சுவாமி விவேகானந்தர் ஒரு முறை ஆல்வார் சமஸ்தானத்திற்குச் சென்றார். அங்கு இருந்த மகாராஜா மங்கள்சிங் விவேகானந்தரை அன்புடன் வரவேற்றார். மகாராஜாவுக்கு இறைவழிபாட்டில் பல சந்தேகங்கள் இருந்தன. குறிப்பாக அவர் விக்ரக வழிபாட்டை ஏற்கவில்லை. எனவே விவேகானந்தரிடம் கேள்வி கேட்டார். கல்லாலும் உலோகத்தாலும் ஆன இந்த விக்ரகங்களில் என்ன சக்தி இருக்கிறது என்று இவற்றை நாம் வணங்க வேண்டும் அறியாமல் இவற்றை வணங்குவது முட்டாள்தனம் அல்லவா என்று கேட்டார். விவேகானந்தர் மகாராஜவின் கீழ் இருக்கும் ஒரு திவானை அழைத்தார். அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த மகாராஜாவின் உருவப் படத்தை கழற்றிக் கொண்டு வருமாறு பணித்தார். திவானும் அவ்வாறே கழற்றிக் கொண்டு வந்தார். பின் திவானைப் பார்த்து இதன் மீது துப்புங்கள் என்றார். திவான் திகைத்துப் போனார். அய்யோ இது மகாராஜாவின் உருவப்படம் ஆயிற்றே எப்படி இதில் துப்புவது என்றார் அச்சத்துடன். சரி உங்களுக்கு அச்சமாக இருந்தால் வேண்டாம் வேறு யாராவது வந்து துப்புங்கள் என்றார் விவேகானந்தர். அனைவரும் பேயறைந்தது போல் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனரே அன்றி அதைச் செய்வதற்கு யாரும் முன் வரவில்லை. உடனே விவேகானந்தர் நான் என்ன உங்கள் மகாராஜாவின் முகத்தின் மீதா எச்சில் துப்பச் சொன்னேன். இந்த சாதாரண படத்தின் மீது தானே துப்பச் சொன்னேன். அதற்கு ஏன் இத்தனை தயக்கம் என்றார். யாரும் பதில் பேச முடியாமல் திகைத்துப் போய் விவேகானந்தர் முகத்தையும் மன்னரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.
விவேகானந்தரிடம் திவான் மட்டும் தயக்கத்துடன் சுவாமி மன்னிக்க வேண்டும். இது இந்த நாட்டைக் காக்கின்ற மகாராஜாவின் உருவப்படம். இதில் துப்புவது என்பது அவர் மேலேயே துப்பி அவமானம் செய்வது போலாகும். அதை எப்படி எங்களால் செய்ய முடியும்? ஆகவே எங்களை மன்னிக்க வேண்டும் எங்களால் முடியாது என்று கூறினார். மன்னரோ சுவாமிகள் வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்துகிறாரோ என்று எண்ணி புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். விவேகானந்தர் மகாராஜாவிடம் இந்த உருவப்படம் மகாராஜாவைப் போல இருக்கிறது. ஆனால் இது மகாராஜாவாகி விட முடியாது. ஆனாலும் இதை நீங்கள் மகாராஜாவாகவே தான் கருதுகிறீர்கள். அது போலத் தான் இறைவனும் இறைவன் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும் விக்ரகங்களிலும் கற்களிலும் அவரது தெய்வீக அம்சம் இருப்பதாகவே கருதி மக்கள் வழிபடுகிறார்கள். ஆராதனை செய்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கூறி விளக்கினார். மகாராஜா விக்ரக வழிபாட்டின் பெருமையையும் அதன் உண்மையை உணர்ந்து சுவாமிகளின் மேன்மையையும் புரிந்து கொண்டார். தனது தவறான கேள்விக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டி விவேகானந்தரின் ஆசியைப் பெற்றார்.