திருவிளையாடல் புராணம் 30. மெய் காட்டிட்ட படலம்
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மெய் காட்டிட்ட படலம் முப்பாதாவது படலமாகும்.
அனந்தகுண பாண்டியனின் மகனான குலபூஷண பாண்டியனின் ஆட்சியில் சுந்தர சாமந்தன் என்றொரு சேனாதிபதி இருந்தான். அவன் சொக்கநாதரிடமும் அவருடைய தொண்டர்களிடமும் நீங்காத பக்தி கொண்டு இருந்தான். அப்போது சேதிராயன் என்பவன் வேடுவர்களின் தலைவனாக இருந்தான். அவன் பல வெற்றிகளைக் கொண்ட செருக்கால் குலபூஷண பாண்டியனிடம் பகைமை கொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க எண்ணினான். இந்த செய்தியை ஒற்றர்கள் மூலம் குலபூஷண பாண்டியன் அறிந்தான். தனது சேனாதிபதியான சுந்தர சாமந்தனிடம் நீ நமது நிதி அறையினைத் திறந்து வேண்டுமளவு பொருள்களை எடுத்துக் கொண்டு புதிதாக சேனைப் படைகளை திரண்ட வேண்டும் என்று கட்டளையிட்டான். சுந்தர சாமந்தனும் நிதி அறையினைத் திறந்து தனக்கு வேண்டுமளவு பொருட்களை எடுத்துக் கொண்டான். அப்பொருட்களைக் கொண்டு சிவபெருமானுக்கு திருக்கோவிலும் ஆயிரங்கால் மண்டபமும் கட்டினான். சிவனடியார்களுக்கு திருஅமுது செய்வித்து எஞ்சியவற்றை உண்டு ஆறு மாத காலம் வரை வாழ்ந்து வந்தான். இச்சேதியை ஒற்றர் மூலம் குலபூடண பாண்டியன் அறிந்தான். குலபூஷண பாண்டியன் சுந்தர சாமந்தனை உடனடியாக அரண்மனைக்கு வர உத்தரவிட்டான். சுந்தர சாமந்தன் வந்ததும் எவ்வளவு படை திரட்டி இருக்கிறாய்? எனக் கேட்டான். அதற்கு சுந்தர சாமந்தன் மனதில் சொக்கநாதரைத் தியானித்தபடி போதுமான படை திரட்டி விட்டேன் என்று கூறினான். உடனே குலபூஷண பாண்டியன் நாளை சூரியன் மறையும் முன்பு சேனைப்படை வீரர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்து வரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான்.
குலபூஷண பாண்டியனின் கட்டளையை கேட்ட சுந்தர சாமந்தன் அதற்கு சம்மதம் தெரிவித்தான். பின்னர் திருக்கோவிலை அடைந்து எம்பெருமானே அரசன் அளித்த நிதியினைக் கொண்டு சிவதொண்டு செய்துவிட்டேன். இனி எப்படி பெரும் சேனைகளை நாளை திரட்டிக் காண்பிப்பது? என்று பிரார்த்தனை செய்தான். அதற்கு இறைவனார் நாளைக்குச் சேனை வீரர்களோடு நாமும் வருவோம். நீ பாண்டியனின் அவைக்குச் சென்று என் வரவை எதிர்பார்ப்பாயாக என்று அசிரீரீயாக திருவாக்கு அருளினார். மறுநாள் சொக்கநாதர் தமது சிவகணங்களை வேல் ஏந்திய படை வீரர்களாகவும் தாமும் ஒருகுதிரை வீரனாகவும் உருவம் எடுத்துக் கொண்டார். தன்னுடைய இடப வாகனத்தை குதிரையாக்கி அதன்மேல் ஏறி தன் பரிவாரம் சூழ ஒற்றைச் சேவகராய் மதுரையை நோக்கி எழுந்தருளினார். சேனையின் வரவினைக் கண்ட சுந்தர சாமந்தன் குலபூஷண பாண்டியனின் முன்சென்று வணங்கி சேனைகளின் வரவு பற்றி தெரிவித்தான். குலபூஷண பாண்டியனும் மனம் மகிழ்ந்து அரண்மனை மேலிருந்து சேனைப் படைகளை பார்வையிட்டான். சுந்தர சாமந்தன் அணிவகுத்து நின்ற ஒவ்வொரு பகுதியினரையும் இறைவனாரின் அருளால் சுட்டிக் காட்டி அவர்கள் எந்த நாட்டினைச் சார்ந்தவர்கள் என்று வரிசையாக காட்டினான்.
குலபூஷண பாண்டியன் ஒற்றைச் சேவகராய் நின்ற சொக்கநாதாரைக் காட்டி அவர் யார்? என்று கேட்டான். அதற்கு சுந்தர சாமந்தன் வந்திருப்பது இறையனார் என்பதை அறிந்து அவரையே பார்த்துபடி அசையாமல் நின்றார். அப்போது அரசன் முன் ஒற்றன் ஒருவன் வந்து அரசே சேதிராயன் வேட்டைக்குச் சென்றபோது புலியால் அடித்து கொல்லப்பட்டு இறந்தான் என்று கூறினான். அதனைக் கேட்ட பாண்டியன் சுந்தர சாமந்தனுக்கு நிறைய பரிசுகளை வழங்கினான். நீ படைக்கு ஆள் சேர்த்த நேரம் போருக்கு அவசியமே இல்லாமல் ஆகி விட்டது. அதனால் படை வீரர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து திருப்பி அனுப்பி விடு என்றார். சுந்தர சாமந்தன் படைவீரர்களைப் பார்த்து நீங்கள் செல்லுங்கள் என்று சொன்ன அடுத்த வினாடி படைகள் அனைத்தும் மறைந்தன. குலபூஷண பாண்டியன் திகைத்தான். சுந்தர சாமந்தனனை அழைத்துக் காரணம் கேட்க நடந்ததை ஒளிக்காமல் கூறினான் சுந்தர சாமந்தன். அதற்கு குலபூஷண பாண்டியன் உனக்கு மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதரே வந்து அருளினார் என்றால் எனக்கு அக்கடவுள் நீயே என்று கூறி அவனுக்கு பல சிறப்புகளைச் செய்தான். பின்னர் சிறிதும் மனக்கவலை ஏதும்மின்றி மதுரையை ஆண்டு வந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவனார் தம்மை நம்பும் அடியவர்களுக்காகவும் சிவத்தொண்டு புரியும் அடியவர்களுக்காகவும் எந்த வேடத்திலும் வந்து எதனையும் செய்து அருள் புரிவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.