கோயில் பிரசாதம்

இராமானுஜரின் சிறு வயதில் யாதவ பிரகாசர் என்பவர் குருவாக இருந்தார். இவர் தன்னுடைய பல்லலாக்கில் ஒரு நாட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். பல்லக்கை இராமானுஜர் உட்பட அவரது சீடர்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். யாதவ பிரகாசர் தனது நாட்டின் எல்லைக்குள் வந்திருப்பதை அறிந்த அந்த நாட்டின் அரசர் அவரை வரவேற்று வணங்கி தன்னுடைய மகளை ஒரு பிரம்மராட்சசன் என்ற பேய் பிடித்திருப்பதாகவும் அந்த பேயை ஓட்டி தனது மகளை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். யாதவ பிரகாசர் அரசரின் வேண்டுகோளை ஏற்று அரசனின் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரது மகளைப் பார்த்த யாதவ பிரகாசர் அவளுடைய உடம்பிற்குள் இருந்த பிரம்ம ராட்சனைப் பார்த்து இந்த உடம்பை விட்டு ஓடிப்போ என்றார்.

யாதவ பிரகாசரைப் பார்த்து சிரித்த பிரம்ம ராட்சசன் நீ சொன்னால் நான் போக வேண்டுமா? நான் யார் தெரியுமா? நீ யார் தெரியுமா? என்று பேச ஆரம்பத்தது. நீ சென்ற ஜென்மத்தில் ஒரு உடும்பாக பிறந்து ஒரு கோயிலில் கிடந்தாய். கோயிலில் வருபவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுப்பார்கள். அந்த பிரசாதத்தை அவர்கள் சாப்பிடுவார்கள். அதில் சிதறும் பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவன் நீ. அப்படி வாழ்நாள் முழுவதும் கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தாய். அதில் புண்ணியத்தை நிரம்ப பெற்றாய். அதில் கிடைத்த ஞானத்தை வைத்து இந்த ஜென்மாவில் மனித பிறப்பெடுத்து வேதம் கற்றுக் கொண்டு பிராமணனாக குருவாக நிற்கிறாய். நான் யார் தெரியுமா? அந்தணனாக பிறப்பெடுத்து அந்தணனாக வாழ்ந்து கோயிலில் வேதம் சொல்லி யாகம் கொண்டிருந்தேன். இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல் சொல்லில் மந்திரத்தை தவறாக சொல்லியும் பெயரளவிற்கு செயலில் யாகத்தையும் செய்து கொண்டு மனம் போன போக்கில் தவறுகள் செய்து கொண்டு வாழ்ந்தபடியால் பிரம்மராட்சசனாக பிறப்பெடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் நீ ஒரு உடும்பு. ஆகவே நீ சொன்னால் நான் போக மாட்டேன். நீ வந்த வழியே திரும்பிப் போ என்றான் பிரம்மராட்சசன். யாதவ பிரகாசர் என்ன செய்தால் நீ இந்த உடம்பை விட்டு செல்வாய் என்று கேட்டார். உன்னுடைய பல்லக்கை சுமந்து கொண்டு வரும் இராமானுஜர் தனது காலை எனது தலையில் வைத்து நீ போ என்றால் நான் சாப விமோசனம் பெற்று இந்த உடம்பை விட்டு சென்று விடுவேன் என்றது. யாதவபிரகாசரும் இராமானுஜரை அழைத்து பிரம்மராட்சனின் தலைமீது காலை வைக்க சொன்னார். உடனடியாக பிரம்மராட்சனும் சாப விமோசனம் பெற்று அரசனின் மகளின் உடம்பை விட்டு சென்று விட்டான்.

கோயில் பிரசாதம் கொடுக்கப்பட்டு அதில் சிந்திய உணவை சாப்பிட்ட ஒரு உடும்பே புண்ணியத்தைப் பெற்று அதன் பலனாக ஞானத்தை பெற்று குருவாக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார். உடும்பு பிறப்பை விட மேன்மையாக பிறப்பு மனிதப் பிறப்பு. இவர்களுக்கு கோயிலுக்கு செல்வதற்கும் இறைவனுக்கு பிரசாதம் படைப்பதற்கும் அதனை சாப்பிடுவதற்கும் உண்டான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையில் தர்மப்படி வாழ்ந்து தினமும் சிறிது நேரம் ஒதுக்கி கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு கோயிலின் பிரசாதம் சாப்பிட்டு வாழ்ந்தாலே விரைவாக இந்த பிறவிக் கடலை கடந்து இறைவனை அடைந்து விடலாம்.

