மகான் ஒருவரிடம் வந்த பக்தர் ஒருவர் அவரிடம் குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா குருவின் வழிகாட்டல் அவசியம் தேவையா என்று கேட்டான். அதற்கு அந்த மகான் அவனிடம் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும் பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரப்பலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது. அப்போது பக்தனை நோக்கி மகான் சொன்னார்.
இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல் அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு பிறவிக் கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள் ஒரு நல்ல குருவின் அருளும் வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம் என்றார். உண்மையை உணர்ந்த பக்தன் மாகானின் பாதங்களை வீழ்ந்து வணங்கி சரணடைந்தான்.
ஓர் ஊரில் வசித்த விவசாயி முருகன் இறைவன் மீது பெரிதும் பக்தி கொண்டவன். நல்லவன் பெரியோர்களை மதிப்பவன். ஏழையான அவன் போதும் என்ற மனதுடன் வாழ்ந்து வந்தான். செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதி நேர்மையாகத் தொழில் செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு மனைவியும் ஐந்து வயதில் மகனும் இருந்தார்கள். ஒரு சமயம் அவனுக்கு இறைவனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இறைவா நீங்கள் உங்கள் தரிசனத்தை எனக்குத் தந்து அருள் புரியுங்கள் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் முருகனின் பிரார்த்தனை பலித்தது. இறைவன் முருகனின் கனவில் தோன்றி அன்பனே வரும் புதன்கிழமை நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினார். கனவு கலைந்து எழுந்த முருகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தன் மகிழ்ச்சியை மனைவியிடமும் மகனிடமும் பகிர்ந்துகொண்டான். அவர்களும், தங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் மூழ்கினர். இறைவன் தங்கள் வீட்டிற்கு வரும்போது அவரை எப்படி உபசரிக்கலாம் என்று கலந்து பேசினார்கள். முடிவில் இறைவனுக்கு வழங்குவதற்கு இனிப்பு தயார் செய்ய வேண்டும். ஒரு ஜோடி புதிய செருப்பு கொடுக்க வேண்டும், ஒரு சால்வை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இறைவன் குறிப்பிட்ட புதன்கிழமை வந்தது. முருகன் குடும்பத்தினர் வீட்டை அலங்கரித்து வைத்திருந்தார்கள். ஆவலோடு வாசல் கதவருகில் காத்திருந்தார்கள்.
காலை மணி பத்தாயிற்று. அப்போது முருகன் வீட்டருகில் 35 வயது மதிக்கத்தக்க ஏழைப்பெண் தன் எட்டு வயது மகளுடன் வந்து கொண்டிருந்தாள். அவளது நடையில் ஒரு தளர்ச்சி காணப்பட்டது. முருகன் வீட்டுக்கு அருகில் வந்தபோது மயங்கி விழுந்து விட்டாள். முருகன் அந்தப் பெண் அருகில் சென்று, அவளுக்கு முதலுதவி அளித்தான். சிறிது நேரத்தில் அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்தாள். முருகன் அவளுடன் பேசியபோது அவளும் அவள் மகளும் வறுமை காரணமாக இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடப்பதும் பசியில் மயங்கி விழுந்தததும் தெரிய வந்தது. காரணம் தெரிந்ததும் அவன் அவர்களை தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். முருகன் குடும்பத்தினர் அவர்களுக்கு இறைவனுக்குத் தருவதற்காக வைத்திருந்த இனிப்புகளை கொடுத்தார்கள். மீதமிருந்த இனிப்பையும் அவர்களிடமே கொடுத்து இவற்றை எடுத்துச் செல்லுங்கள் என்றனர். அந்தப் பெண் முருகன் குடும்பத்தினருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்.
