ராமர் மூவரிடமும் பேச ஆரம்பித்தார். கவனமாக கேளுங்கள். யாரும் குறுக்கே பேச வேண்டாம். நமது அயோத்தி மக்கள் மத்தியில் என்னையும் சீதையையும் குறித்து எந்த விதமான பேச்சு நடமாடுகிறது என்று தெரிந்து கொண்டேன். மக்கள் மத்தியில் பெரும் தவறான ஒரு பேச்சு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பேச்சு மிகவும் அருவருக்கத் தக்கதாக என்னைக் குத்தி வாட்டுகிறது. நான் பெயர் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில் வந்தவன். சீதையும் ஜனகரின் உத்தமமான குலத்தில் தோன்றியவள் இது அனைவருக்கும் தெரியும். தண்டகாருண்ய வனத்தில் ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு சென்றான். நான் ராவணனை வதம் செய்து அழித்தேன். ராவணனின் பிடியில் சீதை இருந்தாலும் அவள் மாசற்றவள் என்பதை நான் அறிவேன். சீதையை அயோத்திக்கு அழைத்து வருவதற்கு முன்பாக அவள் மாசற்றவள் என்பதையும் அவளின் புனிதத்தன்மையையும் இந்த உலகிற்கு காட்டுவதற்காக அவளை அக்னியிலும் இறங்கச் செய்தேன். சீதையும் அக்னியில் இறங்கி தனது புனிதத் தன்மையை நிருபித்து விட்டாள். அக்னியில் இறங்கியவளை அக்னி தேவனே அழைத்து வந்து அவளின் புனிதத் தன்மையை உலகிற்கு காட்டினான். தேவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டனர். சீதை மாசற்றவள் என்று அனைவருக்கும் உணர்த்திய பின்னரே அயோத்திக்கு அழைத்து வந்தேன். இத்தனை செயலும் மக்களிடம் நம்பிக்கை வருவதற்காகத் தானே செய்தேன். இப்போது மக்கள் மத்தியில் சீதையின் மீது ஒருவிதமான சந்தேகமும் தவறான எண்ணமும் நிலவி வருகிறது. மாற்றானுடன் இருந்த சீதையுடன் எப்படி ராமர் அழைத்து வந்தாரோ அது போலவே நமது வீட்டின் பெண்களுக்கும் இது போல் ஏதேனும் பிரச்சனை வந்தால் நாமும் அது போலவே பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களுக்குள் பலவாறு பேசியிருக்கிறார்கள். அதன் உட்பொருள் சீதை புனிதமானவள் என்பதை மக்கள் நம்பவில்லை என்று தெரிகிறது. இதை அறிந்து என் மனம் மிகவும் வருந்துகிறது.
இக்ஷ்வாகு வம்சத்தில் நமது முன்னோர்கள் சத்தியத்தையும் தர்மத்தையும் காத்து தனக்குப் பின் வரும் வாரிசுகளுக்கு கொடுத்தார்கள். வழிவழியாக வந்த நமது குலத்தில் இப்போது நான் அரசனாக இருந்து உங்களின் உதவியால் சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இக்ஷ்வாகு வம்சத்தின் புகழையும் பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இப்போது ஏதோ ஒரு வகையில் அதற்கு ஒரு பழிச்சொல் வந்திருக்கிறது. இது போன்ற பழிச் சொல் நம்மை கீழே தள்ளி விட்டுவிடும். இஷ்வாகு வம்சத்தின் புகழை நான் குலைத்து விடுவேனோ என்று நடுங்குகிறேன். இந்த பயத்தினால் உயிரை விடலாமா என்றெல்லாம் யோசிக்கிறேன். எனக்கு இதை விட பெரிய துக்கம் என்று ஒன்று இருக்கும் என்று தோன்றவில்லை. நீங்கள் இந்த சோகக்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் எனக்கு கை கொடுக்க வேண்டும். நான் சொல்வது போல் செய்து விடுங்கள். இந்த பழிச்சொல் சீதையின் காதில் விழுந்தால் அவள் துடித்து விடுவாள். இச்செய்தியை அவள் கேட்டால் அந்த கனமே உயிரையும் விட்டு விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இச்செய்தி அவளின் காதில் விழுவதற்கு முன்பாக அவளை அயோத்தியில் இருந்து அனுப்பி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். சீதைக்கு முனிவர்கள் வாழும் காட்டில் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக என்னிடம் நேற்று கூறினாள். ஆகையால் நாளைக் காலை தேரோட்டி சுமந்திரரை ரதத்தை பூட்டச் சொல்லுங்கள். அதில் சீதையை அழைத்துச் செல்லுங்கள். நகரத்தின் எல்லையில் இருக்கும் கங்கைக் கரையைத் தாண்டி வால்மீகி முனிவரின் அழகிய ஆசிரமம் இருக்கிறது. ஆசிரமத்திற்கு முன்பாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவளை விட்டுவிட்டு திரும்பி வந்து விடுங்கள். சீதை அவள் விருப்பப்பட்ட ஆசிரம வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளட்டும். என்னைப் பிரிந்து இருந்தாலும் பரவாயில்லை. இச்செய்தி அவளின் காதுகளில் விழாமல் இருக்க வேண்டும் அதுவே முக்கியம். இதற்கு மேல் சீதையைப் பற்றி யாரும் எதுவும் பேச வேண்டாம். இது எனது கட்டளை நான் சொன்னதைச் செய்து விடுங்கள். எனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆலோசனை சொல்ல யாரும் முயற்சி செய்யாதீர்கள். இது எனது கட்டளை. இந்த செயலை உடனே நிறைவேற்றுங்கள் என்று தன் கண்களில் நீர் வடிய ராமர் சொல்லி முடித்தார்.