தர்மம்

சாது ஒருவர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த குளத்தில் இறங்கினார். தண்ணீரை கைகளில் அள்ளும் போது தண்ணீருக்குள் ஒளிந்திருந்த முதலை சாதுவின் கால்களை கவ்விப் பிடித்தது. சாது முதலையை கருணையாக பார்த்தார். முதலை சாதுவிடம் பேசியது. சாதுவே இந்தக் குளம் என் ஆளுகைக்குட்பட்டது. இதில் இறங்குபவர்களை நான் தின்று விடுவேன். இன்று நீங்கள் எனது பசியை போக்க வந்திருக்கிறீர்கள். எவ்வளவு கருணையோடு நீங்கள் என்னைப் பார்த்தாலும் நான் உங்களை விட மாட்டேன் என்றது. அதற்கு சாது முதலையே மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லை. என் குருகுலத்தில் படிக்கும் சீடர்களுக்கு கல்வி இன்னமும் நிறைவுபெறவில்லை. நான் இறந்து விட்டால் அவர்களின் படிப்பு பாதியில் நின்று விடும். அந்தக் கவலைதான் என்னை வாட்டுகிறதே தவிர உயிரை இழப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை நீ விட்டால் அதற்கு உபகாரகமாக ஏதேனும் இருந்தால் சொல் அதனை செய்கிறேன் என்றார் சாது. யோசித்தது முதலை. சாதுவே உங்களை நான் விடுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் தினமும் சீடர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இந்த குளத்திற்கு எதிரில் அமர்ந்து கொள்ள வேண்டும். தாகத்தோடு வருபவர்கள் குளத்தில் இறங்க பயப்படுகிறார்கள். அவர்களிடம் குளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்ல வேண்டும். அவர்கள் குளத்தில் இறங்குவார்கள். பிறகு நான் அவர்களை கொன்று தின்று விடுவேன். இதைச் செய்வதாக நீங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் உங்களை விடுவிக்கிறேன். அதே போல சத்தியத்தை மீறினால் கொடுத்த வாக்கை காப்பாற்றாத பாவம் உங்களை வந்தடையும் என்றது முதலை. சாதுவும் முதலை சொன்னதை ஏற்றுக் கொண்டு முதலைக்கு சத்தியம் செய்து கொடுத்தார். முதலை அவரை விடுவித்தது. அங்கிருந்து புறப்பட்டார்.

சாது முதலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி அடுத்த நாள் குளக்கரைக்கு வந்து எதிரில் அமர்ந்தார். சற்று நேரத்தில் ஒரு மீனவன் வந்து சாதுவிடம் பேசினான். ஐயா நான் மீன் பிடிப்பதற்காக வந்திருக்கிறேன். இந்தக் குளத்தில் வலை வீசினால் அதிகமாக மீன்கள் கிடைக்குமா? என்று கேட்டான். மீன் பிடிப்பவரே இந்தக் குளம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது பெருமை வாய்ந்தது என்று குளத்தை மிகவும் பெருமையாக பேசி தொடர்ந்தார். ஆனால் மீன் கிடைக்குமா என்ற உனது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இந்தக் குளத்தில் வசிக்கும் முதலையிடம் கேள். உன் கேள்விக்கு முதலையிடம் பதில் கிடைக்கும் என்றார். இந்தக் குளத்தில் முதலை இருக்கிறதா? ஐயோ என்று கத்தியவாறு ஓட்டம் பிடித்தான். இதைப் பார்த்த முதலை குளத்திலிருந்து வெளியே வந்தது. சாதுவே இதுதான் சத்தியத்தை காப்பாற்றுகிற லட்சணமா? நீங்கள் அவனிடம் என்ன சொன்னீர்கள்? அவன் ஏன் ஓடுகிறான்? என்று கோபத்தோடு கேட்டது. முதலையே குளத்தைப் பற்றியும் குளத்தில் உள்ள உன்னைப் பற்றி மிகவும் பெருமையாகத்தான் சொன்னேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. சாது தம்மை ஏமாற்றுகிறாரோ என்று சந்தேகமடைந்த முதலை உடனே தன்னுடைய குட்டியை கூட்டி வந்தது. சாதுவே இது என் குட்டி. நீங்கள் வைத்திருக்கும் துணியில் இதை மூட்டையாக கட்டி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வருபவர்களிடம் என்ன பேசுகிறீர்கள் என்பதை குட்டி கேட்டு என்னிடம் சொல்லும் என்றது.

சாதுவின் பக்கத்தில் மூட்டையில் குட்டி இருந்தது. அன்று அதன் பிறகு யாருமே அந்தப் பக்கம் வரவில்லை. அடுத்த நாள் ஒரு வழிப்போக்கன் வந்தான். அவன் கையில் ஒரு பை இருந்தது. சாதுவே இந்தப் பையில் தங்க நகைகள் இருக்கின்றன. நான் குளத்தில் குளித்துவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன். இந்தக் குளம் குளிப்பதற்கு உகந்ததுதானே? என்று கேட்டான். வழிப்போக்கரே குளத்து நீர் மிகவும் நல்ல நீர். குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மிகவும் சிறப்பான குளம். நேற்று ஒருவன் இப்படித்தான் தனது பொருளை எனது அருகில் இருக்கும் துணியில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கினான். அவன் இன்னும் வரவில்லை. குளத்தில் இறங்கியவன் வந்ததும் அவனிடம் கேட்டுக்கொள் என்றார் சாது. என்னது நேற்று போனவன் இன்னும் வரலையா? குளத்தில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஓடினான். இதனை கண்ட தாய் முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது. கோபத்தோடு சாதுவைப் பார்த்து நேற்று யார் வந்து உங்களிடம் மூட்டையை கொடுத்தது என்று கத்தியது. முதலையே நீ தானே என்னிடம் உனது குட்டியை இந்த துணியில் வைத்து விட்டு குளத்தில் இறங்கினாய். அதன்பின் நீதான் வரவேயில்லையே. குளத்தை பெருமையாகத்தானே சொல்லியிருக்கிறேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. அடுத்த நாள் அந்த நாட்டு மந்திரி குளக்கரைக்கு வந்தார். சாதுவைப் பார்த்து இந்தக் குளத்தில் குளிக்க வேண்டும். குளம் பாதுகாப்பானதா? என்று கேட்டார். மந்திரியே இந்த குளத்திற்கு செல்லும் பாதையைப் பாருங்கள். மனிதர்கள் குளத்தை நோக்கி நடந்து சென்ற பாதத் தடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை பாருங்கள். அப்படியானால் இந்த குளத்தில் அதிகமான மக்கள் குளிக்க சென்றிருக்கிறார்கள். ஆகவே இந்த குளம் குளிக்க சிறப்பான குளம் போல தெரிகிறது. ஆனால் குளத்திலிருந்து திரும்பிய மனிதர்களின் பாதத் தடங்களும் சரி சமமாக இருக்கிறதா என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். மந்திரி பார்த்தார். குளத்தை நோக்கிச் சென்ற பாதச் சுவடுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. குளத்திலிருந்து கரைக்குத் திரும்பிய பாதச் சுவடுகள் ஏதுமில்லை. குளத்திற்குள் சென்றவர்கள் திரும்பி வரவில்லை குளத்தில் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட மந்திரி சாதுவிற்கு நன்றி சொல்லி அங்கிருந்து நகர்ந்தார். இதனை கண்ட முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது.

