ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -12

பிரம்மாவிடம் வரங்கள் பெற்று யாராலும் வெற்றி பெற முடியாத பலசாலியாய் வலிமையுடன் இப்போது இருக்கிறாய். பலசாலிகளாக இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று பார்ப்பது சரியில்லை. நான் சொல்வதை முழுவதுமாகக் கேள். திதி அதிதி என்ற சகோதரிகள் இருவரும் கஸ்யபர் என்பவரின் மனைவிகளாக இருந்தார்கள். அதிதி தேவர்களைப் பெற்றாள். திதி ராட்சசர்களை பிள்ளைகளைப் பெற்றாள். திதியின் மகன்களான ராட்சசர்கள் தேவர்களை கட்டுப்படுத்தி உலகம் முழுவதையும் ஆட்சி செய்தார்கள். இவர்கள் மிகுந்த ஆற்றலுடனும் சக்தியுடனும் இந்த பூமியில் வசித்து வந்தனர். அப்போது விஷ்ணு தேவர்களுடன் சேர்ந்து இவர்களைப் போரில் தோற்கடித்து இந்த தேசம் முழுவதையும் தேவர்கள் வசமாக்கினார். இரு பக்கத்தில் இருப்பவர்களும் சகோதரர்களே ஆனாலும் ராட்சசர்கள் தேவர்களை சகோதரர்கள் என்றும் பார்க்காமல் யுத்தம் செய்து வெற்றி பெற்று இந்த உலகத்தை ஆட்சி செய்தார்கள். பின்பு தேவர்களும் ராட்சர்ககளை சகோரர்கள் என்று பார்க்காமல் யுத்தம் செய்து வெற்றி பெற்று இந்த உலகத்தை ஆட்சி செய்தார்கள். பலசாலிகளாக இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று பார்ப்பதில்லை. இந்த உலகம் முழுவதும் நீ ஆட்சி செய்யும் வலிமை உன்னிடம் உள்ளது. நான் சொல்வதைக் கேள். குபேரனே சகோதரன் என்று பார்க்காதே. நீ உலகத்தை ஆட்சி செய்ய விரும்புகிறேன் என்று குபேரனிடம் சொன்னால் நீ சகோதரன் தானே என்று உனக்கு விட்டுக் கொடுத்து விட மாட்டான். சகோதரன் என்றும் பார்க்காமல் உன் மீது யுத்தம் செய்யவே வருவான். அது போல் நீயும் குபேரனை சகோதரன் என்று பார்க்காதே. ஏதேனும் ஒரு வகையில் குபேரனை சமாதானப் படுத்தியோ அல்லது யுத்தம் செய்து வெற்றி பெற்றோ நீ இந்த உலகத்தை ஆளலாம் என்றான்.

பிரம்மா கொடுத்த வரத்தினால் வலிமையுள்ளவனாக இருக்கிறோம். ஆகையால் உலகத்தை ஆட்சி செய்யும் தகுதி தன்னிடம் உள்ளது என்ற எண்ணம் ராவணனின் மனதில் அதிகமானது. பிரஹஸ்தன் கூறிய யோசனையை ராவணன் ஏற்றுக் கொண்டான். பிரஹஸ்தன் அழகாக பேசக் கூடியவன். தேவையான காரியத்தை சரியாக முடித்துக் கொண்டு வரக் கூடியவன் என்ற நம்பிக்கை ராவணனுக்கு இருந்தது. முதலில் சமாதானமாக பேசுவதற்காக சில ராட்சசர்களுடன் பிரஹஸ்தனை தூதனாக குபேரனிடம் அனுப்பி வைத்தான் ராவணன். பிரஹஸ்தன் ராவணனின் சார்பாக குபேரனிடம் பேச ஆரம்பித்தான். உனது சகோதரனான தசக்ரீவன் என்னை தூதுவனாக உன்னிடம் அனுப்பி இருக்கிறான். இலங்கை ராட்சசர்கள் வசிப்பதற்காக கட்டப்பட்டது. சில காலம் சூழ்நிலை காரணமாக ராட்சசர்கள் பாதாள லோகத்திற்கு சென்று விட்டார்கள். அதனால் இலங்கையில் இத்தனை ஆண்டு காலம் நீ இருந்தாய். இதனை தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது ராட்சசர்கள் இழந்த வலிமையை பிரம்மாவின் வரத்தினால் திரும்பப்பெற்று மீண்டும் வந்து விட்டார்கள். எனவே ராட்சசர்களுக்கு சொந்தமான இலங்கையை அவர்களுக்கு தானாகவே குபேரன் திருப்பித் தர வேண்டும். அப்படித் தந்தால் ராட்சசர்களுக்கு திருப்தியாக இருக்கும். எனவே தர்மத்தை எண்ணி எங்களிடம் ஒப்படைத்து விடு என்று கேட்டுக் கொண்டான்

குபேரன் பிரஹஸ்தனிடம் பேச ஆரம்பித்தான். இந்த நகரம் யாரும் இல்லாத சூன்யமாக எனக்குத் தரப்பட்டது. இந்த நகரை செம்மைப்படுத்தி யட்சர்களையும் தானவர்களையும் குடியேற்றி வைத்திருக்கிறேன். தசக்ரீவனிடம் போய் சொல்லுங்கள். என்னுடைய ராஜ்யமும் நகரமும் எனக்கு உள்ளதைப் போலவே தசக்ரீவனுக்கும் உரிமை உள்ளது. எந்த வித இடையூறும் இன்றி ராஜ்யத்தை பிரிக்காமல் முழுவதுமாக சேர்ந்தே அனுபவிக்கலாம். அனைவருடன் இங்கு வந்து அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லி பிரஹஸ்தனை அனுப்பி விட்டான். பிறகு குபேரன் தன் தந்தையான விஸ்ரவஸிடம் சென்று ராவணன் பிரஹஸ்தன் மூலம் சொல்லி அனுப்பிய செய்தியைச் சொல்லி நான் செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் அதன்படி நடந்து கொள்கிறேன் என்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.