சூரியன் அவதரித்த கதை

பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை செய்வதற்குத் துணையாக ஏழு ரிஷிகளைப் படைத்தார். அவர்களை சப்த ரிஷிகள் என்று அழைப்பார்கள். அவர்கள் மரீஷி, சுத்ரி, அங்கிரஸர், புலத்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்பவர் ஆவர். இவர்களுள் மரீஷி சம்பூதி என்பவளை மணந்தார். அவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன்தான் கச்யபர் எனப்பட்டார். மகா பண்டிதரான கச்யபர் எல்லாச் சாத்திரங்களையும் வேதங்களையும் நன்கு ஆழ்ந்து கற்று தேர்ச்சி பெற்று ஞான பண்டிதராகத் திகழ்ந்தார். இவருடைய மனைவியின் பெயர் அதிதி. கற்புச் செல்வி. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமி. தர்மதேவதை இவள் பெருமையை உலகுக்குக் காட்ட நினைத்த இளைவன் ஒரு நாடகம் ஆடினார்.

அதிதி கருவுற்றிருந்த நேரம். அந்த நிலையிலும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டினாள். ஒரு நாள் அதிதி தன் கணவன் கச்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் வாசல் பக்கத்தில் இருந்து தாயே பிச்சை போடு என்ற குரல் கேட்டது. தர்ம தேவதை மாறு வேடத்தில் வந்திருந்தான். குரல் கேட்டது என்றாலும் கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தால் அதிதியால் உடனே சென்று உபசரிக்க இயலவில்லை. கணவன் உணவு உண்டு எழுந்தபின் அன்னமும் கையுமாக விரைந்தாள் அதிதி. அவள் வந்திருந்த நபரிடம், ஐயா பொறுத்தருள்க என்று மன்னிப்புக் கேட்டு அன்னமிட முயன்றாள். வந்தவன் அதிதியைக் கோபத்துடன் நோக்கினான்.

அதிதி என்று பெயர் வைத்துக் கொண்டால் போதுமா? வந்தவரை எப்படிக் கவுரவிக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? சுவாமி கணவனுக்குப் பணிவிடை செய்ததால் வர காலதாமதமாகி விட்டது. நானோ கருவுற்றிருக்கிறேன். என்னால் இந்த நிலையில் வேகமாக நடக்கவும் முடியவில்லை நீங்கள் மன்னிக்க வேண்டும் என்றாள். உனக்குக் கணவன்தான் முக்கியம் அதைவிட உன் வயிற்றிலிருக்கும் கருவும் முக்கியம். உன் வீடு தேடி வந்த நான் மொத்தத்தில் அலட்சியப்படுத்தப்பட்டேன். எனவே சாபமளிக்கிறேன் உனது கரு மிருதம் ஆகக் கடவது என்று கடுமையான சாபம் தந்தார் மாறுவேடத்தில் இருந்த தர்ம தேவதை. இதனை கேட்ட அதிதி மயக்கமுற்றாள். விரைந்து வந்த கச்யபர் நடந்ததைப் பார்த்து ஞான திருஷ்டியால் உண்மையை அறிந்து கொண்டார். மனைவியின் மயக்கத்தை தெளிவித்தார். உண்மையை விவரித்தார். கரு அழியட்டும் என்று அவன் இட்ட சாபமானது அற்புதம் தான். புதல்வன் அற்புதமாகப் பிறப்பான் என்பதை அறிவிக்கக் கூடியது என்ற தெளிவினை மனைவிக்குத் தந்தார். மிருது பிண்டமாகாது. அண்டமாக மாறும் அந்த அண்டம் பிளக்கும். அதிலிருந்து ஒரு மகன் பிறப்பான். அவன் மார்த்தாண்டன் எனப்படுவான். விஷ்ணுவைப் போல வல்லமையுடன் இருப்பான். நவக்கிரகங்களுக்குத் தலைமை ஏற்பான் என்றார் கச்யபர். மனம் தெளிந்தாள் மனைவி அதிதி.

ஒரு பிரபவ ஆண்டு மகா சுக்ல சப்தமியில் விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஸ்கந்தனானது போல் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்று சேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களோடு உலா வந்தான். இவர்கள் தனித்தனியே 12 மாதங்களுக்கு ஆதித்யர்கள் ஆனார்கள். இவ்வாறு சூரியனின் அவதாரப் பெருமையை சாம்ப புராணம் என்னும் நூல் விளக்குகிறது.