சாதுவைப் பார்த்து முதலை சாதுவே நீங்கள் சத்தியத்தை மீறிவிட்டீர்கள். குளக் கரையில் அமர்ந்து எனக்கு உணவாக வேண்டியவர்களை காப்பாற்றி கொண்டிருக்கிறீர்கள். இது நியாயமல்ல நீங்கள் வாக்கு மீறி விட்டீர்கள் ஆகவே உங்களை பாவம் வந்து சேரும் என்று கத்தியது. அதற்கு சாது முதலையே உன் பார்வையில் உன் கோபம் நியாயமானது உனது பார்வையில் நான் கொடுத்த வாக்கை மீறியவனாக உனக்கு தெரிகிறது. ஆனால் தர்மத்தின்படியே நான் நடந்து கொண்டேன். தர்மத்துக்கு எதிராக எதையும் சாதுவானவர்கள் செய்யமாட்டார்கள். நான் காப்பாற்ற வேண்டிய தர்மங்கள் இங்கு இரண்டு இருக்கிறது. ஒன்று உனக்கு கொடுத்த வாக்கை தவறாமல் காப்பது. இரண்டு இங்கு வந்தவர்களுக்கு குளத்தைப் பற்றி கேள்வி கேட்கும் போது நான் சொல்லும் பதில் சரியாக இருக்கும் என்று என்னை நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவது எனது கடமை. ஒரே நேரத்தில் இரண்டு தர்மங்களை நான் காப்பாற்றியாக வேண்டும். குளத்தை பெருமையாக கூறி உனக்கு கொடுத்த வாக்கையும் காப்பாற்றினேன். அதே போல் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமான வார்த்தையை கூறி அவர்களையும் காப்பாற்றினேன். ஆக நான் தர்மத்தை மீறவில்லை. என்னை பாவம் அண்டாது என்று சொல்லி முதலைக்கு கொடுத்த வாக்கின்படி மீண்டும் குளத்தின் எதிரே சென்று அமர்ந்து கொண்டார். சாது இருக்கும் வரை தனக்கு உணவு கிடைக்காது என்று உணர்ந்த முதலை தனது உணவிற்கு வேறு இடத்திற்கு சென்று விட்டது.

ராம நாமம்

ஒரு பேரரசர் இருந்தார். அவரது ராஜ்ஜூயத்தின் கீழ் பல சிற்றரசுகள் இருந்தன. அவர் தன் மந்திரியுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அரசருக்கு மந்திரி எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதனால் அவர் எங்கு சென்றாலும் மந்திரியையும் உடனே அழைத்துச் செல்வார். மந்திரிக்கு வேட்டையாடுவதில் விருப்பமில்லை. ஆனாலும் அரசரின் உத்தரவாதலால் அவருடன் சென்றார். மந்திரி மகா பக்திமான். செல்லும் இடமெல்லாம் ராம நாமத்தை பக்தியுடன் சொல்லிக் கொண்டே இருந்தார். காட்டில் இருவரும் நீண்ட தூரம் அடர்ந்த காட்டிற்குள் சென்றும் மிருகங்கள் கண்ணில் படவில்லை. அலைச்சலில் இருவரும் மிகவும் களைத்துப் போனார்கள். கொண்டு வந்த நீரும் காலியானது. இருவருக்கும் பசி ஆரம்பித்தது. அப்போது தூரத்தில் சிறிய குடிசை ஒன்று தெரிந்தது.

