எங்கிருந்து வந்தோம். எங்கே செல்வோம்

குருவே இந்த வாழ்கை பற்றி ஒரு சந்தேகம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நான் பிறப்பதற்கு முன் எங்கிருந்து வந்தேன். நான் இறந்த பின் எங்கே செல்வேன். இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் என்னால் இரவு தூங்க முடியவில்லை. இந்த கேள்விக்கு சற்று விளக்கமாக நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும் என்று கேட்டான். குரு சீடனிடம் புத்தக அறைக்கு சென்று ஒரு புத்தகத்தின் பெயரை சொல்லி அதை எடுத்து கொண்டு வா என்றார். சீடன் அந்த அறைக்கு சென்றான். அங்கு வெளிச்சம் எதுவும் இல்லாமல் இருள் நிறைந்து காணப்பட்டது. உடனே சீடன் குருவே இங்கு வெளிச்சம் எதுவும் இல்லை எப்படி நான் அந்த புத்தகத்தை தேடி எடுப்பேன் என்று கேட்டான். குரு ஒரு தீப விளக்கை சீடனிடம் கொடுத்து இப்போது சென்று புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா என்றார். சீடனும் குரு கூறிய புத்தகத்தை விளக்கு வெளிச்சத்தில் தேடி எடுத்து வந்து குருவிடம் கொடுத்தான். குருவே தாங்கள் இன்னும் அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றான் சீடன். குரு சீடன் கையில் வைத்திருந்த விளக்கின் தீபத்தை அணைத்தார்.

சீடனை இந்த புத்தகத்தை எப்படி எடுத்து கொண்டு வந்தாய் என்று கேட்டார். அதற்கு சீடன் இந்த விளக்கில் உள்ள வெளிச்சத்தின் உதவியால் கொண்டு வந்தேன் என்றான். சீடனே அது இரண்டாவது முறை முதல் முறை என்ன செய்தாய் என்று கேட்டார். முதல் முறை நான் அந்த அறைக்கு செல்லும் போது அங்கு வெளிச்சம் இல்லை அதனால் புத்தகத்தை எடுக்க இயலாமல் தடுமாறினேன் என்றான். சீடனே முதல் முறை உன்னால் புத்தகத்தை எடிக்க முடியவில்லை இந்த விளக்கின் ஒளியால் தான் இந்த புத்தகத்தை உன்னால் எளிதில் எடுக்க முடிந்தது அல்லவா என்றார். ஆம் குருவே என்றான் சீடன் இந்த விளக்கின் நெருப்பு எங்கிருந்து வந்தது என்று கேட்டார் குரு. சீடன் தெரியாது என்றான். அந்த விளக்கின் நெருப்பை அணைத்த பிறகு அந்த விளக்கின் வெளிச்சம் எங்கே சென்றது என்று கேட்டார் சீடன் தெரியாது என்றான். விளக்கிலிருந்த தீபம் இந்த பிரபஞ்ச பஞ்சபூத சக்தியிலிருந்து வந்தது. தீபத்தை அணைத்ததும் அந்த தீபம் பஞ்ச பூத சக்தியிடமே ஓடுங்கியது.

மாயை என்ற தெரியாத இருள்களுக்கு நடுவே நமது ஆசைகள் மற்றும் வினைகளின் காரணமாக இந்த மனித வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்குள் இறை நம்பிக்கை மற்றும் அந்த இறையிடம் சரணாகதி அடைந்தால் இந்த ஆசைகள் வினைகள் மாயை என்ற இருள் மறைய ஆரம்பித்து ஒரு வெளிச்சம் தோன்றும். அந்த வெளிச்சத்தில் பார்த்தால் புத்தகம் கிடைத்தது போலவே இறைவனை தரிசிக்கலாம். அந்த இறைவனது திருவடிதான் நாம் இறுதியாக சென்று சேரும் இடம். நாம் வந்ததும் அந்த திருவடியிலிருந்துதான். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே மீண்டும் சென்று சேருவோம். இறைவனது திருவடியை தவிர வேறு கதி என்று ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை. ஆகவே எங்கிருந்து வந்தோம் எங்கே போவோம் என்ற சிந்தனையை தூக்கி எறிந்து உனக்குள் தீபத்தை ஏற்றி இந்த வெளிச்சத்தில் இறைவனை தரிசித்து அவரது திருவடியை சேர்ந்தால் இறப்பு பிறப்பு இல்லாத பேரின்ப இறைவனது திருவடியில் லயித்திருக்கலாம் என்று சொல்லி முடித்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.