மனித தர்மம்

ஒரு ஊருக்கு ஒரு சாமியார் சென்றார். அவர் பொய் பேசாதவர்கள் வீட்டில் கொடுக்கப்படும் உணவை மட்டுமே உட்கொள்வார். காரணம் பொய் பேசுபவர்களின் உணவை உட்கொண்டால் அவர்களுடைய பொய் சொல்லும் குணம் வந்து தன்னுடைய தவபலன் போய் விடும் என்று கருதி அவ்வாறு இருந்தார். இந்த ஊரில் பொய் பேசாதவர் யாராவது இருக்கிறார்களா என்று அந்த ஊரில் உள்ளவர்களிடம் கேட்டார். அவர்கள் அந்த ஊரின் செல்வந்தரான ஒருவரை சுட்டிக் காட்டினார்கள். அவர் மிகவும் நல்லவர் சாது சிவபக்தர் லட்சாதிபதி அவருக்கு நான்கு பிள்ளைகள் என்று அவரது வீட்டை காட்டினார்கள். செல்வந்தரைப் பற்றி ஊரில் சாமியார் விசாரித்தார். அவருக்கு எத்தனை குழந்தைகள் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்று விசாரித்து விட்டு அதன் பின் அவரது வீட்டிற்கு சென்றார். அவரது இல்லத்திற்கு சாமியார் சென்றார். அவர் வீட்டுக்கு யோகி சென்றதும் உட்கார்ந்திருந்த செல்வந்தர் உடனே எழுந்து ஓடி வந்து ஞானி முன் விழுந்து வணங்கினார். அவரை ஆசனத்தில் அமர வைத்தார். இங்கு நீங்கள் உணவு அருந்தவேண்டும் என வேண்டினார். அவருடைய அன்பு பணிவு அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும் சாமியாருக்கு பிடித்துவிட்டது. ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம் உணவு அருந்தலாம் என்று எண்ணி அவரை சோதனை செய்ய ஆரம்பித்தார்.

உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார்? அதற்கு செல்வந்தர் ரூபாய் 22,000 இருக்கிறது என்றார். குழந்தைகள் எத்தனை பேர்? என்று கேட்டார். ஒரே மகன்தான் இருக்கிறான் என்றார். உனது வயது என்ன? என்று கேட்டார். எனக்கு வயது 4 என்றார். சாமியாருக்கு கோபம் வந்தது. உன்னைப் போய் பொய் பேசாதவர் என்கிறார்களே? நீ பேசுவதெல்லாம் நம்பும்படியாக இல்லையே. இங்கு நான் உணவு சாப்பிட்டால் அது என் தவத்தை அழித்து என் குணத்தை மாற்றிவிடும். நான் பொய் சொல்கிறவர்கள் வீட்டில் சாப்பிடுவதில்லை என்று சாமியார் எழுந்தார்.

சாமியார் காலில் விழுந்த செல்வந்தர் சாமி நான் பொய் பேசவில்லை. சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்து விட்டு பின்பு முடிவு செய்யுங்கள் என்று சொல்லி தனது வரவு செலவு கணக்கு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது. உங்கள் கணக்குப் புத்தகத்தில் உமது சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று காட்டுகிறது. நீங்கள் எப்படி 22,000 ரூபாய் என்று சொன்னீர்கள்? என்று கேட்டார். அதற்கு செல்வந்தர் சுவாமி ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது என்றாலும் பெட்டியில் உள்ள பணம் என்னுடையது ஆகுமா? இதோ பாருங்கள் நான் செய்த தருமக் கணக்கில் இதுவரை 22,000 ரூபாய் தான் செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது? இப்போதே நான் இறந்தால் பெட்டியில் உள்ள இந்த லட்ச ரூபாய் என்னுடன் வராதே. என்னோடு வருவது நான் செய்த தருமம் ஒன்று தானே அது 22000 ரூபாய் தானே. அது தான் என் சொத்து என்று சொன்னேன் என்றார்.

ஊரில் உங்களைப் பற்றி விசாரித்தேன் அவர்கள் உங்களுக்கு நாலு பிள்ளைகள் என்று சொன்னார்கள். நீங்கள் ஏன் ஒரு பிள்ளை மகன் என்று சொன்னீர்கள் என்று கேட்டார். சுவாமி எனக்குப் பிறந்தது 4 பிள்ளைகள். ஆனால் என்று சொல்லி மகனே நடேசா என கூப்பிட்டார். அப்பா நான் விளையாடுகிறேன். சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்றான். மகனே வடிவேலா என கூப்பிட்டார். நண்பர்களுடன் வெளியே செல்கிறேன். பிறகு வந்து நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்றான். மகனே சிவராஜா என கூப்பிட்டார். இருக்கின்ற பணத்தை எல்லாம் தானம் கொடுங்கள் இதற்கு உதவி செய்ய என்னை வேறு கூப்பிடுகிறீர்களா என்று பதில் மட்டும் வந்தது. மகனே குமரேசா என கூப்பிட்டார். மகன் ஓடி வந்தான். அப்பாவையும் எதிரே இருந்த சாமியாரையும் தொழுது வணங்கினான். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் தந்தையே செய்து முடிக்கிறேன் என்று நின்றான். சுவாமி அந்த மூவரும் என் புதல்வர்களா? நான் செய்யும் தர்மத்திற்கு முரணாக இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டுமே என்னுடைய தர்மத்திற்கு துணையாக இருக்கிறான். இவனை என் பிள்ளை என்று கருதுவதால் எனக்கு ஒரு பிள்ளை என்றேன் என்றார்.

உன் வயது 4 என்றாயே அதற்கான விளக்கத்தையும் நீயே சொல் என்றார் சாமியார். சுவாமி ஒவ்வொரு நாளும் நான் ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு செய்கின்றேன். இறைவனைப் பற்றி நினைக்காத பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்த வகையாகப் பார்த்தால் அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும் எனக்குச் சொந்தமான வயது 4 வருடம் தான் என்று நான் கருதுகிறேன் சரியா சுவாமி என்று வணங்கி நின்றார்.

நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை

  1. தருமம் செய்த பணம் தான் ஒருவனுக்கு சொந்தம்.
  2. தாய் தந்தை செய்யும் தர்மத்திற்கு உதவி செய்பவர்களும் அவர்களின் தர்மக் கருத்தை கேட்கின்றவர்களும் உண்மையில் மகன் மகள் ஆவார்கள்.
  3. இறைவனுக்கு பூசை செய்த நேரமே ஒருவனின் நேரம்.

ஆகவே உங்கள் வீட்டில் உணவு உண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வாழ்த்தினார் சாமியார். இந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.