அரசர் மந்திரியிடம் நாம் இருவரும் ரொம்ப களைப்பா பசியோட இருக்கோம். அந்த குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம் வா என்றார். மந்திரி அரசரிடம் எனக்கும் பசிதான் மிகவும் களைப்புதான். ஆனால் நான் அங்கு வரவில்லை. இப்போது சூரியன் மறையும் நேரம் நான் ராம நாமம் ஜெபிக்கும் நேரம். ஆகவே நான் இங்கேயே இந்த மரத்தடியில் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னுடைய களைப்பையும் பசியையும் ஆற்றிடும். நீங்கள் சென்று பசியாறி வாருங்கள் என்றார். அரசருக்கு மந்திரி மேல் கோபமாக வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம் என்று அந்த குடிசைக்கு நடந்து போனார். அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கிருந்த பாட்டியிடம் அரசன் தான் யார் என்றும் தனக்கு உணவு வேண்டும் என்றும் பாட்டியிடம் கேட்டார். அன்று காலையில் சமைத்த உணவை அரசருக்கு பாட்டி கொடுத்தாள். அரசர் திருப்தியாக தனது பசியாரும் வரை சாப்பிட்டார். மீண்டும் பாட்டியை அழைத்த அரசன் இந்த காட்டிற்கு தன்னுடன் மந்திரியும் என்னுடன் வந்தார். அவரும் பசியுடன் மரத்தடியில் இருப்பதால் அவருக்கும் உணவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். உணவு தீர்ந்து விட்டதாகவும் நான் உடனடியாக சமைத்து கொடுக்கிறேன் என்று சொல்லிய பாட்டி விரைவாக அறுசுவை உணவையும் சமைத்து கொடுத்தார்.

அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று கேள்வி கேட்டனர். பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களை அழைத்து இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்து அமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து அந்த அறையினுள் மூன்று குவளையில் பால் உள்ளது. அதில் நீ ஒரு குவளை பாலை பருகிவிட்டு வா என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளில் பால் இருந்தது. தங்க குவளையில் இருந்த பாலை எடுத்து மிகுந்த மகிழ்ச்சியோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி குவளையில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான். மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க வெள்ளி குவளைகளைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கல குவளை பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு தாழ்ந்தவனா? எந்த விதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்? என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் கவலை நிலைகொண்டிருந்தது.

பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து பாலைக் குடித்தீர்களா என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன் தங்கத் குவளையில் பால் குடித்தேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் குருவே என்றான். இரண்டாவது மாணவன் எனக்கு தங்க குவளையில் பால் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் வெள்ளி குவளையிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது குருவே என்றான். மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருவே. எனக்கு வெண்கலக் குவளையில் பால் கிடைத்தது என்றான். மூவரும் பேசியவற்றை அமைதியாக கேட்ட பகவான் ராமகிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். மாணவர்களே தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளிலும் ஏலக்காய் குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும் பால் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை. பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும் சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு. பால் ஊற்றி வைத்திருக்கும் குவளைகளின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம் சுவை ருசி ஆகிய அனைத்தும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள் பாத்திரத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது அறிவு. அதில் உள்ள பண்டத்தை நுகர்ந்து அனுபவித்து இன்புறுவது ஞானம். நீங்கள் அறிவைக் கொண்டு புறத்தோற்றத்தைப் பார்த்தபடியால் அது எதனால் ஆனது? மதிப்பானதா? மதிப்பு குறைவானதா? என்று சிந்தித்து அதில் உங்களின் கவனம் முழுமையாக சென்றது. பாலில் உள்ள சுவையை அனுபவிக்காமல் விட்டு விட்டீர்கள். நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் அதில் உள்ள சுவையை அனுபவித்து மூவருமே ஒரே மாதிரியான மன நிலையை கொண்டு ஒரே மாதிரியான அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்..

ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண் சட்டியில் ஊற்றிக் கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள். ஏனேனில் ஞானிகள் அனைத்திலும் உள்ள இறைவனை நுகர்ந்து அனுபவித்து ஆனந்தமடைவார்கள். இதுவே ஞானத்தின் உச்சம் என்று பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது.

ஞானம்

கௌரவர்களின் தலைநகராக இருந்த அஸ்தினாபுரம் நகருக்கு கிருஷ்ணர் வந்தார். பலர் தங்களுடைய வீட்டிற்கு அழைத்தும் அங்கெல்லாம் போகாமல் விதுரனின் வீட்டுக்குச் சென்றார் கிருஷ்ணர். தன்னுடைய வீட்டிற்கெல்லாம் கிருஷ்ணர் வரமாட்டார் என்றிருந்த விதுரரின் வீட்டிற்கு திடீரென்று வந்த கிருஷ்ணரைப் பார்த்ததும் நிலை தடுமாறினார் விதுரர். இங்கும் அங்குமாக ஓடி என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்தார். கிருஷ்ணரை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது? என்று எண்ணிய விதுரர் ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து விட்டு அந்த ஆசனத்தை நன்றாக தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே அதில் அமரச் சொன்னார். கிருஷ்ணர் சிரித்தபடியே நின்றார். ஏதேனும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே அடுப்படிக்கு ஓடினார். கண்ணில் பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு கிருஷ்ணரிடம் வந்து கிருஷ்ணா இப்போது என்னிடம் இருப்பது இவை மட்டுமே மறுக்காமல் சாப்பிடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.

விதுரர் படபடப்போடேயே காணப்பட்டார். அவரது சிந்தனையில் தான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறோம். அவன்தான் தனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் தூது வந்தபோது மிகப்பெரிய பள்ளம் தோண்டி அதன் மேல் கம்பளம் விரித்து அந்தக் கம்பளத்தின் மீது ஆசனத்தை வைத்திருந்தான் துரியோதனன். கிருஷ்ணர் அந்த ஆசனத்தில் அமர்ந்ததும் கீழே விழுவார். அவரை சிறை பிடிக்கலாம் என்று திட்டம் வைத்திருந்தான் துரியோதனன். இப்படிப்பட்ட கீழ்மையான எண்ண் கொண்ட துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம் அவனைப் போலவே சிந்தனை கொண்டு சுயநினைவின்றி கிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ அந்த ஆசனத்தில் ஊசியைச் செருகி வைத்து இம்சிக்கச் செய்திருக்கிறோமோ துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ எனப் பதைபதைத்தார் விதுரர். விதுரருக்கு எவ்வளவு பெரிய ஞானம். இந்த ஞானியின் கலக்கத்தைக் கண்டு ரசித்த கிருஷ்ணர் விதுரா என்னைக் கண்டதும் நீ படுகின்ற உன் கலக்கமே என் பசியை ஆற்றிவிட்டது என்றார்.

