கோபம்

புத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவரைப் பார்த்தபோது அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். அதைத் துடைத்துக் கொண்டே புத்தர் வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா என்று அமைதியாக கேட்டார். புத்தருடன் இருந்த சீடர் ஆனந்தருக்குக் கோபம் வந்து விட்டது. நீங்கள் அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன் என்றார். புத்தர் தனது சீடரிடம் சொன்னார் ஆனந்தா நாம் எல்லாம் சந்நியாசிகள் என்பதை மறந்து விட்டாயா இதோ இவரைப்பார் ஏற்கனவே இவர் கோபம் என்னும் நோயினால் பீடிக்கப் பட்டிருக்கிறார். அவருடைய கோபமான முகத்தைப்பார். அவர் உடல் ஆடுகிறது. கோபப்படும் முன் அவர் மகிழ்வுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கின்றாயா அவர் தன கோபத்தினால் பைத்தியமாக நிற்கிறார். இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்க முடியும்.

எனக்கு என்ன பெரிய கெடுதல் நேர்ந்து விட்டது. என் முகத்தை துடைப்பதில் எனக்கு சிரமம் ஒன்றும் இல்லை. நீ கோபப்படாதே. இல்லையெனில் அவருக்கு நேர்ந்த சிரமங்கள் எல்லாம் உனக்கும் நேரும். உன்னை நீயே ஏன் தண்டித்துக் கொள்ள வேண்டும். இவர் மீது கோபப்படாதே. மாறாக இரக்கப்படு என்றார். பின்னர் புத்தர் தன் மீது உமிழ்ந்தவரைப் பார்த்து நீ மிகவும் களைப்புடன் காணப்படுகிறாய். உன்னை நீயே தண்டித்துக் கொண்டது போதும். என்னிடம் நீ நடந்து கொண்டதை மறந்துவிடு வீட்டிற்குப் போய் ஓய்வெடு என்றார். அவன் மிகுந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவனாக நின்றான். பின் அவன் புத்தரிடம் மன்னிப்புக் கேட்டான். புத்தர் சொன்னார் முதலாவதாக நான் உன் மீது கோபப்படவில்லை. பின் எதற்காக நான் உன்னை மன்னிக்க வேண்டும். இப்போது உன்னைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி ஏனெனில் நீ உன் துன்ப நிலையிலிருந்து மீண்டு நிம்மதியுடன் காணப்படுகிறாய். மீண்டும் இத்தவறை யாரிடமும் செய்து உனக்குள் நீயே நரகத்தை உருவாக்கிக் கொள்ளாதே என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

அனுபவம்

ஐந்தாறு மொழிகளைப் பேசுகிற வியாபாரிகள் ஓர் இடத்தில் ஒன்று கூடினார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அருகில் இருந்த பணியாளிடம் பார்த்து தங்கள் மொழியிலேயே தண்ணீர் கேட்டார்கள். பானி லாவோ என்றார் ஒருவர். தண்ணீர் கொண்டு வா என்றார் மற்றொருவர். இப்படியே அவரவர்கள் பேசிய வார்த்தைகள் வேறு வேறு மொழிகளில் கேட்டனர். பானி, வாட்டர், தண்ணீர், நீள்ளு என அனைவரின் மொழிக்கேற்ப வேறு வேறு ஒலிகள் அங்கு கேட்டது. அவர்கள் அனைவரும் பேசிய மொழிகளைத் தெரியாத ஒருவர் அங்கே இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வார்த்தைகளை சொல்லி ஒரு பொருளை கொண்டு வர சொன்னதை உணர்ந்தார். ஒவ்வொருவரும் வேறு பொருள்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் தண்ணீரைக் கொண்டு கொடுத்தார் பணியாள். ஒரே பொருளைத் தான் இவ்வளவு பேரும் கேட்டிருக்கின்றார்கள். வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாகக் கேட்டார்களே என்று ஆச்சரியப்பட்டார் மொழி தெரியாதவர்.

