பச்சோந்தி

தெய்வங்களைப் பற்றியும் மற்ற மதங்களைப் பற்றிம் பக்தர் கேட்ட கேள்விக்கு பதிலாக இராமகிருஷ்ணர் சொன்ன குட்டி கதை.

ஒரு பனந்தோப்பு வழியாக இரண்டு மனிதர்கள் பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதன் அங்கு நின்ற பனை மரத்தின் மேல் ஒரு பச்சோந்தி இருப்பதைக் கவனித்தான். அதோ அந்தப் பனை மரத்தில் ஓர் பச்சோந்தி இருக்கிறது பார். அதன் நிறம் சிவப்பு என்றான். இரண்டாவது மனிதன் எந்தப் பனை மரம் எந்தப் பனைமரம்?” என்று கேட்டுக் கடைசியாக அவன் சுட்டிக் காட்டிய மரத்தைப் பார்த்தான். அதில் இருந்த பச்சோந்தியையும் பார்த்தான். பனைமரம் இருக்கிறது. அதில் பச்சோந்தியும் இருக்கிறது. ஆனால் அதன் நிறம் சிவப்பல்ல நீலநிறம் என்று சொன்னான் இரண்டாவது மனிதன். சிவப்புக்கும் நீலத்துக்கும் வேற்றுமை தெரியாமல் உளறுகிறானே இவன் என்று நினைத்துக் கொண்டான் முதல் மனிதன். இருவருக்கும் பச்சோந்தி என்ன நிறம் என்பதில் விவாதம் முற்றியது.

பனந்தோப்பில் இவர்கள் இருவரும் விவாதித்துக் கொண்டிருக்கும் போது வேறொரு மனிதர் அந்த பக்கம் வந்தார். சண்டையிட்டுக் கொண்ட இருவரும் அந்த வழியாக வந்தவரை அருகில் அழைத்தார்கள். ஐயா இந்த பச்சோந்தி சிவப்பு நிறம் தானே என்று கேட்டான் முதல் ஆள். ஆமாம் என்றான் புது ஆள். என்னையா இப்படிச் சொல்கிறீர்? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் பச்சோந்தி நீல நிறம் தானே? என்று கேட்டான் இரண்டாமவன். இதற்குத் ஆமாம் என்றான் புது ஆள். என்ன இது நான் கேட்டாலும் ஆமாம் என்று சொல்கிறீர்கள்? அவன் கேட்டாலும் ஆமாம் என்று சொல்கிறீர்கள்? உனக்கென்ன பைத்தியமா? என்று கேட்டான் முதல்வன். பைத்தியம் எனக்கல்ல உங்கள் இருவருக்கும்தான். பச்சோந்தி நேரத்துக்கு நேரம் தான் இருக்கின்ற இடத்தின் நிறத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும். நீங்கள் பார்த்த போது சிவப்பாயிருந்தது. அவர் பார்த்த போது நீலமாகி விட்டது. பச்சை இலை மீது இந்த பச்சோந்தி அமர்ந்தால் பச்சையாகவும் தெரியும் என்றார் புதுமனிதன். இருவரும் உண்மையை உணர்ந்து அமைதி ஆனார்கள்.

இறைவனும் இப்படித்தான். பிள்ளையாரை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிள்ளையாராகவும் முருகரை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முருகராகவும் பெருமாளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெருமாளாகவும் காட்சி கொடுப்பவர் இறைவன். மனிதன்தான் தான் வணங்கும் இறைவனே பெரியவர் என்றும் மற்றவர் வணங்கும் தெய்வம் சிறியவர் என்றும் தன் கண்ணால் காண்பவற்றை மட்டுமே அறியாமையால் நம்பிக் கொண்டும் அனைத்தும் அந்த பரம்பொருள்தான் என்ற உண்மையை உணராமல் மதச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.