சரணாகதி

பராசர பட்டர் ஸ்ரீராமானுஜரின் முதன்மைச் சீடரான கூரத்தாழ்வானின் மகன் ஆவார். ரங்கநாயகித் தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள். அவர் ஒருமுறை காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாமையால் அவரைத் தேடிச் சென்ற சீடர்கள் காட்டில் அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரைத் தேற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். மயக்கம் தெளிந்து பட்டர் எழுந்தவுடன் காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? காட்டுவாசிகளால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டானதா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா? என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள் அவர்களது சீடர்கள்.

நான் ஒரு காட்சியைக் கண்டேன் அதனால் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர். என்ன காட்சி? என்று பதற்றத்துடன் சீடர்கள் கேட்டார்கள். ஒரு வேடன் ஒரு முயல் குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப் பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றான். இதைக் கண்ட அந்த முயல் குட்டியின் தாய் முயல் அந்த வேடனைத் துரத்திச் சென்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன் முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான். இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர்.

இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார்கள் சீடர்கள். என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. ஒருவர் சரணாகதி அடைந்தால் அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. ஆனாலும் அந்த முயல் சரணாகதி அடைந்ததும் அந்த வேடன் முயலின் சரணாகதியை அங்கீகரித்து அது கேட்டதை உடனே தந்து விட்டான். சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு ஒரு சாமானிய வேடன் இப்படிக் கருணை காட்டுகிறான் என்றால் இறைவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்? அவனே கதி என்று அவனைப்பற்றிய நம்மைக் கைவிடுவானா? எம்பெருமானின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல் இத்தனை காலம் வீணாகக் கழித்து விட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான் காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி இன்னும் என் மனதில் உதிக்கவில்லையே என ஏங்கினேன். அதனால்தான் மயங்கி விழுந்து விட்டேன் என்று விடையளித்தார் பட்டர். பட்டரின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.