தண்ணீரின் பெயரை பல்வேறு மொழியில் சொல்லும் போது அது வெவ்வேறாகக் காதில் படுகிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரிய பொருளைக் காணும்போது எல்லாம் ஒன்றுதான் என்று தெரியவருகிறது. தண்ணீர் ஒரு பொருளே அதனை அறிந்தவர்கள் அவர்களுக்கு புரிந்த மொழிகளில் சொல்கிறார்கள். அதுபோல கடவுளும் ஒருவரே அவரவர்களுக்கு கிடைத்த அனுபவத்தில் ஒரே கடவுளைப் பலரும் பல வகைகளில் வழிபடுகிறார்கள். கடவுளிடம் நெருங்க நெருங்க எல்லாக் கடவுளரும் ஒன்றே என்ற உண்மையை அனுபவத்தில் உணரலாம்.

ஆயுள்

ஒரு முறை பிரம்மாவுக்கு தானே சிரஞ்சீவி என்று கர்வம் ஏற்பட்டது. அவர் வைகுண்டத்துக்கு சென்று மஹா விஷ்ணுவிடம் நான் எவ்வளவு பெரியவன் சிரஞ்சீவி பார்த்தாயா என்றார். அதற்கு விஷ்ணு இல்லை உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றார். எல்லாரையும் படைப்பவன் நான் என்னை விட வயதானவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டர். சரி வா காட்டுகிறேன் என்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அழைத்துக்கொண்டு போனார். ஒரு இடத்தில் லோமசர் என்ற ரோமரிஷி காணப்பட்டார் அவரிடம் மஹாவிஷ்ணு தங்கள் வயதென்ன இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள் என்று கேட்டார்.

என் வயதை கேட்கின்றாயா சொல்கிறேன். கிருத யுகம், துவாபர யுகம், த்ரேதாயுகம், கலி யுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர் (43 லட்சத்து 21000 மனித வருடங்கள்). அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது. இப்படி ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்து விட்டதென்றால் என் உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும். இப்படி ஒவ்வொரு பிரம்ம கல்பத்துக்கு ஒரு ரோமம் உதிர்ந்தது போக இன்னும் எத்தனையோ ரோமங்கள் உடம்பில் இருக்கின்றன. என்றைக்கு இவை எல்லாமே உதிர்ந்துவிடுமோ அன்று என் ஆயுள் முடியும் என்றார். பிரம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. அதுவும் போதாதென்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அஷ்டாவக்கிர முனியின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். அவரது சரீரத்தில் 8 கோணல்கள் இருக்கும். அவர் ஒரு லோமச முனிவர் இறந்தால் என் ஒரு கோணல் நேராகும். இப்படியே எட்டு லோமச முனிவர்களின் ஆயுளில் என் எட்டு கோணல்களும் நேரானதும் என் ஆயுசு முடியும் என்றார். இதைக்கேட்டதும் பிரம்மாவின் கர்வம் கப்பென்று அடங்கியது.

மனம்

ஒரு ஊரில் ஒரு கோவில் இருந்தது. அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார். கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார் வந்த அதிகாரி கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார். சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது. அதை பார்த்த அவர் சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் அதை உடனே நிறுத்துங்கள் என்று ஆணையிட்டார். உடனே ஆலய ஊழியர்கள் அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள். ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம். இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார்.

அடுத்த நாள் சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா சிறிது நேரம் தானும் சும்மா இருந்து பார்க்கலாம் என்று கோவிலில் வந்து சும்மா இருக்கும் சாமியாருக்கு அருகில் அமர்ந்தார். மனம் அலைய ஆரம்பித்தது. கோவிலுக்கு சம்பந்தமில்லாத அனைத்து நினைவுகளும் வந்தது. மனம் அடங்க மறுத்தது. கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் என்று முயன்றார். சிறிது நேரத்திற்கு மேல் கண்களை முடி இருக்க முடியவில்லை தான் கொண்டு வந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் அதில் கவனத்தை செலுத்தினார். காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது. கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார். மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது. மகளுக்கு வரன் தேட வேண்டும். மகனுக்கு வேலை தேட வேண்டும். மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார். திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது. சுவாமிக்கு வைக்க நெய்வேத்யம் பள்ளிமடத்தில் தயாரித்து கொண்டு இருந்தார்கள். மனது அங்கு செய்கிறது. அதை நினைத்ததும் வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே என்று நினைத்தார். அதிகாரி திணறி போனார். அவரின் சொல்லுக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள். உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது. அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று அது முடியாமல் சோர்ந்து போனார். சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அவருக்குபுரிந்தது. உடனே மறுபடியும் பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் எழுதினார் சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு.