முருகனின் உள்ளம் இறைவன் பக்கம் திரும்பியது. அவர் எப்போது வரப் போகிறார் என்று பரபரத்துக் கொண்டிருந்தான். நேரம் கடந்தது. இந்த நிலையில் கடுமையான வெயிலில் ஒரு பிச்சைக்காரன் முருகன் வீட்டுக்கு அருகில் வந்தான். அவன் முருகனிடம் உங்களிடம் ஏதாவது பழைய செருப்பு இருந்தால் அதை எனக்குக் கொடுத்து உதவுங்கள் என்று வேண்டினான். முருகன் வீட்டிற்குள் சென்று, தான் இறைவனுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ஒரு ஜோடி புதிய செருப்பை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட பிச்சைக்காரன் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினான். மாலையில் குளிர் கடுமையாக இருந்தது. குளிரில் நடுங்கியபடியே முதியவர் ஒருவர் தெருவில் நடந்து வந்தார். அவரைப் பார்த்த முருகன் இவர் இப்படி குளிரில் கஷ்டப்படுகிறாரே என்று வீட்டிற்குள் சென்று கடவுளுக்காக வைத்திருந்த சால்வையை எடுத்தான். அவன் மனைவி இறைவனுக்காக இதை மட்டுமாவது வைத்திருங்கள் என்று கூறி தடுத்தாள். முருகன் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. சால்வையை முதியவருக்குப் போர்த்தினான். அவர் முருகனுக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றார். அன்று பகல் முடிந்து இரவும் வந்து விட்டது. இறைவன் வரவில்லை. முருகன் மிகவும் மனம் வருந்தினான். அந்த ஏமாற்றம் அவனைப் பெரிதும் பாதித்தது. அவன் இறைவனிடம் இறைவா நீங்கள் ஏன் இன்று என் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டுப் பிரார்த்தனை செய்தான். அப்போது இறைவனின் குரல் அசரீரீயாக ஒலித்தது:
இன்று நான் மூன்று முறை உன் வீட்டிற்கு வந்து நீ கொடுத்தவற்றைப் பெற்றுக் கொண்டேன். முதலில் ஒரு ஏழைப்பெண் அவள் மகள் வடிவத்தில் உன்னிடம் வந்து நீ கொடுத்த இனிப்புகளைப் பெற்றுக்கொண்டேன். இரண்டாவதாக ஒரு பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து செருப்பையும் அடுத்து முதியவர் வடிவத்தில் வந்து சால்வையைப் பெற்றுக்கொண்டேன் என்றார்.
சுவாமி விவேகானந்தரின் கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது. இறைவனுக்கு உதவுகிறேன் என்று இல்லாமல் அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம். உதவி என்ற சொல்லை உன் உள்ளத்திலிருந்தே விலக்கிவிடு. நீ உதவி செய்ய முடியாது. அப்படி நீ நினைப்பதே தெய்வ நிந்தனையாகும். இறைவனுடைய விருப்பத்தினால் தான் நீ இங்கு இருக்கிறாய். நீ ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு கொடுக்கும்போது அந்த நாயை இறைவனாகவே நினைத்து வழிபடு. அந்த நாய்க்குள் இறைவன் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார். எல்லாவற்றிலும் இருக்கிறார்.
ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு. உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான் அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம் மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.
குரு சீடனைப்பார்த்து சிறிது கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் மேலும் சிறிது நீரை ஊற்றினால் வலிக்குமா குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான். குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும் என்று கேட்டார். என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். உன் கேள்விக்கான விடை இதுதான் என்றார் குரு. காலில் விழுந்தான் சீடன்.
சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். இறைவனுக்கு நாம் செய்யும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டால் பாத்திரத்தில் சிறிதளவாவது காலியாகி விடவேண்டும் ஆனால் உணவு அப்படியே இருக்கிறது. நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினான். இதனை கேட்ட குரு பதில் எதுவும் சொல்லாமல் அவனை ஊடுருவி பார்த்துவிட்டு நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன் என்றார். பாடம் ஆரம்பித்த குரு அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட பூர்ணமிதம் எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார். அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். கேள்வி கேட்ட சிஷ்யனை அருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா என்று கேட்டார். முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே என்றான். எங்கே ஒரு முறை சொல் என்றார். கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தை கூறி முடித்தான். அனைத்தையும் கேட்ட குரு நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லை நான் கூறிய போது நீ எழுதிய சுவடியை காட்டு என்றார். பதட்டம் அடைந்த சிஷ்யன் சுவடியை எடுத்து காண்பித்தான். பிறகு குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் நீங்கள் சொல்லி சுவடியில் எழுயிருப்பதை போலவே கூறினேன் என்றான்.
இந்த சுவடியில் இருப்பதை படித்து உன் மனதில் உள்வாங்கினாய் என்றால் சுவடியில் மந்திரம் இருக்கிறதே சுவடியில் இருக்கும் மந்திரத்தை நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா என்றார். சிஷ்யன் குழப்பமாக பார்த்தான். குரு தொடர்ந்தார். உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. சுவடியில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் சுவடியில் இருக்கும் மந்திரம் அளவில் குறையவில்லை. அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம் என்றார்.
அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பால் தேவைப்படுகிறதென்றும், அரசனது அலுவலர் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா உங்கள் சோதனை என்று இகழ்ச்சியுடன் கேட்டான். பின்னர் அவன் தனது அலுவலர் அனைவரையும் அழைத்து துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூற அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துத் திரும்பினர். அன்றிரவு அவ்வாறே ஒவ்வொருவரும் ஒரு குடம் பாலை அதற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஊற்றிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது. துணுக்குற்ற அரசன் அலுவலர் அனைவரையும் அழைத்து விசாரித்தான். எல்லோரும் பால் ஊற்றும் போது தான் ஒருவன் மட்டும் பால் ஊற்றினால் எப்படித் தெரியப் போகிறது என நினைத்து எல்லோருமே தண்ணீரையே ஊற்றினர் என்பது விளங்கியது.
இந்த உதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறார்: கதையில் கண்ட அலுவலர்களைப் போலவே நாமும் நமது பங்கு வேலையைச் செய்து வருகிறோம். அதாவது எல்லா உயிர்களிலும் இறைவன் வசிக்கிறான் என்று கூறுகிறோம். ஆனால் அது கொள்கையளவில் இருக்கிறதே தவிர நடைமுறைக்கு வரவேயில்லை. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை அல்லது தனியுரிமை யாருக்குத் தெரியப் போகிறது என நினைக்கிறோம். நம்மிடமுள்ள இறைவன் எல்லோரிலும் இருக்கிறார். ஒவ்வோர் உயிரும் பரமாத்மாவின் கோவிலே. இதனை உணர்ந்து நம்முள் இருக்கும் சுயநலப்போக்கை தூக்கியெறிந்துவிட்டு எல்லா மக்களையும் சமமாகக் காணும் ஞானத்தைப் பெற முயலுங்கள் என அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஒரு அரசன் ஞானியிடம் சென்று என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றான். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றான். அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு என்றார் ஞானி. எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் மன்னன். நீ என்ன செய்வாய் என்றார் ஞானி. நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் என்றான் அரசன். எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு வழக்குகளை பார்க்கிறேன் என்றார். சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்து சிம்மாசனத்தில் அமர வைத்து நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும் என்ற ஞானி நீ இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு நீ செய்த பணிகளுக்கும் இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்? விழித்தான் அரசன். ஞானி சொன்னார். அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. இந்த உயிர் எனதல்ல. வேலை செய்வதற்காக இந்த உடல் எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய் என்று கூறி விடைபெற்றார் ஞானி.
கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான் கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற அழியாத பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள். நீயும் கடவுள் தான் என்றார். அதற்கு பக்தர் அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை என்று கேட்டான். அதற்கு அந்த மகான் உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார். ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை என்று பதிலளித்தார். இப்படி பல வழிகளில் அந்த மகான் உண்மையை புரிய வைக்க முயன்றார். அனால் அந்த பக்தரோ அதை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். இறுதியாத அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது மனிதர்கள் போலவே பேசும் குரல் அதற்கு இருப்பதால் உன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்றும் சொன்னார். உடனடியாக மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஹரித்வாருக்குப் புறப்பட்டார்.
அபூர்வமான மீனின் வருகைக்குக் காத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த மீன் அங்கு வந்து எங்கிருந்து வந்திருக்காய் என்று கேட்டது. அதற்கு அந்த பக்தர் மகான் ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார் என்று கூறினார். அதற்கு அந்த மீன் எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று கேட்டது. அதற்கு பக்தர் பைத்தியக்கார மீனே உன்னுடைய வலது இடது மேலே கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர் தானே இருக்கிறது என்று பதிலளித்தார். உடனே மீன் கொஞ்சம் கடுமையாக நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும் இருக்கிறார் என்று மிக அழகாகக கூறியது. அந்த பதிலைக் கேட்டுத் திருப்தி அடைந்த போதிலும் ஒரு சந்தேகத்தை முன் வைத்தான். அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன் என்று கேட்டான். அதற்கு அந்த மீன் இதே கேள்வி தான் எனக்கும் தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பது தான். மீனின் வடிவமைப்பு குறித்து அந்த பக்தன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மீன் எப்படி நீந்திதால் அதன் வாயில் தண்ணீர் சென்று அதன் தாகம் தணியும் என்பதை அவன் மீனிற்கு எடுத்துரைத்தான். உடனே மீன் எப்படி நீந்தினால் என் தாகம் தணியும் என்று நீங்கள் கூறியது போல கடவுளை உணர அதற்கு உண்டான வழியில் நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கடவுளை உணரலாம். ஆசைகளை திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பக்தரும் அப்படியே செய்து உண்மையை புரிந்து கொண்டார்.
