சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி
சிவன் என்றால் சிவப்பாக இருக்கின்றவன் சிவன் என்று பொருள். சிவப்பானவன் என்றால் சிவப்பின் உருவமானவன் என்று பொருள். சிவப்பு என்றால் அன்பு மற்றும் அருள் என்று பொருள். சிவன் என்றால் அன்பின் உருவமானவன் அருளின் உருவமானவன் என்று பொருள். சிவராத்திரி என்றால் அன்பிற்குண்டான ராத்திரி அருளுக்குண்டான ராத்திரி என்று பொருள். சிவராத்திரி அன்று இரவு இறைவனின் அன்பும் அருளுமானது மழை போல் கொட்டிக் கொண்டே இருக்கும். மனதை ஒரு நிலைப்படுத்தி நம்முடைய முதுகெலும்பு நேராக வைத்திருந்தால் இந்த அன்பையும் அருளையும் பெற்றுக் கொள்ளலாம்.
சிவராத்திரி அன்று ஒரு வேடன் காட்டிற்கு மான் வேட்டையாட சென்றான். நீண்ட நேரம் ஆகியும் ஒரு மானும் வராததால் அருகில் இருந்த ஒரு வில்வ மரத்தின் கிளை மீது ஏறி மானின் கூட்டம் ஏதும் வருகிறதா என்று பார்த்தான். மான் மற்றும் வேறு விலங்குகள் ஒன்றும் கண்ணுக்கு எட்டிய வரை இல்லை. விலங்குகளுக்காக காத்திருந்தவன் அப்படியே தூங்கி விட்டான். சிறிது நேரம் கழித்து விழித்தவன் திடுக்கிட்டான். ஏனெனில் இருட்டி விட்டது. காட்டில் தனியாக நடந்து விட்டுக்கு செல்ல முடியாது கொடூர மிருகங்கள் இருட்டில் எந்த பக்கம் வரும் என்று தெரியாது. இருட்டில் குறி பார்க்க முடியாமல் அம்பு விட்டு அதனை கொல்லவும் முடியாது. ஆகவே இரவு முழுவதும் மரத்தின் மீதே இருந்து விடலாம் என்று முடிவு செய்தான் வேடன். தூங்கினால் மரத்தின் பிடியை விட்டு விடுவோமோ கீழே விழுந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் தூங்காமல் இருப்பதற்காக மரத்தின் மீது நேராக அமர்ந்த படி மரத்தில் இருந்த இருந்த இலையை ஒவ்வொன்றாக கிள்ளி கீழே போட்டான். கீழே விழக்கூடாது என்ற எண்ணத்தில் அவன் மனம் ஒடுங்கி இருந்தது. வேறு எந்த சிந்தணையும் இல்லாமல் இலையை மட்டும் கீழே போட்ட வண்ணம் இருந்தது அவனது மனம்.
சில மணி நேரத்திற்கு பிறகு அந்த மரத்தின் அடியில் ஒரு மான் கூட்டம் வந்தது. வேடன் மானை தன் அம்பினால் குறி வைத்தான். ஆனால் அவனது மனம் அம்பை விட மறுத்தது. இந்த மானும் ஒரு ஜூவன் தானே அது தன் குடும்பத்துடன் இருக்கிறது அதனை கொன்றால் அதன் குடும்பம் வருத்தப்படுமே என்று நினைத்தபடி அம்பை விடாமல் நிறுத்தி விட்டான். அப்போது ஒரு புலி அங்கு வந்தது. புலியின் வருகையை பார்த்ததும் மான் கூட்டம் ஒடி விட்டது. வேடன் இந்த புலி நம்மை பார்த்து விடக்கூடாதே என்று புலியை பார்த்து பயந்தபடியே இருந்தான். அவன் பயந்தபடியே மனித வாடைக்கு புலி அவனை பார்த்து விட்டது. உடனே புலி அவனை தின்பதற்காக மரத்தின் மீது தாவி ஏறியது. வேடனின் அருகில் வந்த புலி அவனை பார்த்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரம் அவனை பார்த்துக் கொண்டிருந்த புலி அவனை ஒன்றும் செய்யாமல் திரும்பி சென்று விட்டது. மானை வேட்டையாட வந்த வேடன் ஏன் மானை வேட்டையாடாமல் மானின் மீது கருணை கொண்டான். வேடனை தின்பதற்காக வந்த புலி ஏன் அவனை கடிக்காமல் சென்றது என்றால் அவனின் மனம் மரத்தின் மீதிருந்து தான் கீழே விழக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் ஒருமுகப்பட்டு இருந்தது. முதுகுத்தண்டு நேராக வைத்திருந்தான். மரத்தின் மீதிருந்து அவன் கிள்ளி எறிந்த வில்வ இலைகளை மரத்தின் மீதிருந்த சிவ லிங்கத்தின் மீது விழுந்தது. அன்று சிவராத்திரி ஆனாதால் அவன் சிவராத்திரி சிவபூஜை செய்த பலனை பெற்றான். ஆகவே இந்த சிவராத்திரியில் ஆகாயத்தில் இருந்து வந்த அன்பின் ஆகார்சன சக்தியானது அருளின் ஆகார்சன சக்தியானது அவனை நிரப்பியது. இதன் காரணமாக அவனிடம் அன்பு வெளிப்பட்டதின் காரணமாக இவன் மானின் மீது அம்பு விடவில்லை. அன்பாலும் அருளாலும் நிரப்பப்பட்டதால் புலி அவனை ஒன்றும் செய்யாமல் சென்று விட்டது.