மனம் தியானம் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது. மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது. எனவே தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை. மனம் செயல்படுகின்ற வரையில் தியானமும் ஆரம்பமாவதில்லை.

மகிழ்ச்சி

ஒர் பண்டிதரிடம் சென்ற ஒருவன் மற்றவர்கள் செய்யும் செயலால் நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்றான். அதற்கு அவர் உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான். உன் மனதைப் புரிந்து கொள். நீ துன்பத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்றார் பண்டிதர். என் மனதை நான் எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்டான். இந்தக் கதையைக் கேள் உன் மனதை புரிந்து கொள்ள உதவும் என்ற பண்டிதர் ஓரு கதை சொன்னார்

ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை வருந்தவும் இல்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம். தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை துன்பமுமில்லை என்று கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

ஞானியின் குரு

மிகச் சிறந்த ஞானி ஒருவரிடம் உங்களது குரு யார் என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஞானி எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். அதில் முதலாமவர் ஒரு திருடர்.

ஒருமுறை நான் செல்லவேண்டிய கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக்கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன். நான் அவரிடம் நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர் நான் ஒரு திருடன் நீங்களோ ஒரு ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கிடைப்பது மிகவும் கடினம். நீங்கள் விரும்பினால் என் வீட்டிற்கு வரலாம். திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள் என்று அழைத்தார். நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் ஞானியை பார்த்து பயப்படாத போது ஒரு ஞானி ஏன் திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் தியானம் செய்யுங்கள் ஓய்வெடுங்கள் நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன் என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை. ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை எல்லா பிரார்த்தனைகளும் எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன். அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் தியானம் செய்யலாம் என்று நான் முயல உதவி செய்திருக்கிறது. அவர் தான் எனது முதல் குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. நாய் நதிக்குள் பார்த்தது. தன்னுடைய பிம்பத்தை தண்ணீரில் பார்த்து பயந்து குரைத்தது. தண்ணீரில் இருந்த நாயின் பிம்பமும் குரைத்தது. இதை பார்த்து பயந்து போய் திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்து தண்ணீரை பார்த்தது. அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது. அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். நாம் அறியாத ஒன்றை பார்த்து பயந்து பின் வாங்ககூடாது. எதிர்த்து செல்லவேண்டும். சென்ற பின்னால் அங்கு பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்துவிடும். அறியாதவற்றை கண்டு நான் பயப்படும் போது நாயின் நினைவு வரும் எதிர்த்து நிற்பேன். என் அறியாமை மறைந்துவிடும். அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது ஒரு எரியும் விளக்கை கைகளில் எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த விளக்கை ஏற்றினாய் என்று கேட்டேன். ஆமாம் என்று கூறியது குழந்தை. விளக்கு எரியாமல் இருந்தது நீ நெருப்பை வைத்தாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த குழந்தை சிரித்துவிட்டு விளக்கை ஊதி அணைத்துவிட்டு இப்போது நீங்கள் இந்த ஒளியை பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது. எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அனைத்தும் அறிந்தவன் என்ற எண்ணத்தை விட்டு விட்டேன். எனக்கு எப்போதெல்லாம் அனைத்தும் தெரியும் என்கின்ற எண்ணம் வருகின்றதோ அப்போதெல்லாம் இந்த குழந்தையை எண்ணிக்கொள்வேன் என்றார்.

கர்மா

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார். ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான். அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான். மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான். அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான். அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான். அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான் அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை. கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர் சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர் நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர். ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்.

இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும் என்றான் கடைக்காரன் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது. இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி. மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான் தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான். அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக்கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான். அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான். அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான். அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான். அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான். அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது. இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான். அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்.

குரு சிஷ்யர்களைக் கேட்டார் சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன என்றார் பல சீடர்கள் அதற்கு பல விதமாக கர்மா என்பது நமது சொற்கள் நமது செயல்கள் நமது உணர்வுகள் நமது கடமைகள் என்றெல்லாம் பதில் கூறினர். குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும். மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் என்று முடித்தார்.