கடவுளை அடைய வேண்டும் என்றால் எண்ணங்களை அவர் மீது வைக்க வேண்டும். பார்க்கும் எல்லாப் படைப்புகளிலும் அவரை உணர வேண்டும்.
குரு ஒருவர் ஒரு ஊருக்கு வந்தார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன் ஒருவன் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம் உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன் என்று கேட்டான். துறவி அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன். நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் அதற்கு முன் ஒரு வேலை செய் ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.
மறுநாள் காலை குரு அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும் அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன. அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் குரு. இன்று சுத்தப் படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் திரும்ப திரும்ப அசுத்தம் ஆகுதுன்னு சுத்தப்படுத்தாமல் விட்டால் இந்த இடம் மிகவும் அசுத்தம் ஆகிவிடும் ஆகையால் சுத்தம் செய்கிறேன் என்றான். இதை கேட்ட குரு அப்போது சொன்னார் தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன். அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் மனிதர்களை நல்வழிபடுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.
இளைஞன் கேட்டான் சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று கேட்டான். அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார். பின்பு அந்த இளைஞனைப் பார்த்து இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா என்று கேட்டார். ஆகாது சாமி என்றான். உன் கேள்விக்கு இதான் பதில். நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். பெரியவர்கள் வழிகாட்டும் பாதையில் சென்று மனிதன் தன்னிடம் இருக்கும் வினைகள் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி இறைவனை அடைந்து விடுகிறானோ அப்பொழுதே எங்களின் சுத்தப்படுத்தும் கடமை முடிந்து விடும் என்றார்.
ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைக்க யாரும் முயற்சிக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். என் வீடு என் வீடு என்று அலறினான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான் அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.
சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது. சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு அதே நெருப்பு அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு மனிதனை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது மனிதனை சோகம் தாக்குவது இல்லை. நான் என்னுடையது எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.
ஒருமுறை ஆதிசங்கரர் ஒரு ஊர் வழியாக சென்று கொண்டிருந்தார். ஒரு சின்னக் குட்டையில் தண்ணீர் குறைவாக இருந்ததினால் அதிலிருந்த மீன்கள் தண்ணீருக்காகப் பரிதவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த வழியாக தண்ணீர் எடுத்துக் கொண்டு போன கிராமத்து ஜனங்களிடம் மீன்களுக்காக கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அதற்கு ஊர்மக்கள் சாமி உனக்கு வேறு வேலை வெட்டி இல்லை என்று நினைக்கிறோம். பத்து வருடமாக எங்கள் ஊரில் தண்ணீரே இல்லை. நாங்கள் குடிப்பதற்காக எவ்வளவோ மைல் நடந்து போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறோம். நீ மீன்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறாயே அதெல்லாம் தர முடியாது என்றார்கள்.
தண்ணீர் எங்கே கிடைக்கும் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டு பத்து மைல் நடந்து போய் தன் கமண்டலத்தில் தண்ணீர் கொண்டு வந்து குட்டையில் கொட்டினார். அங்கே இருந்த மீன்கள் எல்லாம் தண்ணீரில் சந்தோஷமாக நீந்தின. உடனே இடி இடித்து மழை பெய்தது. இந்த மாதிரி ஒரு சிறிய தர்மத்திற்கே மழையை வரவழைக்க முடிகிறதே பத்து வருடமாக தண்ணீரே இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு தானதர்மம் செய்யத் தவறி விட்டீர்கள் என்றார்.
நீதி: எங்கு தான தர்மங்கள் சரியாக செய்யப்படுகறதோ அங்கு தண்ணீர் பஞ்சம் உணவு பஞ்சம் வராது.