திருவிளையாடல் புராணம் 14. இந்திரன் முடிமேல் வாளை எறிந்த படலம்
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் நூலின் பதினான்காவது படலமாகும்.
உக்கிரபாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அப்பொழுது ஒரு சமயம் மழையானது மூவேந்தர்கள் ஆட்சி செய்யும் தமிழ் நாட்டில் பொய்த்தது. ஆகையால் தமிழ் நாட்டில் நீர் வளமின்றி பஞ்சம் உண்டானது. நாட்டு மக்களின் துயர் தீர்க்க எண்ணிய மூவேந்தர்களும் பொதிகை மலையில் வசித்த அகத்தியரின் உதவியை நாடிச் சென்றார்கள். அகத்தியரும் கோள்களின் நிலையையும் கால நிலையையும் ஆராய்ந்து மூவேந்தர்களிடமும் அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யாது. ஆதலால் நீங்கள் மழைக் கடவுள் வருணனுக்கு தலைவனான இந்திரனிடம் மழையைப் பெய்யச் செய்யுமாறு கேளுங்கள் என்று கூறினார். மூவேந்தரும் அகத்தியரிடம் நாங்கள் இந்திரனை சந்திக்க வேண்டுமென்றால் இந்திர லோகம் செல்ல வேண்டும் நாங்கள் எப்படி இந்திலோகத்திற்கு செல்வது என்று கேட்டார்கள். அதற்கு அகத்தியர் நீங்கள் மூவரும் சோம வார விரத வழிபாட்டினைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தை அடையுங்கள் என்று கூறினார். தமிழ் மூவேந்தரும் சோமவார விரத முறையை விளக்குமாறு அகத்தியரிடம் கேட்டுக்க கொண்டார்கள்.
சோமாவார விரத முறையை பின்பற்ற விரும்புபவர்கள் கார்த்திகை மார்கழி மாதங்கள் மற்றும் இரண்டு அமாவாசை சேர்ந்து வரும் மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் திங்கள் கிழமைகளில் இவ்விரதத்தை துவக்கலாம். இதற்காக விரதம் தொடங்கும் திங்கள் கிழமைக்கு முந்தைய ஞாயிற்று கிழமைகளில் இரவில் உணவு உண்ணாமல் நிலத்தில் படுத்து உறங்க வேண்டும். திங்கள் கிழமை அதிகாலையில் எழுந்து சொக்கநாதரை மனதில் நினைத்து அன்றைய கடன்களை முடித்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி வெண்ணீறு அணிந்து கொள்ள வேண்டும். மந்தாரை முல்லை இருவாட்சி சாதி மல்லிகை மலர்களால் விநாயகரை வழிபட்டு பின் சொக்கநாதரை முறைப்படி வழிபட வேண்டும். பின் பஞ்சாமிர்தம் பஞ்சகவ்வியம் நறுங்கனித்தேன் சந்தனக்குழம்பு குளிர்ந்த தூய நீர் ஆகியவற்றால் இறைவனுக்கு அபிசேகம் செய்ய வேண்டும். அழகிய வெண்பட்டு பச்சைக் கற்பூர சுண்ணம் சந்தனம் மல்லிகை உள்ளிட்ட மணமுள்ள மாலை ஆகியவற்றை அணிவிக்க வேண்டும். பொன்னாலான அணிகலன்களை இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். பல வித பலகாரம் பானகம் மணம் மிக்க தாம்பூலம் ஆகியவற்றைப் படைத்து தீபதூப ஆராதனைகள் செய்து வில்வத்தால் அர்ச்சித்து மனமுருக வழிபாடு நடத்த வேண்டும். பின் தானங்கள் பலவற்றைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு வழிபட்டால் நல்ல திருமணப்பேறு நன்மக்கட்பேறு நல்லவாக்கு கல்வி பொருள் இனியபோகம் பகைவரை வெற்றி கொள்ளும் தன்மை இப்பிறவியிலேயே அரசுரிமை பிறநலன்கள் ஆகியவை கிடைக்கும். மேலும் முந்தைய பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று இப்பிறவியில் வீடுபேறு அடைவர். தேவருலகில் பதினான்கு இந்திரப் பட்டம் பெற்று அவன் பக்கத்தில் வாழ்வர்கள் என்று சோமவாரத்தின் விரதமுறை மற்றும் பலன்களை அகத்தியர் விளக்கிக் கூறினார்.