இறைவனுக்காக பூஜை செயல்களில் ஈடுபடும் போது தன்னையும் அறியாமல் தவறு ஏதேனும் செய்து விடுவோமோ நடந்து விடுமோ என்று எண்ணத்தில் இறைவனைத் தவிர வேறு சிந்தனையில்லமால் சிரத்தையுடன் இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்களே ஞானியாகத் திகழ்கிறார்கள். இறைவன் இவர்களுக்கே முதன்மையில் அருள்கிறார் அரவணைக்கிறார் ஆட்கொள்கிறார் என மகாபாரதத்தில் அற்புதமாக விளக்குகிறார் வேதவியாசர்.

நான் யார்

அரசன் ஒருவன் தனது படை வீரர்களுடன் காட்டுக் சென்று வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது பசி வந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்று நான் பசியோடு இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்டன். அங்கிருந்த முனிவர் அரசனைப் பார்த்து யார் நீ என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் என்று பதிலளித்தான். அதற்கு முனிவர் நீ யார் என்று தான் கேட்டேனே தவிர உனது பதவி பற்றி கேட்கவில்லை. வேறொரு நாட்டு அரசன் உன்னை வென்று இந்த நாட்டை கைப்பற்றிவிட்டால் நீ அரசன் இல்லை. இது உனக்கு தெரியுமா? இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்கிறேன். உண்மையில் நீ யார் என்று கேட்டார். அரசனின் மனதில் உண்மையில் நீ யார்? என்ற கேள்வி லேசான சலனத்தை உண்டு பண்ணியது. ஆனாலும் அரசனின் பசியின் காரணமாக சுவாமி பசியின் காரணமாக நான் களைப்பாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஏதோ தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். இந்த வேளையில் முனிவரின் சீடன் ஒருவன் முனிவருக்கு பழ வகைளை கொண்டு வந்து முனிவரை வணங்கி பழக்கூடையை கொடுத்துச் சென்றான். அரசனை கண்டு கொள்ளவே இல்லை. நாட்டுக்கே அரசனாக இருக்கிறேன். இவன் தன்னை வணங்காமல் செல்கிறானே என்று எண்ணி அரசனின் முகம் இறுகியது. முனிவரும் அவன் கொண்டு வந்த பழத்தில் ஒன்றைக் கூட அரசனிடம் கொடுக்கவில்லை.

முனிவருக்கு தனக்கு பழங்கள் கொடுக்க மனமில்லை போலும் என்றெண்ணி அரசன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். முனிவர் அரசனே பார்த்து எனது சீடனுக்கு உன்னைப் பற்றித் தெரியாது. அதனால் உன்னை வணங்காமல் சென்று விட்டான். உண்மையில் யார் நீ என்பதை தெரிந்து கொள்வது நல்லது என்று சொல்லி விட்டு பழங்களை சாப்பிடக் கொடுத்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு வீரன் அவசரமாக குதிரையில் வந்தான். அரசே நம் கோட்டையை பகை மன்னர்கள் சூழ்ந்து கொண்டு விட்டனர். தலைநகரில் போர் நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் என்றான் பதைபதைப்புடன். அரசனுக்கு இப்போது பசி காணாமல் போனது. குதிரையை நோக்கி ஓடினான். முனிவர் அவனைத் தடுத்து பழங்களைச் சாப்பிடும்படி கூறினார். சுவாமி நான் இப்போது அமைதி இழந்து தவிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று கிளம்ப முயற்சித்தான். முனிவர் அரசனை தடுத்து நிறுத்தி முதலில் சாப்பிடு. களைப்பைப் போக்க சிறிது நேரம் ஓய்வெடு. கொஞ்சம் பொறுமையாக இரு என்று முனிவர் அறிவுரை சொன்னார். முனிவரின் கனிவான வார்த்தைகள் கட்டளை போல் அவனை தடுத்து நிறுத்தியது. அரசனும் பழங்களை சாப்பிட்டு பதட்டம் நீங்கி அமைதியானான். களைப்பின் காரணமாக மரநிழலில் உறங்கி விட்டான். திடீரென்று கண் விழித்ததும் வேகமாக எழுந்து நின்றான். சுவாமி எப்படியோ என்னையும் அறியாமல் நான் தூங்கிவிட்டேன் இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். எனது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றான்.

