ஒரு ஊரில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவ்வூரில் அவனைப் பற்றி தெரிந்ததால் அவனால் திருட்டு தொழிலை செய்ய முடியவில்லை. வேறு ஊருக்கு சென்று திருட்டு தொழிலை செய்ய முடிவு செய்து பயணமானான். வெகுதூரம் பயணப்பட்டு ஓர் ஊரை அடைந்தான். திருடனுக்கோ அகோர பசி. உணவுக்கு எங்கு செல்வது எனப் பார்க்கும் பொழுது பூசணிக்காய் தோட்டம் ஒன்று இருப்பதை கண்டு வேலியை தாண்டி குதித்து பூசணி பழத்தைத் திருடி உண்ண எண்ணினான். வெள்ளை பூசணி பழத்தை திருடும் சமயம் தோட்ட காவல்காரன் யாரோ ஒருவன் தோட்டத்தில் இருப்பதை பார்த்து கூச்சலிட்டான். சப்தம் கேட்டு மக்கள் கூட்டமும் தோட்ட காவல்காரனும் வருவதை கண்ட திருடன் மறைந்து கொள்ள இடம் தேடினான். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும்? உடனே சமயோஜிதமாக தனது ஆடைகளைக் கழற்றி விட்டு பூசணிக்காய் மேல் படந்திருக்கும் சாம்பலை எடுத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டான். திருடனை நெருங்கிய மக்கள் நீண்ட நாட்கள் பசியில் மெலிந்த உடல் சாம்பல் பூச்சு என அங்கு ஒரு சிவ தொண்டு புரியும் ஆன்மீக குரு இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.
திருடனின் சாம்பல் பூச்சு அவனை ஒரு முனிவனாக காட்டியது. தாங்கள் முனிவரை தவறாக எண்ணியதாக்க கூறி மன்னிப்பு கேட்டனர். ஊருக்கு வந்த புதிய முனிவரை காண பலரும் வரத் துவங்கினார்கள். ஞானத் தேடல் கொண்ட ஒருவன் இந்த முனிவரை சந்தித்தான். ரிஷி புருஷரே என்னை சிஷ்யனாக ஏற்று உங்களைப் போல ஞானம் அடைய வழி சொல்லுங்கள் எனக் கேட்டான். பூசணி முனிவருக்கு ஞானம் என்றால் என்ன என்றே தெரியாது. வாய் திறந்து பேசினால் தனது சுயரூபம் தெரிந்துவிடும் என்பதால் சைகையில் பேச ஆரம்பித்தார்.
பூசணி முனிவர் பூசணி திருட வந்த நான் இவ்வாறு ஆகிவிட்டேன் என்பதையே சைகையில் கூறுவதற்காக பூசணிக்காயை காட்டி தனது உடல் முழுவதையும் காட்டி விட்டு கண்களை மூடினார். வாலிபனோ தன்னை ஆசீர்வதித்து சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார் என்று நினைத்தான். மேலும் உலகில் எதுவும் இல்லை அனைத்தும் உன் உள்ளே இருக்கிறது என குரு உணர சொல்வதாக எண்ணிக் கொண்டான். சீடனோ ஆனந்தமாக அவரை மூன்று முறை வலம் வந்து வணங்கி விடை பெற்றான். வருடங்கள் ஓடின. தீவிர தேடலில் சீடன் ஞானம் அடைந்தார்.
இந்தக் கதையின் மூலம் குருவின் தன்மை முக்கியமில்லை. சிந்தனையில் உணர்வுகளில் நம்முடைய எண்ணத்தை நம்பிக்கையில் வைத்ததால் ஞானம் கிடைக்கும்.