அகத்தியர் கூறிய விதிமுறைப்படி மூவேந்தர்கள் மூவரும் சோமவார விரதத்தைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தைச் சென்று அடைந்தனர். மூவேந்தரும் வருவதை அறிந்த இந்திரன் மூவேந்தர்கள் அமருவதற்காக தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ள சிம்மாசனத்தை அமைத்தான். இந்திரோலகத்தை அடைந்த மூவேந்தர்களில் சேரனும் சோழனும் இந்திரனின் காட்டிய சிம்மாசனத்தில் அமர்ந்தனர். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுக்கு சமமாக அவனுடைய சிம்மாசனத்தில் இந்திரனோடு அமர்ந்தான். இதனால் இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது கடும் கோபம் கொண்டான். இந்திரன் சேர சோழர்களைப் பார்த்து நீங்கள் வந்த காரியம் யாது? என்று கேட்டான். அவர்கள் இந்திரனிடம் மழைக்கு அதிபதியே எங்கள் நாட்டில் மழை பெய்யவில்லை. அதனைப் பெற வேண்டி இங்கே வந்தோம் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட இந்திரன் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் இரத்தின ஆபரங்கள் கொடுத்து அவ்விருவர் நாடுகளிலும் மழை பெய்ய செய்யவதாக வாக்கு கொடுத்து அவர்களை வழி அனுப்பினான்.
தனக்கு இணையாக அமர்ந்திருந்த உக்கிரபாண்டியனை நோக்கிய இந்திரன் அவனை அவமானப்படுத்த எண்ணி ஒரு சூழ்ச்சியைச் செய்தான். பல பேர் சேர்ந்து தூக்கி வரும் எடை அதிகமாக உள்ள முத்து மாலையை உக்கிரபாண்டியனுக்கு பரிசளிக்க எண்ணினான். அவனின் ஆணையின்படி பல பேர் சேர்ந்து முத்து மாலையைத் தூக்கி வந்து உக்கிரபாண்டியனிடம் நீட்டினர். உக்கிரபாண்டியன் முத்து மாலையை தூக்கத் திணருவதைப் பார்த்து கைகொட்டி சிரிக்க இந்திரன் எண்ணியிருந்தான். ஆனால் உக்கிரபாண்டியன் முத்து மாலையை எளிதாக தூக்கி கழுத்தில் அணிந்து கொண்டான். இதனைப் பார்த்த இந்திரன் அதிர்ச்சியடைந்தான். பின் உக்கிரபாண்டியனிடம் இன்று முதல் நீ ஆரம் தாண்டிய பாண்டியன் என்று அழைக்கப்படுவாய் என்று கூறினான். ஆனால் உக்கிரபாண்டியன் அதனைப் பொருட்படுத்தாது இந்திரனிடம் ஏதும் கேட்காது மதுரை நகர் திரும்பினான். சேர சோழ நாடுகளில் இந்திரன் மழையைப் பெய்வித்தான். பாண்டிய நாட்டில் மட்டும் மழை பெய்யவில்லை. ஒருநாள் உக்கிரபாண்டியன் மரங்கள் அடர்ந்த பொதிகை மலைச்சாரலில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது புட்கலாவருத்தம் சங்காரித்தம் துரோணம் காளமுகி என்னும் நான்கு மேகங்கள் பொதிகை மலைச்சாரலில் மேய்ந்து கொண்டிருந்தன. அதனைக் கண்ட உக்கிரபாண்டியன் அவற்றைப் பிடித்து சிறையில் அடைத்தான். இதனை அறிந்த இந்திரன் கடும் கோபம் கொண்டான். உக்கிரபாண்டியன்மீது போர் தொடுத்தான்.
பாண்டியனின் படைகளும் இந்திரனின் படைகளும் நேருக்கு நேராக நின்று போரிட்டனர். போரின் போது உக்கிரபாண்டியன் இறைவனான சுந்தரபாண்டியன் அளித்த வாளை இந்திரனை நோக்கி வீசினான். வாள் இந்திரன் அணிந்திருந்த கிரீடத்தைச் சிதைத்தது. அதனைக் கண்ட இந்திரன் நான் முன்னர் சோமசுந்தரரை வழிபட்டதின் பலனாக என்னுடைய தலை இன்று தப்பியது என்று எண்ணி போர் களத்தைவிட்டு வெளியேறி தேவலோகத்தை அடைந்தான். பின்னர் உனது நாட்டில் மழையைப் பொழிவிக்கிறேன். நீ என்னுடைய மேகங்களைத் திருப்பித் தருவாயாக என்று ஓலை ஒன்றை அனுப்பினான். இந்திரன் அனுப்பிய ஓலையை நம்பாததால் மேகங்களின் விடுவிக்க உக்கிரபாண்டியன் மறுத்து விட்டான். பாண்டிய நாட்டு வேளாளன் ஒருவன் அரசே இந்திரனின் செய்திக்கு நான் பிணை. இந்திரன் என்னை நன்கு அறிவான். ஆதலால் நீங்கள் மேகங்களை விடுதலை செய்யுங்கள் என்று கூறினான். உக்கிரபாண்டியனும் மேகங்களை விடுவித்தான். பின்னர் இந்திரன் பாண்டிய நாட்டில் மழையை பெய்யச் செய்து நாட்டை வளமாக்கினான். மழையால் பாண்டிய நாடு செழித்து பொலிவு பெற்றது.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபடும் முறை மற்றும் அதற்கான பலன்களை அருளினார். மேலும் வலிமை மிக்கவர்கள் தங்களை விட வலிமை குறைந்தவர்களை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டால் இறைவனின் அருளால் வலிமை மிக்கவர் தண்டிக்கப்படுவர்கள் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.