முனிவர் அரசனிடம் நான் இந்நாட்டின் அரசன். நான் பசியோடு இருக்கிறேன். நான் அமைதியை இழந்து தவிக்கிறேன். நான் அறியாமல் தூங்கிவிட்டேன். இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். இப்படி எத்தனையோ விதத்தில் நான் நான் என்று பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய். இத்தனை நான் சொன்னாயே இதில் எந்த நான் உண்மை. உண்மையில் யார் நீ என்பதை அறிந்தாயா? என்று கேட்டார். அமைதியாக நின்ற அரசனிடம் உடலோ உள்ளமோ உணர்வோ நான் அல்ல. நான் என்பது உண்மையில் ஆன்மா மட்டும் தான். உனது வாழ்வின் அன்றாட விஷயங்களான மக்கள் நாடு போர் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானதே. உயிர் உள்ளவரை மட்டுமே அதற்கு பயன். நீ யார் என்று அறிந்து கொண்டு ஆன்மிக வாழ்வில் வெற்றியடைவதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள் என்று அறிவுரை கூறினார். முனிவர் சொன்னபடி வாழ்வில் வந்து போகும் பொருட்கள் எதுவும் நிரந்தரமல்ல. நிரந்தரமானது உள்ளே இருக்கக் கூடிய இறைவன் தான் என்று உள்ளத் தெளிவுடன் அரசன் கிளம்பினான். முனிவரின் வார்த்தைகள் அரசனின் உள்ளத்தின் உள்ளே தான் யார் என்று தேட ஆரம்பித்தது.

ஞானமடைய எளிய வழி

புத்தர் தனது சீடர் ஆனந்தாவுடன் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்தா புத்தரிடம் ஞானமடைவதற்கு எளிமையான வழி என்ன என்று கேட்டார். அதற்கு புத்தர் சுற்றி இருப்பவற்றை சும்மா கவனி என்றார். சும்மா கவனித்தால் எப்படி ஞானம் கிடைக்கும் என்றார். புத்தர் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்தார். தாகம் அதிகமாக இருக்கிறது குடிக்க எங்காவது சென்று நீர் கொண்டு வா என்று கூறினார். ஆனந்தா தண்ணீர் தேடி அலைந்தார். எங்கும் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் யானைகள் உடலில் சேறோடு சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது என்றறிந்து தேடி ஒரு குட்டையைக் கண்டுபிடிக்கிறார். யானைகள் புரண்டு எழுந்து போனதால் நீர் முழுக்க சேறாகி குடிக்க தகுதியில்லாததாக ஆகிவிட்டது. வருத்தத்தோடு திரும்பி புத்தரிடம் விஷயத்தைச் சொல்கிறார். எனக்கு அதெல்லாம் தெரியாது. காரணமெல்லாம் சொல்லாதே. எனக்கு குடிக்க நீர் வேண்டும் என்று கேட்டார் புத்தர். ஆனந்தா வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த குட்டைக்குச் சென்றார். நீர் இப்போது கொஞ்சம் தெளிவானதைப் போலத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும் என்று கரையில் காத்திருந்தார். குட்டைத் தண்ணீர் சிறிது சிறிதாகத் தெளிந்து கொண்டே இருந்தது. ஆனந்தா அந்த பண்பு மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் நீர் மிகவும் தெளிந்து தூய்மையானதாக மாறியது. இதைக் கண்ட ஆனந்தரின் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது. குடுவையில் நீர் பிடித்துக்கொண்டு புத்தரிடம் திரும்பியவர் அவரது கையில் தண்ணீரைக் கொடுத்துவிட்டு அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். மனசுக்குள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது அது குழம்பிய குட்டையாகத்தான் இருக்கும். அமைதியாக அதை கவனித்துக்கொண்டே இருந்தால் அதுவாகவே தெளியும். என் மனதைத் தெளியவைக்கும் இந்த சூத்திரத்தை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் என்றார். புத்தர் புன்னகைத்தார்.

பிரச்சனைகள் கவலையாகவோ கோபமாகவோ ஆத்திரமாகவோ அகங்காரமாகவோ எந்தவொரு ரூபத்தில் வந்து மனதை வாட்டி எடுத்தாலும் குழம்பிய குட்டை தெளிவதற்காகக் காத்திருப்பதைப் போல மனதில் உள்ள பிரச்சனை துன்பம் சோகம் கவலை என எதுவாக இருந்தாலும் அது தெளிவடையயும் வரை அமைதியாக மனதை கவனித்துக் கொண்டிருந்தால் போதும். மனதில் வந்த பிரச்சனை துன்பம் சோகம் கவலை அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி நிலை உண்டாகும்.

துறவு

மிகப் பெரிய துறவியொருவர் தம்முடைய சீடரிடம் துறவு பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டார். அதனை சீடர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாமன்னர் ஜனகரிடம் அனுப்பி வைத்தார். சீடருக்கோ வியப்பு ஏற்பட்டது. குருவே தாங்களோ மிகப் பெரிய துறவி சற்குரு. அவரோ நாடாளும் மன்னர் குடும்பஸ்தர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? என்று கேட்டார். அந்தத் துறவி தமது சீடரிடம் நாம் சந்நியாசி அவர் குடும்பஸ்தர் என்பதையெல்லாம் தாண்டி அவரிடம் நீ கற்றுக் கொள்வதற்கு உனக்கு ஒன்று இருக்கிறது. பணிவுடன் தலைவணங்கி அவரிடம் அதைக் கற்றுக் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். விருப்பம் இல்லாவிட்டாலும் குருவின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அந்த சீடர் மிதிலைக்கு சென்றார். அரசவைக்குள் மன்னர் ஜனகர் இருந்தார். அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆடல் பாடல் என்று களைகட்டியது. அவையில் இருந்தோர் அனைவரும் நடனத்தில் மயங்கி அவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். மன்னர் ஜனகர் இந்தக் கூட்டத்தினரிடையே அமர்ந்திருந்தார். அந்தக் காட்சியைப் பார்க்கவே சீடருக்கு பிடிக்காமல் இருந்தது. ஜனகர் சிரித்துக் கொண்டே அந்த சீடரிடம் இங்கு காண்பதைக் கொண்டு தவறான முடிவுக்கு வந்து விடாதே. ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காகத் தான் உனது குரு உன்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். அதை மட்டும் கற்றுக் கொள்ள ஒரு நாள் இந்த அரண்மனையில் தங்கியிருந்து விட்டு பின் நீ புறப்பட்டு செல்லலாம் என்றார்.

