சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாயப் பசுவை வைத்த படலம் இருபத்தி ஒன்பதாவது படலமாகும்.
அனந்தகுணப் பாண்டியன் இறைவனான சொக்கநாதரின் அருளினால் சமணர்கள் உண்டாக்கிய நாகத்தினை அழித்து மதுரையைக் காத்தார். இதனை கண்ட சமணர்கள் எப்படியாவது சூழ்ச்சி செய்து மதுரையையும் சிவனடியாராகத் திகழ்ந்த அனந்தகுண பாண்டியனையும் அழிக்க எண்ணினர். பசுவானது சைவர்களுக்கு புனிதமானது. எனவே மாயப்பசுவை உருவாக்கி மதுரையை அழிக்க ஆணையிட்டால் அனந்தகுண பாண்டியன் புனிதத்தன்மையான பசுவினை எதிர்த்து போரிட மாட்டான். ஆகையால் அவனை எளிதில் வெற்றி கொள்ளலாம் என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் ஒன்றுகூடி மீண்டும் வேள்வி செய்யத் தொடங்கினர். வேள்வியின் இறுதியில் மாயப்பசு ஒன்று உருவானது. அவர்கள் மதுரையையும் அனந்தகுண பாண்டியனையும் அழிக்க மாயப் பசுவிற்கு ஆணையிட்டனர். மாயப்பசுவும் அவர்களின் ஆணையை ஏற்று மதுரையை நோக்கி விரைந்தது. வானளவிற்கு வளர்ந்திருந்த அப்பசு கண்ணில் பட்டவற்றை எல்லாம் அழிக்கத் தொடங்கியது. மாயப் பசுவின் செயல்களை மக்கள் அனந்தகுண பாண்டியனுக்குத் தெரிவித்தனர். இதனைக் கேட்டதும் அனந்தகுண பாண்டியன் திருகோவிலுக்குச் சென்று இறைவனான சொக்கநாதரிடம் முறையிட்டான். தன்னையும் தம்மக்களையும் காத்தருளும்படி வேண்டினான்.
சொக்கநாதர் அனந்தகுண பாண்டியனையும் மதுரை மக்களையும் காப்பாற்ற திருவுள்ளம் கொண்டார். அவர் நந்தியெம் பெருமானை அழைத்து நீ சென்று சமணர்கள் ஏவிய மாயப் பசுவினை வென்று வருவாயாக என்று கட்டளையிட்டார். நந்தியெம் பெருமானும் இறைவனின் ஆணைக் கேட்டதும் கண்களில் அனல் தெறிக்க மிகப்பெரிய காளை வடிவாகி மாயப் பசு இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார். காளை வடிவில் இருந்த நந்தியெம் பெருமானுக்கும் மாயப் பசுவிற்கும் நெடுநேரம் சண்டை நடந்தது. இறுதியில் நந்தியெம் பெருமான் அழகிய காளையாக வடிவெடுத்தார். அழகிய காளையைக் கண்ட மாயப் பசு அதனுடைய அழகில் மயங்கியது. மாயப் பசு மோகத்தினால் சண்டையை மறந்தது. சண்டையில் களைப் படைந்திருந்த மாயப் பசு மோகம் அதிகரித்தால் தன்னிலை மறந்து மயங்கி விழுந்து மடிந்தது. மாயப்பசு வீழ்ந்த இடம் மலையாக மாறியது. அம்மலையானது இன்றும் மதுரையில் பசு மலை என்று அழைக்கப்படுகிறது. மாயப் பசு மடிந்ததைக் கண்ட அனந்தகுண பாண்டியனும் மதுரை மக்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மாயப் பசுவினை வென்றதும் நந்தியெம் பெருமான் தன்னுடைய பூத உடலினை இடப மலையாக நிறுத்திவிட்டு சூட்சும உடலோடு திருக்கயிலாயத்தை அடைந்தார். இடப மலை என்பது இன்றைக்கு மதுரையில் அழகர்கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை அமைந்திருக்கும் இடம் ஆகும்.
இராமர் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் போது இடப மலையில் தங்கியிருந்தார். இதனை அறிந்த அகத்தியர் இராமரிடம் சென்று சொக்கநாதரின் பெருமைகளையும் இந்திரன் சாபத்தை அவர் போக்கி அருளியதையும் எடுத்துக் கூறினார். இராமர் சொக்கநாதரை வழிபட மதுரைக்கு வந்து பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி சொக்கநாதரை பலவாறு துதித்து வழிபட்டார். சொக்கநாதர் இராமா நீ இலங்கை சென்று வைதேகியை மீட்டு வெற்றியுடன் திரும்பி வந்து உன் நாட்டிற்குச் சென்று சிறப்புடன் ஆட்சி செய்வாயாக. அச்சம் கொள்ள வேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளினார். இராமர் இலங்கை சென்று இராவணனை வென்று மைதிலியுடன் வெற்றியுடன் இராமேஸ்வரத்தை அடைந்து சிவலிங்க வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் போது மதுரை வந்து சீதையுடன் சொக்கநாதரை வழிபட்டு தன்நாட்டிற்குச் சென்றார். அனந்தகுண பாண்டியன் தன்மகனான குலபூடணிடம் தன்னுடைய ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இறுதியில் சிவப்பேறு பெற்றான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தீவினைகள் எப்படி வந்தாலும் இறைவனை சரணடைந்தால் இறைவன் அதனை அழிப்பார் என்பதையும் மோகத்தில் (மோகம் என்றால் மாயையினால் நிகழும் மயக்க உணர்ச்சியில் மயங்கி தன்னிலை இழத்தல் ஆகும்) மயங்கினால் அழிவு நிச்சயம் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.