எண்ணம்

ஒரு அரசர் இருந்தார் தன் மந்திரியுடன் ஒரு நாள் மாலை நேரம் நதி அருகே நடைபயிற்சி சென்றார்கள். அப்போது அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காயை பார்த்த அரசர் தொங்குவதை பார்த்த அரசர் மந்திரி அந்த வெள்ளரிக்காய எடுத்து வாருங்கள் சாப்பிடலாம் என்றார். மந்திரி வெள்ளரிக்காயை பறிக்க சென்றார். அங்கே அமர்ந்திருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்லை குமட்டிக் காய். அதனை தின்றால் வாந்தி வரும் என்றான். இதனை சோதிக்க அரசர் மந்திரியை பறித்து சாப்பிட சொன்னார். வேறு வழி இல்லாமல் மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு வாந்தி வந்தது. உடனே அரசர் இதற்கு என்ன தீர்வு? என்று குருடனை பார்த்து கேட்டார். அதற்கு குருடன் அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி வாயில் போட்டால் வாந்தி நிற்கும் என்றான். அதன்படி செய்ய மந்திரியின் வாந்தி நின்றது. அரசர் குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே? எப்படி சரியா தீர்வு சொன்னாய்? என்று கேட்டார். அதற்கு குருடன் இந்த நாட்டில் எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார் என்றான். அரசருக்கு மகிழ்ச்சி உடனே ஒரு முத்திரையை கொடுத்தார். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. இந்த முத்திரியை காண்பி. காலை உணவு கொடுப்பார்கள். சாப்பிட்டு என்று சொல்லிவிட்டு அரசர் சென்றார்.

சிறிது நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான். இது உண்மையான வைரமா போலியா என்று எப்படி கண்டு பிடிப்பது என்று அரசருக்கு குழப்பம். யாருக்கும் அதற்கான விடை தெரியவில்லை. அரசருக்கு குருடனின் ஞாபகம் வந்தது. அவனை அழைத்து வர கட்டளையிட்டார். குருடனும் வந்தான். அவனிடம் பிரச்சனையை சொல்லி பதில் கேட்டார். அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மதிய வெயிலில் வைத்தான். சிறிது நேரம் கழித்து அதை கையில எடுத்து பாரத்து அரசே இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் தெரியாமல் நடந்து விட்டது என்று சொல்லி சமாளித்து அனைத்து வைரத்தையும் இனாமா கொடுத்து விட்டு அங்கிருந்து நகன்றான். அரசருக்கு ஆச்சரியம் எப்படி கண்டு பிடித்தாய் என்று குருடனிடம் கேட்டார். அதற்கு குருடன் சொன்னான். அரசே வெயிலில் வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரித்தேன் என்றான். அரசருக்கு மகிழ்ச்சி உடனே இன்னொரு முத்திரையை கொடுத்தார். என் அரண்மனையில மேற்கு வாசலுக்கு போ. இந்த முத்திரியை காண்பி. மதிய உணவு கொடுப்பார்கள். சாப்பிட்டு என்று சொல்லி அவனை அனுப்பினார்.

அரசர் தன் மகனுக்கு திருமணம் செய்ய வரன் தேட ஆரம்பித்தார். பக்கத்து நாடுகளில் இருந்து பலர் இளவரசியை கொடுக்க தயாராக இருந்தாங்க. அரசருக்கு குழப்பம். யாரை தேர்ந்தெடுப்பது? அரசருக்கு குருடனின் ஞாபகம் வந்தது. அவனை அழைத்து வர கட்டளையிட்டார். குருடனும் வந்தான். அவனிடம் இளவரசியாக யாரை தேர்ந்தெடுப்பது என்று பிரச்சனையை சொல்லி பதில் கேட்டார். அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு அரசரோட பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்றான். அரசர் ஆச்சரியத்துடன் காரணம் கேட்டார். அதற்கு குருடன் அந்த அரசர் உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு அரசர் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அவன் போர் செய்ய விரும்பினால் இரண்டு பக்கமும் அவனுக்கு அடி விழும். ஆகவே அமைதியாக இருப்பான். எல்லை பிரச்சினை வராது என்றான். அரசருக்கு மகிழ்ச்சி உடனே இன்னொரு முத்திரையை கொடுத்தார். என் அரண்மனையில தெற்கு வாசலுக்கு போ. இந்த முத்திரியை காண்பி. இரவு உணவு கொடுப்பார்கள். சாப்பிட்டு என்று சொல்லி அவனை அனுப்பினார்.

ஒரு நாள் அரசர் அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார். நான் ஒன்று கேட்கிறேன். சரியா காரண காரியதோட பதில் சொல். என்றார். குருடனும் இயன்ற வரை சொல்கிறேன் என்றான். நமது நாட்டில் சிலர் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்தவராக இருப்பார் இந்த அரசர் என்று என்னை மறைமுகமாக அழைக்கிறார்கள். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இயன்றால் காரணத்தை சொல் என்றார். குருடன் அமைதியாக சிரித்தபடி சொல்ல மறுத்தான். அரசர் அவனை சொல்லும்படி அழுத்தம் கொடுத்தார். குருடன் அமைதியாக சொன்னான். நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்கிறேன். நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் அப்படின்னான். அரசருக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னை பார்த்தா இப்படி கணித்தாய்? என்று வருத்ததுடன் கேட்டார். அதற்கு குருடன் முதல் நாள் குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க மகிழ்ச்சி அடைந்து எனக்கு கொடுத்தது காலை உணவு. உண்மையான அரசராக இருந்தால் கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார். பின்பு கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செய்தேன். நீங்கள் மகிழ்ச்சி அடைந்து எனக்கு கொடுத்தது மதிய உணவு. உண்மையான அரசராக இருந்தால் கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார். மூன்றாவது ஒரு ராஜ்ஜியமே உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு வழி சொன்னேன். நீங்க மகிழ்ச்சி அடைந்து எனக்கு கொடுத்தது இரவு உணவு. உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார். ஆனா உணவை தாண்டி உங்க எண்ணம் போகவில்லை. உலகத்துலேயே பெரிய விஷயம் உணவுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதனால் நாட்டில் உள்ள சிலர் உங்களை அப்படி அழைக்கிறார்கள் என்றான். அரசர் வெட்கி தலை குனிந்தார்.

நாம் யார் என்பதை நம்மிடம் உள்ள பணமோ சொத்தோ பதவியோ தீர்மானிப்பதில்லை. நமது எண்ணங்களே தீர்மானிக்கின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.