அரண்மனையில் உள்ள ஒரு அறையில் சீடர் தங்கினார். அவர் தங்கியிருந்த அறை மிகவும் அழகானதாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. விருந்து முடிந்ததும் தூங்குவதற்கு படுக்கையில் சாய்ந்தார். மேலே பார்த்த போது திடுக்கிட்டார். அந்த அறை முழுவதும் மேல் பகுதியில் சீடரின் தலைக்கு மேலே ஒரு கூர்மையான வாள்கள் வெறுமனே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். எந்த நேரத்திலும் நூல் அறுந்து ஏதோஒரு வாள் தனது கழுத்தில் விழும் ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்டு அன்று இரவு முழுவதும் விழித்துக் கொண்டு அந்தக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த வாளைக் கவனித்துக் கொண்டு இருந்தார். பொழுது விடிந்ததும் ஐனகர் வந்தார். அவரிடம் இந்த அறை வசதியாக இருந்ததா? படுக்கை சுகமாக இருந்ததா? இரவு நன்றாக உறங்கினீர்களா? என விசாரித்தார். அதற்கு அந்த சீடர் எல்லாமே வசதியாகத் தான் இருந்தது. ஆனால் தலைக்கு மேலே மெல்லிய நூலில் உறையில்லாத வாள் தொங்கிக் கொண்டிருக்க எப்படி நான் அமைதியாக உறங்க முடியும்? என்று பதில் அளித்தார். அரசர் அவரிடம் நீங்கள் இங்கே வரும் போது மிகவும் களைப்பாக இருந்தீர்கள். எனவே படுத்ததும் அசதியில் தூங்கிக் போயிருக்கலாம். ஆனால் ஏன் தூங்க முடிய வில்லை. தூங்கினால் வாள் அறுந்து நமது மீது விழுந்தால் என்னாகும் என்ற சிந்தனையில் பயத்தில் தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் உங்கள் சிந்தனை ஓடியது. இதனால் நீங்கள் தூங்காமல் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் இருந்தீர்கள். இந்த எச்சரிக்கைக்கு நடுவில் இந்த உலகம் மற்றும் இதில் இருக்கும் சுகதுக்கங்கள் ஒன்றையும் நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்கள். இந்த சிந்தனை இல்லாத மனம் தான் துறவு. இதுதான் எனது போதனை.

நான் எனது அரசவையில் அமர்ந்து கொண்டிருந்தாலும் அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தாலும் இந்த சுகபோகங்களுக்கிடையே நான் எனது தலைக்கு மேலே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் உறையில்லாத மரணம் என்ற வாளைப் பற்றிய கவனத்தில்தான் எப்போதும் இருக்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு நீர்க்குமிழி போன்றது. ஒரு நொடிப்பொழுதில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். அதுபோல் மரணம் எந்த நேரத்திலும் நிகழலாம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள். எந்த நேரத்திலும் வரக்கூடிய அந்த மரணம் குறித்து நான் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். எனவே நான் இந்த அரண்மனையில் வாழ்ந்தாலும் கூட நானும் ஒரு துறவி தான் என்று சொல்லி சீடரை அனுப்பி வைத்தார்.

ஞான குரு

கேள்வி: ஒருவனுக்கு உண்மையான ஆன்மிக தேடல் இருந்தால் அதற்கான குரு நாதர் அவனைத் தேடி ஒரு நாள் வருவார் என்று சொல்வதெல்லாம் உண்மையா? ஆன்மிக தேடல் கொண்ட ஒருவனை வேறு ஒரு இடத்தில் இருக்கும் ஞான குருவால் உணர முடியுமா?

