சுவாசம்

ஓர் நாட்டில் இருந்த ஞானி அனைவராலும் நேசிக்கப்பட்டார். அந்த நாட்டின் அரசியும் ஞானி மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். ஒருநாள் ஞானியை தரிசிக்க சென்றாள். ஞானியிடம் அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம் தான் வேண்டும் என்றாள். அவர் உடனே தனது பிச்சைப் பாத்திரம் கொடுத்து விட்டார். ராணி அவரிடம் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொடுத்தாள். இந்த பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன். உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி இப்பாத்திரம் என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன் என்றாள். அவரைப் பொறுத்தவரை பழைய பாத்திரமும் தங்கத்திலானா பாத்திரமும் ஒன்றுதான் எனவே அந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டார்.

ஞானியிடம் தங்கத்திலான பாத்திரம் இருப்பதை திருடன் ஒருவன் பார்த்தான். ஒரு சந்நியாசியிடம் இருக்கும் பாத்திரத்தை திருடி விடவேண்டும் என்று முடிவு செய்தான். ஞானி ஒரு மிகவும் பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார். ஞானி சீக்கிரமே தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லாமல் பாத்திரத்தை எடுத்துகொண்டு சென்று விடலாம் என்று காத்திருந்தான். தங்க பாத்திரத்திற்காக திருடன் காத்திருப்பதை கண்ட ஞானி அவன் ஏன் காத்திருக்க வேண்டும் என்று தங்க பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. விலையுயர்ந்த பொருளை அவர் இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை. ஞானி அருகே சென்ற அவன் மிகவும் நன்றி சுவாமி. உங்களைப் போன்ற பற்றில்லாதவர்களும் இருக்கின்றார்கள் என்று இப்போது அறிந்து கொண்டேன். உங்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளலாமா என்று கேட்டான். அவன் கூறியதை கேட்டு சிரித்த அவர் என்னிடம் நீ வரவேண்டும் என்று தான் பாத்திரத்தை வீசினேன் அருகே வா என்றார்.

ஞானியின் பாதங்களை தொட்டு வணங்கிய திருடன் வாழ்க்கையில் முதன்முறையாக தெய்வீகத்தை உணர்ந்து பரவசத்தை அடைந்தான். நானும் உங்களைப் போல ஞானியாக மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான். இங்கேயே இப்போதே மாறலாம் என்றார். அதைக்கேட்ட திருடன் நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். நான் ஒரு திருடன் என்பது அனைவருக்கும் தெரியும். மூன்றுமுறை அரசரின் பொக்கிஷ அறைக்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். யாராலும் என்னை பிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நான் இப்போதே எப்படி ஞானியாக மாற முடியும் என்றான். ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இல்லாமல் இருட்டாக இருக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு தீபத்தை ஏற்றிக் கொண்டு வந்தால் அங்கிருக்கும் இருட்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஆகவே நான் போக மாட்டேன் என்று சொல்லுமா. தீபத்தை கொண்டு போனதும் வெளிச்சம் அங்கே உடனே வந்துவிடும். அதுபோல் திருட்டு என்னும் இருட்டிற்குள் இருக்கும் உனக்குள் ஒரு வெளிச்சத்தை ஏற்றிக்கொள். வெளிச்சம் உனக்குள் வந்துவிடும் இப்போதே நீ ஞானியாகலாம் என்றார் ஞானி. திருடனால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன் மூலம் நீ உனக்குள் வெளிச்சத்தை கொண்டு வர முடியும் என்றார். அதற்குவதிருடன் நான் என் திருட்டு தொழிலை விட வேண்டுமா எனக் கேட்டான். நீ எப்போதும் இருப்பது போல் உன் விருப்பப்படி செய்து கொள். ஒரு ரகசியத்தை நான் உனக்கு கற்றுத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன் விருப்பம் என்றார். இதை கேட்டு மகிழ்ந்த திருடன் ரகசியத்தை கற்றுத்தரும்படி கேட்டான். எந்த வேலை செய்வதாக இருந்தாலும் அப்போது நீ உன்னுடைய சுவாசத்தை கவனி உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ அப்போதெல்லாம் நீ உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும் போது வேறு யாருடைய வீட்டிற்குள் இரவில் நுழையும்போதும் உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும்போதும் வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும் போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே என்றார். மகிழ்ந்த திருடன் இது மிகவும் எளிதானதாக இருக்கிறதே. நான் எப்பவும் போல் இருக்கலாம் ஆனால் ஞானியாகி விடுவேன் என்று மகிழ்ச்சியுடன் ஞானியின் காலில் விழுந்து வணங்கி சென்றான்.

ஞானியை சில நாட்கள் கழித்து திருடன் பார்க்க வந்தான். நான் கடந்த பதினைந்து நாட்களாக திருட முயற்சி செய்தேன். நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால் என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக விழிப்போடு தன்னுணர்வோடு கவனமானவனாக இருக்கிறேன். அந்த நேரத்தில் வைரங்கள் கூட கூழாங்கற்களாக தெரிகிறது. நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான். நீ சொன்ன அந்த அமைதி மௌனம் ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் சுவாசத்தை கவனித்தக்கொண்டே இரு நீ ஞானியாகி விடுவாய். வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என நினைத்தால் சுவாசத்தை கவனிக்க மறந்து திருட்டு தொழிலை செய்து கொள். நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய் என்றார். உன் வாழ்வில் தலையிட நான் யார் என பதிலளித்தார். என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கு தீட்சையளியுங்கள் என்று திருடன் கேட்டான். அதற்கு ஞானி நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்று ஆசிர்வதித்தார். குருவின் காலில் விழுந்தான் சீடன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.