ராமரும் சிறுவர்களும் யுத்தம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த வால்மீகி முனிவர் யுத்தத்தை நிறுத்துங்கள் என்றார். வால்மீகி முனிவரின் குரலைக் கேட்டதும் சிறுவர்கள் இருவரும் அவரது அருகில் வந்து அவரின் பாதங்களில் வீழ்ந்து தங்களின் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்கள். ராமரும் தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு அவருக்கு மரியாதைகள் செய்தார். ராமரை கண்ட மகிழ்ச்சியில் செய்வதறியாமல் சிலை போல் நின்றாள் சீதை. வால்மீகி முனிவர் ராமரிடம் பேச ஆரம்பித்தார். சீதை பாபமற்றவள் மாசற்றவள் எண்ணத்திலும் செயலிலும் பரிசுத்தமானவள் என்பதால் என் ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுத்து இத்தனை நாட்களாக பாதுகாத்து வந்திருக்கிறேன். கணவனே தெய்வம் என்று நம்பும் அபலைப் பெண் இவள். உன்னைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைக்காதவள். உலகில் யாரோ சொன்னார்கள் என்பதற்காக நீ சீதையை தியாகம் செய்தாய். சீதை இக்காட்டிற்கு வரும் போது கருவுற்றிருந்தாள். இந்த வனத்தில் அவளுக்குப் பிறந்தவர்கள் தான் இந்த இரட்டையர்களான லவ குசர்கள். இருவரும் உன் வம்சத்தை விளங்கச் செய்ய வந்த உன் மகன்கள். பல ஆயிர வருட காலம் நான் தவம் அனுசரித்து வந்திருக்கிறேன். இப்பொழுது நான் சொல்வது தவறாக இருந்தால் என் தவப் பலன்கள் அனைத்தும் வீணாகப் போகட்டும். நான் சொல்வது சத்தியமே. இனியாவது சீதையை அயோத்திக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியுடன் இரு என்று சொல்லி முடித்தார்.
ராமர் தங்களது தந்தை என்று வால்மீகி முனிவரின் பேச்சில் தெரிந்து கொண்ட சிறுவர்கள் திகைத்து நின்றார்கள். லவ குசர்களிடன் வால்மீகி முனிவர் பேச ஆரம்பித்தார். ராமர் தான் உங்களது தந்தை. வன தேவியான உங்களது தாயின் பெயர் தான் சீதை. இவர்களது கதையை தான் நீங்கள் ராம கதையில் இசைத்துப் பாடினீர்கள். சீதையை ராமர் வனத்திற்கு அனுப்பி விட்டார் என்று அவரின் மீது இருந்த கோபத்தில் ராம கதையை இனி பாட மாட்டோம் என்றதில் இருந்து உங்களுக்கு அவரின் மீது எவ்வளவு கோபம் இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்கிறேன். நீங்கள் அயோத்திக்கு அரசனானதும் ராமர் ஏன் சீதையை காட்டிற்கு அனுப்பினார் என்ற காரணத்தையும் அதிலுள்ள தர்மத்தையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். இப்போது ராமரின் மீதிருந்த கோபத்தை விட்டுத் தள்ளுங்கள் என்றார். வால்மீகி முனிவரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட சிறுவர்கள் இருவரும் ராமரின் பாதங்களில் வீழ்ந்து தங்களது வணக்கத்தையும் மரியாதையும் தெரிவித்துக் கொண்டு குதிரையை பிடித்து வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.
ராமர் லவ குசர்களை கட்டி அணைத்து மகிழ்ந்தார். ராமருடன் வந்த படை வரிவாரங்கள் அனைவரும் ராம சீதை லவ குசர்கள் வாழ்க என்று கோசமிட்டார்கள். அயோத்திக்கு ராமர் நம்மை அழைத்துச் சென்று விடுவார் இனி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று சீதை மனதிற்குள் எண்ணிக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தபடி ராமரின் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். ராமர் சீதையைப் பார்த்தபடியே வால்மீகி முனிவரிடம் பேச ஆரம்பித்தார். நான் சீதையின் எண்ணங்களை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். அவள் பரிசுத்தமானவள் என்று எனக்கு தெரியும். ஆனாலும் ராவண யுத்தம் முடிந்ததும் தேவர்கள் முன்னிலையில் ஒரு சோதனை வைத்து இவள் பரிசுத்தமானவள் என்று உலகத்திற்கு நிருபித்த பின்பே இவளை அயோத்திக்கு அழைத்து வந்தேன். இலங்கையில் ராட்சசர்களுக்கு மத்தியில் சீதை அக்னிக்குள் இறங்கியதை இங்கிருக்கும் மக்கள் பார்க்கவில்லை. அந்த நிகழ்வு செவிவழிச் செய்தியாகவே மக்களுக்கு கிடைத்தது. அதனால் இவர்கள் அயோத்தில் சீதையைப் பற்றிய அவதூறான வார்த்தைகளை பேசத் தொடங்கி விட்டார்கள் என்று எண்ணுகிறேன்.