந்த தனக்கு தெரிந்த மூலிகை செடிகளை பச்சிலைகளை பறித்து தனக்கு தெரிந்தவரை சிலவற்றை காய வைத்து பவுடராக ஆக்கியும் சில தழைகளை அரைத்து லேகியம் போல உருண்டைபிடித்தும் சில பச்சிலைகளை தைலம் போல தயாரித்து வைத்தார். கிராம மக்கள் தங்களுக்கு உண்டான நோய்களை சொல்லி மருந்து கேட்டபோது அவர்கள் வியாதிக்கு ஏற்றபடி மருந்தை கொடுத்து இறைவா குணப்படுத்து என்று பிரார்த்தனை செய்து கொடுத்தார். நம்பிக்கையுடன் வாங்கி சென்ற கிராம மக்கள் விரைவில் குணமடைந்தனர். தினமும் கூட்டம் வெளி கிராமத்தில் இருந்தும் வர ஆரம்பித்தது. அந்த ஊரில் இறைவன் மீது நம்பிக்கை இல்லாத ஒரு வாலிபன் இந்த சாமியார் செயலைப் பார்த்து இந்த ஆளை சோதிக்க வேண்டும் என்று வந்தான்.
முனிவரை பார்த்து நீங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மூலிகைகளைத்தான் கொடுக்கிறீர்கள் எப்படி குணமாகிறது என்று கேட்டான். அது இறைவன் செயலப்பா என்று முனிவர் கூறினார். எனக்கு இப்போது தீராத வயிற்று வலி அதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள் என்று சிரிப்புடன் கேட்டான். அவன் எண்ணத்தை புரிந்து கொண்ட முனிவர் இவனுக்கு வயிற்று வலி அல்ல. நம்மை சோதிக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்து சரியப்பா அப்படியே செய்கிறேன் என்று சும்மா அவன் கையைப் பிடித்து பார்த்து விட்டு அந்த லேகியத்தில் ஒரு ஐந்து உருண்டை எடுத்துக் கொடுத்து தம்பி உனக்கு தீராத வயிற்று வலி. வயிறெல்லாம் புண்ணாகி உள்ளது. ஆகவே இந்த லேகியத்தை காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் அணிந்து ஒரு லேகியத்தை வெரும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டால் குணமாகும். இதற்கு ஒரு பத்தியம் இருக்கிறது நீ இந்த லேகியத்தை சாப்பிடுவதற்கு முன்பு குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது. நீ குரங்கை நினைத்து இந்த லேகியத்தை சாப்பிட்டால் அது எதிர்மறையாகி உன் உயிருக்கு ஆபத்தாகி விடும் அதுதான் பத்தியம். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வா. குரங்கை நினைத்து விட்டால் இந்த லேகியத்தை சாப்பிடாதே. மறுநாள் சாப்பிடு என்று அனுப்பி வைத்தார். மருந்து சாப்பிடாமலேயே தனக்கு குணம் ஆகிவிட்டது என்று மக்களிடம் சொல்லி இந்த முனிவரை திட்ட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு உள்ளே நுழைந்த உடனேயே அவனுக்கு உண்மையிலேயே வயிற்று வலி வருவது போன்ற உணர்வு வந்தது. என்ன இது உண்மையிலேயே வயிறு வலிக்கிறதோ என்று பயந்தான். பின் முனிவர் கொடுத்த மருந்துதான் இருக்கிறதே வயிற்று வலி வந்தால் காலையில் முனிவர் சொன்னது போல குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் இட்டுக் கொண்டு அந்த லேகியத்தை எடுத்து சாப்பிடலாம் என்று நினைத்துவிட்டு படுத்து விட்டான்.
காலையில் எழுந்ததும் வயிற்று வலி அதிகமாக இருந்தது. முனிவர் சொன்னது போலவே குளித்துவிட்டு திருநீறு அணிந்து கொண்டு லேகியத்தை எடுத்ததுமே குரங்கு ஞாபகம் அவனுக்கு வந்தது. முனிவர் எதை நினைக்கக் கூடாது என்றாரோ அந்த குரங்கு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருந்தது. குரங்கை நினைத்து விட்டோமே. இனி இந்த லேகியத்தை சாப்பிட்டால் நம் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று அன்று மருந்து சாப்பிடாமல் விட்டு விட்டான். அன்று முழுதும் வலியால் துடித்தான். மறுநாள் விடிந்ததும் குளித்துவிட்டு அதேபோல் லேகியத்தை எடுத்து சாப்பிட போனான் அப்போதும் அந்த குரங்கு தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அன்றும் சாப்பிடவில்லை. இப்படியாக ஐந்து நாட்கள் வயிற்று வலியிலேயே அந்த லேகியத்தை சாப்பிடாமல் துடித்தான். இனி தாமதிக்கக்கூடாது என்று அந்த முனிவரிடம் ஓடிவந்து முனிவரே என்னை மன்னியுங்கள். நான் உங்களை சோதிக்கவே சும்மா வயிற்று வலி என்று சொன்னேன். ஆனால் உண்மையிலேயே வயிற்று வலி வந்து விட்டது. நீங்கள் கொடுத்த லேகியத்தை சொன்னபடி சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பத்தியம் கடைபிடிக்க முடியவில்லை அந்த லேகியத்தை எடுக்கும் போதெல்லாம் என் கண் முன்னே குரங்கு தான் வந்தது அதனால் மருந்தை சாப்பிட முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அதன்படியே செய்கிறேன். என் வயிற்று வலியை குணப்படுத்துங்கள் என்று மனதார வேண்டினான்.
முனிவர் அவனை தட்டிக் கொடுத்து தம்பி உனக்கு ஒன்றுமில்லை நீ கவலைப்படாதே நீ என்னை சோதிக்க வந்தாய் அதனால் நான் உன்னை சோதித்தேன். பத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை நீ குரங்கை நினைத்து சாப்பிட்டாலும் அது ஒன்றும் செய்யாது லேகியம் வேலை செய்யும் வயிற்று வலி குணமாகும். இந்த லேகியத்தை இங்கேயே வாயில் போட்டு தண்ணீர் குடி மீதியை வீட்டிலிருந்து மீதி நான்கு நாட்களுக்கும் சாப்பிட சரியாகிவிடும். எதிலுமே நம்பிக்கை வைத்து எந்த செயல் செய்தாலும் அது வெற்றி அடையும். கிராம மக்கள் என்னிடம் நம்பிக்கையோடு வந்தார்கள் நான் கொடுத்த மருந்தை சாப்பிட்டார்கள் குணமானார்கள். நம்பிக்கை இல்லாமல் அரைகுறையாக எந்த காரியம் செய்தாலும் அது திருப்தி அடையாது வெற்றியடையாது என்று ஆசி கூறி அனுப்பினார்.
