நைவேத்தியம்

குரு பல சீடர்களை வைத்து குருகுலம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அதிகாலையில் குரு தனது நித்ய கடமைகளை முடித்து விட்டு இறைவனுக்கு நைவேத்யம் படைத்து பூஜையை முடித்தார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஒரு சீடன் குருவே நாம் படைக்கும் நைவேத்தியம் இறைவன் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவனுக்கு நாம் படையல் இடும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டு விட்டால் அதை நாம் பக்தர்களுக்கு எப்படி பிரசாதமாக தர முடியும்? என்று கேட்டான். சீடனின் கேள்வி குருவுக்கு புரிந்து விட்டது. கேள்விக்கு வெறுமனே பதில் சொல்லாமல் சீடனுக்கு புரியும்படி விளக்கம் தர முடிவு செய்தார். அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் அவனை பார்த்து நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன் என்றார். சீடனுக்கு குரு தன் கேள்விக்கு பதில் சொல்லாதது ஏமாற்றம் தந்தாலும் குருவின் கட்டளைக்கு பணிந்து வகுப்பறையை தயார் செய்தான். அன்றைய வகுப்பில் அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட பூர்ணமிதம் எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.

குரு சொல்லிக் கொடுத்தபடி அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சீடனை தன்னருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான். மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா? என்றார். முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே என்றான் சீடன். எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம் என்றார் குரு. கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் மந்திரத்தை சொல்லி முடித்தான் சீடன். மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார். உனது சுவடியில் உள்ளதை நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே என்றார் குரு. பதட்டம் அடைந்த சீடன் தனது சுவடியை காண்பித்து குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன் என்றான். இந்த சுவடியில் உள்ளதைப் படித்துத்தான் மனதில் உள்வாங்கினாயா? இதிலிருந்து தான் உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் சுவடியில் இருக்க கூடாதல்லவா? என்றார்.

சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை குழப்பத்துடன் குருவைப் பார்த்தான். குரு தொடர்ந்தார் சுவடியில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். ஸ்தூல வடிவில் இருக்கும் மந்திர எழுத்துக்களை சூட்சும நிலையில் இருக்கும் மனமானது சூட்சுமமாகவே எடுத்துக் கொண்டு நினைவில் வைத்துக் கொள்கிறது. அது போலவே இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கும் நைவேத்யம் ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். சுவடியில் இருக்கும் எழுத்துக்களை நீ உள் வாங்கிய பின் சுவடியில் இருக்கும் மந்திரம் தனது அளவில் குறைந்து விட்டதா? அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்தியம் உட்கொள்கிறோம் என்று விளக்கினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.