அனுமன் தன்னுடைய அபரிதமான சக்தியை உணராமல் சுக்ரீவனுக்கு சமமாகவே இருந்தான். வாலி சுக்ரீவர்களிடையே விரோதம் முற்றிய போதும் வாலி சுக்ரீவனை விரட்டி அடித்த போதும் கூட தன்னுடைய சக்தியை அனுமன் உணரவில்லை. ரிஷிகளின் சாபத்தால் தன் இயல்பான சக்தியையும் பலத்தையும் உணராதவனாக சுக்ரீவனுடன் கூடவே இருந்தானே தவிர உதவி எதுவும் செய்யத் தெரியவில்லை. கூண்டில் அடைப்பட்ட சிங்கம் போல இவன் ஆற்றல் வெளிப்படாமல் மறைந்து கிடந்தது. சாஸ்திர ஞானத்தில் அனுமனுக்கு சமமானவர்கள் யாருமே இல்லை. பொது அறிவிலும் வேத பாராயணம் செய்வதிலும் இவனுக்கு சமமானவர்கள் யாரும் இல்லை. சமுத்திரத்தின் ஆழத்தை அளந்து சொல்வான். நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை சொல்வான். யுக முடிவில் எமனைப் போல செயல்படுவான். அச்சமயம் இவன் எதிரில் யாராலும் நிற்கக் கூட முடியாது. ராமா உனக்கு நன்மை செய்யவே அனுமன் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டான். அனுமனைப் பற்றி நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டேன் என்றார் அகத்தியர். அனைத்தையும் கேட்ட ராமரும் சுற்றி இருந்தவர்களும் அனுமனின் வரலாற்றைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார்கள்.
ராமரிடம் அகத்தியர் தொடர்ந்து பேசினார். இது வரை உங்களுடன் பேசியதும் பார்த்ததும் திருப்தியாக இருந்தது. உங்கள் உதவியோடு யாக காரியங்களை செய்ய விரும்புகிறேன். எனவே இப்போது நான் கிளம்புகிறேன் என்று எழுந்தார். ராமர் அகத்தியருக்கு தன்னுடைய வணக்கத்தையும் மரியாதையும் செலுத்தி வழி அனுப்பி வைத்தார். அன்று சூரியன் மறையவே சுற்றி இருந்த அனைவரையும் அனுப்பி விட்டு தன் சந்தியா கால ஜபங்களை முடித்துக் கொண்டு அந்தபுரம் சென்றார் ராமர். சில நாட்கள் விருந்தினர்களாக தங்கியிருந்த சுக்ரீவன் தலைமையிலான வானரங்களும் விபீஷணன் தலைமையிலான ராட்சசர்களும் தங்கள் இருப்பிடம் கிளம்ப தாயரானார்கள். ராமர் அவர்களின் தகுதிக்கேற்ப பொன்னையும் பொருளையும் கொடுத்து மரியாதை செய்தார். அனுமனிடம் வந்த ராமர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ராமரை வணங்கிய அனுமன் தனது வேண்டுகோளை வெளியிட்டார். எனக்கு தங்களிடத்தில் உள்ள நட்பும் பக்தியும் இப்போது இருப்பது போலவே எப்போதும் இருக்க வேண்டும். என் மனம் வேறு எதிலும் நாட்டம் கொள்ளக் கூடாது. உலகில் ராம கதை உள்ள வரை என் உயிரில் பிராணன் இருக்கும் வரை உங்கள் திவ்ய சரித்திரத்தை யார் சொன்னாலும் என் காதுகளால் கேட்ட வண்ணம் இருக்க வேண்டும் என்றார். அதனைக் கேட்ட ராமர் தன் ஆசனத்தில் இருந்து இறங்கி வந்து அனுமனை தழுவிக் கொண்டார். நீ செய்த ஒவ்வொரு உபகாரத்திற்கும் நான் உயிரையே கொடுப்பேன். உன் விருப்பப்படியே ஆகட்டும். என் கதை உலகில் உள்ள வரை உன் விருப்பம் நிறைவேறும் என்றார்.
ராமனிடம் வந்த சீதை தனக்கு ஒரு ஆசை இருப்பதாகவும் அதை நிறைவெற்றி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். புண்யமான தபோ வனங்களைப் பார்க்க வேண்டும். கங்கா தீர்த்ததில் தவம் செய்யும் ரிஷிகளைப் பார்க்க வேண்டும். தேஜஸ் நிறைந்த முனிவர்கள் பழம் கிழங்குகளைச் சாப்பிட்டபடி மர நிழல்களில் வாழ்வதைக் காண வேண்டும். ஒர இரவு ஒரு பகல் ஏதோ ஒரு தப வனத்தில் முனிவர்களுடன் சேர்ந்து இருந்து விட்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றாள். அப்படியே ஆகட்டும் என்று ராமரும் வாக்களித்து விட்டு அரசவைக்கு சென்றார். ராமரைச் சுற்றி மந்திரிகள் உட்பட பலரும் அமர்ந்திருந்தனர். நாட்டில் நடக்கும் பல சம்பவங்களை விவரித்து சொல்பவர்களும் பல விதமான கதைகளைச் சொல்பவர்களும் வேடிக்கையும் விளையாட்டுமாக பல சம்பவங்களையும் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருக்கும் போது நடுவில் ராமர் அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டார். நகரத்தில் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? மக்களின் மன நிலை எவ்வாறு இருக்கிறது? என்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் நிலவுகிறது. சீதையைப் பற்றியும் பரதன் சத்ருக்னன் லக்ஷ்மணனைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்? தாயார் கைகேயியைப் பற்றிய எண்ணம் மக்கள் மத்தியில் எவ்வாறு நிலவுகிறது? இரவில் ஊருக்குள் சஞ்சரிக்கும் ஒற்றர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டார்.