புத்தர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு

புத்தர் ஒரு கிராமத்திற்கு உபதேசம் கொடுக்க ஒருநாள் மாலை நேரத்தில் வந்திருந்தார். கிராமத்து மக்கள் அனைவரும் கூடி விட்டனர். புத்தர் அந்த சின்ன கிராமத்திற்கு வருவார் என்று அந்த கிராமத்து மக்கள் எவருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் அங்கு கூடியிருந்தார்கள். இருப்பினும் புத்தர் யாருக்காகவோ காத்திருந்தார். அங்கிருந்த செல்வந்தர் ஒருவர் புத்தரின் அருகில் வந்து ஐயா நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள்? இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் இங்கு வந்து விட்டார்கள். இனி வருவதற்கு எவருமில்லை. உங்களது உபதேசத்தை ஆரம்பிக்கலாமே என்றார். புத்தர் புன்னகைத்தார். பிறகு அனைவருக்கும் கேட்கும்படி சொன்னார். இந்த இடத்திற்கு உபதேசம் செய்ய யாருக்காக வந்தேனோ அவர் இன்னும் வரவில்லை. நான் அவருக்காக காத்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும். எனக்கான கடமை இது. நீங்கள் அனைவரும் எனது உபதேசத்தை கேட்பீர்கள். ஆனால் அதில் உள்ள உண்மையை தேடுவீர்களா என்றால் அது கேள்விக் குறிதான். ஒரு ஜீவன் ஞானத்தேடலில் இந்த ஊரில் இருக்கிறது. அதன் உயிர் அலை இன்னும் இங்கு வரவில்லை ஆகவே காத்திருக்கிறேன் என்றார். அவர் சொன்னதை கேட்டதும் அங்கிருந்தோர் சங்கடப்பட்டனர். ஏனெனில் அந்த கிராமத்தில் உள்ள பணக்காரர்கள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பக்திமான்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தாகள். பிறகு யாருக்காக புத்தர் காத்திருக்கிறார்? என்று வருபவரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவசர அவசரமாக ஒரு ஏழை குடும்பத்துப் பெண் வந்து அந்த கூட்டத்திற்குள் அமர்ந்து கொண்டாள். அவளது எஜமான் அந்த செல்வந்தர் கூட்டத்தின் முன் வரிசையில் தான் அமர்ந்திருந்தார். புத்தரை பார்க்க போக வேண்டும் என்று அவள் அவரிடம் அனுமதி கேட்டதும் நான் சொன்ன வேலையை முடித்து விட்டு பிறகு எங்கு வேண்டுமானாலும் போ என்று அலட்சியமாக சொல்லி விட்டார். வேலையை முடித்து விட்டு இப்போதுதான் வந்திருக்கிறாள். அந்தப் பெண்ணை பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு புத்தர் தனது உபதேசத்தை ஆரம்பித்தார். உடனே அந்த செல்வந்தர் புத்தரிடம் இவளுக்காகவா இத்தனை நேரம் காத்துக் கொண்டு இருந்தீர்கள்? இவள் எனது வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி என்றார் அலட்சியமாக. அதற்கு புத்தர் தனது புன்னகை மாறாமல் பதிலளித்தார். இவள் படிக்காதவள் ஒரு ஏழை கூலித் தொழிலாளி என்பதை யாம் அறிவோம். நான் பக்கத்து கிராமத்தில் இருக்கும்போது யாரோ என்னை அழைப்பதை போல உணர்ந்தேன். இனம் புரியாத ஒரு ஆன்மிகத் தேடல் அந்த அழைப்பில் மறைந்திருப்பதையும் உணர்ந்து கொண்டேன். இந்த கிராமத்தில் இவள் மட்டுமே எனது உபதேசத்தை கேட்டு கடைபிடித்து அதை உணர்ந்து கொள்ளும் தன்மையில் இருக்கிறாள். இவளுக்காகத்தான் நான் இந்த கிராமத்திற்கே வந்தேன். இந்த பெண்ணினுடைய ஞானத்தேடல் என்னை இங்கே வரவழைத்து விட்டது என்றார் புத்தர். பிறகு தனது உபதேசத்தை அந்த பெண்ணை பார்த்தபடியே ஆரம்பித்தார். அந்த பெண்ணும் கும்பிட்ட கரத்துடன் கண்கள் கசிய புத்தரை பார்த்தபடியே அவர் சொல்வதை கேட்டு அதன் ஆழ்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டாள்.

ஆன்மிக ஞானத்தேடலுக்கு ஆண் பெண் அல்லது உயர்வு தாழ்வு அல்லது வயது என்ற எந்த விதமான வேறுபாடுகளும் இல்லை. ஞானத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் திறந்த அமைதியான மன நிலையே வேண்டும். அவரே சிறந்த சீடர். ஞான குருநாதர் என்பவர் எப்போதுமே ஆன்மிக தேடல் உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தேடி அவர்களுக்குத் தேவையானதை கொடுத்துக் கொண்டே இருப்பார் அவரே ஞான குரு.

புனித நீராடல்

ஒரு ஞானியிடம் சென்ற சிலர் நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள். ஞானியோ இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள் என்று சொல்லி அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் தண்ணீரில் மூழ்க வைத்து எடுத்து என்னிடம் திரும்ப கொண்டு வந்து என்னிடம் கொடுங்கள் என்றார்.

ஞானி சொன்னது போலவே அவர்களும் செய்து திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தார்கள். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அனைவருக்கும் ஒரு துண்டை கொடுத்தார். புனித நதியில் முழுகி வந்த பாகற்காய். இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார். ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது. தித்திக்கும்னு சொன்னீங்க ஆனா கசக்குதே என்றார்கள்.

ஞானி பார்த்தீர்களா பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே நாம் நமது தவறான செயல்களையும் தீய பழக்கங்களையும் துர் குணங்களை மாற்றிக் கொள்ளாமலோ அல்லது இந்த தீய குணங்களை விட்டு விடுகிறேன் என்று பிரார்த்தனை செய்துவிட்டு அதனை கடைபிடிக்காமல் தீய குணங்களிலேயே இருந்து எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் எந்த கோயிலுக்கோ குளத்துக்கோ புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து விழுந்து வணங்கினாலும் எந்த பயனும் வந்து விடப் போவதில்லை. மனங்களிலும் குணங்களிலும் அன்பு வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும். புனிய நீராடல் என்பது தனக்குள் இருக்கும் தீய குணங்களை நல்ல எண்ணங்களால் நீராடி நமது உள்ளத்தை புனிதப்படுத்துவது ஆகும் என்றார்.