அறியாமை

குரு ஒருவர் இமயமலையில் இருந்தார். ஒருநாள் அவரைக் காண வேறு ஒரு மடாலயத்தின் தலைவர் வந்தார். ஐயா நான் பிரசித்தி பெற்ற மடாலயம் ஒன்றின் தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் வந்தவர். குரு மௌனம் கலைக்காமல் தலையசைத்தார். தற்பொழுது என் மனம் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. தெளிவு பெறவே தங்களை நாடி வந்தேன் என்றார். நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் குரு.

குருவே எங்கள் மடம் மிகவும் புராதனமானது. பழைமையும் கீர்த்தியும் பெற்றது. உலகெங்கிலும் பல நாடுகளிலுமிருந்து ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வருவார்கள். ஆலயம் முழுவதும் இறைவழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். ஆனால் சில காலமாக நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் மடத்தை நாடி யாரும் வருவதில்லை. அங்கு இருப்பதோ சில சீடர்கள் தான். அவர்களும் ஏனோதானோவென்று தங்கள் கடமையைச் செய்கிறார்கள். இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்கு என்ன பரிகாரம் காண்பதென்று விளங்கவில்லை. நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்ல வேண்டும் என்று வேண்டினார் அந்த மடத்தலைவர்.

அவரது குரலில் தென்பட்ட ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார். அறியாமை என்ற வினைதான் காரணம் என்றார். அறியாமையா என்று வியந்தார் வந்தவர். ஆம் உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் இருக்கிறார். நீங்கள் அவரை உணரவில்லை. அவரை அறிந்துகொண்டால் போதும் இந்தக் குறைகள் நீங்கிவிடும் என்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார் குரு. குரு சொன்னதை சிந்தித்தபடியே புறப்பட்ட மடத்தலைவர் மடத்திற்கு வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குரு சொன்ன செய்தியை விளக்கிக் கூறினார். இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவநம்பிக்கையுடனும் அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

இவராயிருக்குமோ இல்லை அவரையிருக்குமோ என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் இறைதூதர் என்று கண்டுபிடிக்க தங்களால் முடியாது. அது இங்குள்ள யாராகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தனர். ஒருவேளை இவர் இறைதூதராக இருந்தால் என்ற கேள்வியோடு மற்றவர்களை அன்போடு நடத்தினர். இதனால் சில நாட்களிலேயே அந்த மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள் பலரும் அங்குள்ள நிலையைப் பற்றி மற்றவர்களிடம் கூறத்தொடங்கினர். மீண்டும் பல இடங்களில் இருந்து இறைப்பணிபுரிய அங்கு வர ஆரம்பித்தனர். இதனைக் கண்ட பிறகு தான் மடாலத்தின் தலைவருக்கு குரு சொன்னதன் பொருள் புரிந்தது. இறைத்தூதர் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் மற்றவருடன் பணிவுடனும் அன்புடனும் பழகும்போது நாம் இறைத்தூதராகிவிடுகிறோம்.

கடவுள் என்பவர் வெளியில் தேடவேண்டியது இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம்மைப் போல பிறரையும் நேசித்தால் இறைவனை உணர முடியும்.

ஒருமுகப்படுத்தப்பட்ட மனம்

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர் நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர் முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல் நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம் பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள் அப்போது உங்களுக்கே தெரியும் என்று கூறினான். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின. இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அவர்கள் விவேகானந்தரிடம் நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள் என்றார்கள். அதற்கு விவேகானந்தர் என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார்.

சுவாமி விவேகானந்தர் மன ஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.

செயல்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார். அதற்கு குரு பசி எடுத்ததால் சாப்பிடுவது தூக்கம் வந்தால் தூங்குவது. சீடர் மறுபடியும் கேள்வி கேட்டார். பசித்தால் புசிப்பது உறக்கம் வந்தால் உறங்குவது இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன். வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை. கவலையில் சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன் என்றார்.

செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம் என்று பகவத்கீதை கூறுகிறது. எந்த செயலானாலும் செய்யும் செயலில் ஒன்றிவிடும் போது அது தியானமாகி விடுவதோடு செய்யப்படும் செயலும் முழுமை அடைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் செயலின் பாரம் துன்பம் எதுவும் இல்லாமல் அச்செயலை நிறைவாக செய்யமுடியும்.