சூரியனின் பெற்றோர்: காஷ்யப முனிவர், அதிதி.
சகோதரர்கள்: கருடன், அருணன்
மனைவியர்: உஷா, பிரத்யுஷா (சாயாதேவி)
மகன்கள்: எமதர்மன், சனீஸ்வரர், அஸ்வினி தேவர்கள், கர்ணன், சுக்ரீவன்.
மகள்கள்: யமுனை, பத்திரை.

தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

குரு எதற்கு

துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட சீடர்கள் ஆன்மிகப் பாதையில் சென்றனர். அந்த துறவியிடம் ஒரு சீடனுக்கு பிடிப்பு இல்லாமல் போனது. சாஸ்திரங்களைப் படித்து அதில் இருப்பதைத்தானே குரு நமக்கு கற்றுத்தருகிறார். சாஸ்திரங்களைப் படித்து நாமே அதைக் கற்றுக்கொள்ளலாமே இடையில் குரு எதற்கு என்ற எண்ணம் அந்த சீடனுக்குத் தோன்றியது. அவனது எண்ணத்தை மறுநாளே செயல்படுத்தினான். குருகுலத்தை விட்டு வெளியேறினான். தனியாக குடில் அமைத்து சாஸ்திர நூல்களைப் படிக்கத் தொடங்கினான். பசிக்கும்போது துறவிகளைப் போலவே கிராமத்திற்குள் சென்று யாசகம் பெற்று உணவு உண்பான்.

ஒரு நாள் சீடன் சாஸ்திர நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். அந்த நூலில் எச்சில் பரிசுத்தம். வாந்தி பண்ணினது பரிசுத்தம் இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்ற வாசகங்கள் இருந்தது. அதை அப்படியே மனதில் பதிய வைத்துக்கொண்டான். ஒரு நாள் அவன் யாசகம் பெறுவதற்காக கிராமத்திற்குள் சென்றான். அப்போது அங்கு ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும் எச்சில் இலைகளை கொண்டு போய் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போனார்கள். இதைக் கண்ட சீடன் கோபமுற்றான். சாஸ்திரம் தெரியாத முட்டாள்கள் என்று மனதுக்குள் திட்டியபடியே ஓடோடிச் சென்று குப்பையில் கிடந்த எச்சில் இலைகளை கையில் எடுக்க முற்பட்டான். அப்போது அவனை ஒரு பெரியவர் தடுத்து நிறுத்தினார். ஏனப்பா பார்ப்பதற்கு ஒரு தபஸ்வி போல் இருக்கிறாய். நீ போய் எச்சில் இலைகளை எடுக்க முயற்சிக்கிறாயே என்று விசாரித்தார்.

உங்களுக்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று தெரியாது. அதனால்தான் என்னைத் தடுக்கிறீர்கள். எச்சில் பரிசுத்தம் என்று சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா என்று தனக்கு எல்லாம் தெரிந்தது போல் கூறினான் சீடன். முதியவர் குழம்பிப் போனார். அதன் பிறகு அவனிடம் முழுமையாக விசாரித்தார். அப்போது சாஸ்திரத்தில் தான் படித்த வார்த்தைகளை அவன் தெரிவித்தான். இப்போது அந்த முதியவருக்கு புரிந்து விட்டது இவன் ஒரு அரைகுறை என்று. சீடன் படித்த வாக்கியங்களுக்கான முழு அர்த்தத்தையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார். எச்சில் பரிசுத்தம் என்பது நீ நினைப்பது போன்று இல்லை. கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று விளக்கினார்.

சீடனின் மனதில் பெரிய குழப்பம். அப்படியானால் வாந்தி பண்ணினது பரிசுத்தம். இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்பதற்கு என்ன பொருள் என்று வினவினான். முதியவர் புன்னகைத்துக் கொண்டே அவனுக்கு பதிலளித்தார். தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் அப்படி கூறப்பட்டிருக்கிறது. பட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம். அதையே இறந்தவன் போர்வை பரிசுத்தம் எனச் சொல்லியிருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். சீடனுக்கு சாஸ்திரத்தில் கூறியிருந்ததன் அர்த்தம் இப்போது தான் முழுமையாக புரிந்து குருவை தேடிச்சென்றான்.