பரமாத்மா

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பால் தேவைப்படுகிறதென்றும், அரசனது அலுவலர் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா உங்கள் சோதனை என்று இகழ்ச்சியுடன் கேட்டான். பின்னர் அவன் தனது அலுவலர் அனைவரையும் அழைத்து துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூற அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துத் திரும்பினர். அன்றிரவு அவ்வாறே ஒவ்வொருவரும் ஒரு குடம் பாலை அதற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஊற்றிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது. துணுக்குற்ற அரசன் அலுவலர் அனைவரையும் அழைத்து விசாரித்தான். எல்லோரும் பால் ஊற்றும் போது தான் ஒருவன் மட்டும் பால் ஊற்றினால் எப்படித் தெரியப் போகிறது என நினைத்து எல்லோருமே தண்ணீரையே ஊற்றினர் என்பது விளங்கியது.

இந்த உதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறார்: கதையில் கண்ட அலுவலர்களைப் போலவே நாமும் நமது பங்கு வேலையைச் செய்து வருகிறோம். அதாவது எல்லா உயிர்களிலும் இறைவன் வசிக்கிறான் என்று கூறுகிறோம். ஆனால் அது கொள்கையளவில் இருக்கிறதே தவிர நடைமுறைக்கு வரவேயில்லை. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை அல்லது தனியுரிமை யாருக்குத் தெரியப் போகிறது என நினைக்கிறோம். நம்மிடமுள்ள இறைவன் எல்லோரிலும் இருக்கிறார். ஒவ்வோர் உயிரும் பரமாத்மாவின் கோவிலே. இதனை உணர்ந்து நம்முள் இருக்கும் சுயநலப்போக்கை தூக்கியெறிந்துவிட்டு எல்லா மக்களையும் சமமாகக் காணும் ஞானத்தைப் பெற முயலுங்கள் என அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.